Tuesday, November 19, 2013

Daytour

                                                                                      "சந்தோசமா இருக்க பணம் தேவையில்ல,மனசிருந்தா போதும். போய்ட்டு வாங்க:-/"      HOD இதச் சொல்லித்தான் பணப்பிரச்சனை காரணமா வரமாட்டேன்னு சொன்னவங்களோட நடந்த பேச்ச முடிச்சுவச்சாங்க...சத்தியமங்கலத்துல இருக்க ஒரு சக்கரை ஆலைக்கு போறதுக்கான பேச்சுதானது. போறதுக்காக முதல்ல போட்ட திட்டத்துல வந்த ஒரு சின்ன மாற்றத்துனாலதான் அவசரமா இந்த முடிவ எடுக்கவேண்டியதாப் போச்சு. அது என்னான்னு சொல்றதுக்கு இங்க கண்டிப்பா ஒரு கொசுவர்த்திச் சுருள போட்டுத்தான் ஆகனும்..

சில நாட்களுக்கு முன்...

Lab-ல இருக்கும் போது பொறுப்பாசிரியர் வந்து, "இங்க பாருங்கப்பா... நாம இந்த மாச கடைசி வாரத்துல ஒரு நாள் பெங்களூர்ல இருக்குற ****** pharmaceuticals-க்கு IV போலாம்னு இருக்கோம், அதுக்கான permission வாங்குற வேலையெல்லாம் நடந்துட்டு இருக்கு, சீக்கிரம் சொல்றோம், நீங்களும் ready-ஆ இருங்க"னு சொன்னாரு.(That இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே moment)

கொஞ்ச நாள்ல, அந்த நாள் செப்டம்பர் 24ன்னு முடிவாச்சு.அதுக்கப்புறம் Bus-ல போறதால குடுக்க வேண்டிய பணத்த கணக்குபோட்டு பாக்கும்போது செலவு அனுமானிச்சதவிட கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துச்சு..காலக்கெடு கம்மியா இருந்ததால Train-லயும் Reserve-பன்னி போகமுடியாதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம் பெங்களூர் பயணம் இனிதே தள்ளி வைக்கப்பட்டது.
பிறகு வாங்குன Permission வீணாய்டக்கூடாதுன்றதுக்காக அதே தேதில போகனும்னு முடிவு செஞ்ச இடம்தான் சத்தியமங்கலம்.!




செப்டம்பர் 24,அதிகாலை 3 மணி...,

நல்லா தூங்கீட்டு இருந்தேன்.


 4:30 மணிக்கு alarm அடிச்ச பின்னாடி எந்திரிச்சு கிளம்பி நண்பர்களோட Collegeக்கு 6:30கிட்ட வந்து சேந்தேன். வழக்கம்போல, Fix பன்ன நேரத்த விட 1 மணி நேரம் கழிச்சு எல்லாரும் (Teachers, Non-teaching staff members, Research scholars & Studentsனு கிட்டத்தட்ட 40 பேர்) வந்த பின்னாடி காலை உணவோட கோயமுத்தூர்ல இருந்து 7:45க்கு கெளம்பினோம்.
புறப்பட்ட உடனே வகுப்புத்தோழர்களும் Seniors-ம் சேர்ந்து ஆட ஆரம்பிச்சாங்க..,ரெம்ப நல்லா ஆடுனாங்க.

நாலாம் வகுப்பு படிக்கறப்ப..,மோதிலால் Teacher வந்து “ஆண்டுவிழா வரதால எல்லாரும் கலை நிகழ்ச்சில கலந்துக்கங்க”னு சொன்னதால நாடகத்துல நடிக்கலாம்னு முடிவுபன்னி கலந்துக்கிட்டேன்,அப்பறம் அஞ்சாம் வகுப்புலயும்...

விளைவு?!
.
.

ஆடத் தெரியல.

வழக்கம்போல உக்காந்து வேடிக்க பாத்துட்டு இருந்தேன்.

அப்புறம் ஆடுறவுங்க எல்லாம் வற்புறுத்தி கூப்ட்டதால நானும் எழுந்திருச்சு நின்னுட்டே வரவேண்டியதாப் போய்டுச்சு.

ஆம், நின்று கொண்டே வந்தேன் எனச் சொல்வதில் எனக்கு அளவில்லாத கர்வமுண்டு... இந்த 21ஆம் நூற்றாண்டில் காலை வேளையில் பெருநகரச் சாலைகளில் பேருந்தினுள் கம்பியைப் பிடிக்காமல் நடனமாடிக்கொண்டு வருவதா பெரிய விடயம்?!.. நிற்பதுதானே?!

சிறிது நேரக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு 10 மணிக்கு சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு போய்ச் சேர்ந்தோம்.




தரிசனத்தையும் காலை உணவையும் முடிச்சிட்டு அங்கிருந்து கிளம்பி 11 மணிக்கு சர்க்கரை ஆலைக்கு போய்ட்டோம்.
அங்க கரும்புல இருந்து சர்க்கரை எடுக்குற எல்லா Process-ஐயும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சுத்திப்பாத்தோம், ஒரு நாளுக்கு மட்டும் அங்க 50 ton சர்க்கர தயாரிக்கறாங்கன்னா பாருங்களேன்.! அது மட்டுமில்லாம அவங்களுக்கு தேவையான மின்சாரத்தையும் கிடைக்கிற சக்கையிலிருந்து தயாரிக்கிறாங்க..எஞ்சி இருக்குற mud waste-களும் உரமா போய்டுது. அங்க இருந்த கொஞ்ச நேரமும் கரும்பு, சர்க்கரைனு தின்னுட்டே இருந்ததால இத இனிப்பான அனுபவம்னுதான் சொல்லனும்.! பிறகு அதோட Biproduct industry-ஆன Alcohol manufacturing-ஐயும் பாத்துட்டு மதியம் சாப்ட்டதுக்கப்புறம் 2 மணிக்கு கிளம்பீட்டோம்.


அங்கிருந்து கொடுவேரிக்குப் போற வழில பேருந்தின் மேற்கூரை, தளம், இருக்கைகளின் நலம் கருதி அதுவரைக்கும் நான் "பாக்காத..." புதுப்படம் ஒன்ன driver போட்டாரு. உண்ட களைப்புல எல்லாரும் கம்முனு வந்தோம்..ஒரு 20 நிமிசத்துக்கப்புறம், "கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென…"ன்னு ஆரம்பிக்கிற மாதிரி ஒரு இடம் வந்தது ஏரிய நெருங்கீட்டோம்னு காட்டுச்சு... 









அங்க போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல தண்ணில ஆடுனோம். ஆச்சரியம் என்னன்னா என் வகுப்புல எனக்கும் இன்னொருத்தருக்கும் தவிர மத்த எல்லாருக்கும் நீச்சல் தெரிஞ்சிருந்துச்சு.! பிறகென்ன?!..,எல்லோரும் நீந்திக்களித்திருக்க நாங்களிருவரும் அழுக்குத் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தோம். (க்கும்..நீச்சல் கத்துக்கறேன்னு சொல்லி ரெண்டு தடவ தண்ணியக் குடிச்சதையெல்லாம் சொல்லிக்கிட்டா இருப்பாங்க?!)

அங்கிருந்து 5:30 மணிக்கு கிளம்பி பொறுப்பாசிரியர் வீட்டுக்கு போய் ஒரு Refreshment-க்கு அப்புறம் படம் பாத்துக்கிட்டே 7 மணிக்கு College வந்து சேர்ந்து அங்கிருந்து எல்லோரும் அவங்கவுங்க வீட்டுக்கு போனோம்.


இப்பதான் First year-ன்றதால எல்லோரோடையும் கொஞ்ச நேரம் செலவளிக்கறதுக்கு இந்த நாள் ரெம்ப உதவியா இருந்துச்சு..
சில நட்புக்களையும் சந்தோசங்களையும் நேரம் கொடுத்துதான் பெற முடியும்றது எவ்வளவு பெரிய உண்மை.!



சந்தோசமா இருக்க பணம் மட்டும் போதாது,மனசும் வேணும்.

  

Wednesday, September 18, 2013

காதல்.! காதல்.!! காதல்.!!!


   
ச்சை…ச்சை…ச்சை…  
இதப்பத்தி எழுதாதவர் யாருமுண்டோ??! சொல்றது கொஞ்சம் கஷ்டம்தான்....
ஆனா இதமட்டுமே எழுதறவங்க??! எத்தன!... 
அந்த மாதிரித்தான் நானும்...ஜிம்முக்குப்போன உடனே ஆர்வக்கோளாறுல இருக்குற எல்லாத்துலயும் வொர்க் அவுட் பன்னீட்டு மறுநாள் காலைல எந்திரிக்க முடியலியேனு கஷ்டப்படுவாங்களே...அந்த மாதிரி நானும் கொஞ்சம் காதலப்பத்தி எழுதிப்புட்டேன்;-) 


சம காலத்துல டுவிட்டருலையும் இருந்ததால கொஞ்சம் வசதியாப்போச்சு...
ட்விட்டரின் சிறப்பே அதான்..சோகம் காணாம போய்டும் சந்தோஷம் பலமடங்கு தானா வந்து சேரும்...
காதல்ல இருக்கறவன்,ஜெயிச்சவன்,தோத்தவன்னு பாரபட்சம் இல்லாம காதல் காதல் காதல்னு தோனுன எல்லாத்தையும் யாரப்பத்தியும் கவலப்படாம கிறுக்கு கிறுக்குன்னு கிறுக்கி மன ஆறுதல் தேடிக்கலாம்..நானும் இந்த ஆயுதத்த யூஸ் பன்ன ஆரம்பிச்சேன்..,தோனுன எல்லாத்தயும் எழுதுனதுல,ஒரு அளவுக்கு வாசிக்கிற மாதிரி இருக்கும்னு நம்ம்ம்பி....அதுல கொஞ்சத்த தேடி எடுத்து இங்க வச்சிருக்கேன்...படித்தின்புற்றிருங்கள்:-)))



  • காதலின் துவக்கம் விழி'ப்புணர்வு...!

  • தனிமையில் எதைப்பற்றி சிந்திக்கிறாயோ அதுதான் நீ என்றார்கள்.தனிமையிலும் உனைப்பற்றியே சிந்தித்தேன்,இப்போது நீதான் நான்..!

  • உன் கனவில் ஒரு முறையேனும் தோன்றிச்சாக ஆசை.

  • என்னருகில் வரும்போது நீ என்னை கண்டுகொள்ளாமல் செல்கையிலேயே கண்டுகொண்டேன் நீ என்னை தொலைவிலேயே கண்டுகொண்டாயென்று…

  • உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த நாட்களை விட எதிரே பார்க்கத் தோற்றிருந்த நாட்களே அதிகம்.
  • காதலில் இன்பம் நேர்’காணலில் சொதப்புவதே..!

  • கண்டுகொள்ளாமையும் கண்டு கொல்லாமையும் காதலுக்கு அழகில்லை..!

  • உன் முகத்துக்கு நேர் பார்த்துப்பேசினாலும் மூக்கிற்கு மேல் பார்த்துப்பேசுவதில்லை,பிறகு வாயை மூடிவிட்டு அவர்கள் சண்டையிட்டுக்கொள்வார்கள்.

  • இருவருக்கும் சந்தோஷம் உனக்கும் உன் கள்ளப்பார்வையில் முகம் பதிக்கும் எனக்கும்.

  • உன் பார்வையின் அர்த்தத்திற்கு மட்டும் ஐந்தாறு விவிழியம் எழுதித்தந்து விடு.

  • காரணம் தேடிப் பேசிக்கொண்டிருந்தோம்..காரணமின்றி பேசிக்கொண்டே இருக்கிறோம்..

  • காதலைப்பொறுத்தவரை மூன்று இரகசியங்கள்:
     1.எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
     2.
     3.

  • உணர்வாகித்திரிகையில் உரைப்பதற்கொன்றுமில்லை...!

  • காதலைத்தவிர எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்,சொன்ன எல்லாவற்றிலும் கொஞ்சம் காதலை ஒளித்துவைத்தேன்

  • கணங்களை அனுபவிப்பதற்கு காதலிப்பதைத் தவிற வேறுவழி இருப்பதாய்த் தோன்றவில்லை.

  • "உம் மனசுல நீ என்னதான்டா நெனச்சுகிட்டுருக்க?" என்றவளிடம் "அதான் நீயே சொல்லிட்டயே!" என்றேன்

  • பார்த்துக்கொண்டால் பேசலாமென்றிருக்கிறோம்..,பார்த்துக்கொள்வதற்க்குக் காத்துக்கொண்டிருக்கிறோம்…

  • புரையேறிப் போய்விட்டது,அவள் நினைவு தட்டுகிறது.

  • துக்கம் மறப்பதற்க்கும் தூக்கம் தொலைப்பதற்கும் நம் நினைவுகள் போதும்...

  • முதல் காதலி மட்டும் நம்மூடே வாழ்கிறாள்,கைப்பேசிக்கோ ஏதேனுமொரு இணையக்கணக்கிற்கோ கடவுச்சொல்லாக...

  • இர(ற)ப்பதில்லை காதல்…..



மொத்ததுல புதுபதிவு எழுத ஒன்னும் தோனாததால பழசுகள எடுத்து வச்சிருக்கேன். அப்பப்ப வாங்க;-)

Friday, August 23, 2013

ஒரு கவிதை



சென்ற
வார விகடனில் வெளியாகமல் போன எனது கவிதை:-p

அவள்

வண்ண வண்ணப் பூச்சுக்கள்..

தோரணங்கள்..

அலங்காரங்கள்..

இருக்கைகள்..

வழி நெடுக அழைப்பு வார்த்தைகள்

பெயர்ப்பலகைகள்

இயந்திர(ற) மனிதர்கள் !


'வியாபாரமேதான்!' எனச் சொல்லாமல் சொல்லும்

நிர்ணயித்த விலைப்பட்டியலும்,

யாரேனுமொரு திரைப்பிரபலம் கையில் வைத்துப்

பல்லிளிக்கும் விளம்பரச் சுவரொட்டியும்...

இவையெல்லாம் பற்றி ஏதுமறியாமல் அந்த பானக்

கடையிடம் கொஞ்சம் தோற்றுத்தான் போகிறாள்..,


அதன் முன்னேயோ, பக்கவாட்டிலோ

எதிரிலோ, இல்லை ஓடியோடியோ

வெள்ளரிப்பிஞ்சையும் தர்ப்பூசணிக்கீற்றையும்

நோண்டிய நுங்கையும் திராட்சைக்குலையயும்,

விலைஅளவு வரைமுறையின்றி

சிறு உரையாடலுடன் விற்கப்போராடும்

வெற்றிலைக் கிழவி...!          

                                                                       

Sunday, June 9, 2013

அ...

அனைவருக்கும்  வணக்கங்கள் :-)

வலைப்பூவினை அறிமுகம் செய்த கீச்சுலக நண்பர்களுக்கு இக்கணத்தில் நன்றிகள்!

சித்திரத்தோடு எழுத்தும் கைப்பழக்கம் என்பது முதல் பதிவினை எழுதுகையிலேயே புரிகின்றது...

என் எழுத்துக்கள் இயல்பை மீறி சிறிது விறைப்பான நடையிலேயே போகலாம்...சில நேரங்களில் என் உளப்பார்வையையும் முட்டாள்தனத்தையும் வெளிக்காட்டலாம்...
எழுதுவது என் உரிமை என்றாலும் சில நேரங்களில் உங்களைப்போன்ற வாசிப்பாளர்களை திருப்திப்படுத்தாமலும் போகலாம்...!

இவ்வலைப்பூ எனது நாளேடு போலக் காட்சியளிக்கலாம்...சில நேரங்களில் பயணக்குறிப்பாகவோ,தன்னுரலின் வெளிப்பாடாகவோ,கவிதையைக்கொண்டதாகவோ,கவிதை போன்ற ஏதேனுமொன்றைக் கொண்டதாகவோ இருக்கலாம் அல்லது இப்போது இப்பதிவு உங்களுக்கு எவ்வாறு காட்சியளிக்கிறதோ அவ்வாறே எப்போதும் காட்சியளிக்கலாம்...
இதுவே எனது இறுதிப்பதிவாகவும் இருக்கலாம்!

இவை எல்லாவற்றையும் ஒரு கணிப்பாகவே விட்டுவிடுகின்றேன்...!

எழுதுவது நானாக இருப்பினும் இங்கு கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறேன்...
 
உங்கள் தோழமையோடு பின்னூட்டமும் எப்போதும் வேண்டும்...!

வாசித்தமைக்கு நன்றிகள்!!

இப்படிக்கு
நான்