Friday, April 21, 2023

நந்திதா தாசின் ஸ்விகாட்டோ

நந்திதா தாசின் படங்கள் அவர் தன் காலத்திற்குச் செய்யும் எதிர்வினையோ எனத் தோன்றுகிறது. குஜராத் வன்முறைக்குப் பின்னான காலத்தில் நிகழும் கதைகளின் தொகுப்பான ஃபிராக் (2008), அதன்பின் வெளிவந்த மண்டோ* (2018) வரிசையில் பெருந்தொற்றுக் காலத்தில் கருப்பெற்றுக் குறும்படமாகச் செய்யவிருந்த படம் ஸ்விகாட்டோ. கண்ட- கேட்ட கதைகளின் வழி முழுப்படமாக உருவாகியிருக்கிறது. ஊரடங்கு நேரத்தில் மருத்துவ சேவையினருக்கு அடுத்து அதிகளவில் மக்களுடன் தொடர்பு கொண்டிருந்த உணவு கொண்டுவந்து சேர்ப்பவர்களின் கதை. 

https://www.newsbytesapp.com/news/entertainment/everything-we-know-about-kapil-sharma-s-zwigato/story


வீட்டிலிருந்தபடியே வேலை, இணையவழிக் கல்வி என ஊரடங்கு புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்தாலும் அவை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர், தர உறுதி செய்யும் அமைப்பாளர், பொறியாளர், கட்டிடப் பணியாளர் போன்றோர்க்கு வீட்டிலிருந்து செய்ய வேலையென எதுவும் இல்லை. அப்படி வேலையிழந்தவர்களில் ஒருவர்தான் மனஸ்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் நடுத்தரக் குடும்பம் மனஸ் - பிரதிமா தம்பதியினருடையது. உடன் படுக்கையோடொன்றிவிட்ட தாய். ஸ்விகாட்டோ நிறுவனத்தில் பணியாற்றும் பல லட்சம் பேரில் ஒருவர் மனஸ். பள்ளிக் குழந்தைகள் எப்படித் தம் காலணியை புதுப்பித்துக்கொள்கிறார்களோ அதைப்போல தன் தினத்தைப் புதுப்பித்துக் கொள்ள மனஸுக்கு ஒரு வாக்கியம் இருக்கிறது: இன்று நான் பத்து டெலிவரி செய்வேன். பத்து டெலிவரியை இலக்கெனக் கொண்ட எவர்க்கும் உயிர்ப்பயம் இல்லை, சாலை விதிகள் இல்லை, நிற்கவோ, நீர் - உணவு அருந்தவோ நேரம் இல்லை. 

பிரதிமா இல்லம் சமைக்கிறாள். மனஸின் வருமானம் போதமாலாகவே,  வணிக வளாகமொன்றில் தூய்மைப்பணிக்கெனத் தேர்கிறாள். வசீகரமான சீருடை, மனஸைவிட அதிக சம்பளமிருந்தும் அவருக்கு அதில் விருப்பமில்லாததால் வீட்டிலேயே இருக்கிறாள்.

நிறுவனம் - தொழிலாளர் - நுகர்வோர் என்கிற சங்கிலியில் தேவையின் பொருட்டு சந்தித்துக்கொள்வது மனிதர்கள் மட்டுமல்ல. மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களின் சாதிகள் சந்திக்கின்றன, மதங்கள் சந்திக்கின்றன, இருவேறு வர்க்கங்கள் சந்திக்கின்றன. இத்தகைய முரண்கள் சந்திக்கும் புள்ளியில் ஏராளம் கதைகள் பிறக்கின்றன. 

மனஸைத் தொடரும் கதையெனினும் இது மத்திய வர்க்கக் குடும்பமொன்றின் கதை, வர்க்கங்களின் கதை. துப்புரவுப் பணியாளர்கள் - அவர்களிலும் சுரண்டப்படும் பெண்கள், குப்பை சேகரிப்பவர்கள், மிதிவண்டியைக் கொண்டு உணவு சேர்ப்பிக்கும் வேலையில் நுழையமுயலும் வாலிபன், மேட்டுக்குடி இளைஞர்கள், பள்ளி முதல்வர் உள்ளிட்ட செல்வந்தர்கள் என அனைவரும் சந்திக்கும்புள்ளி இயல்பாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. கூடவே, அச்சந்திப்புகள் நிகழும் களம், உரையாடல்கள்வழி உறவுகளுக்குள் நிலவும் மனக்குறைகளும் அசமத்துவமும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சமகாலத்திற்குப் பல அடிகள் பின்னே நிற்கும் தொலைக்காட்சித் தொடர்கள், குழந்தைகளின் உலகில் தொலைக்காட்சியைப் பதிலீடு செய்திருக்கும் இணையம் - சமூக வலைத்தளங்கள் எனப் பேசவேண்டிய ஒவ்வொன்றையும் படம் தொட்டுச் செல்கிறது.

கணவனுடனான தனித்த பொழுதுகளை இழக்கும் மனைவி, சிறந்த மாணவியெனினும் தந்தை பார்க்கும் வேலையால் கேலிக்குள்ளாகிக் குறுகிப்போகும் மகள், அப்பனின் சுமையைப் பின்னிருக்கையிலமர்ந்து சுமக்கும் மகன் எனப் புதிய வேலை மொத்தக் குடும்பத்தையும் உள்ளிழுத்துக்கொள்கிறது. வேலை தரும் அழுத்தம் மனஸைக் கனவிலும் வேலை தேடப் பணிக்கிறது. தன்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் நிரந்தரப் பணி என்னும் தொடர்கனவு அவரைத் தூங்க விடுவதில்லை. வேலை இழந்தபின் கனவும் நிஜமும் ஒன்றென ஆகுமிடத்தில் வேலை பெற்றுத்தரும் விண்ணப்பத்தைத் தேடி அலைகிறார். ஒரு பொத்தானை அழுத்தினால் வேண்டுவன வீட்டிற்கு வரும் நாட்டில், ஒரு பொத்தானை அழுத்தி வரி கட்டவியலும் நாட்டில் ஒரு விண்ணப்பத்தால் நிரந்தர வேலை கிட்டத்தானே வேண்டும் என்கையில் அரங்கம் மனஸின் அறியாமையை நினைத்துச் சிரிக்கிறதா அல்லது தன் நிலையைப் பொருத்திச் சிரிக்கிறதா எனத் தெரியவில்லை.

வேலையின்மை பெருகிவரும் நாட்டில் 'பலருக்கு வேலையளிக்கிறோம்' என்னும் உணவு சேர்ப்பிக்கும் நிறுவனங்கள் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்கின்றனவா என்கிற வலுவான கேள்விகள் படம் நெடுக வருகின்றன. இணையத்தின் உதவியால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் ஊழியர்கள், மீறல்களுக்கு விதிக்கப்படும் உடனடித் தண்டனைகள், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தரவு சேகரிக்கவும் என உருவாக்கும் புதுப்புது வியாபார யுக்திகள், கருணையுடன் பேசும் மனிதத்தன்மையற்ற இயந்திரக் குரல் எனப் படம் முழுக்க நிறுவன வன்முறைகள். அனைத்தையும் அனுமதிக்கிற நாட்டில், எப்போதும் வேலை வேண்டி ஆட்கள் வரிசையில் - பேருந்து நிறுத்தங்களில் நிற்கிற நாட்டில், வேலை வேண்டாம் என சீருடையைக் கழற்றி எறிவது எவர்க்கும் அவ்வளவு எளிதல்ல என்பதையும், அப்படி எறிந்தாலும் அதை எடுக்க ஆட்களிற்கும் நிலையில் நிறுவனம் என்னும் அமைப்பு பணியாளர் ஒருவரை நோக்கி எப்போது வேண்டுமானாலும் ‘வெளியே போ’ எனச் சொல்லலாம் என்றமைந்திருக்கிற சௌகரியத்தையும் படம் நிகழ்த்திக்காட்டுகிறது.

நிறுவனம் - தொழிலாளர் - நுகர்வோர் உறவின் இருண்ட பக்கங்களைச் சுட்டிக்காட்டி இப்படம் எதிர்நோக்குவது அதிரடிப் புரட்சி அல்ல. மாறாக எளிதில் மாறாத இந்த முரணான அமைப்பில் ஊழியர்களிடம், சமூகத்தின் அடுத்த நிலையில் இருப்பவர்களிடம், நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்யும்பொருட்டுக் கதவைத் தட்டுபவர்களிடம் கொஞ்சம் கருணையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்கிறது, அவர்களைக் கண்ணியமாக நடத்தக் கேட்கிறது.

சமூகத்தின் படிநிலைகளைக் கச்சிதமாகச் சித்தரித்ததில், கதாப்பாத்திரங்களைத் தன்னியல்பில் நிகழவிட்டதில், பிரச்சார நெடியோ, பரிதாபமோ உணர்வோ ஏழாதவகையில் திரைக்கதையை அமைத்ததில் நந்திதா தாசும் சமீர் பாடிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனினும் இதே பணியைச் செய்யும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் வேறு விதமானவை, ஆண்களினதைக் காட்டிலும் விரிவானவை; படம் அதையும் பதிவு செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கபில் சர்மா (மனஸ்) - சஹானா கோஸ்வாமி (பிரதிமா) இணையர்களாக நடித்திருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் மேடை நடிகர்கள், திரைக்குப் புதுமுகங்கள். நிகழ்களம் இந்திப் படங்களால் அதிகம் பதிவு செய்யப்படாத ஒடிஷா மாநிலம் புவனேஷ்வர். வர்க்க அரசியலையும் இடர்பாடுகளையும் பேசும் படத்தில் எந்த வசனமும் அழுகையும் வலிந்து திணிக்கப்பட்டது போலில்லை. ஆங்காங்கே வரும் ஒற்றை வரிகள் அரங்கைச் சிரிப்பால் நிறைக்கின்றன. சாகர் தேசாயின் பின்னணி இசை இருப்பே தெரியாத அளவுக்குப் படத்துடன் ஒன்றிப்போயிருக்கிறது. படத்தின் இறுதியில் வரும் வரைகலையும் இசையும் படம் சொல்லவந்ததை வெகுவாக உயர்த்திப்பிடிக்கின்றன. 

சமூக முரண்களை விமர்ச்சிக்கும் படத்தில் அவை இல்லாத இடங்கள் ஏதேனும் தென்படுகிறதா எனப் பார்த்தால் ஆரம்பக்காட்சியொன்று நினைவுக்கு வருகிறது. குப்பை வண்டியுடன் வரும் சிறுவன் பிரதிமாவிடம் நீர் கேட்கிறான். அரைமணிநேரத்திற்கும் மேலாக பிரதிமாவைக் கண்டவன் என்பதால் அவள் பகிர்வது நிதமும் அருந்தும் நீரின் ஒரு பகுதிதான், கொடுப்பது அவள் குடிக்கும் குவளையில்தான் எனச் சொல்கிறேன், அல்லது அப்படியே நம்ப விரும்புகிறேன்.

---
*படத்திற்கு முன்னும் பின்புமான அனுபவங்களை மண்டோவும் நானும் என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறார், இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.


உயிர்மை இணைய இதழ் 
https://uyirmmai.com/news/news-articles/article-nadita-das-zwigato-vijayakumar/