1
மற்ற எல்லா இலக்கியப் படைப்புகளையும் விட வடிவில் சிறியதும் செறிவுள்ளதும் கவிதை. வாய்க்குள் வைத்துக்கொள்ளலாம் என்பதால் வலிமையும் அதிகம். கவிதைகள் பற்றிப் பேசுவதின் தகுதி, வரையறைகள், எல்லைகள் குறித்த குழப்பங்கள் எனக்கு இருக்கின்றன. கவிஞருக்கும் கவிதைக்குமான ரகசிய உறவைக் கண்டுபிடிப்பதா, புரிந்த கவிதைகளை வைத்துக்கொண்டு வியாக்கியானம் செய்வதா, இல்லை "இந்தாங்க, உங்களுக்கு ஒரு கவிதை" என்று எழுதியவர் கவிதையையே எடுத்து நெற்றியில் ஒட்டி விடுவதா என்றெல்லாம். யோசித்துப்பார்த்தால் கவிஞர் இசையின் கவிதைகளுக்கும் அவருக்குமான உறவு வெளிப்படை; வெளியாள் வியாக்கியானம் செய்யவேண்டியதற்கான அவசியம் குறைந்தவை. தொட்டவுடன் பற்றிக்கொள்ளும்படியானவை; உடல் முழுவதும் ஒட்டிவிடுமளவிற்கானவை, எனவே இது கட்டுரையா இல்லை காதல் கடிதமா என்பதிலேயே எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன.
நாவலாக்கம் குறித்த கருத்துக்களில் "நாவலாசிரியர்கள் பலர் முதல் நாவலை தங்கள் சொந்த வாழ்வனுபத்திலிருந்தே எழுதிவிட முடியும். அவரின் உண்மையான வெளிப்பாடு வாழ்வனுபவங்களில் இருந்து வெளியே குதித்து, தான் அறியாத வாழ்வை எழுதும்போது வெளிப்படுகிறது" என்கிற ஒன்று உண்டு. ஆனால் கவிதைகள் குறித்துப் பேசும்போது நிலம், அன்றாட வாழ்வு, வாழ்வில் உள்ள பொருட்கள் ஏன் கவிதைக்குள் இல்லை? அவை ஏன் அதிகம் எழுதப்படுவதில்லை? என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அப்படியென்றால் கவிதைச் செயல்பாட்டிற்குக்கென்று வரைமுறைகள் இல்லையா? தனி அனுபவத்தைப் பொது அனுபவமாக்கினால் போதுமா? அதற்கொரு உலகளாவியதன்மை / பொதுத்தன்மை உருவாகி வந்தால் போதுமா? என்கிற கேள்விகளெல்லாம் எனக்கு உண்டு. இசையின் கவிதைகளை மொத்தமாகப் படித்துப் பார்க்கும்போது இந்தக் கோட்பாடுகளும் கேள்விகளும் எழுகின்றன; இவை போதுமென்ற பதில்களும் தன்னிறைவும் தோன்றுகின்றன. இசையின் கவிதைகள் பெரும்பாலும் வாழ்விலிருந்து எழுபவை; தன்னிலிருந்து உலகை நோக்கி விரிபவை.
நவீனத் தமிழ்க் கவிதைகளில் மந்திரம்போல் சிலவற்றை அவ்வப்போது நினைத்துக் கொண்டாலும் அதிகம் நினைத்துக் கொள்வது கவிஞர் இசையின் ஆக்கங்களைத்தான். இரண்டு இருக்கைகளுக்கும் கைப்பிடி சேர்த்து வைக்காத அரங்கு இங்கு இல்லை. குளிக்கும் போது சோப்பு கீழே விழாத வாரமோ, முகத்தில் செருப்படி விழாத மாதமோ, நாய்கள் தெருவுக்கு இழுத்து வராத மார்கழியோ எனக்கில்லை. இன்னும் இன்னும் என்று பேஸ்ட்டைப் பிதுக்காத தேர்வறை எனக்கு இருந்ததில்லை; கழிவிரக்கங்கொள்ளாத நாளொன்று இல்லை. இப்படி அன்றாடமும் தமிழ்வாழ்வும் பொதுத்தன்மையும் கலந்தவைதான் இசையின் கவிதைகள். சத்தியமும் மொழியும் தொனியும் அதன் ஆதாரக்குணங்கள். அவர் தியோடர் பாஸ்கரனை வாசித்திருக்கிறாரா என்று எனக்கு தெரியாது; சில கட்டுரைகள் தவிர்த்து நானும் வாசித்ததில்லை. ஜெயமோகன் மேற்கோள் காட்டித்தான் இதைக் கேட்டேன்: ஒரு விஷயம் சமூகத்தில் நிலைபெற வேண்டுமென்றால் அது அன்றாடம் மக்கள் புழங்கும் மொழியில் இருக்க வேண்டும். இசையின் கவிதைகள் அத்தகையவை. அன்றாடத்தில் இருந்து தொகுப்புக்குள் குதிப்பவை. எனவே, அவர் மக்கள் கவிஞர்.
அவரது மூத்தோர்களான நகையும் தீவிரமும் கூடி மயங்கும் கவிதைகளை எழுதியவர்களென ஞானக்கூத்தன், ஆத்மாநாம், சுந்தர ராமசாமி, விக்ரமாதித்தன் ஆகியோர் நினைவுக்கு வருகிறார்கள். சமகாலத்தில் ஆதவன் தீட்சண்யா, லிபி ஆரண்யா, வாமு கோமு, பெருந்தேவி, கண்டராதித்தன் (கடந்த சில வருடங்களாகவே என்னுடைய வாசிப்பு குறைந்துவிட்டது; சமகாலக்கவிதைகளை வாசித்தால் இந்தப்பட்டியல் நீளலாம்) போன்றவர்களின் கவிதைகளிலும் இதே நகையைக் காண முடிகிறது. முன்னவர் மூவர் அதிகம் அகராதிகளில் இருந்து சொற்களை எடுத்தால் இவர்கள் காதுக்குள் இருந்தும் சொற்களை எடுத்தார்கள். மொழி அலங்காரங்களைக் கலைத்த, மனுஷ்ய புத்திரன் கவிதைகளில்கூட பேச்சுவழக்குச் சொற்கள் அகராதிச் சொற்களுக்கு மத்தியில் ஈ மொய்க்கும் பண்டங்கள் போல அடைப்புக்குள் வருவதைக் காணலாம். இசை கவிதைகளிலும் அந்த ஈக்கள் உண்டு; திறந்திருக்கும் எல்லாச் சாடிகளிலும் அமர்ந்துவிட்டு அக்கணத்தில் அங்கு அமர்ந்திருப்பவைபோல. தனித்துத் தெரிவதில்லை அவை; பறந்தாலும் பாதகமில்லை என்பதுபோல். இசை, சில கவிதைகளில் அகராதிச் சொற்களைத் தலைப்பிலேயே நிறுத்திவிட்டு கவிதைக்குள் வெகுசன மொழியில் விளையாடுவதைக் காணலாம்; அவை ஒரு வகையில் தமிழ்ச்சமூகத்தின் பொதுமொழி. ஆங்கிலச் சொற்களோ பேச்சு வழக்கோ, கவிதை என்னும் செயப்படுபொருள் கோருவதை மட்டுமே நிரப்பி நிற்கின்றன. கவிதை மொழியின் அந்நியமற்ற தன்மையே, இந்த இந்த முன்னறிமுகமே வாசகரை சட்டென உள்ளிழுக்கின்றது; தனி அனுபவத்தைப் பொது அனுபவமாக்குகின்றது. அவருடைய முன்னோடிகள் 'மேசையில் தட்டும் பையன்கள்' என்று எழுத வாய்ப்பிருக்கிறது; ஆனால் 'டெஸ்க்' இருக்குமா என்பதில் எனக்கு ஐயமிருக்கிறது. 'டெஸ்க்கில் தாளமிடும் பையன்கள்' என்று எழுதுகையில் அது வகுப்பறையில் இருந்து கவிதைக்குள் குதிக்கிறது. இப்படித்தான் ‘நைஸ்’; ஒரு கவிதைக்குத் தலைப்பாய் அமர்ந்தே அது பயணத்தைத் தொடங்கி விடுகிறது. ‘ஸ்டுப்பிட்ஸ்’ கவிதையின் தலையென சரியாக அமர்ந்து உணர்வைக் கடத்தி விடுகிறது. காதல் இதுபோல் எவ்வளவு பார்த்துவிட்டது என்பது நாம் அதுவரை கேட்காத ஒன்றுதான், 'உன்ன மாதிரி எத்தன பேர்த்த பாத்துருப்பேன்' என்பது நாம் சொல்லாத ஒன்றல்ல. எனவேதான், அது மு . சுயம்புலிங்கம் எறியும் மாங்கொட்டையைப் போல பூமியைக் குத்திக் கிழிக்கிறது.
அவர் கவிதைகளைப் போலவே கவிதைச் செயல்பாட்டின் மூலங்களை மறைத்து வைத்ததில்லை; கட்டுரைகளிலும் முன்னுரைகளிலும் வெளிப்படுபவை. அவர் வாத்தியாரைப் பற்றி சொல்லும் கட்டுரையில்தான் பாரதியாரையும் நிக்கனோர் பார்ராவையும் இழுத்து உள்ளே விடுகிறார். சுகுமாரனின் “செய்யக்கூடாது"களை வாசித்தவர் எவரும் எழுத்துச் செயல்பாட்டின் நுழைவாயிலைத் தெளிவுடன் தட்ட முடியும். மு. சுயம்புலிங்கத்தின் கவிதைகளில் ஒலிப்பது கிராமத்து மண்வாசம் என்றால் இசையின் கவிதைகளில் நகரத்தின் புழுதியும் சமகாலத் தமிழ்வாழ்வின் நெடியும் அப்பிவிடுகிறது.
2
சத்தியமூர்த்தி சமரசங்கள் செய்து கொள்பவன்; திருட்டு வேலைகளில் ஈடுபடுபவன். ஆனால், சத்தியமூர்த்தி இசைக்கு வழங்குபவை நிறைய என்பது ‘உறுமீன்களற்ற நதி’யிலேயே வெளிப்படையாகத் தெரிந்துவிடுகிறது. கவிதை கொஞ்சம் கைவினைப்பொருளுமென்பதால் அதில் வேண்டுகிற வண்ணத்தை அடித்துவிடலாம்தான்; ஆனாலும் ஏனோ அவன் சத்தியத்தின் நித்தியத்தில் ஒளியைக் கண்டுவிட்டதால் தன்னைக் கரைத்தே அதில் பூசிவிடுகிறான். எழுத்தில் இசை என்னவாக இருக்கிறார் என்பதைக் கிட்டத்தட்ட வரையறுத்துவிடும் கவிதை இதுவென்று நான் நம்புகிறேன். இப்படி எல்லாவற்றையும் கலைந்துவிட்டுத்தான் சொல்லவேண்டியதைச் சொல்கிறார்; எழுத்தின்முன் மண்டியிடுறார்.
ரோஜாவின் கையில் ஒரு ரோஜா
போலிஸ் ஸ்டேசனில் ஒரு முறை மண்டியிட்டுள்ளேன்
பஞ்சாயத்துப் போர்டு கிளர்க்கின் முன்
ஒரு முறை
ஒரு முறை தாசில்தார் அலுவலகத்தில்
அமர்ந்த பாவனையில்
விழுந்து கிடந்துள்ளேன்
அந்த தணிக்கை அதிகாரி
என் கோணல் சிரிப்பை
பூட்ஸ் காலை
நாவால் நக்குவது
என்று சரியாகவே புரிந்து கொண்டார்
அதனால்
"போ" என்று விட்டுவிட்டார்.
பெரிய அரிவாளின் முன்
ஒரு முறை எச்சில் விழுங்கி இருக்கிறேன்
குருட்டு தெய்வங்களின் காலில்
சில முறை விழுந்து கிடந்துள்ளேன்
விட்டுவிடச் சொல்லி
நீதி நெறி நூல்களின் முன்
அழுது அழுது அரற்றியுள்ளேன்
உன் முன்
மண்டியிடுவது
கமலப் பொய்கையுள்
மெல்லச் சரிவது
ரோஜாவாகி
ரோஜா அளிப்பது
கனத்த எடையால்
துவளும் என்னை
சற்றே
இறக்கி வைப்பது.
கவிஞர்களின் கண் கவிஞர்களுக்கு எதிரி. மனம் எடுக்கும் அவதாரங்களை, போடும் குதியாட்டங்களை அது நோக்கத் தவறுவதில்லை. அதிலிருந்து தப்பி, ஊருக்கு உரைக்க அறவாழ்வோ தடித்தனமோ வேண்டும். இவ்வுலகில் இப்பிறப்பில் அது முடியவில்லை தம்பி எனத் தோள்மேல் கைவைத்துவிடுகிறார் இசை; தோளைத்தொட்டவரை நம்பாமல் இருக்கமுடிகிறதா நம்மால்? அதனால்தான், மிக எளிதாக, குறைந்தபட்சம் ஒரு செங்கல் மீது ஏறி நின்றாவது "கேளடா மானிடா" எனக் கைநீட்டி உச்சரித்துவிடும் சாத்தியங்கள் கொண்ட கவிதைகள்கூட சுயஎள்ளலுடன் எழுகின்றன, தன்னைச் சுட்டி நிற்கின்றன, ஆனால் சொல்லவந்ததைச் சொல்லிவிடுகின்றன. நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கவிதைக்குள் கைவைக்கும்போது இவையனைத்துமே நான்தான், வேறு வழியில்லை என்று சுதந்திரமாக அறிவிக்கிறன. இச்சுபாவத்தால்தான் 'தாவிக்குதித்துவிட்டான் காமத்தின் பதுங்குக் குழிக்குள்' என்று தான் தப்பிய குழியில் விழுந்தவனை பார்த்து வசனம்பாட மட்டுமே செய்கிறது; அவனுக்கு நீதிநெறி உரைப்பதில்லை (காமமோ பெரிது!). "வாயிற்காப்போன் உடையில் நீ எவ்வளவு மிடுக்கு தெரியுமா?" என்று அதே வாயிலின் எதிர்திசையில் நின்றுகொண்டுதான் சொல்கிறது (ராஜகிரீடம்).
‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பில் கவிதைக்கும் உலகியலுக்கும் நடுவில் சிக்குண்டிருக்கும் தமிழ் எழுத்தாளரின் வாழ்வு நன்றாகவே தெரியும். முதல் கவிதையே ‘இன்பியல் ஓவியம் வரைந்த கதை’. புறத்துயரைப் புனைந்து மாற்றி நிகழ்த்த முயலும் எத்தனம் அது. அக்காலத்தில் கடற்கரையில் இருந்து பணிமனைக்கு இழுக்கும் வாழ்வு புட்டத்தில் இரு மண்துகள்களையும் ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறது (பணிமனை). காமமும் வெளியும் சுழற்றும் உலகின் பெருமூச்சுமுட்டும் இரவையும் பகலையும் அடுத்த தொகுப்பு வரையிலேகூட காணமுடியும். எனினும், பாலைவனக் கானல்நீரின் குளுமையும் தித்திப்பும் அபாரம் என்கிறார். பாம்பு சட்டையை உரிப்பது போல அக்காலம் மெல்லக் கழண்டு பின்செல்வதால் உலகை அள்ளிப்பருகும் கவிதைகளை அதன்பின் காண்கிறோம். இருந்தாலும் அக்காலத்தின் நினைவுகள் அகன்றுவிடுவதில்லை.
இன்புறுத்தல்
இந்தக் கொடும் பனிக்காலம்
இப்படி
கொட்டித் தீர்ப்பதெல்லாம்
நம் தேநீரை
மேலும் கொஞ்சம்
சுவையூட்டத்தான் தம்பி
என்கிறார். இப்படித் தன்னுபவத்தைப் பிடித்து மேலெழுபவை இசையின் கவிதைகள். நாமும் சரிதான் சரிதான் என்று சட்டையைக் கழற்றிச் சுற்றுகிறோம்.
3
இசை கவிதைகளில் பிரதானப் பங்கு வகிப்பவை மொழியும் தொனியும். இசையும் தாளமும் உண்டென்பதால் மனதிற்குள் கிடந்து உருளத்தொடங்குகிறது. கவிதைகளில் உயரும் குரலும் உண்டு; மறுகும் குரலும் உண்டு. ‘குத்துப்பாட்டின் அனுபூதிநிலை’யில் “எனதுடலா? எனதுடலா? எனதுளமா? எனதுளமா?” என்பது பாட்டின் பகுதியோ என மயங்குமளவுக்கு, இடக்குறைகள் கவிதையை நிரப்பும் மாயம் நம் கண்முன்னே நிகழ்கின்றது. அரசியலும் அழகியலும் முயங்கும் 'பீடி மணக்கும் உன் உதட்டிற்கு ஒரு முத்த'த்தில் பலமுறை கேட்டுள்ள பறைமுழக்கத் தாளத்தைக் கேட்டேன். தோலை வாட்ட கவி தன்னையே போட்டு எரிப்பதால் வாத்தியத்தின் அடி திடும்.. திடும்.. என அதிர்கிறது.
சில இடங்களில் ஒற்றைச் சொல்லே கவிதைக்கு அணிசேர்க்கிறது. 'பிலுக்கு' என்னும் வார்த்தை என்னை ஒன்றாம் வகுப்பில் கொண்டுபோய் விட்டுவிட்டது (பூனையல்லாத பூனை). கொங்குப்பகுதியில் முதலாளி 'ஏத்துயேத்து' என்றுதான் ஏத்துவார் (உண்கண்). ஒரு அடுக்குத்தொடரைப் போட்டுவிட்டுப் போயிருக்கலாம்தான், ஆனால் ஏத்துயேத்து என்று எழுதுகையில் வசையென்றாலும் அதுதான் அக்கவிதையை எனக்கு ஒளிரச்செய்கிறது.
குருடன் ஒருவன்
தடவித் தவறி
தவறித் தடவி
கைப்பற்றிவிட்டான் தடமுலையை.
(கண் - கடைக்கண்)
இங்கு ஒளியில்லாத ஒருவர், தடவும்போது வார்த்தைகளும் வலமிடமென கவிதைக்குள்ளேயே சிதறுண்டு கிடப்பதைக் காணலாம். ‘மேயாத மானி’ல், பள்ளிச் சிறுவன் வீடு நுழைகையில் தண்ணீர்ப் பக்கெட்டுக்குள் கையை விட்டு உதறிச் செல்வதுபோல் ஒரு தெறிப்புடன் துவங்குகிறது. அந்தத் தெறிப்பின் ஒவ்வொரு துளியையும் அந்தக்கவிதை முழுதும் காணவியலும்.
மான்கள்
மிரண்டதுபோல்
ஒரு பார்வை பார்க்கும்
அதற்கு நீ மிரண்டுவிட்டால்
புரண்டுவிட்டாய் போ!
இதேபோல் 'மகா நிர்வாண'த்தின் ஓட்டமும் முதல் பத்திக்குப் பிறகு வேகமெடுத்து இறுதியில் சட்டென நிற்பதைக் காணலாம். அணத்தலும் முனகலும் ஆட்டமும் மொழிக்குள்ளேயே நிகழ்வதைக் காணக்காண இன்பமாய் இருக்கிறது.
//ஒன்று கார்குழல் கார்குழல் என்றணத்த,
மற்றொன்றோ
கால் விரல் கால் விரல்
என்று முனகுகிறது// (கிறுக்கு)
ருசி கண்ட பூனை
சமயங்களில்
சங்கிலி பிணித்த யானை.
அவளுக்கும் வருகிறதொரு மார்கழி!
அவளும் வைக்கிறாள் பூசணி! (மார்கழி)
இங்கு பாட்டின் முடிவில் ஒரு பூ கவிதையின் தலையில் 'நங்'கென்று வந்து அமர்ந்துவிட்டது.
மழை என்பது பஜ்ஜி விருந்து
"உயிரின் சுபாவம் ஆனந்தம்"
என்கிறான் தேவதேவன்.
பார்க்கப் பளபளக்கும் ஒரு வரி இது
தென்படும் ஒவ்வொரு மனிதனிடமும் வினவுகிறேன்..
"ஆனந்தத்தைப் பார்த்தாயா?"
அதன் அங்க அடையாளங்களை
வினவுகிறான் அவன்
நானும் பார்த்ததில்லை
பார்த்தவர்களைப் பார்த்துவிட்டால் கூட போதும்
கண்ணைக் கொஞ்சம் மூடினால்
கண்டுவிடலாம்
காதைக் கொஞ்சம் மூடினால்
கேட்டு விடலாம்
பாவம், நம்மால் அது முடியாது.
ஆனந்தம்
மனிதனின் ஆறடிக்கு மேல்
அறுபதடி உயரத்தில் இருக்கிறது
உயிரின் சுபாவம் கிளுகிளுப்பு
ஆனால்,
அதைச் சொல்ல மாட்டான் தேவதேவன்.
‘உயிரின் சுபாவம் ஆனந்தம்’ என்பதுகூட எனக்குப் பளபளப்பாய் இல்லை. நிச்சயமாக இது தேவதேவனின் பிரச்சனை அல்ல; அந்த அளவுக்குச் சிறியோன் நான். புறப்படும்போது தரையில் பரவும் நீராவி, ராக்கெட்டை மறைப்பதைப் போல ஆனந்தத்தை என் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் கிளுகிளுப்புதான். அச்சொல்லை அருகில் வைக்கும்போது கவிதையின் உச்சத்தையும் என்னுடைய உயரத்தையும் அது தெளிவாகக் காட்டிவிடுகிறது. அப்போதும் இசை விடுவதாயில்லை; தேவதேவனின் ராக்கெட்டில் ஏறி மூவரும் பறக்கிறோம்.
4
இசை கவிதைகளின் மற்றோர் முக்கிய அம்சம் இருமை. வழக்கில் உள்ள ஒன்றை கேள்விக்குட்படுத்தவும், தான் கண்ட ஒன்றையே கேள்விக்குள்ளாக்கவும் செய்திருக்கிறார். தங்காயும் நல்லதங்காவும் பெண்களின் கண்ணீரை விடுவதாயில்லை; ஆய்ந்து ஆய்ந்து தனக்குள்ளேயே விழுவதுபோல் உண்மையின் பக்கங்களில் இரண்டைச் சுட்டி நிற்கிறன. பின்னிரவுக் கண்ணீர் ஆறாத வடுவொன்றைக் கழுவித் துடைக்கிறதென்கிறார் க. மோகனரங்கன். சிந்தும்போதல்ல, காணக்காணவே மனதின் வண்ணம் மாறுவதைப் படம்பிடிக்கிறது இந்தக் கவிதை.
தங்காய்!
அந்நேரம் வரையிலும்
அவளைத்தான்
தின்றுகொண்டிருந்தேன்.
அவள் வளைவுகளில்
ஊர்ந்துகொண்டிருந்தேன்.
அவள் முலைகளை
உண்டுகொண்டிருந்தேன்
வெண் முதுகுப் படகில்
மிதந்து கொண்டிருந்தேன்
மருத்துவர் அறைக்குள் போய்
திரும்பியவள்
துப்பட்டாவால் கண்களை
ஒத்திக்கொண்டு நிற்கிறாள்
நெளிவும், சுளிவும்
முலையும், படகும்
சட்டென மறைந்துவிட்டன.
கண்ணீர்தான்
எவ்வளவு பரிசுத்தம்!
பிறகு நான்கு பக்கம் திருப்பினால் கண்ணீருக்கெல்லாம் உப்பில்லையென்பது நினைவுக்கு வந்துவிடுகிறது.
நல்லதங்கா
கழிவறைக் கதவை
இழுத்துச் சாத்திக்கொள்வது
வசதியானது
தண்ணீர் குழாயை
திறந்து விடுவது
மேலும்
வசதியானது
ஆனால்
வெட்ட வெளியில்
அமர்ந்து
அழுதுகொண்டிருக்கிறாள் ஒருத்தி
பெண்களின் கண்ணீர் என்பது
ஒரு தனியூத்து
இங்கு நான் காண்பது
அதன் சில துளிகள்
ஒருத்தி அழத்துவங்கியவுடன்
அபலை ஆகிவிடுகிறாள்
அங்கு அப்போதே
முளைத்து விடுகிறது ஒரு கிணறு
'தொப்' சத்தமே
அப்பாலே போ!
இது மட்டுமா, காதலில் காதலிப்பவர் காதலிக்கப்படுபவர் என்கிற இரு நிலையை மொழிக்குள் காட்சிப்படுத்தியிருக்கின்றன இவ்விரண்டும்.
119 ஆவது முறை
இந்தமுறை
உன்னை உறுதியாக அறுத்துவிட்டேன்
இனி எங்கேனும்
வழியில் கண்டால் தலையாட்டிக்
கொள்வதென.
எப்படி ஆட்ட வேண்டுமென்று
ஆட்டியாட்டிப் பார்ப்பது
இது 119 வது முறை.
நோய் – வாய்ப் - படுதல்
அவ்வளவு
வலுக்கட்டாயமாக
தலையை வலப்பக்கம் திருப்பிக்
கொள்ளாதே
பிறகு
ஒரு நூறு கைகள் ஒன்று கூடி
அதை
இடப்பக்கம் இழுக்கும்
இருவேறு கவிதைகளாக நிகழ்ந்திருக்கும் இந்த இருமயத்தன்மை கவிதைக்குள்ளேயே இயங்கும் இரு குரல்களாகக்கூட வெளிப்பட்டிருக்கிறது; நாட்டுநடப்புகளைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்குவரும் கவிதையும்கூட.
இரண்டு வழிகள்
பொதுவழியும்
சிறப்பு வழியும்
ஒன்றாகும் இடத்தில்
என்னய்யா இரைச்சல்?
பொது வழியும் சிறப்பு வழியும்
ஒன்றாவதால்
எழும் இரைச்சல்.
மேற்கண்ட கவிதையில் ஒற்றைக் குரலென்றால், ‘சு.ராவின் மந்திரம்’ கவிதையில் ஒலிக்கும் பின்னணிக்குரல்கள் எனக்கு நன்றாகவே கேட்கிறது. பிறகு ஓர்குரலே ஈருடலாகி சண்டையிடும் காட்சியை ‘நான்’ கவிதையில் காணமுடிகிறது. இதைப்போலவே, காவியம், ரயிலில் ஒரு எலி, பலவீனமான கவிதைகளை எழுத விரும்புகிறேன், கவிதையின் ஆசி ஆகியவை கவிதைச் செயல்பாட்டைக் குறித்துப் பேசுகின்றன. நோயுற்றவன் உலகைத்தின்னும் ‘நந்தவன’த்தில், சிக்னலின் முன்னே கைகட்டி நிற்கும் ‘அரிய சந்திப்’பில் கவிதைத் தொழில்நுட்பத்தையும் தெளிவாகக் காணமுடியும்.
5
சலவாய் ஒழுக்கிக் கொண்டு கழிவிரக்கக் கவிதை நின்றாலும் அதை ஓடிப் போய்க் கட்டிக்கொள்ளத்தான் செய்கிறார் இசை. கழிவிரக்கக் கவிதைகளுக்குள் தலைசாய்க்க ஓரிடத்தை வைத்து விட முடியும். மூக்கை சிந்தி கொஞ்சம் மெலிதாக அதன் பின்புறத்தில் தடவி அதை ஒட்டலாம்தான்; வெக்கையில் நன்கு காய்ந்து படபடக்கும்தான். ஆனால் கவி அகதியொருத்தியின் பேட்டியை டிவியில் பார்க்கிறார்; கண்ணீரைத் துடைத்துவிட்டு பாயசத்தைக் குடிக்கிறார் (நாம்). பார்ப்பத்தைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை என்று கவிதைக்கு வெளியே புரள்கிறார். கைகளற்ற ஓவியன் கால்களால் வரையும்போது நம் கண்களிலிருந்து மறைந்துவிடும் குடிகாரர்களையும் பிச்சைக்காரர்களையும் சுட்டிக்காட்டுகிறார். ஒதுக்கப்பட்டோர், உடல்நலிந்தோர் வரும் எந்தக் கவிதையும் உணர்வைச் சுரண்டி நிற்பதில்லை. காய்ந்த பாட்டிலை கொஞ்சம் கூடக் குலுக்கினால் மதுரத்தை எடுத்துவிடலாம் என்று நம்மையும் நம்பவைத்துவிடுகிறார். நாம் மேன்மை என நினைப்பதையெல்லாம் உடைந்து பொடிப்பொடியாகும் கவிதைகள் இவை. கருணை வந்துவிட்டால் இருப்பதை வைத்து இல்லாத ஒன்றை இட்டு நிரப்பி விட்டதாய்த் திருப்திப்படலாம்தான். ஆனால் எதை வைத்து எதைப் பதிலீடு செய்வது? வாகனம் நிறுத்தி சோத்துப்பொட்டலத்தைக் கொடுப்பது யார் வயிற்றை நிறைக்க? ஆயினும் ஆருடர்கள் நீரூற்ற ஈகையறம் இங்கு வாழ்வாங்கு வாழட்டும்.
KIT-KAT
அப்பா சாமியிடம் போய்விட்டதாக
அவளும் நம்பத் துவங்கிவிட்டாள்
தினமும் பார்ப்பேன்
இதுவரை
ஒரு பேச்சும் பேசியதில்லை.
அப்பாக்களைச் சாமிக்குக் கொடுத்த
குழந்தைகளின்பால்
இரக்கம் சுரப்பது இயல்புதானே?
உள்ளதிலேயே பெரிய கிட் - கேட்டாகப்
பார்த்து
வாங்கிப் போனேன் இன்று.
“அப்பனுக்குப் பதிலாக கிட் - கேட்டை
நீட்டும் இவனை
என்ன செய்தால் தகும்?”
நரகத்தின் வாயிலில் யாரோ சீறக் கேட்டுப்
பதறி எழுந்தேன் நள்ளிரவில்.
அம்போ!
இரயிலில் இருந்து இறங்கினார்
ஒரு குருடர்.
தண்டவாளங்களைக் குச்சியால்
தட்டித் தட்டி தடுமாறினார்.
கருணை சுரந்து வழிய
எழுந்து ஓடினேன்.
கைபிடித்துக் கடக்கச் செய்தேன் பத்திரமாக.
நன்றியை வாங்கிக் கொண்டு
அவ்வளவு தூர தூரத்திற்கு முன்னே
அவரை
அம்போவென்று விட்டுவிட்டுத் திரும்பினேன்.
6
கனநேர உணர்வைப் பிடித்து இசை ஏறிச் செல்லும் உயரங்கள் நிறைய. அது ‘மூடு’ என்று நடைசெல்கையில் காதில்விழும் சொல்லாக இருக்கலாம், அன்னை ஒருத்தி ஒன்றுமே சொல்லாமல் தன் குழந்தையை முத்துவதாக இருக்கலாம். கேள்வி, காட்சி, புகைப்படம், திரைப்படம் என எங்கெங்கும் தெறிக்கும் உணர்வுகளை அவர் கவிதைகளில் காணலாம்.
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை
என்றுதான் சொல்கிறது
பிறகேன் இப்படி தேம்புகிறது
என்கிற கவிதையாக இருக்கட்டும், ஏ. வி. மணிகண்டனின் புகைப்படங்கள், காருக்கு வெளியில் இருந்து பழம் நீட்டும் சிறுவனின் புகைப்படம் என அவை தொட்டவை கவித்துவத் தருணங்கள் . சஞ்சய் பாடுதல், அணிலுக்குச் சோறூட்டுதல், இவையெல்லாம் வெறுமனே சம்பிரதாயப் படைப்புகள் அல்ல. இதில் உச்சமெனச் சொல்வது வாத்தியக்காரன் வாத்தியத்தில் இருந்து கையை எடுத்த பிறகு நிகழ்வது. நீ அங்கென்னைக் கூட்டிச் செல் என்று சத்தமும் இல்லாமல் காட்சியும் இல்லாமல் வள்ளலார் ஆவணப்படத்தின் இசையனுபவம் குறித்த பரவசத்தை நமக்கும் மொழியாலேயே கடத்தி விடுகிறது. வாசிக்கையில் தேவதச்சனின் "நிசப்தத்தின் சத்தமும்" எனக்கு நினைவுக்கு வருகிறது.
துக்கம் எல்லாவற்றையும் தெளிவாக்குகிறது, மெதுவாக்குகிறது. யாரேனும் அழைத்தால் கழுத்துகூட மெதுவாகத்தான் திரும்புகிறது. மூளையை நிதானிக்கச் செய்கிறது; பார்வையை இன்னும் கூர்மையாக்குகிறது. அது அற்புதமாகப் பதிவாகியிருக்கும் கவிதையிது.
துக்க காக்கை
மகிழ்ச்சி
எல்லாவற்றையும் மங்கலாக்குகிறது;
பறக்க விடுகிறது
துக்கம்
எல்லாவற்றையும் தெளிவாக்குகிறது;
நிலைக்குக் கொண்டுவருகிறது
இப்போது
இந்தக் காக்கையின் ஒவ்வொரு
மயிரையும்
என்னால் காணமுடிகிறது.
7
கவிதையை "மொழிக்குள் இயங்கும் மொழி" என்று வரையறுப்பதன்மூலம் அதன் இரகசியத்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறார் சாம்ராஜ். புறமொன்று வைத்து உள்ளொன்றைப் பேசும் கவிதைகள், படிமம், குறியீடு என்னும் இலக்கிய நுட்பங்களால் சாத்தியமாகிவிடும்தான். ஆனால் இந்த இரண்டும் ஒன்றுமே தெரியாததுபோல் அப்படி நடிக்கின்றன; மறைந்திருக்கும் மனதை அம்பலப்படுத்துகின்றன. சாதாரணத்தில் இருந்து அசாதாரணத்திற்குத்தாவும் மனிதமனமும் விலங்குமனமும் ஒளிரும் இந்த இரண்டு குட்டிக்கவிதைகள் இன்றுவரை என்னை விடாமல் துரத்துகின்றன.
பூனை
பூனை ஒரு விலங்கு
அதற்குத் தெரிந்திருக்கிறது
ப்ரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி
உதிர்த்துக்கொள்வதென
ஸ்பரிசிக்கும் போது
நகங்களை எவ்வாறு
மழுங்கிக்கொள்வதென
நாய்க்கும் தெரியும் எப்போது குழையவேண்டுமெனெ.
சகலமும்
சகலமும் கலைந்து சரிய,
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்லத் தடவிக் கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது
மனம் போடும் குதியாட்டங்களில் முதன்மையானது உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டுவது. பெற்ற தாயே ஆனாலும் வேலைக்குச் செல்லவில்லை என்றால் டம்ளரை 'டம்'மென்றுதான் வைப்பாள். எட்டி உதைக்கக் காரணமானது இங்கே ஒரு நிராகரிப்பு. குழாயடியில் வரிசையில் நிற்கும் தமிழ்வாழ்விலிருந்து எழுகிறது. ஆனாலும் அதன் தீவிரம் குறையாமல் குடங்கள் சிதறுகின்றன.
நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை
உன் குளத்துப் பொற்றாமரையாக
ஒரு கணம் இருக்கக் கேட்டேன்
ஒரே ஒரு கணம்தான்
அதுவும் இல்லையென்றான நாளில்தான்
குழாயடியின் நீண்ட வரிசையில்
எல்லாக் குடங்களையும்
இடித்துத் தள்ளிவிட்டு
" ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்"
என்று கத்தினேன்.
இசையைப் போலவே அன்பு ஒரு தொற்று வியாதி என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால் நகரத்திற்கு செல்லும் பாதையில் முண்டியடித்துக் கொண்டு நிற்கையில்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘போலீஸ் வதனம்’ கவிதையில் அந்தச் சங்கிலி தொடர்ந்து ஒரு குட்டிநாய் வரை நீண்டு செல்வதைக் காணலாம். கூடவே ரிமோட், கொசுபேட் குறித்த கவிதைகளும் மனதின் பிரதிபலிப்புகளை அற்புதமாகக் காட்டுகின்றன.
8
எத்தனைபேர் பாடினாலும் தீராது பெண்ணழகும், பெண்மனதும். விரிசடையும் நுனிவிரலும் எவ்வளவு பாடினாலும் கிளிஷே ஆவதில்லை; கெண்டைக்காலும் பாதப்பிறையும் சங்ககாலத்திலிருந்து நடந்து வந்தாலும் தேய்வதில்லை (களிற்றுநிரைகளின் காலி). அழகை அழகெனச் சுட்ட மருந்துக்கடையில் ஒருத்தியை மருந்தாக்கி நிறுத்தியிருப்பது புதிது. கூடவே, இயல்பில் ஒளிரும் பெண்மையைச் சுட்டும் பல கவிதைகள் கிடைக்கின்றன. குமரி ஒருத்தி குழந்தைகளோடு விளையாடும்போது அங்கு குழந்தையையும்விட குமரியையும்விட அழகானதொன்று உருவாகிவிடுகிறது (கூற்று). வானத்தின்கீழ் தோழியர் நுனிவிரல் உரசையில் புத்தொளியொன்று பிறக்கிறது. ‘சிவாஜிகணேசனின் முத்தங்கள்’ வரை பெண்ணைவிட காமமும் வாதைகளுமே ஒளிர்கின்றன. அதிகாலை 5 மணிக்கு அது பீளையுண்ணும் கண் என்பது திருப்திகரமான அறிதல்தான் (உண்கண்); அதை அப்படியே விட்டிருக்கலாம். இப்போது எல்லாப் பிரச்சினைகளும் காலைநடைப்பழக்கத்திற்குப் பிறகே ஆரம்பிக்கின்றன. ஒரு டம்ளர் தண்ணீரில் அதே முகத்தைக் கழுவி டூத் பிரஷ்ஷைச் சொருகினால் வரும் அழகைப் பார்க்கவே நாம் நடைபோகவேண்டியிருக்கிறது (இன்று நாள் எப்படி?). நெற்றிக்கும் தாடைக்கும் நீளும் கேசத்தைக் கன்னத்தில் ஒட்டிவிடும் வடவடப்பு இப்போது நம்மைச் சும்மா விடுவதாயில்லை ஐயா.
ஷகிலாவின், ரேஷ்மாவின் உடலைக் கண்டுவரப்போனால் திரைக்குள்ளும் வெளியேயும் மனமே தெரிகிறது இசைக்கு. பெண்மனதையும் காலத்தின் விளையாட்டையும் அற்புதமாகச் சொன்ன கவிதை என பின்வருவதைச் சுட்டலாம்.
'ஏனோ உன் நினைவாகவே இருக்கிறது...'
பல்லாண்டுகள் கழித்து
அவன் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி
அனுப்பினான்.
தற்போதவள்
மனைவியும் தாயுமாகி
வேறெங்கோ நிற்கிறாள்
நேற்றுதான் முதல்முதலாக
ஒரு கடன்காரனால் தட்டப்படும் கதவின்
சத்தத்தை
அவள் கேட்டாள்
நாளை அவள் குழந்தைக்கு
நுழைவுத்தேர்வு வேறு
அவன் எறிந்ததென்னவோ கூர்நுனி
வேல்தான்
ஆனால்
இந்த இரண்டிற்குமிடையில்
அது வந்து குத்துகையில்
ஒரு தட்டுக்குச்சியாகி விட்டது
காற்றாடும் அதை
இடதுகாலால் ஒதுக்கி நடந்தாள்.
இயற்கையின் ஆட்டத்தில் பெண்ணுக்கே அதிகம் விண்ணப்பங்கள்; அவளுக்கே முடிவெடுக்கும் இருக்கை. பிறகு எழுந்திருக்கவே இயலாத இருக்கை.
தலைவி அரற்று
ஒரே ஒரு முறை
அள்ளி அணைத்திருந்தால்
ஒரு வேளை
செத்துப் போகாதிருந்திருப்பான்.
நான் தான்
என் முலைகளை
ஒரு கடுவனுக்கு எழுதி வைத்துவிட்டேன்.
9
'உறுமீன்களற்ற நதி'யிலேயே அங்கதக்கவிஞர் என்கிற பின்னட்டைக் குறிப்புடன்தான் வெளிப்பட்டார் இசை. அது அவருக்கு வசதியான களம். அவர் நினைத்திருந்தால் அங்கேயே நின்று அடித்து ஆடியிருக்க முடியும். ஒரு காலகட்டத்திற்கு பின் அவரே அங்கதக் கவிதைகளின் தாக்கத்தை தனது கட்டுரைகளில் விமர்சனம் செய்யவும் தொடங்கினார். மீம் கலாச்சாரத்தைப் போல அங்கதக் கவிதைகள் பேசுபொருளின் தீவிரத்தன்மையைக் குறைக்கும் என்பதைச் சுட்டுகிறார். அவை விமர்சனமாக இல்லாமல் மீறலாகவும் அவர் படைப்புகளில் வெளிப்படும் காலமிது. 'நிலைபெறும் மனதி'ல் கைகளை அறுத்துக் கொள்ளும் கருதான் பிறகு மூத்திரப் பிரச்சனையாகமாறி கொஞ்சம் எளிய உருக்கொண்டு நிற்கிறது. ரத்தக்கவுச்சியில் இருந்து மூத்திரக்கவிச்சிருக்கு போகும்போது எனக்கு தீவிரம் குறைந்து விட்டதுபோல் தெரியவில்லை; ஆனால் அங்கு கையை அறுத்துக் கொள்ளும் மனதை மேலும் நான் புரிந்து கொண்டேன். அவருடைய கவிதைகளைப் பற்றிப் குறிப்பிடும்போது 'கேலி இல்லாமல் புன்னகையுடன்' என்று சொல்வது எதையோ குறைத்துச் சொல்வது போல்தான் ஒலிக்கிறது. ஊக்கமுடை சகாவே, கவிதையின் வெடிச்சிரிப்பும் எளியுருவும் எனக்கு நன்மையே செய்திருக்கின்றன. மற்றவற்றை நான் வல்லுனர்களிடம் விட்டுவிடுகிறேன்.
10
எல்லாமுறையும் பச்சைக்கம்பளம் விரிக்கும் சிக்னல் என்னை ஒருமுறை நிறுத்தியது. உச்சிவெயிலில் ஒரு மஞ்சள் மலரைக் காட்டி குண்டிச்சூட்டைக் குறைத்தது. ஹெல்மெட்டுக்குள் மட்டும் முதலாளியை ஏசும் வாழ்வு; எனினும் அப்போது வசைகள் திரும்பி வாய்க்குள்ளேயே போய்விட்டன. இதோ, சொல்லி முடிப்பதற்குள் பச்சை ஒளிர்ந்து வாழ்க்கைக்குள் அழைக்கிறது. எங்கள் நாட்களின் எடையைக் குறைப்பதற்கு நன்றி இசை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
திணைகள் இணையத்தில் : கானல் நீரின் குளுமையும் தித்திப்பும் (கவிஞர் இசையின் கவிதைகளை முன்வைத்து)
ஒளிப்பதிவு : இசை கவிதைகள் - ஓர் உரையாடல்