Tuesday, June 28, 2022

நிறைந்து வழிவது...

சேச்சிக்கும் எனக்கும்

ஒரே வேலைதான்:

அவள் அலுவலகக் குப்பைகளைக் 

கூடையில் சேமிக்கிறாள்,

நான் கணிப்பொறியில்.

எதிர்ப்படும் போதெல்லாம்

ஒரே கேள்விதான்:

'காப்பி குடிக்காணோ'

'ம், காப்பி குடிக்கத்தான்'

முதல்முறை போல அவளும் கேட்பாள்

முதல்முறை போல நானும் சொல்வேன்

நடையைக் குறைக்காமல்.

ஒருமுறை அலுவல் கூட்டத்தினிடை 

அவளே வந்தாள்

ஊற்றிய காப்பி விளிம்பைத் தொட்டதை 

எப்படிச் சொல்ல?

காப்பி கூடிப்போயென்றா? 

இல்லை 

சிநேகம் கூடிப்போயென்றா?

Friday, June 24, 2022

காலங்காலமாய்...

அந்தக் குடை நடக்கும்

அந்தச் சைக்கிள் ஓடும்

இவ்விள வெயிலில்

காற்றில் ஆடும் 

கொடியின் நுனியென 

ஒரு கரம் நீண்டு 

சைக்கிளைத் தொடவே 

அது நடக்கும் 

அந்தச் சைக்கிள் நடக்கும் 

Wednesday, June 22, 2022

என் செல்லமே...

டேங்க்கின் மீதமர்ந்து 

நீ செலுத்தும் வண்டி 

ஓடுவது பெட்ரோலில் அல்ல,

அதன் சக்கரம் சுழல்வது

பூமியிலும் அல்ல.

இடம் வலம் என

நீளும் உன் கை 

சுட்டும் இடத்தில் 

நிற்பதுவும் 

இறங்கிச் செல்வதுவும் 

யாரும் அல்ல.

அடிவானம் சாலையை முத்தும் இடத்தில்

உன் கை

கொஞ்சம் விரும்பி 

கொஞ்சம் தவறி 

மேல்நோக்கி உயருமென்றால்

இந்தப் புவியில்

உனைப் பிடித்திருத்தப் போவது  

எதுவும் அல்ல.

Monday, June 20, 2022

வைகறை வெளிச்சம்

புலரியில் வீடிறங்கி

பின்முதுகில் நீர் சொட்ட

வேர்களை விட்டுவிட்டு

இலைகளுக்கு நீர்விடும்

இவள்

குளிப்பாட்டுவது பிள்ளைகளைத்தான்.

இதைச் சொல்வது நானல்ல,

அவள் முகமேதான்.

Thursday, June 16, 2022

அடித்தோழி!

பேசிக்கொண்டே

உரையாடலின் அபாய வளைவை 

எத்திவிட்டோம் 

சட்டென நீ 

உன் வாழ்வின் 

தாளாத சுமையொன்றை இறக்கிவைத்தாய் 

அதன் எடையில் என் முதுகு 

வளைந்தேவிட்டது 

மூச்சுவிடவே அல்லற்படும் நான்  

புதுப்புது சொற்களால் 

புதுப்புது கரங்களால்  

பவர் ஸ்டியரிங் இல்லா 

லாரி டிரைவரைப்போல்  

குப்புறப்படுத்துக்கொண்டு 

இப்பேச்சின் திசையைத் 

திருப்புவதைப் பார்.

Saturday, June 4, 2022

நியாயம்மாரே

 ஆசான்களே... 

முன்னோடிகளே... 

கொஞ்சம் இங்கே பாருங்கள்:  

நான் சுமாரான மாணவன்தான் 

நகலெடுப்பவன்தான் 

தேய்வழக்குகளை உபயோகிப்பவன்தான்

நீங்கள் எவ்வளவு சொல்லியும் 

கேட்காதவன்தான் 

அதற்காக ஏன் என்னைக் கைவிட்டீர்?

எழுத்துப் பிழைத்திருக்க

உண்மையும்

எழுதப் பிழைத்திருக்க

மீதமும் போதும் என 

ஏன் சொல்லித்தரவில்லை?