Tuesday, April 23, 2019

அன்பு என்பது



Painting : Salvador Dali



அன்பு என்பது ஒரு வெள்ளிக்கொலுசு
நாளாக ஆக அது கருத்துத்தான் போகும்
ஒரு தட்டிலிருந்து மற்றொன்றிற்கு
பண்டங்கள் இடம்பெயரும் மாயம்
நிகழாதபோதே நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும்

அன்பு என்பது ஒரு வெள்ளிக்கொலுசு
நாளாக ஆக அதன் பிடி தளரத்தான் செய்யும்
வீடடைந்தபின்னும் 'வீட்டுக்குப் போய்ட்டியா?' வராமல் போனால்
அதை நாள்காட்டியில் குறித்து வைக்கத்தான் வேண்டும்

அன்பு என்பது ஒரு வெள்ளிக்கொலுசு
அதன் பளபளப்பை மீட்க அவ்வப்போது
கொஞ்சம் உரைக்கத்தான் வேண்டும்
ஐஸ்க்ரீம்கள் உருகினால் கோபப்படல் வேண்டும்
வராமல்போன 'குட் நைட்'டைக் கேட்டு
உறக்கம் தொலைக்கத்தான் வேண்டும்

அன்பு என்பது ஒரு வெள்ளிக்கொலுசு
ஊரடங்கிய நேரத்தில் கதவுக்கு மறுபுறம்
நின்று அழைப்பதைக் கேட்டால்
பார்வையில் விழாமல் நின்று
கொஞ்சம் கண்காணிக்கத்தான் வேண்டும்
அது காலைத்தான் சுற்றியிருக்கிறதாவென
அடிக்கடி சோதிக்கத்தான் வேண்டும்




No comments:

Post a Comment