Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, February 18, 2024

கடவுளாக ஆசைப்படுகிறேன்

நான் வேலை செய்யும் இடத்தில் கடவுளைப்போல் 

இருக்க ஆசைப்படுகிறேன் 

அதாவது கேள்வி கேட்க ஆளில்லாதவராக 

கேள்வி கேட்கப்பட்டாலும் கேட்காததுபோல் இருப்பவராக 

பதில் சொல்லக் கடமைப்படாதவராக 

மூத்த அதிகாரி என எவரும் இல்லாதவராக 

பாலியல் தொல்லைக்கு உட்படாதவராக 

பழிவாங்கப்படாதவராக 

தற்கொலைக்குத் தூண்டப்படாதவராக 

குறைந்தபட்சம் இரண்டாம்தரமாக நடத்தப்படாதவராக 

குறிப்பாக அடிமைபோல் நடத்தப்படாதவராக 

சக பணியாளரால் காரணமேயின்றி அவமானப்படுத்தப்படாதவராக 

பிறரால் ஒதுக்கி வைக்கப்படாதவராக 

பிறரை ஆள் ஏவி ஒதுக்கி வைப்பவராக 

குண்டடிபட்டுச் சாகும் 

குண்டர்களால் அடிபட்டுச் சாகும் 

வன்புணர்ந்து கொல்லப்படும் 

புள்ளி விவரங்கள் அறியாதவராக 

செய்தித்தாள் தொலைக்காட்சி என எதன்வழியம் உலகத்தைக் காணாதவராக 

எப்படியும் வேளாவேளைக்கு சோறு வந்துவிடும் என்பதாக 

என் தட்டில் என்ன சோறு எனக் கண்காணிக்கப்படாதவராக 

எப்படியும் காலத்துக்கேற்ப சேவகர்கள் வந்துவிடுவார்கள் என்பதற்காக

என் பெயரின் பொருட்டு எத்தகைய ஆதிக்கத்தையும் அனுமதிப்பவராக 

என்பொருட்டு நிகழும் எத்தகைய வன்முறையையும் காணாமலிருப்பவராக 

பணமும் புகழும் ஒருபோதும் குறையப்போவதில்லை என்பதாக 

பிற கடவுள்களுடன் நல்லிணக்க ஒப்பந்தம் போடாதவராக

சகல பிரச்சினைகளுக்கும் காரணமானவராக 

சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பவராக 

கேட்காமலேயே பொன்னும் பொருளும் கண்ணீரும் பெறுபவராக 

சிறுமிகளை பெண்களை வன்புணரும் அறைகளில் கண்களை மூடிக்கொண்டிருக்க  

பெண்கள் தலைமுடியை மறைக்கக் காரணமாக 

பெண்கள் தலைமுடியை வெட்டக் காரணமாக 

குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லக் காரணமாக 

குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாததற்குக் காரணமாக

வகுப்புத் தோழியை மதவெறிகொண்டு தாக்காதவராக  

பெண்களை சகமனிதர்களை அடிமைப்படுத்தும் அமைப்புகளுக்குத் தலைவராக   

இருக்க ஆசைப்படுகிறேன் 

ஒரு சுவரைப்போல், சிலையைப்போல், கல்லைப்போல் இருக்க ஆசைப்படுகிறேன்

எதுவும் செய்யாமல் 

எந்நாளும் பளபளப்பாக, எப்போதும் மினுமினுப்பாக

ஒரு கடவுளைப்போல் இருக்க ஆசைப்படுகிறேன்   

அதாவது 

நான் ஒரு கடவுளைப்போல் இருக்க ஆசைப்படுகிறேன்.


(22.01.2024)


Sunday, September 3, 2023

நலம் விரும்பிகள் சொல்கிறார்கள்

முகம் கொஞ்சம் பொலிவடைந்திருப்பதாக

பற்கள் கொஞ்சம் வெளியே தெரிவதாக

இப்போதுதான் காணும் படி இருப்பதாக

நான் சொல்கிறேன்

போகும் வழியில் பூக்கள் மலர்வதாக 

உலகம் என்னை கண்டு கொள்வதாக 

என் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டதாக

எனக்கு மட்டும் சில நட்சத்திரங்கள் தெரிவதாக 

ஒரு உயிர் இன்னொரு உயிரால் அங்கீகரிக்கப்படுவதாக 



Saturday, September 2, 2023

மூன்றாம் முறையாக

நேற்று மூன்றாம் முறையாகப் 

பூனை பிரண்டிவிட்டது

விஷயம் அறிந்தவர்கள் கண்டிக்கிறார்கள்

தெருவில் போவதையெல்லாம்

வீட்டிற்குள் விடுவதை நிறுத்து

கதவை அடை, துரத்தி அடி

செலவாகும் நேரத்தையும் பணத்தையும்

நினைத்துப் பார் என்றெல்லாம்.

காயப்பட்டதற்கெல்லாம் 

துரத்தி அடிக்க முடியாது

மனிதர்கள் என்றால் பரவாயில்லை

பூனைக்கு என்ன தெரியும்?!

மனிதர்களிடம் இல்லா சிநேகத்தை 

மிருகத்திடம் எதிர்பார்ப்பதா?

மேலும்

காயப்படுத்தியவர்களையெல்லாம்

துரத்திவிட்டுத்தான் இப்போது பூனையொடு வாசம்

பூனையையும் துரத்திவிட்டால் 

எனக்கு அழையா விருந்தினர் யார்?

நான் வரக் காத்திருப்பவர் யார்?

என்னை அழைக்கப்போவது யார்?

என் சருமத்தில் உரசப்போவது யார்?


Thursday, August 31, 2023

தாதிகளின் கைகள்

மருத்துவமனையில் கிடக்கிற  

என் தோழியை நினைத்துக் கொண்டிருந்தேன்

முன்போர்நாள் நள்ளிரவில்

அங்குதான் நானும் கிடந்தேன்


முகம் மறைத்த தாதி ஒருத்தி 

பெயர் நினைவிலில்லை

கேட்டது எதுவும் தங்கவில்லை

தொட்ட இடத்தில் ரேகைகள் ஒட்டியிருக்கிறது 

பட்டாம்பூச்சியின் சிறகை 

நரம்பில் ஏற்றியதும்

வலிக்கிறதா எனக் கேட்டதும் 

கூடவே தங்கிவிட்டது 


பின்போர்நாள் பல் மருத்துவமனையில்... 

அது வேறொரு உலகம் 

அங்கு எதுவும் கேட்பதில்லை 

இருவர் மூச்சுவிடும் சப்தத்தைத் தவிர 

அங்கு எதுவுமே நடப்பதில்லை 

ஒருவர் இன்னொருவரின் கைக்குள் தன்னை 

முழுமையாக ஒப்படைப்பதைத் தவிர 

அங்கொருத்தி என் முகத்தைப் 

பாந்தமாகக் கைகளில் ஏந்தினாள் 

என் கறைகளைப் புனித நீரால் கழுவினாள் 


நோய்மையின் மீட்சி 

மருந்துகளில் அல்ல 

தாதிகளின் கரங்களில்  

இனி 

உடல் என்னைக் கைவிடுகையில் 

மருத்துவமனைக் கட்டிலில் கிடப்பேன்

காதலிகள் என்னைக் கைவிடுகையில் 

பல் மருத்துவமனைக் கட்டிலில் கிடப்பேன்

தாதிகளின் கைகளுள் கட்டுண்டு கிடப்பேன்.


Wednesday, May 3, 2023

கவிதை உன்னைச் சும்மா விடாது

விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருதுச் செய்தியை வாசித்தபோது ஆய்வகத்தில் இருந்தேன். அறைக்குச் சென்று சில கவிதைகளை மேற்கோள் காட்டி இதை எழுதலாம் என எண்ணியிருந்தேன்; தொகுப்பு வீட்டில். இன்று திரும்பிப் பார்க்கும்போது கவிஞரின் முதல் தொகுப்பு நிறைய அதிர்ச்சிக் கவிதைகளுடன் வந்திருந்தது நினைவிலிருக்கிறது. கூடவே, திருப்பூரைப் பற்றிய கவிதைகள் மனதிற்கு அணுக்கமானவையாக இருந்தன. மொழியில் நல்ல ஓட்டம். அம்மா என்றாலும் பெண்தானே, பிள்ளை என்றாலும் ஆண்தானே எனும் பொருள்படும் கவிதை குறித்த நினைவுகள் இன்னும் நீங்கவில்லை.


இங்கிருந்து https://www.jeyamohan.in/182138/


ஒருமுறை முகப்புத்தகத்தில் நேரலையாக கையில் சிகரெட்டுடன் - (விருது அறிவிப்புப் புகைப்படத்திலும் பேனா அதே லாவகத்துடன் விரலிடுக்கில் அமர்ந்திருப்பதைக் காணலாம்) பிற கவிஞரின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தார். "யார்ரா இவன் ஒரே நேரத்தில் ரெண்டு போதையை போடுறான்! நம்ம சொந்தத்துல இவன் ஒரு டைப்பா இருக்கானே?!" என நினைத்துக் கொண்டேன். பிறகு தமிழ் விக்கியிலோ அல்லது அவர் எழுதிய பெருந்தேவியின் கவிதை ரசனைக் குறிப்பிலோ அவர் உயிர்மை பதிப்பகத்தில் இருக்கிறார் என அறிந்து கொண்டேன். பனியன் கம்பெனியில் இருந்து ஒருவர் பத்திரிகைத் துறைக்குப் பாய்வது, அதுவும் கவிதையால் நிகழ்ந்தது என்பது மகிழ்ச்சியாக இருந்தது; இப்போது விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது. அவர் முன் அன்போடு கைநீட்டிச் சொல்கிறேன்: கவிதை உன்னைச் சும்மா விடாது சதீஷ். இன்னும் வெகுதூரம் அழைத்துச் செல்லும்.

அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கே. என். பி. சுப்பிரமணியன் நகர்
திருப்பூர் 641608
------------------------------------
கே. என். பி. சுப்பிரமணியன் நகரில்தான்
பத்து வருடமாக என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது
என் மூதாதையர்கள் போர்கள் இல்லாமலே
அகதிகளானவர்கள்
தற்செயலாகவோ
வரலாறாகவோ
எப்போதும் ஒரு வறுமை
என் நினைவின் நாளிலிருந்து எரிகிறது
நூறு தெருக்கள் உள்ள இந்த நகரில்
இந்தப் பத்தாவது வருடத்தில் ஏழாவதாக மாறிய மூன்றாவது மாடி வீட்டில் வசிக்கிறோம்
கே. என். பி. சுப்பிரமணியன் நகரில்
மரங்களே இல்லை
இந்த நகரத்திலும்
மரங்களே இல்லை
மஞ்சள் அரளி மரங்கள் மட்டுமே உண்டு
அவைகளில் பெரிதாக நிழல்கள் இல்லை
ஆனால் எல்லா மாலையிலும்
இந்த திருப்பூரில்
தான் மட்டும்தான்
ஒரே அழகனெ
ஒரே மலரென பொலிவு காட்டும்
கே என் பி சுப்ரமணியன் தெருவில்
பத்தாண்டுகளாக சுற்றிக் கொண்டிருக்கும்
என்னுடலில்
இதுவரை
போயும் போயும் இந்த மஞ்சள் அரளியில்
ஒரு அரளி கூட கனவாக வந்ததில்லை
செத்த பிறகு பேயாகத் தலைகீழாகத் தொங்க அத்தனை வலுவான கிளைகளும் இல்லை இந்த மலர் மரத்தில்
எத்தனை பத்து வருடங்களாக அத்தனை உடல்கள் இப்படி அலையணுமோ.

Tuesday, May 2, 2023

கடைக்கண் அளாவிய

பாட்டுதான் அவர்களைச் சேர்த்தது  

பாடிப்பாடி மேடை வரை வந்தாயிற்று 

மேடையில் நிகழ்கிறதொரு டூயட்

தனிப்பாட்டில் மலராப் பூக்கள் 

மேடையில் ஒளிரத் துவங்க  

குரல்கள் கலக்கும் உச்சப் புள்ளியில் 

தலைவி நோக்கத் தலைவனும் நோக்க 

பாட்டிடை விழியால் காதலைத் தொட்டனர் 

பாட்டுடை மொழியில் சிநேகங் கலந்தனர் 

பார்ப்பவர் எமக்கும் சேர்த்து ஊட்டினர்.


Thursday, November 17, 2022

பச்சைக் கம்பளம்

மூன்று சிக்கனல்களிலும் பச்சை


இப்படித்தான் 

இன்றைய உலகம் திறந்து கொண்டது  

Saturday, July 30, 2022

அடைக்குந்தாழ்

எங்கள் வீட்டில் 

புதிதாய்க் குடி வந்தவள்

எனக்கும் மூத்தவள் 

இல்லந் துறந்தவள்

தலைவன் வரும்வரை 

ஒவ்வொரு நொடியையும்  

விரட்டி அடிப்பவள்  


கலங்கரை விளக்கத்தின் 

வெளிச்சப்புள்ளி போல்

எதிர்ப்படுகையில் மட்டும்

'எப்பண்ணா வந்தீங்க' 

என்பாள் முகம் மலர்ந்து

பிறகொரு 

சொல்லிறின்றி முகமின்றி 

மறைந்தே போவாள்  

திடீர் மழையில் மூழ்கிய 

குளத்தாம்பல் போல்


கேள்விகளின் உலகில் 

அன்புடை நெஞ்சம் கலப்பதில் 

ஆயிரம் சிக்கல்கள் 

ஆயிரம் பயங்கள் 


மலர்தலின் உலகில் 

ஒரு பெண் மௌனமாவதைப்போல் 

ஒரு பெண் வீடடங்குவதைப்போல் 

வேறொரு துக்கம் உண்டா?

Tuesday, July 12, 2022

சகலகலா சவரக்காரன்

ஒரு கவிதைத்தொகுப்பு முழுவதும் ஒரே வகைமையிலான/பாடுபொருளைக்கொண்டதான கவிதைகளால் நிரம்பிவருவது தமிழுக்குப் புதிதல்ல. ஆனால், எனக்குத்தெரிந்து ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து அச்சமூகம் சார்ந்த பாடுபொருளைக்கொண்ட கவிதைத்தொகுப்புகளில் இது இரண்டாவது - ப.நடராஜன் பாரதிதாஸ் அவர்களின் "ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்". இவருக்குமுன் கலைவாணன் இஎம்எஸ்-ன் "ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்". 

பாடுபொருள் ஒன்றேயென்றாலும் தொகுப்பு முழுவதும் சுயசாதியை நோக்கிய கேள்விகள்/விமர்சனங்கள், பகடி, ஆதங்கம், சுயகழிவிரக்கம் எனக் கலவையான உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது. தொழில்நுட்பரீதியில் பார்த்தால் சில கவிதைகள் அபாரமான சொல்லாட்சியினால் ஒளிர்கின்றன. 

இன்றைக்கும் 'மாப்பிள்ளை சேவிங் செய்ய மறுத்தவர் கொலை' என்னும் செய்தி வரத்தான் செய்கிறது. என் அம்மா அவர்களை சாதிப்பெயர் சொல்லித்தான் விளிக்கிறாள். நம் சோ கால்டு பழமொழிகளிலும், நகைச்சுவைகளிலும் அவர்களை இழிவுசெயும் மனிதர்கள்தான் நாம். ஒவ்வொருமுறை முடிவெட்டும்போதும் தடவும் கீறல் விழுந்த மென்மையான கரங்கள்தான் அவை. ஆனால், கீறலில் தெறிக்கும் குருதியில் எழுதப்படும் கவிதைகளுக்கு அறச்சீற்றம் உண்டு. அவற்றை எதிர்கொள்ளத்தான் நாணமாக இருக்கிறது.

நாட்டாமை எட்ன தூரத்தில் வரும்போதே

திண்ணையிலிருந்து எந்திரிச்சு நிக்கணும்

எதிர்ல வந்தா

வளஞ்சி நின்னு வழிவிடணும்

வீட்டுக்கு அழைச்சி

மேல்முடி செரைச்சுக்கிட்டு

அடிமுடியையும் வழிக்கணும்

இல்லன்னா அடிப்பாரு

வாங்கிக்கணும்


மழை தப்பிட்டா அளப்பு தப்பிடும்

செரைப்பு மட்டும் தப்பாது

வருசமெல்லாம் வழிக்கும்போது

எங்கவேணா தொட்டுக்கலாம் தொடச்சிக்கலாம்

மற்றபடி

வாசற்படி தாண்டினாலே வாயிலவரும் நல்லா


ஆனா பாருங்க

அரசாங்க கெஜட்டு  

அவரும் நானும் எம்.பி.சி.ன்னு சொல்லுது


அவருகிட்ட எப்படி சொல்றது

நீயும் நானும் ஒன்னுதாயான்னு

அரசிடம் யார் சொல்வது

நானும் அவரும்

ஒன்னுயில்லையின்னு.


..



வாழ்நாளில்

வாசற்படிதாண்டி வராண்டாவிற்குக்கூட

அழைக்காதவன் அனுமதிக்காதவன்  


பளிச்பளிச்சென்று அழகுபடுத்திக்கொண்டு

புளிச்புளிச்சென

சாதித் தொழிலைச்சொல்லி காரி உமிழ்ந்தவன்

என்குலம் சொல்லி கோத்திரம் சொல்லி

சாதிபோதை ஏற்றி

அவனுக்கெல்லாம் திருத்தலாமா

மீறினால்

தானே இடிந்துவிழும்

தானே தீப்பற்றும்


பொறம்போக்குத்தனே உன்குடிசை

மனதில்கொள்

ஊரோடு ஒட்டிவாழ்-இல்லை

ஊரே உனை வெட்டி வாழும்

உயிர் பயம் காட்டுகிறான்

ஊர் பஞ்சாயத்தில்


ஓர்குடி நாம்

என் செய்குவோம் தந்தையே 

நீ கத்தியைக் கொண்டுவா

நான் கத்திரி கொண்டு வருகிறேன்

இவனுக்கெல்லாம்

மயிர்வெட்டி   வாழ்தலைவிட

உயிர்வெட்டிச் சாகலாம்.


Tuesday, June 28, 2022

நிறைந்து வழிவது...

சேச்சிக்கும் எனக்கும்

ஒரே வேலைதான்:

அவள் அலுவலகக் குப்பைகளைக் 

கூடையில் சேமிக்கிறாள்,

நான் கணிப்பொறியில்.

எதிர்ப்படும் போதெல்லாம்

ஒரே கேள்விதான்:

'காப்பி குடிக்காணோ'

'ம், காப்பி குடிக்கத்தான்'

முதல்முறை போல அவளும் கேட்பாள்

முதல்முறை போல நானும் சொல்வேன்

நடையைக் குறைக்காமல்.

ஒருமுறை அலுவல் கூட்டத்தினிடை 

அவளே வந்தாள்

ஊற்றிய காப்பி விளிம்பைத் தொட்டதை 

எப்படிச் சொல்ல?

காப்பி கூடிப்போயென்றா? 

இல்லை 

சிநேகம் கூடிப்போயென்றா?

Friday, June 24, 2022

காலங்காலமாய்...

அந்தக் குடை நடக்கும்

அந்தச் சைக்கிள் ஓடும்

இவ்விள வெயிலில்

காற்றில் ஆடும் 

கொடியின் நுனியென 

ஒரு கரம் நீண்டு 

சைக்கிளைத் தொடவே 

அது நடக்கும் 

அந்தச் சைக்கிள் நடக்கும் 

Wednesday, June 22, 2022

என் செல்லமே...

டேங்க்கின் மீதமர்ந்து 

நீ செலுத்தும் வண்டி 

ஓடுவது பெட்ரோலில் அல்ல,

அதன் சக்கரம் சுழல்வது

பூமியிலும் அல்ல.

இடம் வலம் என

நீளும் உன் கை 

சுட்டும் இடத்தில் 

நிற்பதுவும் 

இறங்கிச் செல்வதுவும் 

யாரும் அல்ல.

அடிவானம் சாலையை முத்தும் இடத்தில்

உன் கை

கொஞ்சம் விரும்பி 

கொஞ்சம் தவறி 

மேல்நோக்கி உயருமென்றால்

இந்தப் புவியில்

உனைப் பிடித்திருத்தப் போவது  

எதுவும் அல்ல.

Monday, June 20, 2022

வைகறை வெளிச்சம்

புலரியில் வீடிறங்கி

பின்முதுகில் நீர் சொட்ட

வேர்களை விட்டுவிட்டு

இலைகளுக்கு நீர்விடும்

இவள்

குளிப்பாட்டுவது பிள்ளைகளைத்தான்.

இதைச் சொல்வது நானல்ல,

அவள் முகமேதான்.

Thursday, June 16, 2022

அடித்தோழி!

பேசிக்கொண்டே

உரையாடலின் அபாய வளைவை 

எத்திவிட்டோம் 

சட்டென நீ 

உன் வாழ்வின் 

தாளாத சுமையொன்றை இறக்கிவைத்தாய் 

அதன் எடையில் என் முதுகு 

வளைந்தேவிட்டது 

மூச்சுவிடவே அல்லற்படும் நான்  

புதுப்புது சொற்களால் 

புதுப்புது கரங்களால்  

பவர் ஸ்டியரிங் இல்லா 

லாரி டிரைவரைப்போல்  

குப்புறப்படுத்துக்கொண்டு 

இப்பேச்சின் திசையைத் 

திருப்புவதைப் பார்.

Saturday, June 4, 2022

நியாயம்மாரே

 ஆசான்களே... 

முன்னோடிகளே... 

கொஞ்சம் இங்கே பாருங்கள்:  

நான் சுமாரான மாணவன்தான் 

நகலெடுப்பவன்தான் 

தேய்வழக்குகளை உபயோகிப்பவன்தான்

நீங்கள் எவ்வளவு சொல்லியும் 

கேட்காதவன்தான் 

அதற்காக ஏன் என்னைக் கைவிட்டீர்?

எழுத்துப் பிழைத்திருக்க

உண்மையும்

எழுதப் பிழைத்திருக்க

மீதமும் போதும் என 

ஏன் சொல்லித்தரவில்லை? 

Wednesday, September 11, 2019

உம்மைச் சரணடைந்தோம்

அய்யனே... எம் அம்மையே...
அந்த நாள் வந்தே விட்டது
இதற்குத்தானே காத்திருந்தீர்!
புத்தாடை, மலர்ச்சாத்து
சந்தனக்காப்பு, ஊர்க்கூட்டம்
பொங்கப்பானை, குலவைச்சத்தம்
என ஒவ்வொன்றாய்
இனித் தொடரும்.

அதற்கும் முன்,

பகலவனை உசுப்பி இன்றைய தினத்தைத்
துவங்கி வைத்தவனைப் பாரும் 
அவனைக் கொஞ்சம் ஆசிர்வதியும்

ஒவ்வோர் பாடலாய் உரசிப்பார்த்து
இத்தெருவில் ஓடவிடுகிறான் கேளும்
அவனுக்குக் கொஞ்சம் கருணை காட்டும்

இடையிலவன் ஏவிவிடும் சங்கேத சங்கீதங்களை
வளிவழி எல்லோர்க்கும் அனுப்பி வையும் 

பன்னெடுங்காலமாய் வேண்டி நிற்கும் 
அவள் கடைக்கண் ஒளியை
இன்றாவது அவன் மீது பரவச்செய்யும்

எல்லாம் உம் செயல்! 

Tuesday, July 9, 2019

கவிதைகள் - கல்பற்றா நாராயணன்





பிறந்த நாள்

பிறந்தநாள்ப் புலரியில்
கைகளை விரித்தவாறே  
மகளோடி வந்தாள்
அப்பா, இந்த விரல்களுக்கு மூன்று வயதாகியோ?
மூன்றாம் வயது
விரல்வரை வந்துவிட்டதா எனத் தெரியவில்லையெனினும்
கிட்ட நெருங்கிக்கொண்டிருக்கிறது,
நான் சொன்னேன்
ஆம்.

இந்த மச்சத்திற்கோ?
அதற்கும்.
அவளுக்கது அத்தனை பிடிக்கவில்லையென்று  தோன்றிற்று.
அது என்னுடனே வளர வேண்டாம்.
காண்போரெல்லாம்
கன்னத்தைத் தொட்டு முத்தினார்கள்.
கன்னத்தை யார் தொடுவதும் அவளுக்கு விருப்பமில்லை.
அதிகவனத்துடன் சவரம் செய்கையில்
-சவரம் செய்கையில்
சவரச்சத்தம் நிசியில் தொடர்வண்டியைப் போல-
அவளென்னை வேதனைப்படுத்தும்விதம் கேட்டாள்;
இதையும் கொஞ்சம் ஷேவ் செய்து விடுகிறீர்களா?

இந்தக் காலிற்கும் மூன்று வயதாகியோ?
என்றாள் நம்பிக்கை குறைந்த தொனியில்.
காலுயர்த்திக் காட்டுகிற சாகசத்தில்
நீர் நிரம்பியிருந்த பாத்திரம் சரிந்து
மேசைப்புறம் நனைந்தது.
ஆம், கிட்டத்தட்ட.
அவளோடு அது ஓடத்துவங்கி
ஒன்றரை வருடங்களே கடந்திருந்தன.
அதுவும் துவக்கத்தில் தயங்கித் தயங்கி.
அதற்கு எத்தனையோ காலம் முன்பே அவளோடத்துவங்கியிருந்தாள்.

இந்தப் பல்லிற்கோ?
இம்முறை அம்மை இடைமறித்தாள்.
இரண்டிற்கு இரண்டேகால் வயது
மற்றவை ஒவ்வொன்றிற்கும்
இரண்டும், ஒன்றரையும், ஒன்றேகாலும்.
இதற்கு மூன்று மாதம்
என் செல்ல மகளே;
அம்மையின் விரல்களால்
அவளதைத் தொட்டுணர்ந்தாள்
என் செல்லக்குட்டி.

இந்தக் காதிற்கோ?
எனக்குத் தெரியவில்லை.
அவளதைக்கொண்டு நேற்றுக் கேட்டதல்ல
இன்று கேட்பது.
இந்தக் கண்ணிற்கோ?
தெரியவில்லை.
அவளதைக்கொண்டு நேற்றுக் கண்டதல்ல
இன்று காண்பது.
அவள் உதிர்க்கும் சொற்களுக்கு
அவளுடையதல்ல வயது.
சிலதிற்கு ஐநூறோ ஆயிரமோ.
அவளிப்போது அறுவடை செய்கிறாள்.
பலவும் அனேக வருடங்களுக்கு முன்பு யாரோ விதைத்தது.

என்றால் எனக்கு மட்டுமா மூன்று வயது?
ஆமோதிக்கத்தான் வேண்டுமோ?
நானவளுக்கோர் உண்மை சொன்னேன்,
என் செல்ல மகளே
உன்னில் எதற்கும் மூன்று வயதல்ல.




இத்தனை அதிகம் காதலித்தால்

இத்தனை அதிகம் காதலிக்கப்பட்டும்
அவள் பிரியத்தான் விரும்பினாள்
தோழிக்கும் எழுதினாள்
காண்கையிலெல்லாம்
என்னைத்தான் பார்க்கிறான்
உற்றுநோக்கலின் சூட்டில்
முட்டை விரிவதைப்போல்
என் முலைகள் விரியுமென்று
நம்புவபனைப்போல,
அவை விரிகையில்
வெளிப்படும் சிசுக்களை
வளர்த்தியெடுப்பவனைப்போல.
விரல்களை இழுத்துச் சுவைக்கிறான்
அதற்குள் ஒன்றுமில்லையென
எத்தனை முறை சொல்லியும்
அவனுக்குப் புரிவதில்லை.
ஓரிரவில்
கோடரி கையிலெடுத்து
அவனிடம் சொன்னேன்:
விடியும்முன்னே என்னை
முழுதும் கிரியிடு
சின்னச்சின்னத் துண்டுகளாக.
பதின்மத்தில்
அம்மா பலமுறை அழைத்தும் போகாமல்
ஜன்னல் வழி நான் கண்டுநின்ற
மழுப்பணிக்காரனைப்போல, ஒரு தயவுமில்லாமல்.
அவனோ சந்தையில் வாங்கிவந்த
ரோஜா இதழ்களைத் தேகத்திலிட்டான்.
சிலிர்க்கிறதெனக்கு.
சிநேகம்
எத்தனை தாங்கவியலா ஒன்று!
நீ சொல்வதைப்போலேயே அல்ல
சிநேகிக்கப்படுவதில் ஒரு சுகமுமில்லை
சிநேகிப்பதில்தான்.




வயநாடு மாவட்டம் கல்பட்டாவில் பிறப்பு. தற்போது கோழிக்கோடு மாவட்டம் கொல்லத்தில் வசிக்கிறார். கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய, சமூக விமர்சகர். இலக்கியப்பணிகளுக்காக பஷீர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப்பெற்ற இவருக்கு 2018-ஆம் ஆண்டிற்கான ‘பத்மபிரபா’ இலக்கிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவருடைய 'இத்ர மாத்ரம்' என்னும் நாவல் தமிழில் 'சுமித்ரா' என்னும் பெயரில்  கே.வி.ஷைலஜா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவருடைய கவிதைகள் சிலவற்றை 'கல்பற்றா நாராயணன் கவிதைகள்' என இணையத்தில் தேடியும் படிக்கலாம். இவ்விரு கவிதைகளும் 2017 ஆகஸ்ட்டில் 'மாத்ருபூமி புக்ஸ்' வெளியிட்ட 'கருத்த பால்' என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. கவிதைகள் கவிஞர் மற்றும் பதிப்பாளரின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளன.

(NIIST Magazine 2019)

Tuesday, April 23, 2019

அன்பு என்பது



Painting : Salvador Dali



அன்பு என்பது ஒரு வெள்ளிக்கொலுசு
நாளாக ஆக அது கருத்துத்தான் போகும்
ஒரு தட்டிலிருந்து மற்றொன்றிற்கு
பண்டங்கள் இடம்பெயரும் மாயம்
நிகழாதபோதே நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும்

அன்பு என்பது ஒரு வெள்ளிக்கொலுசு
நாளாக ஆக அதன் பிடி தளரத்தான் செய்யும்
வீடடைந்தபின்னும் 'வீட்டுக்குப் போய்ட்டியா?' வராமல் போனால்
அதை நாள்காட்டியில் குறித்து வைக்கத்தான் வேண்டும்

அன்பு என்பது ஒரு வெள்ளிக்கொலுசு
அதன் பளபளப்பை மீட்க அவ்வப்போது
கொஞ்சம் உரைக்கத்தான் வேண்டும்
ஐஸ்க்ரீம்கள் உருகினால் கோபப்படல் வேண்டும்
வராமல்போன 'குட் நைட்'டைக் கேட்டு
உறக்கம் தொலைக்கத்தான் வேண்டும்

அன்பு என்பது ஒரு வெள்ளிக்கொலுசு
ஊரடங்கிய நேரத்தில் கதவுக்கு மறுபுறம்
நின்று அழைப்பதைக் கேட்டால்
பார்வையில் விழாமல் நின்று
கொஞ்சம் கண்காணிக்கத்தான் வேண்டும்
அது காலைத்தான் சுற்றியிருக்கிறதாவென
அடிக்கடி சோதிக்கத்தான் வேண்டும்




Friday, November 9, 2018

சென்ட்டரில் இருப்பது

https://www.flickr.com/photos/todorrovic/12198142045



சென்ட்டரில் இருப்பதுதான்
பாதுகாப்பானது

வண்டி சாய்க்கூடாதென்றால்
சென்ட்ரல் ஸ்டாண்டுதான்

ஷேர் ஆட்டோவென்றாலும் சென்ட்டர்தான்
எந்தப் பக்கம் சரிந்தாலும்
ஒரு அடி விழாது

சென்ட்டர் சில சமயங்களில்
திருட்டு முழி
இடதா வலதா என்கையில்
அது அப்பாவி ஆகிறது

சென்ட்டர் சில சமயங்களில்
குறுக்குச் சந்து
ஓரங்கட்டும் காவலரால்தான்
அது நடுரோட்டுக்கு மாறுகிறது

சென்ட்டர் பல சமயங்களில்
சந்தர்ப்பவாதி
ரஜினிக்கா கமலுக்கா என்கையில்
அது கொள்கையைக் கேட்டு நகர்கிறது

சென்ட்டரில் இருப்பதுதான்
பாதுகாப்பானது
சென்ட்டரில் இருப்பதனால்தான்
நல்ல பெயர் கிடைக்கிறது
தாலி கட்டப் பெண் கிடைக்கிறது
தாவ அதிக வாய்ப்பும் கிடைக்கிறது

திருவனந்தபுரம் - சென்னை








https://gallery-wallpaper.com/india-beautiful-nature-images/india-beautiful-nature-images-filebeautiful-scene-of-nature-from-train-wikimedia-commons/

"கோழிக்... கோழி...
பூவன் கோழி...
கண்டோ முட்டத்தில்!"
முன்னவள் துவங்கிப்
பின்னவன் தொடர
தளத்தைத் தட்டி
அதிரச்செய்தான் அச்சன்
இரண்டாம் சுற்றில்
அம்மையின் தலையையும்
சேர்த்துக் கொள்ள
இறுதிச் சங்கமம்
மலரச் செய்தது
பெட்டி முழுவதும்
வண்ணப் பூக்களை.
"தடக்... தடக்..."கை
திருத்திய சக்கரங்கள்
மூன்றாம் சுற்றில்
இசையத் துவங்கவும்
வழியெங்கும்
சிதறிப் பரவின
குழலொலிகள்...
யாழொலிகள்...
களிப்பண்கள்...