Showing posts with label உயர்கல்வி. Show all posts
Showing posts with label உயர்கல்வி. Show all posts

Sunday, April 7, 2024

எதிர்வினை - பணமில்லாமல் பணியில்லை

காலச்சுவடு மார்ச் 2024 இதழ் தலையங்கத்திற்கு எழுதிய எதிர்வினை 


காலச்சுவடு மார்ச் இதழின் தலையங்கம் 'பணமில்லாமல் பணியில்லை' வாசித்தேன். சமகால உயர்கல்வித்துறையின் அவல நிலையை மிகச்சிறப்பாகத் தீட்டியிருக்கிறார் ஆசிரியர். அவற்றைக் குற்றம் சுமத்துவதாக அல்லாமல், பயனாளர்களாகிய மாணவர்களின் இடத்திலிருந்து நோக்கி, இச்சீரழிவு தொடர்ந்தால் அது சமூக நீதிக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மிகக்கூரிய சொற்களால் சுட்டிக்காட்டியிருக்கிறார். “குறுக்கு வழியில் பணிக்குவரும் ஒருவர், அறம் சார்ந்த வழிகளை மாணவர்களுக்குப் பரிந்துரைக்க இயலாது. எல்லாம் பணம் தான் என்று சொல்லி கல்வியைத் துச்சமாக நினைக்கும் எண்ணத்தை விதைப்பவர்களாக இருக்கிறார்கள்” என்கிறது தலையங்கம். இது மிகச்சரியான அவதானிப்பு. இந்திய அரசின்கீழ் வரும் அரசுப்பணிகள், கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கைத் தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதே இதற்குச் சான்று. 

குறுக்கு வழியில் பணிக்கு வரும் இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கே ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்; திறமையின்மையினால் மட்டுமல்ல, மோசமான குணநலங்களாலும். சாதியால், மதத்தால், தன் அதிகாரத்திற்கு அடிபணியவில்லை என்பதால், கேள்வி கேட்பதால் அத்தகு மாணவர்களின் கல்வியைப் பாழ் செய்வதற்கான அனைத்து உளவியல் வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது, சமவாய்ப்புக் கொடுக்க மறுப்பது, மதிப்பெண்களைக் குறைப்பது, ஆய்வுப் பணிகளுக்கு இடையூறு செய்வது, எதிர்காலத்தில் உனக்குப் பரிந்துரைக் கடிதம் தரமாட்டேன் என்று ஆய்வு மாணவர்களை அடிமை போல் நடத்துவது, எங்கெல்லாம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி மாணவரை மனம் நோகச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வது, இவற்றிற்கும் மேலாக தற்கொலைக்குத் தூண்டுவது. இவற்றுக்கெல்லாம் புற ரீதியான சான்றுகள் கொடுக்க இயலாது என்பதால் குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் இத்தகு ஆசிரியர்களே சந்தேகத்தின் பலனை அனுபவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கொஞ்சம் எண்ணிப்பாருங்கள், உயர்கல்வி நிறுவனத் தற்கொலைகள், பாலியல் அத்துமீறல்களுக்கு இங்கு தண்டனை பெற்றவர் எவர்? எனவே, ஆசிரியர் தேர்வில் ஊழல் என்பது மனிதவளத்திற்கே ஆபத்தான போக்காகும், இக்கயமைத்தனம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். 

"கடந்த இருபது வருடங்களில் கிட்டத்தட்ட ஒரு பணியிடம்கூடப் பணமில்லாமல் நிரப்பப்படவில்லை என்பதே நிதர்சனம்” என்னும் வரிகள் வெறும் அவதூறு அல்ல. இருபது வருடங்களுக்கு முன் துவங்கிய இந்தச் சீரழிவு இன்னும் நாற்பது வருடங்களுக்கு நம் கல்விச்சூழலை அழிக்கும்; அதிலிருந்து மீள இன்னும் இருபது வருடங்கள் எடுக்கும். தவறுகள் களையப்படவேண்டுமென்றால் அவற்றை ஏற்பதிலிருந்து துவங்க வேண்டும். அந்த வகையில், சமகால உயர்கல்வித்துறை குறித்த, அக்கறை மிகுந்த, மிகத் தைரியமான விமர்சன எழுத்து இந்த இரண்டு பக்கத் தலையங்கம். காலச்சுவடு ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

கூடவே, நேர்மையாளர் குழு அமைத்து இந்நிலை மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது தலையங்கம். இது குறித்து எனக்குத் தெரிந்த சில பரிந்துரைகளை முன்வைக்கலாம் என நினைக்கிறேன். 


1. கல்வித்துறை குறித்த விமர்சனங்கள் முதலில் உள்ளிருந்து எழ வேண்டும்

சமகாலத்தில் இதைத் தொடர்ந்து செய்பவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். அதுவும் பணி ஓய்விற்குப் பிறகு கொஞ்சம் சுதந்திரமாகச் செய்ய இயன்றிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால், பணிக்காலத்தில் அவருடைய அதிகாரத்திற்குட்பட்டு சிலர் ஒத்துழைப்புடன் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார். அருஞ்சொல் இணைய இதழில் தன் அனுபவங்களை எழுதிவரும் அவரின் சமீபத்திய கட்டுரை “ஆசிரியர்களும் கையூட்டும்.” அரசுக்கல்லூரி ஆசிரியர்களின் கள்ளத்தனங்களில் சிலவற்றை அவர் விரிவாகவே பேசி இருக்கிறார்.

கடந்த இருபது வருடங்களாக, எதற்கும் லஞ்சம் ஊழல் என்றிருக்கும் கல்வித்துறை குறித்து உள்ளிருந்து அதிகம் விமர்சனங்கள் எழுந்ததில்லை. பணம் வாங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டதாகவோ, பணம் வாங்குகையில் கையும் களவுமாகப் பிடிபட்டுத் தண்டனை பெற்றதாகவோ, ஒருவரும் இல்லாமல் இருப்பதே இத்துறையில் விசிலூதிகள் இல்லை என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. சூழலின் நிலை குறித்த அனாமதேயக் கட்டுரை எழுதக்கூட இங்கு ஆட்கள் இல்லையா அல்லது அவற்றை பதிப்பிக்க, வெளிக்கொணர ஊடகங்கள் இல்லையா எனத் தெரியவில்லை. எல்லோர் கையிலும் ஒளிப்பதிவுக்கருவி, இன்னபிற ஒற்றுக்கருவிகள் எளிதில் கிடைக்கும் காலத்திலும் இதைக் குறித்துக் கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதும் சூழலின் நிலைக்குச் சான்று.

எனவே, மாணவர்கள், பணி நாடுவோர், கௌரவ விரிவுரையாளர்கள், தனியார் கல்லூரியில் சுரண்டப்படும் ஆசிரியர்கள் அனாமதேயமாகவேனும் தங்கள் அனுபவங்களைப் பொதுவெளியில் வைக்க வேண்டும். தனிநபர் ஊடகமாகும் காலத்தில் இது கடினமும் அல்ல. இவற்றால் பலனடையப் போவது கையூட்டுக் கொடுப்பவர்கள் வாங்குபவர்கள், அல்லாதவர்கள் உள்ளிட்ட எல்லோரின் குழந்தைகளும்தான்.


2. கௌரவ விரிவுரையாளர்களுக்குப் பணி நிரந்தரம் (அ) தனிச் சலுகை சரியல்ல.

உயர்கல்வித்துறையில் நுழைய ஒரு வழிதான் இருக்க வேண்டும். தமிழகத்திலும் கர்நாடகத்திலும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதை அடிக்கடி பார்க்கிறேன். கௌரவ விரிவுரையாளர்கள் என்போர் ஒரு குறிப்பிட்ட கல்லூரியிலோ/பல்கலைக்கழகத்திலோ ஆய்வு செய்து அதே இடத்திலேயோ / பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலோ பணிக்குச் சேர்ந்திருப்பவர்கள் எனலாம். கௌரவ விரிவுரையாளர்களாவதற்கும் துறையில் உள்ள ஆசிரியர்களுடன் முன்பரிச்சயம், பரிந்துரைகள் போன்ற தகுதிகள் தேவை. ஒரு ஒரே கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இப்படி அமைப்பிற்குள் பல்கிப் பெருகுவதை ‘கல்வித்துறை உட்பெருக்கம்’ (academic inbreeding) என்கிறோம், இது கல்வித் துறையின் தரத்தைக் குறைக்கும்.  சென்ற வருடம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் இருந்ததாக அறிகிறேன், அது நல்ல துவக்கமும்கூட. இப்படி உயர்கல்வித் துறையில் நுழையும் ஒருவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாமல் பணி நிரந்தரம் கோருவது ஏற்புடையது அல்ல. வேலையின்மை, பணி/ஊதியப்பாதுகாப்பு இல்லாத சூழலில், கௌரவ விரிவுரையாளர்கள் இத்தகைய கோரிக்கைகளை அமைப்பாகவோ, அரசியலர் வழியாகவோ எழுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 

தற்போது வெளியாகியிருக்கும் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வுமுறையின் திட்ட வரைவு, மாணவர்களை ஆய்விற்குத் திருப்பும் திறனுடையோரைக் கண்டறியும் நோக்கில்தான் தேர்வுமுறையே நடைமுறைக்கு வருகிறது என்று சொல்கிறது. தேர்வு மதிப்பெண் தவிர்த்து கௌரவ விரிவுரையாளர்களின் அனுபவத்தைப் பொறுத்து சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்கிறது. என்றால், முனைவர் பட்டம் பெற்றவருக்கோ, முனைவர் பட்டத்திற்குப்பின் ஆராய்ச்சித் துறையில் இருக்கும் ஒருவரின் ஆய்வு அனுபவத்திற்கு இத்தேர்வுமுறை வழங்கப்போகும் மதிப்பெண்கள் என்ன? கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் எதற்கு சிறப்பு மதிப்பெண்கள்? இதர தனியார்/அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் அனுபவம் இவர்களைக் காட்டிலும் எந்த வகையிலும் குறைந்தது அல்ல எனும்போது, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் ஏன் தனிச் சலுகை? கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இதுபோன்ற  சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனும்போது தமிழ்நாட்டில் மட்டும் எதற்கு வழங்கப்பட வேண்டும்? இத்தகைய சிறப்புச் சலுகைகள் பிற தேர்வர்களுக்குச் செய்யும் அநீதி. 


3. ஆசிரியர் தேர்வு முறை

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய அளவிலேயே அரசுப் பணிக்கு நேர்முகத் தேர்வு என்ற செய்தி வந்தால் எழும் முதல் கேள்வி: எவர் தேர்வு செய்யப்படுவார் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டதா? இரண்டாம் கேள்வி: எவ்வளவு கேட்கிறார்கள்? இத்தகைய பொதுத் தன்மையே இம்முறை சமகால நடைமுறையாக மாறிவிட்டதற்குச் சான்று.

தமிழ்நாடு அரசு நேர்முகத் தேர்வில் இருந்து போட்டித் தேர்விற்கு வந்திருப்பது பாராட்டத்தக்க செய்தி. கொள்குறி வினாக்களுடன் விரிவான பதில் எழுதுதலும் போட்டித் தேர்வில் இருக்கும் என்கிறது அறிவிக்கை. கூடவே, நேர்காணலுக்கு முப்பது மதிப்பெண்கள் என்கிறது. 

நேர்காணலில் முதல் கேள்வி “எவ்வளவு கொடுப்ப?” என்கிற நகைச்சுவை ஆசிரியர் தேர்வுக்கு தயாராபவர்கள் மத்தியில் பிரபலம். ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசமே பணி கிடைக்கும் வாய்ப்பைப் பறிக்கும் எனும்போது நேர்காணலுக்கு முப்பது மதிப்பெண்கள் என்பது பெரும் பின்னடைவு. கூடவே, கடந்த இருபது வருடங்களாகப் பணம் கொடுத்துப் பணியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பது நாமறிந்த செய்தி. இவர்கள் அந்த நேர்காணல் மேடையில் இருந்தால் என்னாகும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.  

அப்படி என்றால் ஒரு கல்லூரி ஆசிரியரை எப்படித் தேர்வு செய்வது?

நமக்கு பதில் சொல்கிறது தேசிய, பிற மாநில தகுதித் தேர்வுகள். தேர்வுகள் கணிப்பொறி முறையில் அல்லது கார்பன் நகல் இணைக்கப்பட்ட ஓஎம்ஆர் முறையில் நடத்தப்பட வேண்டும். தற்போது கணிப்பொறி வழியே நடக்கும் தேசிய தகுதித் தேர்விற்குப் (NET) பின் விடைத்தாளைத் தரவிறக்கிக் கொள்ளும் வசதி உண்டு. ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் என்றால் அதன் நகல் கிடைக்கும். இதன் மூலம் தேர்வின் வெளிப்படைத்தன்மையும் அதன்மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். சில வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி, ஓஎம்ஆர் நகல்களை வழங்கியதால்தான் அத்தேர்வில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மறுதேர்வு நடந்தது. இந்த நிலையில் கொள்குறி வினாக்களும், விடைத்தாள் நகலுமே தேர்வரைக் காக்கும். உடன், தவறான பதில்களுக்கு எதிர்க்குறி மதிப்பெண்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

நேர்காணல் என்ற ஒன்று அவசியம்தானா? 

தேர்வரை மதிப்பிட அவரது கல்வித் தகுதியே போதும்; வேறொருவர் மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என்கிறது கேரள நடைமுறை. அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு கீழ்க்காணும் பிரிவுகளில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

i. இளநிலை, முதுநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், முனைவர் பட்டப்படிப்பின் ஆய்வினடிப்படையில் பதிப்பித்த சர்வதேச ஆய்விதழ்கள் மற்றும் புத்தகங்கள், கற்பித்தல் அனுபவம்

ii. எம்ஃபில் பட்டம் மட்டுமெனில் இரண்டு, முனைவர் பட்டம் மட்டுமெனில் நான்கு, இரண்டுமெனில் ஐந்து.

இவற்றுடன் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, தர வரிசை தயாரித்து பணியமர்த்துகிறார்கள். 

ஒருவரின் ஆய்வு அனுபவத்தையும் கற்பித்தல் அனுபவத்திற்கு இணையாகக் கருத வேண்டும் என்கிறது பல்கலைக்கழக மானிய குழு. ஆசிரியர் தேர்வு வாரியம் இவற்றைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்.


4. அரசு உதவி பெறும் கல்லூரிகள் 

இந்திய ஒன்றியம் எங்கும் உயர் கல்வித்துறையின் சீரழிவைத் துவங்கி வைத்தது இவர்களே. அரசால் ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல்கள் நடத்துகிறேன் என்கிற பெயரில் பணவேட்டை நடத்துவது, தகுதியற்ற உறவினர்களை, வாரிசுகளைப் பணியில் அமர்த்துவது, நேர்காணலுக்கு வந்திருப்பவர்களை நிராகரிப்பதற்கான காரணம் இதுவென்று புதுப்புது வழிகளில் அவமானப்படுத்துவது, என சிலவற்றை சொல்லலாம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் பணியின் சந்தை மதிப்பு அறுபது லட்சங்களுக்கும் மேல். சொந்த மதம்/சாதி/உறவினர் எனில் தள்ளுபடி உண்டு. ரொக்கமாகக் கொடுக்க இயலாதவர்களுக்கு வாங்கிக் கடன் ஏற்பாடு செய்யப்படுகிறது, அல்லது சம்பளத்தேதியில் நேரடியாகப் பிடித்தம் செய்துகொள்ளப்படுவதும் உண்டு. 

அரசால் நிதி வழங்கப்பட்டு அரசால் ஊதியம் வழங்கப்படும் ஆசிரியர்களை அரசே பணியமர்த்துவதுதானே நியாயம். இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்வதில் யாருக்கும் வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அப்படி இருக்கையில் தலையங்கம் சொல்வதைப் போல அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகளால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்; எதிர்வரும் தேர்வு முதலே இம்முறை நடைமுறைக்கு வர வேண்டும். 

இப்போதும் அரசு உதவி பெரும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் பதவி உயர்வு, பிற பணப்பலன்கள் கிடைக்கத் தாமதமாவதாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இம்முறை நடைமுறைக்கு வந்தால், அரசு உதவி பெரும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் என்னும் வகைமையே இல்லாமல் போவதால் அனைத்து ஆசிரியர்களும் சமமாக நடத்தப்படும் வாய்ப்பே அதிகம். 


5. தனியார் கல்வி நிலையங்கள் சட்டத்தால் முறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலைக்கு சேரும் ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு என்பதோ, கௌரவமான ஊதியம் என்பதோ இல்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி / முனைவர் பட்டத்தை விரும்பிப் பெற்றவர்கள் குடும்பச்சூழலால் ஆசிரியர் பணியைக் கைவிடுகிறார்கள். இதன் உப விழைவு தகுதியற்றோர் அவ்விடங்களை நிறைக்கிறார்கள். மாதம் பதினைந்தாயிரம் கேட்கும் ஒருவரைவிட, பத்தாயிரத்திற்கு பணி செய்ய தயாரென இருக்கும் ஒருவரே பெரும்பாலான தனியார் கல்வி நிறுவங்களின் தேர்வு. ஆனால் கடுமையாகச் சுரண்டப்படுபவர்களும் அவர்களே. தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகும் சூழலில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்காதவரை திறனுள்ள ஆசிரியர்களின் வரத்து நிகழப்போவதில்லை. 

கோவிட் காலத்தில் ஊதியமும் குறைக்கப்பட்டு, கணினி-இணைய-மின்சாரச் செலவுகளைத் தாங்களே ஏற்று வகுப்பும் எடுத்துக் கொடுத்த ஆசிரியர்களுக்கு கடனே மிஞ்சியது. கோவிட் காலத்தில் ஊதியம் இன்றி பனைமரம் ஏறி உயிரிழந்த ஆசிரியரையும் நாம் கண்டோம். இது மட்டுமில்லாமல் விடுப்பு, வேலையில் இருந்து விடுப்பு என்கிற அடிப்படை தொழிலாளர் உரிமைகூடப் பெரும்பாலான தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இல்லை. தன் உரிமைக்கே போராடும் நிலையிலிருப்பவர்கள் அல்லது அடிமையாய் இருப்பவர்களால் சுதந்திர சிந்தனையுள்ள கல்விச்சூழலை உருவாக்க இயலாது.

இந்நிலை களைய தனியார் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்திய ஒன்றியத்தில் இது புதிதும் அல்ல அண்டை மாநிலமான கேரளம் 2021 ஆம் ஆண்டு அத்தகைய ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. Kerala Self Financing College Teaching and Non-teaching Employees (Appointment and Conditions of Service Ordinance, 2021 (38 of 2021). அதன் வழிகாட்டல்கள் பின்வருமாறு: 

i.      காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு நேர்காணலுக்குப் பின் தரவரிசை வெளியிடப்பட வேண்டும். தெரிவு செய்தவர்களைப் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவித்த பின் பணியமர்த்தப்படல் வேண்டும். 

ii.      பணியமர்த்தல் மற்றும் பணி ஓய்விற்கான வயது வரம்பினை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே நிர்ணயிக்கலாம். 

iii.      பணியாளர்கள் சேர்ப்பு, வருகைப்பதிவு, அவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கான பதிவேடுகள் வைக்கப்படவேண்டும். அவை குறித்த தகவல்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். 

iv.      பணி, பணி மூப்பு, பணி உயர்வு, பணிக் காலம், ஊதியம், ஊதிய உயர்வு, கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் குறித்த தகவல்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதனுடன் தொழிலாளர் நலுனுக்கென வேறேதும் அம்சங்கள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்.  

v.      வேலை நேரம் மற்றும் நாட்கள், சம்பளத்துடன்கூடிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை அரசுக் கல்லூரி ஊழியர்களுக்கு உள்ளதைப் போலவே தொடரவேண்டும். 

vi.      ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் பயனாளராகச் சேர்க்கப்படல் வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்பட வேண்டும். 

vii.      பணியாளர்கள் மீதான ஒழுங்கு மீறல் நடவடிக்கைகளை அந்தந்த கல்வி நிறுவனங்களே எடுக்கலாம். பணியாளர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தால் பல்கலைக்கழகத்தில் மேல்முறையீடு செய்யலாம். 

viii.      பணியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வரையறுக்கப்பட வேண்டும். நல்நோக்கத்துடன் வரையறுக்கப்படும் இவ்விதிகளுக்கு எதிராக பல்கலைக்கழகத் துணைவேந்தர்மீதோ, அலுவலர்கள்மீதோ எவ்விதச் சட்ட முன்னகர்வும் ஊக்குவிக்கப்படக் கூடாது. 

ix.      கல்வி நிறுவனங்கள் கீழ்க்கண்ட அமைப்புகளை நிறுவ வேண்டும். 

·        கல்லூரி நிலைக்குழு

·        அக தர நிர்ணயக் குழு

·        பெற்றோர் ஆசிரியர் கழகம்

·        மாணவர் குறைதீர்ப்பு மையம்

·        பாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் விசாரணை  மையம் 

இவற்றுடன் வேறு சிலவற்றைச் சேர்ப்பதைக் குறித்தும் சிந்திக்கலாம்: பணிச்சேர்க்கையின்போது ஒப்படைக்கப்படவேண்டிய ஆவணங்கள், வேற்றிட நேர்முகத்தேர்வுகளுக்குச் செல்லும்போது தடையில்லாச் சான்று தேவையாயிருப்பின் அதைப்பெறுவதற்கான வழிமுறைகள், இடைக்காலத்தில் பணி விடுவிப்பு வேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகள் என. இவற்றை மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், தனியார் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

-------------------------------------

(காலச்சுவடு ஏப்ரல் 2024 இதழில் வெளியானது உள்ளிருந்து எழும் குரல்


Sunday, August 22, 2021

கோவிட் பெருந்தொற்றும் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர் நிலையும்

தி இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். 

மூலக்கட்டுரை: Weighing down the private unaided college teacher


ஏ பி அருண் கண்ணன் & கிஷோர்குமார் சூர்யபிரகாஷ்


கோவிட் பெருந்தொற்று உலக அளவில் அனைத்துத் துறையினரையும் பெரும் பொருளாதாரச் சீரழிவிற்கு ஆளாக்கியிருக்கிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி வகுப்புகளுக்கு மாற்றமடைந்துள்ளன. இதைக் காரணம்காட்டி பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களிடம் முழுக்கட்டணத்தையும் வசூலித்துள்ளன. பிற துறைகளுடன் ஒப்பிட்டால் தனியார் கல்வித்துறை தன் நிதிநிலையைப் பாதுகாத்து வருகிறது எனலாம்.

தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருத்த அளவில் இல்லையெனக் கொண்டாலும் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கட்டண வசூல் அவற்றைச் சார்ந்திருக்கும் ஆசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறதா, அவர்தம் வாழ்வில் அது எதிரொலிக்கிறதா என்றால் இல்லை. பெருந்தொற்றால் ஏற்பட்ட தற்காலிகப் பணி நீக்கமும், ஊதியக்குறைப்பும் அவர்களை வேறு வேலை தேடும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. ஊதியக்குறைப்பால் பனை ஏறும் தொழிலுக்குச் சென்ற தனியார் கல்வி நிறுவன ஆசிரியரின் எதிர்பாராத இறப்பு எங்களை அப்பணியிலுள்ளோரைக் கவனிக்க வைத்தது. சென்னைப்பல்கலைக்கழக தனியார் உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் 194 உதவிப்பேராசிரியர்களிடம் ஜூன் 13 முதல் 26 வரை நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்களை அறியத்தருகிறோம்.

ஆய்வு முடிவுகள்

முதலில் வெளிப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே அவர்களின் கல்வித்தகுதிக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிடக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதும், பெரும்பாலானவர்கள் எந்தவித ஊழியர் நலத்திட்டத்திலும் பயனாளிகள் இல்லை என்பதுமாகும்.  ஆய்விற்குட்படுத்தப்பட்ட 194 பேரில் 137 பேர் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த தகுதிகளைப் பெற்றிருந்தும் (முனைவர் பட்டம் அல்லது மாநில/தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி) அவர்களில் 72% பேர் மாதம் 25,000க்கும் குறைவான உதியத்தையே பெற்றுவருகின்றனர். இங்கு நினைவுகூறப்படவேண்டியது ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைக்கும் உதவிப்பேராசிரியருக்கான ஆரம்பச் சம்பளம் - ரூபாய் 76,804. மேலும், அவர்களில் 38% பேருக்கு மட்டுமே தொழிலாளர் காப்பிட்டுக் கணக்கும், 42% பேருக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பும் உள்ளது.

புதிய தாராளவயக் கொள்கை உயர்கல்வி வழக்கும் பொறுப்பை அரசுகளிடமிருந்து பறித்து தனியார் பங்களிப்பை வரவேற்றது இந்நிறுவனங்களின் அசாதாரண வளர்ச்சிக்கு வழிகோலியது. சென்ற வருடம் நடத்தப்பட்ட உயர்கல்வித்துறை குறித்த ஆய்வில் நாட்டிலுள்ளவற்றில் 65% தனியார் கல்லூரிகள் என்பதும் அதிலும் தமிழ்நாட்டிலுள்ள 77% தனியார் கல்லூரிகள், 1980களின் முற்பகுதியிலிருந்தே கல்வித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்ததன் விளைவையும், கல்வித்துறையில் இலாபம் ஈட்டும் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

இணையவழிக்கல்வி என்னும் சுமை

இந்தப்பின்புலத்தில்தான் பெருந்தொற்றுக்காலம் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர்களின் வாழ்வில் ஏற்படுத்துகிற பாதிப்பையும் நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது. உதவிப் பேராசிரியர்கள் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து இணையவழிக் கற்பித்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். நடத்தப்பட்ட ஆய்வில் 88% பேர் இணையவசதி, அறை/இட வசதி, தரமான உபகரணங்கள் உள்ளிட்ட ஏதாவதொன்றில் போதாமையைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளனர். 194 பேரில் 137 பேர் கைப்பேசி, கணினி, ஒலிபெருக்கி/ஒலிவாங்கி என ஏதேனுமொன்றை வாங்கவேண்டியிருந்தது. மிக முக்கியமாக இணையவசதிக்கான செலவையும் ஆசிரியர்களே ஏற்க வேண்டியிருக்கிறது. நிதிநெருக்கடிக் காலத்தில் இவற்றால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர்களில் 107 பேர் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இணையவழிக்கல்வி தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களைக் கடுமையான உடல், மன, நிதி ரீதியிலான சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இருந்தும் அவர்களுக்கான முறையான அங்கீகாரம் குறைந்தபட்சம் ஊதிய அளவிலேனும் வழங்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் பல்வேறு வகையான ஊதியக்குறைப்பு நடவடிக்கைகளால் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். 2020-2021 ஆம் ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவானவர்களே நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைப் பெற்றிருக்கிறார்கள். 10% பேர் 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை எந்தவித ஊதியத்தையும் பெறவில்லை.

இணையக்கல்விக்கு மாறிய பின்னர் கல்லூரிகளின் நிர்வாகச் செலவினங்கள் குறைந்திருந்தாலும் மாணாக்கர்களிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை. எனவே, அவர்களின் சம்பளக்குறைப்பு நடவடிக்கையில் எந்தவித நியாயமும் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்கள், இப்பேரிடர் காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பல்வேறு கடின சூழ்நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை சுரண்டவே செய்கின்றன.

செல்ல வேண்டிய பாதை

சம்பளக்குறைப்பு நடவடிக்கைகள் பெரும்பாலான ஆசிரியர்களை வேறு வேலைகள் நோக்கித் திருப்பியிருக்கிறது அல்லது கடனாளியாக்கியிருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் கடின உடல் உழைப்பைக்கோரும் கட்டிட, விவசாய, பழுதுபார்க்கும், உணவு விநியோகிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

பேரிடர்க்காலம் அவர்களின் வழிவியலை பறிப்பதாக இருந்தாலும் அதற்கு முந்தய காலத்திலும் நிலைமை மெச்சக்கூடியதாக இருந்ததில்லை. அதற்கு காரணம், இத்தகைய அமைப்புகளுக்கென விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படாததே ஆகும். தமிழக அரசு ஆசிரியர் நலன்கருதி பின்வரும் சில வழிகாட்டல்களைக் குறித்துச் சிந்திக்கலாம்: ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட/வழங்கப்படாத முழு ஊதியமும் வழங்கப்பட வேண்டும். காரணமின்றிப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் திரும்பவும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இணையவழிக் கல்விக்கென அவர்கள் செலவழித்த தொகை திருப்பி வழங்கப்பட வேண்டும்.

கேரள அரசு 2018ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய வரம்பை நிர்ணயித்தது. அதன்படி பல்கலைக்கழ மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதியைப் பெற்றவர்களுக்கு நாளொன்றுக்கு 1750ம், மாதம் 43750ம், பல்கலைக்கழ மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதியைப் பெறாதவர்களுக்கு நாளொன்றுக்கு 1600ம், மாதம் 40000ம் வழங்கப்பட்டுவருகிறது. தமிழக அரசும் இதுபோன்ற நெறிமுறைகளை வகுக்கலாம். கூடவே, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (முறைப்படுத்தும்) சட்டம் 1976 மறு ஆய்வு செய்யப்படல் வேண்டும். இந்நிறுவனங்களில் பணியிலிருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் உரிமைகளுக்காகவேனும் கல்லுரிக் கல்வி இயக்குனரகம் மற்றும் வட்டார கல்லுரிக் கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தனியார் கல்லூரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

 

பி அருண் கண்ணன்

சென்னை லயோலா கல்லூரி தொழிற்கல்வி மைய இயக்குநர்

 

கிஷோர்குமார் சூர்யபிரகாஷ்

அமெரிக்காவிலுள்ள எம்ஐடியில் முனைவர்பட்ட ஆய்வாளர் (பொருளாதாரம்)

Saturday, October 12, 2019

ஆசிரியர் தேர்வு வாரியம் தன்மீதுள்ள கறைகளைக் களைய என்ன செய்யப்போகிறது?


அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலுள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேர்முகத்தேர்விற்கான அறிவிக்கையினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு, தற்போது சில தொழில்துட்ப காரணங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுபவம் மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்கப்படும். கொடுக்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒரு இடத்திற்கு மூவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்கிறது அறிவிக்கை.

ஒரு வருட அனுபவத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சம் பதினைந்து. தேசிய அல்லது மாநில தகுதித்தேர்வில் (நெட் அல்லது செட்) தேர்ச்சி பெற்றிருப்பின் ஐந்து அல்லது முனைவர் பட்டத்திற்கு ஒன்பது என ஒருவர் விண்ணப்பிக்கையில் கொடுக்கும் சான்றுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக இருபத்து நான்கு  மதிப்பெண்களைப் பெற இயலும். ஆனால், இந்த இருபத்து நான்கு மதிப்பெண்கள் ஒரு ஆசிரியருக்கான அடிப்படைத் தகுதியை நிர்ணயிக்கப் போதாது அதை மட்டும் வைத்து ஒருவரின் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது சரியல்ல.

இவ்வாறு ஒருவரின் அனுபவத்தை மட்டும் கொண்டு மதிப்பிட்டு, நேர்காணலுக்கான வாய்ப்பையே மறுக்கும்  இந்த முறைக்கு என் தேடலுக்கு எட்டியவரை இந்திய அளவில் முன்னுதாரணங்கள் எதுவும் இல்லை. இதைத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றப்போகிறதெனில் அது தமிழகம் ஏந்திக்கொள்ளவிருக்கும் இழிவு.

பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி உதவிப் பேராசிரியருக்கான அடிப்படைத்தகுதி தேசிய () மாநில தகுதித்தேர்வில் தேர்ச்சி அல்லது முனைவர் பட்டம். முனைவர் பட்டம் அடிப்படைத்தகுதிதான் என்னும்போது அதற்கு ஒரே அடியாக ஒன்பது மதிப்பெண்ணை வழங்கும் வாரியம், இருவகையான சிறப்புத்தகுதி உள்ளவர்களை மறந்துவிட்டது. முதல்வகையினர், முனைவர் பட்டத்துடன் நெட் அல்லது செட் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுக்கும் முனைவர் பட்டம் மட்டும் பெற்றவர்களுக்கும் ஒன்பது மதிப்பெண்கள்தான் என்பது சரியல்ல.

இரண்டாம் வகையினர், முழு நேரம் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள். பகுதி நேரமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு, ஆய்வுக்காலத்தில் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றி இருப்பின்  அதுவும் அனுபவக்கணக்கில் சேர்க்கப்படும் என்கிறது அறிக்கை. அறிவிக்கையில் உள்ள முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படுமானால் முழுநேரம் ஆய்வு மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றவருக்கு ஒன்பது மதிப்பெண்களும், பகுதிநேரம் ஆய்வு மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றவருக்கு பத்தொன்பது அல்லது அதற்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவும் சரியல்ல.

கற்பித்தல் அனுபவம் மட்டுமல்ல அளவுகோல்

முழு நேரம் ஆய்வில் ஈடுபடுபவருக்கும் கற்பித்தல் பணி உண்டு. பெரும்பாலான பல்கலைக்கழகங்களும், இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), ஏசிஎஸ்ஐஆர் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும் வகுப்பெடுப்பதை கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாக முனைவர் பட்டத்திற்கான பாடத்திட்டத்தில் சேர்த்தும் உள்ளன. துறைக்குள் நுழையும் இளையோர்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என அவரும் கற்பித்தலில் ஈடுபடுகிறார். ஆனால், அது பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர் அளவுக்கு திட்டமிடப்பட்டது அல்ல.

பகுதி நேர முனைவர் பட்டம் மற்றும் முழு நேர முனைவர் பட்டம் இரண்டிற்கும் அவற்றிற்கே உரிய நிறை குறைகள் உண்டு. பல்கலைக்கழக மானியக்குழு இரண்டையும் சமமாக மதிக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறது.   நடைமுறை என்னவென்றால் பகுதி நேர முனைவர் பட்டம், வேலை தேடுகையில் ஒருபடி குறைவாகவே மதிக்கப்படுகிறது. அவர்கள் பட்டம் குறைந்தபட்சம் அரசாங்கத்தாலாவது சமமாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் நோக்கம் தவறல்ல. ஆனால், தேர்வு வாரியம் பின்பற்றும் முறை கேள்விக்குரியது. ஒரே நேரத்தில் இருவகையினரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.

உயர்கல்வியைப் பொறுத்தவரை ஒருவரின் கற்பித்தல் அனுபவம் எவ்வளவு முக்கியமோ, ஆராய்ச்சி அனுபவமும் ஆசிரியர் பணிக்கு இன்றியமையாதது ஆகும். இவ்விரண்டும் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த அனுபவமே உயர்கல்வியின் நோக்கத்தை நிறைவேற்றும். மாறாக, இவ்வறிவிக்கையிலுள்ள தேர்வு முறை ஆய்வு அனுபவத்தைப் புறந்தள்ளிவிடும். 2016 இல் பல்கலைக்கழக மானியக்குழு, ஆசிரியப்பணிக்குத் தேர்வு செய்யும்போது முனைவர் பட்ட ஆய்வு செய்த வருடங்களையும் அனுபவமாக சேர்த்துக்கொள்ளவேண்டுமென்றது. ஆனால், அது இன்னும் அரசாணையாகவில்லை. ஆனால், ஆய்வாளர்களுக்கு நியாயம் செய்ய வேறு வழிகள் உள்ளன.

உயர் கல்வியின் நோக்கம் நம் பிள்ளைகளை ஆராய்ச்சித்துறைக்குச் செல்ல வழிகாட்டுவதுதான் என்றால், அவர்களுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் இன்னும் சில முறைகளையும் புகுத்த வேண்டும்.  அது ஆய்வு அனுபவம், கற்பித்தல் அனுபவம் இரண்டையும் கருத்தில் கொள்ளும் முறையாக இருக்க வேண்டும். அவ்வாறு நடக்குமெனில், அனுபவம் மற்றும் தகுதிற்கு கொடுக்கும் மதிப்பெண் முறையில் ஒரே மதிப்பெண்ணைப் பலர் பெறும் நிகழ்வும் அதனால் ஏற்படும் தேர்வுக் குழப்பங்களும் சரிசெய்யப்படும். எல்லாவற்றிக்கும் மேலாக, கல்லூரிகளின் ஆராய்ச்சிக் கட்டமைப்பு வசதிகள் உயரும். இந்திய ஒன்றியத்திற்கு இது புதிதும் அல்ல. இதற்கு கேரளமும் மேற்கு வங்கமும் எத்தகைய முறையைப் பின்பற்றுகின்றன என்பதை ஆய்ந்தால் நாம் போகவேண்டிய பாதை புலப்படும்.

கேரளமும் மேற்கு வங்கமும்

கேரளத்தைப் பொறுத்தவரை, தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஒருவர், உதவிப்பேராசிரியர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வினை (செட் தேர்வுமுறை கேரளத்தில் இல்லை) எழுத இயலாது. அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு மூன்று பிரிவுகளில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

1. இளநிலை, முதுநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், முனைவர் பட்டப்படிப்பின் ஆய்வினடிப்படையில் பதிப்பித்த சர்வதேச ஆய்விதழ்கள் மற்றும் புத்தகங்கள், கற்பித்தல் அனுபவம்

2. நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்

3. எம்ஃபில் பட்டம் மட்டுமெனில் இரண்டு, முனைவர் பட்டம் மட்டுமெனில் நான்கு, இரண்டுமெனில் ஐந்து.

இம்மூன்றுடன் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, தர வரிசை வெளியிடப்பட்டு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

மேற்கு வங்கமோ முனைவர் பட்டதிற்கென சில தகுதிகளை நிர்ணயிக்கிறது. முக்கியமாக, முதல் இரண்டையும், முனைவர் பட்டம்பெற கட்டாயம் பின்பற்றப்படவேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு 2009-இல் அறிவித்துள்ளது என்பதால் மேற்கு வங்கம் அதற்கு அழுத்தம் கொடுக்கிறது.  

1. ஆய்வு முடிவுகளை குறைந்தபட்சம் இரு இதழ்களாக வெளியிட்டிருக்க வேண்டும், அதிலும் ஒன்று சர்வதேச அளவிலான ஆய்வாளர்களால் மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 

2. ஆய்வு முடிவுகளை குறைந்தபட்சம் இரு கருத்தரங்குகளில் வெளியிட்டு விவாதித்திருக்க வேண்டும்.

3. பத்தாம் வகுப்பிலிருந்து ஐம்பது சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்களை வைத்திருப்பது கட்டாயமில்லையெனினும் முன்னுரிமைக்குரியது.

இவற்றைப் பரிசீலித்து, தேவையைப்பொறுத்து தேர்வோ, நேர்காணலோ அல்லது இரண்டுமோ நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டினடிப்படையில் பணியாணை வழங்கப்படுகிறது.

எஞ்சி நிற்கும் கேள்விகள்

வாரியம் வரையறுத்துள்ள மதிப்பீட்டு முறைப்படி நூற்றுக்கணக்கானோர் ஒரே மதிப்பெண்ணைப்பெறுவர். இவ்வெண்ணிக்கை ஆயிரத்தைக்கூடத் தொடலாம். ஒரே தரத்தில் இருக்கும் பலருக்கு, தேர்வுக்குழு எதை வைத்து முன்னுரிமை வழங்கும் என்பது குறித்த குறிப்புகள் எதுவும் அறிவிக்கையில் இல்லை. ஒருவேளை அது வயதா? பள்ளி, கல்லூரி மதிப்பெண்களா? பல்கலைக்கழக அளவில் ஒருவர் பெற்ற இடமா? ஆய்விதளின் சமூகத் தாக்கமா?

தமிழகத்திலுள்ள அரசு உதவி பெரும் கல்லூரிகளில் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே நியமிக்கின்றன. இக்குழு பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டலின்படி கேரளமும் மேற்கு வங்கமும் பின்பற்றுகின்ற அதே முறையைப் பின்பற்றி ஆசிரியர்களைத் தேர்வு செய்கின்றன. அதாவது ஒருவரின் முனைவர் பட்டத்திற்கு மட்டும் மதிப்பெண்கள் அல்லாது ஆய்விதழ்கள், புத்தகங்கள், கருத்தரங்கப் பங்கேற்புகள், அனுபவம், நேர்காணல் என அனைத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டே தரவரிசை இடப்படுகிறது. அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு செயல்படுத்தப்படும் இம்முறை, தமிழகம் முழுதுமுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? கல்வித் தகுதிக்கு மட்டும் பல்கலைக்கழகம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதுமா? தெரிவு முறைக்கு வேண்டாமா?

அரசுக்கல்லூரிகளில் தற்போதுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் தொகுப்பூதியம் மாதம் பதினைந்தாயிரம் ரூபாய். கேரளத்தில் இருபத்தைந்தாயிரம். மேற்கு வங்கத்தில் தமிழகத்தைப்போல இருமடங்கு. ஒரு அரசாங்கமே ஆசிரியப்பணிக்கு இத்தகைய மரியாதையைத்தான் வழங்குமென்றால் தனியார் கல்லூரிகளில் ஒருவர் எங்கனம் தன்னிறைவான ஊதியத்தை எதிர்பார்க்க இயலும்? வருடா வருடம் செட் தேர்வு நடத்தி எண்ணற்றவர்கள் தேர்ச்சிபெறும்போது பயிற்றுனர்களுக்கான தகுதியும் சம்பளமும் இங்கு முறைப்படுத்தப்பட்டுள்ளனவா? சில தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் சம்பளத்தைக்கொண்டு ஒருவருக்குத் தேவையான சரிவிகித உணவைச் சாப்பிடுவதே கடினம் என்னும்போது ஒருவர் அனுபவம் பெற குடும்பத்துடன்  எதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?

கேரளம், மேற்கு வங்கத்திற்கு இல்லாத ஒரு சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. ஆசிரியர் தேர்வு வாரியம் என்னும் அமைப்புதான் அது. அது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புதான் என்று நம்பி வந்திருக்கிறேன். ஆனால், நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அதன் நேர்மைத்தன்மையிலும், தேர்வுமுறையிலும் எவருக்கும் சந்தேகம் எழுவது இயல்பே. பணி வேண்டுவோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மீது நம்பிக்கையை இழந்து பல வருடங்களாகிறது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியமே வெளியிட்ட ஆண்டுத்திட்டங்களில் இப்பணித்தேர்வு குறித்த அறிவிக்கை இருந்ததும் அதை அவர்களாலேயே நிறைவேற்ற இயலாமல் போனதும், 2017-ல் பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வுகளில் நிகழ்ந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததும், அத்தேர்வே ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு 2018 ஆகஸ்ட்டில் நடத்தப்படும் என்று அறிவித்து ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதும் எனப் பல்வேறு காரணங்களைக் கூறலாம். அது தன்மீதுள்ள கறைகளைக் களைய என்ன செய்யப்போகிறது?

செல்ல வேண்டிய தூரம்

இரண்டு வருடங்களுக்கு முன், செட் சான்றிதழ் சரிபார்ப்பின்போது தமிழின் மிக முக்கியமான புனைகதையாளரைச்* சந்தித்தேன். சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள் என வெளியிட்ட புத்தகங்கள் கைவிரல் எண்ணிக்கையைத் தாண்டும். தன் முன்னோடிகளைப்பற்றி எவ்வித முன்தயாரிப்புகளுமின்றி பலமணிநேரங்கள் பேசக்கூடியவர். மதுரையின் பழம்பெரும் கல்லூரியில் பணியாற்றிய அனுபவமும் உண்டு. அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் நேர்காணலில் தோல்வியடைந்தார். அவ்வருடமே, அப்பல்கலைத் துணைவேந்தர் பெற்ற லஞ்சப்பணத்தை வீட்டிலேயே வைத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தத் துண்டு வாக்கியங்களின் பின்னுள்ள உண்மைகளை  சமூக எதார்த்தம் தெரிந்த எவரும் ஊகிக்க இயலும். 
ஆசிரியப்பணி அறப்பணி என்கிறோம். அதற்கான தேர்வுகளில் அறப்பிறழ்வுகளை ஒரு சமூகம் அனுமதிக்கலாகாது. நாம் வருங்காலத்திற்குச் செய்யும் முதலீடு நல்லாசிரியர்களை உண்டாக்குவதாகத்தான் இருக்க முடியும்.  அதற்கு வகுப்பறையில் மட்டுமல்ல, அரசு, சமூகம், தேர்வுமுறை என ஒரு சமூகத்தின் கூட்டுமனசாட்சி விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். நம் கல்வித்துறையிலுள்ள குறைகளையெல்லாம் எங்கனம் களைய இயலும் என ஒன்றன்பின் ஒன்றாக விவாதிக்க வேண்டும். நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னுமிருக்கிறது.

*



*கட்டுரையின் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர் சு. வேணுகோபால். களவு போகும் புரவிகள், வெண்ணிலை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.



(காலச்சுவடு அக்டோபர் 2019)