Tuesday, July 9, 2019

கவிதைகள் - கல்பற்றா நாராயணன்





பிறந்த நாள்

பிறந்தநாள்ப் புலரியில்
கைகளை விரித்தவாறே  
மகளோடி வந்தாள்
அப்பா, இந்த விரல்களுக்கு மூன்று வயதாகியோ?
மூன்றாம் வயது
விரல்வரை வந்துவிட்டதா எனத் தெரியவில்லையெனினும்
கிட்ட நெருங்கிக்கொண்டிருக்கிறது,
நான் சொன்னேன்
ஆம்.

இந்த மச்சத்திற்கோ?
அதற்கும்.
அவளுக்கது அத்தனை பிடிக்கவில்லையென்று  தோன்றிற்று.
அது என்னுடனே வளர வேண்டாம்.
காண்போரெல்லாம்
கன்னத்தைத் தொட்டு முத்தினார்கள்.
கன்னத்தை யார் தொடுவதும் அவளுக்கு விருப்பமில்லை.
அதிகவனத்துடன் சவரம் செய்கையில்
-சவரம் செய்கையில்
சவரச்சத்தம் நிசியில் தொடர்வண்டியைப் போல-
அவளென்னை வேதனைப்படுத்தும்விதம் கேட்டாள்;
இதையும் கொஞ்சம் ஷேவ் செய்து விடுகிறீர்களா?

இந்தக் காலிற்கும் மூன்று வயதாகியோ?
என்றாள் நம்பிக்கை குறைந்த தொனியில்.
காலுயர்த்திக் காட்டுகிற சாகசத்தில்
நீர் நிரம்பியிருந்த பாத்திரம் சரிந்து
மேசைப்புறம் நனைந்தது.
ஆம், கிட்டத்தட்ட.
அவளோடு அது ஓடத்துவங்கி
ஒன்றரை வருடங்களே கடந்திருந்தன.
அதுவும் துவக்கத்தில் தயங்கித் தயங்கி.
அதற்கு எத்தனையோ காலம் முன்பே அவளோடத்துவங்கியிருந்தாள்.

இந்தப் பல்லிற்கோ?
இம்முறை அம்மை இடைமறித்தாள்.
இரண்டிற்கு இரண்டேகால் வயது
மற்றவை ஒவ்வொன்றிற்கும்
இரண்டும், ஒன்றரையும், ஒன்றேகாலும்.
இதற்கு மூன்று மாதம்
என் செல்ல மகளே;
அம்மையின் விரல்களால்
அவளதைத் தொட்டுணர்ந்தாள்
என் செல்லக்குட்டி.

இந்தக் காதிற்கோ?
எனக்குத் தெரியவில்லை.
அவளதைக்கொண்டு நேற்றுக் கேட்டதல்ல
இன்று கேட்பது.
இந்தக் கண்ணிற்கோ?
தெரியவில்லை.
அவளதைக்கொண்டு நேற்றுக் கண்டதல்ல
இன்று காண்பது.
அவள் உதிர்க்கும் சொற்களுக்கு
அவளுடையதல்ல வயது.
சிலதிற்கு ஐநூறோ ஆயிரமோ.
அவளிப்போது அறுவடை செய்கிறாள்.
பலவும் அனேக வருடங்களுக்கு முன்பு யாரோ விதைத்தது.

என்றால் எனக்கு மட்டுமா மூன்று வயது?
ஆமோதிக்கத்தான் வேண்டுமோ?
நானவளுக்கோர் உண்மை சொன்னேன்,
என் செல்ல மகளே
உன்னில் எதற்கும் மூன்று வயதல்ல.




இத்தனை அதிகம் காதலித்தால்

இத்தனை அதிகம் காதலிக்கப்பட்டும்
அவள் பிரியத்தான் விரும்பினாள்
தோழிக்கும் எழுதினாள்
காண்கையிலெல்லாம்
என்னைத்தான் பார்க்கிறான்
உற்றுநோக்கலின் சூட்டில்
முட்டை விரிவதைப்போல்
என் முலைகள் விரியுமென்று
நம்புவபனைப்போல,
அவை விரிகையில்
வெளிப்படும் சிசுக்களை
வளர்த்தியெடுப்பவனைப்போல.
விரல்களை இழுத்துச் சுவைக்கிறான்
அதற்குள் ஒன்றுமில்லையென
எத்தனை முறை சொல்லியும்
அவனுக்குப் புரிவதில்லை.
ஓரிரவில்
கோடரி கையிலெடுத்து
அவனிடம் சொன்னேன்:
விடியும்முன்னே என்னை
முழுதும் கிரியிடு
சின்னச்சின்னத் துண்டுகளாக.
பதின்மத்தில்
அம்மா பலமுறை அழைத்தும் போகாமல்
ஜன்னல் வழி நான் கண்டுநின்ற
மழுப்பணிக்காரனைப்போல, ஒரு தயவுமில்லாமல்.
அவனோ சந்தையில் வாங்கிவந்த
ரோஜா இதழ்களைத் தேகத்திலிட்டான்.
சிலிர்க்கிறதெனக்கு.
சிநேகம்
எத்தனை தாங்கவியலா ஒன்று!
நீ சொல்வதைப்போலேயே அல்ல
சிநேகிக்கப்படுவதில் ஒரு சுகமுமில்லை
சிநேகிப்பதில்தான்.




வயநாடு மாவட்டம் கல்பட்டாவில் பிறப்பு. தற்போது கோழிக்கோடு மாவட்டம் கொல்லத்தில் வசிக்கிறார். கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய, சமூக விமர்சகர். இலக்கியப்பணிகளுக்காக பஷீர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப்பெற்ற இவருக்கு 2018-ஆம் ஆண்டிற்கான ‘பத்மபிரபா’ இலக்கிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவருடைய 'இத்ர மாத்ரம்' என்னும் நாவல் தமிழில் 'சுமித்ரா' என்னும் பெயரில்  கே.வி.ஷைலஜா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவருடைய கவிதைகள் சிலவற்றை 'கல்பற்றா நாராயணன் கவிதைகள்' என இணையத்தில் தேடியும் படிக்கலாம். இவ்விரு கவிதைகளும் 2017 ஆகஸ்ட்டில் 'மாத்ருபூமி புக்ஸ்' வெளியிட்ட 'கருத்த பால்' என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. கவிதைகள் கவிஞர் மற்றும் பதிப்பாளரின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளன.

(NIIST Magazine 2019)

No comments:

Post a Comment