“ஜனநாயகம்
என்பது வெறும் பெரும்பான்மையினரின் ஆட்சியைக் குறிக்கவில்லை. அடிப்படையில், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் உணர்வுகளை அங்கீகரித்து, பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது.”
- பாராளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா, மே 1963.1
நாம் ஒரு உறவிற்கு வெளியே செல்லும்போது அவ்வுறவைப்பற்றி நன்கு அறிந்து கொள்கிறோம். நாட்டிற்கு வெளியே செல்லும்போது நாட்டைப்பற்றி. அதேபோல், இந்திய ஒன்றியத்தில் வேறு மாநிலத்திற்குச் செல்லும்போது சொந்த மாநிலத்தைக் குறித்து அறிந்துகொள்கிறோம்.
நான் பள்ளி, கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்தவன். பணி நிமித்தமாகக் கேரளத்திற்கு வந்தேன். வங்காளிகளால் நிறைந்த எங்கள் ஆய்வுக்கூடத்தில் என்னிடம் ஒரே கேள்வி பல்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாகக் கேட்கப்பட்டது. அனைத்தும் நான் தமிழகத்திலிருந்து வந்திருப்பவன் என்பதால் உண்டான பொதுப்பிம்பம் என நினைக்கிறேன். அதுவரை தமிழகத்திற்கு வெளியே ஐந்து மாதங்களுக்கும் குறைவாகவே தங்கியிருக்கிறேன். அதனால், டெல்லிப் பேரரசின் அதிகாரத்தை நான் யாருடைய விரல்நுனியிலும் கருவிழியிலும் கண்டவனில்லை. முதன்முறை அதைக்கண்டபோது அச்சமுற்றேன். திணறிப்போனேன். உணர்வு ரீதியாகச் சீண்டவும் பட்டேன். இது அக்கேள்விகளுக்கு விடைதேடிய பயணம்.
1
சிறு பொறிதான் பெருந்தீயாகிறது.
அன்றுமது அவ்வாறே துவங்கியது. “தமிழர்களாகிய நீங்கள் ஏன் இந்தி கற்றுக்கொள்வதில்லை?” என்பதற்கு “எங்களுக்கு அவசியமில்லை என்பதால்” என்றேன். “தமிழர்கள் வீம்பானவர்கள்; யாரும் இந்தியில் பேசினால் மோசமாக எதிர்வினையாற்றுவார்கள்” என்பது எனக்குக் கிடைத்த பதில்.
நமக்கொரு பொதுப்புத்தி இருக்கிறது; ஒருவருடன் குறைந்தபட்சம் சில மணி நேரங்கூடச் செலவளிக்காமல் அவர்களைப்பற்றிய கதைகளை நம்புவது. இனக்குழுவைப் பற்றிய நம்பிக்கைகள் அதனினும் மோசம். பெரும்பான்மை எதிர்மறை பிம்பங்களாகவே இருக்கின்றன.
நான் பதில் சொன்னேன். பதில்கள் கேள்விகளையும் பின்னர் புதிய பதில்களையும் உண்டாக்கின. இறுதியில், கட்டிடத்தின் முதல் தளம் அதிர்ந்தது. பின்னர் இரண்டாம் தளம். மொத்தக்கட்டிடமும் அதிர்வுருமளவு நிலைமை மோசமாகவே, மூத்தோர் சிலரும் அலுவலர் ஒருவரும் சேர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
2
இப்போது நான் விளக்கினைத் தொட்ட பிள்ளை.
“எனக்கு தேவைப்பட்டாலே ஒழிய, கற்றுக்கொள்வது நேரவிரயம்; தென்னிந்தியனுக்கு இந்தியைக் கற்றுக்கொள்வதால் அதிகப் பயனொன்றும் இல்லை”
“யாரேனும் வட இந்தியாவிலிருந்து வந்தால் அவர்களுக்கு எளிதில் பதிலளிக்கலாமில்லையா? அதற்காக கற்றுக்கொள்ள வேண்டும்”
“எங்களுக்குத்தான் பொதுத்தொடர்பு மொழி ஆங்கிலம் இருக்கிறதே! வட இந்தியாவிலிருந்து வருபவருக்காக நான் இங்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமா? ஏன் அவர் தென்னிந்தியமொழி கற்க மாட்டாரா?”
“இந்தி நம் தேசிய மொழி ஆகவே அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்”
“சரி, ஹாக்கி தேசிய விளையாட்டென்பதால் எல்லோரும் அதைக் கட்டாயம் விளையாடக் கற்க வேண்டும் என்பீர்களா?”
“இது விதண்டாவாதம்” எனத்துவங்கி அங்கிருந்து வசைமாரியும் ஹைட்ரஜன் குண்டுகளும் என்னை நோக்கி வந்தன. பின்புதான் எனக்குப் புரிந்தது, அவரும் விளக்கினைத்தோட்ட பிள்ளை என!
“இந்தி மட்டுமல்ல, எந்தமொழியையும் சொந்த விருப்பமிருந்தால் மட்டுமே கற்றுக்கொள்வேன்” என முடித்துக்கொண்டேன்.
3
இந்தமுறை நானும் ஓர் இளம் வங்காளியும் சேர்ந்து மொழி தொடர்பான விவாதத்தில் நெருப்பைக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது குறுக்கிட்ட இன்னொரு வங்காளி, “இந்தத் தமிழர்கள் எப்போதும் தமிழை உயர்த்திப் பிடிப்பவர்கள்” எனச் சொல்லிவிட்டு நகரப்பார்த்தார். அவரைப் பிடித்து இதையெல்லாம் நான் யாரிடமிருந்து
கற்றுக்கொண்டேன் எனச் சுருங்கச் சொல்லி அனுப்பி வைத்தேன்.
·
எந்தக் கேள்வி முன் நான் திக்கித்து நின்றபோதும் அவர்தான் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
அவர்தான் என் தோளைத்தட்டி, “தம்பீ… என்னை வாசிப்பது இருக்கட்டும்…, நீ அண்ணாவை வாசித்திருக்கிறாயா?” எனக் கேட்டார்.
“இந்திய ஒன்றியத்தில் இந்தி
பேசாத குடிமக்கள் ஏன் எப்போதும் மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கக்
கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று யோசித்ததுண்டா?” எனக் கேட்டார்.
அவர்தான் ‘இந்தி நம் தேசிய மொழி’ என்கிற பொய் பள்ளிக்கல்விமுதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை ஏன் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுகிறது எனச் சொல்லித்தந்தார்.2
அவர்தான் டெல்லி எப்படி ஒரு கூட்டாச்சித் தலைநகராக இல்லாமல் ஒரு பேரரசாக மாறிவருகிறது எனக் காட்டித்தந்தார்.
அவர்தான் இந்தியா என்பதற்கும் இந்திய ஒன்றியம் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும், மத்திய அரசு என்பதற்கும் ஒன்றிய அரசு என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும், உள்ளூர்
மொழி என்பதற்கும் பிராந்திய
மொழி என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும், ஒருமை என்பதற்கும் ஒற்றுமை
என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும்
சொல்லித்தந்தார்.
அவர்தான் பள்ளிச்சுவரில் சர்வ சிக்ஷ்யா அபியான் என்று எழுதப்பட்டிருந்த வாசகம் இப்போது வரை எனக்கு ஏன் புரியவில்லை எனச் சொல்லித்தந்தார்.
அவர்தான் 1965 என்றதும் உனக்கு நினைவுக்கு வரவேண்டியது இந்தியா - பாகிஸ்தான் போர் அல்ல, உன் சொந்தமண்ணில் நிகழ்ந்த மொழியுரிமைப் போர் எனக் காட்டித்தந்தார்.3
அவர்தான் 1965 க்குப் பிறகு டெல்லியைத் தலைமையாகக் கொண்ட எந்தக் கட்சியும் ஏன் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவில்லை எனச் சொல்லித்தந்தார்.
உலக அரங்கில் நின்றாலும் இந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டுமல்ல என்று ஒருவர்4 ஏன் திரும்பத் திரும்ப அடையாளப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்பதைக் கற்றுத்தந்தார்.
அரசியலமைப்புச்சட்டம் இந்தியர்கள் அனைவரும் சமம் என்கையில், ஒரு மொழி பேசுகிறவராகத் தற்செயலாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக, மற்றொரு இந்தியனைப் பார்த்து "நீ ஏன் இந்த மொழி கற்கவில்லை?" என்று விரல் நீட்டும் அதிகாரத்தை அவருக்கு யார், எப்போது வழங்கினார்கள் எனச் சொல்லித்தந்தார்.
தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் அவர்தம் தாய் மொழியினை ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும் எனச் சொல்லித்தந்தார்.
அவர்தான் தாய்மொழியை விட எந்த ஒரு மொழியையும் ஒருபடி கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மதிக்க வேண்டியதில்லை எனக் கற்றுத்தந்தார்.
http://www.noolveli.com/detail.php?id=561 |
அவர்தான் கோர்கோ சாட்டர்ஜி.a பிறப்பால் ஒரு வங்காளி. இந்த தேசத்தின் இந்தி பேசாத மக்கள் அரசின் மொழிக்கொள்கைகளால் எங்ஙனம் பாதிக்கப்படுகிறார்கள் எனது தொடர்ந்து எழுதி வருவபர். இந்திய ஒன்றியத்தின் மாநில உரிமைகள் தொடர்பாகவும் மொழிச்சமவுரிமைக்காகவும் தொடர்ந்து இயங்கி வருபவர். இந்தி ஆதிக்கத்தை மட்டுமல்ல, திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நிகழ்ந்த அவர் தாய்மொழியான வங்கத்தின் ஆதிக்கத்தையும் எவ்விதச் சார்பு நிலையுமின்றிப் பதிவு செய்தவர். எழுதுவது மட்டுமில்லாமல் தம் மக்களின் மொழியுரிமைக்காக களத்திலும் முன் நிற்பவர். ஒன்றிய அலுவலகங்களில் மொழிக்கொள்கை பின்பற்றப்படவில்லையெனில் அலுவலர் யாராயினும் ஒன்றைக்கு ஒற்றை நிற்பவர். வங்காளிகளுக்கு மட்டுமல்லாமல் இந்தி பேசாத ஒட்டுமொத்த மக்களுக்காகவும் பேசுவபர். அனைத்தையும் அரசியல் சாசனத்தைக்கொண்டு
மட்டுமல்ல, தனக்கே உரிய அபாரமான நீதியுணர்வால் அது தொடாத எல்லைகளையும் தொட்டுச்செல்கிறார்.
இங்கு நீதியின் குரலுக்கு, அது எழுப்பும்
அறக்கேள்விகளுக்குச் செவிமடுக்காதவர் எவர்?
இது வங்காளிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு வங்காளியே பதிலாக அமைந்த கதை. அந்தக் கேள்விகளுக்கு அவருடைய எழுத்துக்களின் உதவியோடு பதில் தேட முயல்கிறது இந்தத் தொகுப்பு. எனவே, இதில் என் பங்கைவிட கோர்கோவின் பங்கே அதிகம்.
இவைமட்டுமின்றி, இக்கட்டுரை எழுதப்படும் முன்பும் எழுதப்படுகிறபோதும் எழுதிமுடித்த பின்பும் மலையாளிகளிடமிருந்தும், கன்னடர்களிடமிருந்தும் எழுந்த கேள்விகள் இதை மேம்படுத்த உதவியிருக்கின்றன. அவர்களனைவருக்கும் நன்றி.
இந்தி நம் தேசிய மொழி அல்ல
இந்தி நம் தேசிய மொழி அல்ல, அலுவலக மொழிகளில் ஒன்று. மற்றொன்று ஆங்கிலம். ஒரு நாட்டிற்கு தேசிய மொழி என்று ஒன்று இருக்குமாயின் அதைப்பற்றிய குறிப்பு அரசியல் சாசனத்தில் இடம்பெறும்.
இந்திய அரசியல் சாசனத்தில் தேசிய மொழி என்னும் வார்த்தைக்கே இடமில்லை. ஆனாலும் இந்தப் பொய் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுகிறது. ஏன்?
சமீபத்தில் நிகழ்த்த இரண்டு சம்பவங்களைப் பார்க்கலாம்.
1. நாடெங்கிலுமுள்ள சிபிஎஸ்சி
பள்ளிகளிலுள்ள ஆசிரியர் பணியிடத்திற்கான தகுதித்தேர்வின் (CTET) இரண்டாம் தாளை ஆங்கிலம்,
இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுத முடியும் என்கிற அறிவிக்கை எதிர்ப்புகளைக்
கிளப்பியதால் ஒன்றிய அமைச்சரே முன்வந்து, "தேர்வு முந்தைய வருடங்களைப்போலவே
20 மொழிகளிலும் நடத்தப்படும்" என்று அறிவித்தார்.5
2. இந்திய இரயில்வேயின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் ஆங்கில, இந்தி இடைமுகங்கள் தனித்தனியே இருந்தும் ஆங்கிலப்பக்கத்தில் உள்ளீடு செய்யும்போது இந்தி வார்த்தைகளும் இடையீடு செய்வது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து எதிர்ப்புகள் வரத்துவங்கிய பின்னர் அது ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டும்
இடமளிக்கும்படி மாற்றப்பட்டது.6, 7
நாடாளுமன்றத்திலேயே 22 மொழிகளில் பேசுவதற்கான சட்ட வழிவகை
(முன் அனுமதி வேண்டும்) இருக்கையில், இந்தி பயிற்றுவிக்காத ஆசிரியர் பணிக்கும் இந்தி
அல்லது சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கட்டாயம்,
எதிர்ப்புகள் கிளம்பியவுடன் ஓடி ஒளிந்ததேன்? எனில் சட்டப்படி அதற்கான அனுமதி இல்லை
என்பதுதான் அர்த்தமா? சுதந்திரத்திற்குப் பின்னும் நாம் - இந்திய ஒன்றியத்தின் இந்தி
பேசாத பெருவாரியான மக்கள் - நம் உரிமைகளை இப்படிப் போராடித்தான் பெறவேண்டுமா? சுதந்திரம்
என்பதன் அர்த்தம் அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு என்பதில்லையா?
இந்த இரண்டு அறிவிக்கைகளையும் கேட்டவுடன் ஒருவர் இருவகையில்
எதிர்வினையாற்றலாம்: எதிர்த்தல் மற்றும் மௌனித்திருத்தல். எதிர்ப்புகளே இவ்விரு விஷயங்களிலும்
நமக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தன. ஆனால் இந்த மௌனம், இந்தி தவிர்த்த வேறுமொழி பேசும்
பெரும்பாலோரின் இந்த மௌனம், எதனால் வருகிறது? தேசிய மொழி இந்தி என்பதால் அதைக் கட்டாயமாக்குவதில்
சட்டரீதியாகத் தவறில்லை என்கிற நம்பிக்கையிலிருந்து வருகிறது. இதை எதிர்த்து நமக்கான
உரிமைகளைப் பெறுவதற்கு சட்டப்பூர்வமாக வழிவகையில்லை என நம்புவதால் வருகிறது. இது அத்தனையும்
இந்தி நம் தேசிய மொழி என்று நம்பவைக்கப்பட்டுள்ளதால் வருகிறது.
இப்படித்தான் ஒரு சாதாரண வலைத் தேடலிலேயே தெரிந்துவிடுகிற
உண்மை, முனைவர் பட்டம் வாங்கியிருந்தாலும் தெரியாதபடிக்கு வெகுதொலைவில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தி தேசிய மொழி ஆக்கப்படாததற்குப்பின் ஒரு வரலாறு இருக்கிறது. 1965இல் இந்தியைத்
தேசிய மொழியாக அறிவிக்க முயன்றபோது, தமிழகத்தில் தொடங்கி இந்தி பேசாத மாநிலங்கள் முழுதும்
போராட்டங்கள் வெடித்தன. தன் பிள்ளைகளின் மொழியுரிமைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர்
தன் உயிரையே விலையாகத் தந்தனர்.3 அந்நிகழ்வு தொடர்பான சம்பவங்கள் நியூயார்க்
டைம்ஸ், சிகாகோ ட்ரிபியூன், டைம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்தன.
இப்போதும்கூட இந்தியை தேசியமொழியாக்க வேண்டும் என்கிற முயற்சிகள்
தொடர்ந்தவண்ணம் உள்ளன. நீதிமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டி அதை
மறுத்தும் வருகின்றன.8 இவ்வளவு ஏன், ‘இந்தி தேசியமொழி அல்ல’ என்னும் உண்மையைச்
சொல்பவர்களின் மீது வழக்குகள் கூடத் தொடரப்பட்டுள்ளன.9
பிராந்தியவாதமும் தேசியவாதமும்
பொதுவாக இதுபோன்ற உரிமை தொடர்பான குரல்கள் எழும்போது அவை
பிரிவினைவாதம், தேசத்திற்கு எதிரான குரல் என வகைப்படுத்தப்படுவது இயல்பு. அரசாங்கத்திற்கு
எதிராக எழும் குரல்கள் தேசத்திற்கு எதிரான குரல்கள் அல்ல. நமது அரசியல் சாசனம் அரசிற்கு
எதிரான குரல்களை மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குரல்களையும் அனுமதிக்கிறது.
எந்தக் குரலும், அது எந்த அளவிற்கு விவாதங்களை இட்டுச்செல்கிறது, யாருடைய நலன்களுக்காகப்
பேசுகிறது, எதற்கு எதிராக நிற்பினும் அது நீதியின் பக்கம் நிற்கிறதா என்பதைக்குறித்தே
மதிப்பிடப்படல் வேண்டும்.
ஒரு நாடு - ஒரு மொழி என்பதை சிலர் தேசிய உணர்வோடு பிணைத்துவிடுகிறார்கள். தேசியம் என்னும் உணர்வு மொழியால் மட்டும் வந்துவிடுவதில்லை.
‘அமெரிக்க ஒன்றியமும் பிரிட்டனும் ஒரேமொழியில் பேசினாலும் தனித்தனி நாடுகள்’ என ஜார்ஜ்
பெர்னாட் ஷா சொன்னதாக ஒரு நம்பிக்கைகூட உண்டு.
பொதுமொழி ஒற்றுமையைக் கொண்டுவரும் என்றால், இந்திய ஒன்றியம்
உருவான வரலாற்றின் அதிக பக்கங்களை நிரப்பும் சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்நிலம்
தற்போது பேசப்படுகிற மொழிகளைக் கொண்டிருந்தவிட அதிக மொழிகளைக் கொண்டிருந்தது. அப்போதும்
நாம் ஒற்றுமையாகப் போராடித்தான் சுதந்திரத்தைப் பெற்றோம்.
ஒரு தேசத்திற்கு ஒரு மொழி இருப்பது நல்லதுதானே போன்ற கேள்விகள்
தவறில்லை. அது இயல்பாகவே எத்தப்படல் வேண்டும், திணிக்கப்பட்டோ தனிச்சலுகைகள் கொடுக்கப்பட்டோ
அல்ல. அந்தவகையில் இந்திய ஒன்றியத்திற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வேண்டும். அதைக்
காலம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது
யாருக்கு நல்லது? இந்த ஒரு நாடு ஒரு மொழி கொள்கையை ஆதரிப்பவர்களில் பெரும்பான்மையினர்
யார் எனப் பார்த்தால், எந்தவித சுயமுயற்சி அல்லது விருப்பத்தின்பேரில் அல்லாமல், பிறப்பின்
அடிப்படையிலோ அல்லது சுயமுடிவெடுக்க
இயலாத வயதில் திணிக்கப்பட்ட கல்விமுறையின் அடிப்படையிலோ இந்தி கற்றுக்கொண்டவர்களாக
இருப்பார்கள். அவர்கள் கிட்டத்தட்ட முதல்தரக் குடிமக்கள். அவர்களுக்கு சாதகமாக இருக்கும்
அரசாங்கத்திற்கு விசுவாசமாய் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், இந்தி பேசாத, பெரும்பான்மையான
இரண்டாம்தர, மூன்றாம்தர குடிமக்களுக்காகவும் நாம் பேசித்தான் ஆகவேண்டும்.
இந்தியாவின் பெருமைகளென வேற்றுமையில் ஒற்றுமை, பன்மைத்துவம்
போன்றவற்றை பள்ளிக்காலத்திலேயே படித்திருக்கிறோம். வெவ்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட பலரும்,
‘நாம் அனைவரும் சமம்’ என்கிற உணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ இயலும் என்று உலகிற்கே
இந்திய ஒன்றியம் சான்றாக இருந்துவருகிறது. பன்மைத்துவத்துக்கும் சமத்துவத்திற்கும்
ஆதரவாகவும், ஒற்றை மொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும் பேசுவது எப்படி தேசவிரோதம் ஆகும்?
மாறாக, ‘ஒரு தேசம் ஒரு மொழி’ என்பதுதான் பன்மைத்துவத்திற்கும் இந்திய ஒன்றியத்திற்கும்
எதிரானது.
பிராந்தியவாதம் மற்றும் தேசியவாதத்தை விட ‘தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட
தேசியவாதம்’ என்கிற ஒன்று உள்ளது; அதுதான் எல்லாவற்றையும்விட ஆபத்தானது. எத்தனை உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது
அது?! அதுதான் ஆங்கிலத்தையும் எதிர்க்கிறது.
தமிழ் - இந்தி
தமிழ் இந்தி என எதிர்த்துருவங்களில் நிறுத்துவதே தவறு.
இது எத்தகைய பிம்பத்தை உருவாக்குகிறதென்றால்,
1. இந்தியை ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக்குவதை தமிழர்கள்
எதிர்க்கிறார்கள் மேலும் அவர்கள் தமிழை ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
2. தமிழர்களைத்தவிர வேறெந்த மாநிலத்தவரும் இந்தியை தேசியமொழியாக்கும்
முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.
இரண்டுமே தவறு.
தமிழர்கள் தமிழை தேசியமொழியாக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை;
எல்லா மொழிகளுக்கும் சமவுரிமை அளிக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தமிழர்கள்
மட்டுமல்ல, மொழிச்சமவுரிமைக்காகப் போராடும் எவரும் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித்திணிப்பை
எதிர்க்கிறார்கள்.10
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மட்டும் இந்தி பயிற்றுவிக்கப்படுவதில்லை.
தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்களில் என விருப்பமுள்ள எவரும் இந்தி கற்றுக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, ‘தக்ஷிண பாரத் இந்தி ப்ரச்சார் சபா’ (Dakshina Bharat Hindi
Prachar Sabha). தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப நிறுவப்பட்ட இந்நிறுவனம் மற்ற மாநிலங்களில்
உள்ள பயிற்றுநர்களின் எண்ணிக்கையைவிட (ஆந்திரம்+தெலுங்கானா+கேரளம்+கர்நாடகம் =
3787) தமிழகத்தில் அதிக பயிற்றுநர்களைக் (10709) கொண்டுள்ளது.11
எதற்காக இந்தித் திணிப்பை எதிர்க்க வேண்டும்?
தேவநாகரி எழுத்துருவில் எழுதப்படும் இந்தியே இந்தியாவின்
அலுவல் மொழி என்கிறது அரசியல் சாசனத்தின் 343(1) வது பிரிவு. இதில் கவனித்தால் ஒன்று
புரியும். அதாவது அலுவல் மொழி என்ற விஷயமே எழுத்துப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமானது.
மக்களின் பேச்சு மொழிக்கும் அதற்கும் தொடர்பில்லை. தேசிய மொழி என்ற அந்தஸ்தின் விஸ்தாரம்
அலுவல் மொழி என்பதற்குக் கிடையாது. அது அரசு நிர்வாகம் குழப்பமின்றி நடைபெறச் செய்து
கொண்ட ஓர் ஏற்பாடு மட்டுமே.12
அலுவலர்களுக்குள் எழுத்துப்பூர்வமான விஷயங்களில் எந்த மொழியைப்
பயன்படுத்தினாலும் பிரச்சினை இல்லை. ஆனால், மக்கள் தொடர்பென வரும்போது மக்களுக்குப்
புரியும் மொழியில்தான் தொடர்புகொள்ள வேண்டும். ஆனால் அலுவலகப் பணிகளுக்காக மட்டும்
பரிந்துரைக்கப்பட்ட மொழிகளுள் ஒன்றின் அடிப்படையில் குடிமக்களைப் பாரபட்சமாக நடத்தும்
நடைமுறைதான் இங்கு வழக்கத்தில் உள்ளது.
27 ஏப்ரல், 1960-இல் இந்திய ஒன்றியத்தின் முதல் குடியரசுத்தலைவரின்
ஆணைப்படி பரிந்துரைக்கப்பட்ட மொழிக்கொள்கை13 இவ்வாறு கூறுகிறது:
இந்தி பேசாத மற்ற மாநிலங்களில், இந்தியை உள் அலுவலகப்பணிகளுக்கு
மட்டும் பயன்படுத்தவேண்டும் ஆனால் மக்களுடன் தொடர்புகொள்ளும்போது (விண்ணப்படிவங்கள்,
விளம்பரங்கள், குறிப்பேடுகள்) அம்மாநில மொழியையே பயன்படுத்த வேண்டும்.
எனக்குத் தெரிந்த வகையில் இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிரம்
தவிர - அதுவும் அம்மாநில அரசின் வற்புறுத்தலின் பேரில் - எங்கும் இச்சட்டப்பிரிவு பின்பற்றப்படுவதில்லை.
உதாரணத்திற்கு ரிசர்வ் வங்கித் தலைமையகத்திற்கான பணியாளர் தேர்விற்கு, மலையாள நாளிதழில்
வெளிவரும் விளம்பரம் இந்தியில் இருக்கும்.14 கேரளத்திலுள்ள ஒரு ஒன்றிய அலுவலகத்திற்குச்
சென்றால் வரவேற்பாளர் மலையாளத்திலோ ஆங்கிலத்திலோ பதிலளிக்காமல் இந்தியில் பேசத்துவங்குவார்.
பிறகெப்படி குடிமக்கள் தமக்குத்தேவையானதை தடையின்றிக் கேட்டுப்பெற இயலும்? அரசியலமைப்புச்
சட்டத்தைக் காட்டி இந்தியைத் திணிப்பவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் இந்தப்பிரிவை
புறக்கணிப்பது ஏன்? இந்தித்திணிப்பில் காட்டும் தீவிரத்தை, கல்வி, மருத்துவம், மலம்
அள்ளும் தொழிலை ஒழித்தல்16, 16 போன்றவற்றில் கடைப்பிடித்தால் மக்கள் இன்னுங்கொஞ்சம்
மகிழ்ச்சியாக இருப்பர்களில்லையா?
சுதந்திரம் என்பதற்கு சமவாய்ப்பு என்று பொருள் கொண்டால்
நாம் எல்லோரும் சுதந்திரமானவர்கள்தானா? நாம் இந்த தேசத்தில் சமமாக நடத்தப்படுகிற குடிமக்கள்தானா?
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம்தரக் குடிமக்கள்
அதிகாரத்திலிருப்பவர்களைப் பார்த்துத்தான் மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
ஒரு மாணவன்/மாணவி சமத்துவ உணர்வுடன் நடந்துகொள்வது கற்றுக்கொடுப்பதால் வருவதில்லை.
மாறாக, அவரின் ஆசிரியரும் குடும்பத்தலைமையும் எவ்வாறு சக உறுப்பினர்களை நடத்துகிறார்கள்
என்பதிலிருந்து வருவதாகும். அரசாங்கம் குடிமக்களை சமத்துவ உணர்வுடன் நடத்தும்போது அவர்களும்
அவ்வுணர்வை இயல்பாகவே அடைவார்கள். இந்திய ஒன்றியத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. அதனால்தான்
ஒரு மொழி தெரியாத ஒரே காரணத்திற்காக ஒரு குடிமகன் மற்றவனை இழிவாக நடத்துகிறான். 'நீ
ஏன் இந்தி கற்கவில்லை?' என விரல் நீட்டுகிறான்.
ஒரு இந்தியக் குடிமகன், ஒன்றிய அரசால் நடத்தப்படுகிறவிதம் மூலம்
எவ்வாறு தன தரத்தை உணர்ந்துகொள்கிறான் என்பதை ஓர் எடுத்துக்காட்டின்மூலம் புரிந்துகொள்ளலாம்.
சென்னையில் வசிக்கிற ஒருவர் தன் ‘பான்’ கணக்கில் மாற்றம் செய்யவேண்டிக் கடிதம் எழுதினார்
என்றால் அவருக்குக் கிடைக்கும் பதில் கடிதத்தின் முதல் பக்கத்தில் இந்தியும் பின்புறம்
ஆங்கிலம் இருக்கும்.17 கடிதம் எழுதியவர் ஒரு இந்தி பேசும் பிரஜை என்றால்
பதிலைத் தாய்மொழியில் வாசிப்பார்: முதல்தரக் குடிமகன். கடிதம் எழுதியவர், கல்வி கற்ற,
ஆங்கிலம் அறிந்த பிரஜை என்றால் பதிலை அந்நிய மொழியில் வாசிப்பார் (அதை நூறு சதவீதம்
புரிந்துகொள்வார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை): இரண்டாம்தரக் குடிமகன். கடிதம்
எழுதியவர் தமிழ் மட்டுமே அறிந்தவர் என்றால் (இந்தி அல்லாத பிற இந்திய மொழிகளில் கடிதமே
எழுத இயலாது) அவரால் பதிலை வாசிக்கவே இயலாது: மூன்றாம்தரக் குடிமகன்.
இப்படி லட்சக்கணக்கான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.2
ஹைதராபாத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் விமானத்தில்
உயிர் காக்கும் முன்னெச்சரிக்கை அறிவிக்கைகள் இந்தியில் இருக்கும்; தெலுங்கிலோ அல்லது
தமிழிலோ இருக்காது. (ஆனால், சென்னையிலிருந்து லண்டனுக்குச் செல்லும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் அறிவிக்கைகள்
தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.)
கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க இந்தி அல்லாத ஒரு இந்திய
மொழியை உபயோகிக்க இயலாது. (ஆனால், இந்திய ஒன்றியத்திலுள்ள அமெரிக்கத் தூதரக விண்ணப்பங்களில்
பிராந்திய மொழிகளை உபயோகிக்கலாம்.)
இந்தி பேசாத மக்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள தற்போதைய
தகவல் பரிமாற்ற யுகத்தில், ஒன்றிய அரசு அலுவலகத்தின் இணையதளங்கள் தங்கள் தாய்மொழியில்
இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.
ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு இந்தி
அல்லாத இந்திய மொழிகளில் அல்லது அந்த பிராந்தியத்தில் புரியும் சொற்களில் பெயர் வைக்கப்படும்
என எதிர்பார்க்க இயலாது.
ஒரு தனித்த அமைப்பாக இருந்தாலும், டெல்லியை தலைமையாகக்
கொண்ட தேர்தல் ஆணைய விளம்பரங்கள் தங்கள் மொழியில் இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.18
பொதுத்துறை வங்கி அலுவலகங்கள் மற்றும் ஏடிஎம் இயந்திரகளில்
மும்மொழிக்கொள்கை (ரிசர்வ் வங்கி வழிகாட்டலின்படி) கட்டாயம் பின்பற்றப்படும் என எதிர்பார்க்க
இயலாது.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் தொடர்வண்டியின்
முன்பதிவுப் பட்டியல் (இப்போது ஒட்டப்படுவதில்லை) கூட தமிழிலோ அல்லது மலையாளத்திலோ
இருந்ததில்லை.
ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கையில் உங்கள் தாய்மொழியில் ஒப்பிட
இயலுமென எதிர்பார்க்க இயலாது.19
இந்தி தேசிய மொழியாக இல்லாத சூழலிலேயே இந்தி அறியாத குடிமக்கள்
இத்தகைய பிரச்சினைகளை சந்திக்கும்போது, இந்தி தேசியமொழியாக்கப்பட்டிருந்தால்/
தேசியமொழியாக்கப்பட்டால்
அவர்கள் இன்னும் எத்தனை எத்தனை துயரங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை உங்கள்
கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
ஒன்றிய அரசும் மொழிக்கணக்கெடுப்பும்
இந்தி தொடர்பான வாதங்களில் முக்கியமாக சொல்லப்படுவது அது
பெரும்பான்மையினோரால் (ஐம்பது சதவீதத்திற்கும் கீழ்) பேசப்படுகிறது என்பதுதான். அந்தப்பெரும்பான்மை
எப்படி அடையப்பட்டது என்பதையும் கொஞ்சம் காணவேண்டாமா?
முதலில் ஒன்றிய அரசு மொழிகளை எவ்வாறு கையாள்கிறது எனப்
பார்ப்போம். அதிலிருந்தே அவர்களுக்கு எது முக்கியம், முக்கியம் அல்ல என்பது தெளிவாகும்.
இதைக்குறித்து சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மொழிக்கான
கணக்கீட்டை செய்து முடித்த பேராசிரியர் கணேஷ் டேவிb இவ்வாறு எழுதுகிறார்:20
1961 மக்கள் தொகை கணக்கீட்டின்போது நாட்டில் உள்ள தாய்மொழிகளின் எண்ணிக்கை 1652. ஆனால்,
1971 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி அது 109 ஆகக்குறைந்தது. 2011 ஆம் ஆண்டுக்கணக்கீட்டின்படி
இந்தியக்குடிமக்கள் 19,569 மொழிகளை தங்கள் தாய்மொழியாகப் பதிவு செய்தனர். பின்னர் அவற்றை
1369 வில்லைகளுக்குக்கீழ் அடையாளப்படுத்தப்பட்டவை என்றும் 1414ஐ மற்றவை என்னும் தலைப்பின்கீழும்
கொண்டுவந்தனர். பின்னர் அவையும் 121ஆகச் சுருக்கப்பட்டன. அவற்றுள் 22 அரசியலமைப்புச்
சட்டத்தின் எட்டாம் பிரிவிலுள்ள பட்டியலிடப்பட்ட மொழிகள்; மீதம் 99 பட்டியலிடப்படாதவை.
இங்கு, மொழிகளை எப்படிக் குழுவாக்கினர் என்பதையும் நாம்
காணவேண்டும். உதாரணத்திற்கு, இந்தி என்கிற அடையாளத்தின்கீழ் கிட்டத்தட்ட 60 மொழிகள்
வகைப்படுத்தப்பட்டுள்ளன.21 மூன்றுகோடிக்கும் மேற்பட்டோரால் பேசப்படும் ராஜஸ்தானின்
மொழிகள் (ராஜஸ்தானி உட்பட), போஜ்புரி (5 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுவது;
தனியே அகராதி, பாணி, இலக்கியம், நாடகம், திரைப்படம் கொண்டது) ஆகியவையும் இந்திக்குக்கீழ்தான்.
இவற்றைப் பட்டியல் மொழிகளுடன் சேர்க்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும், அங்ஙனம் சேர்த்தால்
இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்கிற பயமும் இருக்கிறது.22
2011ஆம் ஆண்டுக்கணக்கீட்டின்படி 25,000 பேர் பேசுகிற மொழி
சமஸ்கிருதம். 2014ஆம் ஆண்டு நாடெங்கிலும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயங்களில் பயிலும்
70,000 மாணவர்கள் தங்களின் மூன்றாம் மொழியாகிய ஜெர்மனில் இருந்து சமஸ்க்ருதத்திற்கு
மாறக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். 2016ஆம் ஆண்டில் ஒன்றிய மனிதவளத்துறை அமைச்சகம் எல்லா
ஐஐடி மற்றும் ஐஐஎம்களிடமும் சமஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்கும் வசதிகளை
உண்டாக்கும்படி கேட்டுக்கொண்டது.23 2014-15-ம் ஆண்டில் அரசின் ஓர் அங்கமான
சமஸ்கிருத பிரசார நிறுவனம் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 270 கோடி ரூபாய் செலவிற்கான
கணக்கை இன்று வரை ஒப்படைக்கவில்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
இருப்பினும் 2015-16-ம் ஆண்டு வரவு செலவுக் கணக்கில் சமஸ்கிருத பிரசார நிறுவனத்திற்கு
மேலும் 740 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.59 சமஸ்கிருதம் அழிந்துவிடும் அபாயத்தில்
உள்ள மொழி. அதனைக் காக்கும் முயற்சிகள் (பள்ளிக்குழந்தைகளுக்குக் கட்டாயமாக்குவது தவிர்த்து)
வரவேற்கப்படவேண்டியதே. ஆனால், சமஸ்கிருதம் போல் அழியும் நிலையிலுள்ள, இப்போது அழிந்து
விட்ட மொழிகளுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன என்பதை அறியத் தேவையான தரவுகள் எவ்வளவு தேடியும்
கிடைக்கவில்லை.
2003 இல் சீதாகந்த் மொஹபத்ரா குழு (Sitakant Mohapatra
Committee) அமைக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதற்கான
மொழிகளைப் பரிந்துரைக்கப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அக்குழு 2004இல் 38 மொழிகளைச்
சேர்க்கச் சொல்லிப் பரிந்துரைத்தது. இன்றுவரை அதற்கான நவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.24
கல்வித்துறை
தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.25
நாம் அனைவரும் தாய்மொழியில்தான் சிந்திக்கிறோம். வீட்டிலும் சமூகத்திலும் பயன்படுத்தப்படுகிற
மொழியில் கற்பதுதான் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு உதவும்.
ஆனால், ஒன்றியத்தின் மொழிக்கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது
குழந்தைகளின் கல்விதான்.
2017இல் வெளிவந்த நியூட்டன் என்கிற இந்திப்படத்தில் ஒரு
காட்சி. நாயகன் பள்ளிச்சிறுவர்களுக்கு இந்தி தெரியாதா எனக் கேட்பார். அதற்குப் பதிலாக
ஆசிரியை, "அவர்களின் பாடப்புத்தகங்கள் இந்தியில் உள்ளன. அவர்களுக்கு கோண்டி மொழி
மட்டுமே தெரியும்" என்பார். இந்த கோண்டி மொழிக்கான செயலி இணையத்தில் கிடைக்கிறது.
ஆனால், அவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அவர்கள் மொழியில் இல்லை. பிறகெப்படி அவர்கள்
பள்ளிக்கோ வாக்களிக்கவோ வருவார்கள்?
இந்திக்கான புதிய வார்த்தைகளை உருவாக்க அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப சொல்லியல் கழகம் (Council for Scientific and Technical Terminology -
CSTT) என்னும் அமைப்பை ஒன்றிய அரசு நிறுவியிருக்கிறது. இது நீதிமன்ற வழிகாட்டுதலின்படி
(பின்னாளில் இது நிதிமன்றத்திற்குள்ளேயே குழப்பத்தை உண்டாக்கும் என யாரும் அறிந்திருக்கவில்லை)
சமஸ்கிருதத்திலிருந்து புதிய வார்த்தைகளைத் தருவிக்கிறது. இதனால் இந்தி படிக்கும் குழந்தைகளே
பாதிக்கப்படுகிறார்கள்.
நீருக்கு இந்தியில் ‘பானி’ என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும்
வார்த்தை. இந்துஸ்தானி மூலம் வந்தது. இதற்குப் பதிலாக ‘ஜல்’ என்கிற வார்த்தையை பாடநூலில்
பயன்படுத்தினால் சரியாகுமா? 17 சமூகத்தில் புழங்குகிற இந்தியும் கற்கும்
இந்தியும் வேறாக இருக்கையில் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
இவ்விதமான மொழிக்கொள்கையால் மலைவாழ் குழந்தைகள் பள்ளிப்படிப்பை
இடையிலேயே நிறுத்துகிறார்கள் என்கிறார் டெல்லிப்பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்.
ஒரிசாவில், இன்றும் 100 மலைவாழ் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தால் 75-80 பேர் எட்டாம்
வகுப்புத் தாண்டுவதற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்.17
2017 ஆம் ஆண்டு ஆட்சிமொழிக்குழுவின் புதிய பரிந்துரைகள்
(அமைச்சர்கள் மற்றும் குடியரசுத்தலைவர் இந்தி தெரிந்திருப்பின் இந்தியில்தான் பேசவேண்டும்
என்பது உட்பட) குடியரசுத்தலைவரால் கையொப்பமிடப்பட்டன. அவற்றுள் ஒன்று,
அறிவியல் ஆய்வு இதர ஆய்வு நிறுவனங்கள் ஏராளமான தொகையைப்
புத்தகங்கள் வாங்கச் செலவிடுகின்றன. இவற்றில் 50% இந்தியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு
மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று ஆணையிட வேண்டும். நூல்கள் வாங்க நிதி ஒதுக்கப்படாத
துறைகளில் அலுவலகத்தின் மொத்தச் செலவில் 1% புத்தகம் வாங்கச் செலவிடப்பட வேண்டும்.
அந்தத் தொகையில் சரிபாதி இந்திப் புத்தகங்களுக்குச் செலவிடப்பட வேண்டும். நூல்கள் வாங்குவதற்கான
தொகையில் 50% அல்லது மொத்த அலுவலகச் செலவில் 1% என்ற இரண்டில் எது அதிகமோ அந்தத் தொகைக்கு
இந்திப் புத்தகங்கள் வாங்கச் செலவிட வேண்டும்.26
இப்படிச் செலவிடப்பட்டு வாங்கப்படும் புத்தகங்கள், இந்தி
பேசாத மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ளவர்களால் பயன்படுத்தப்படுவதே இல்லை
(அகராதிகள் தவிர்த்து - அலுவலர்களின் குழந்தைகளுக்கு இந்தி பயில்விக்க உதவுகின்றன!)
என பதிவேட்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும். (அவற்றைத் துடைத்து வைக்கவும் ஒரு நாள்
ஒதுக்கி அதற்கு இந்தியில் பெயரும் வைத்திருக்கிறார்கள்!) இவற்றால் யாருக்கு என்ன பயன்?
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில்
பேராசிரியர்கள் ஆராய்ச்சி முடிவுகளை தங்கள் நாட்டு ஆய்விதழ்களிலும் வெளியிடுதல் அவசியம்.
அவர்கள் அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும்போது அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதன்மூலம் அந்நாட்டு ஆய்விதழ்களின் தரமும் உயர்கிறது.27 ஆனால், இங்கோ தேசப்பற்றை
அப்படியெல்லாம் ஒருவர் வெளிப்படுத்திவிட முடியாது. அதற்கு எவ்வித ஊக்கத்தொகையோ முன்னுரிமையோ
இல்லை. ஆனால், நீங்கள் இந்தி கற்றுக்கொண்டீர்களென்றால் ஊக்கத்தொகை உண்டு. கர்நாடகாவிலுள்ள
ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் இந்தி பேசும் அலுவலர் கன்னடம் கற்றுக்கொண்டால் அவருக்கு
எவ்வித ஊக்கத்தொகையும் இல்லை.
தேசிய தகுதித்தேர்வுகள் எனும்போது நிலைமை இன்னும் கொடுமை.
தேர்வெனப்படுகையில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சம வாய்ப்பு என்பது
பாடத்திட்ட அளவில் மட்டுமல்லாமல் மொழி அளவிலும் இருத்தல் வேண்டும். ஒருவரை அவருக்கு
வசதியான சூழலில் வைத்து மதிப்பிடல் வேண்டும். ஒருவருக்குத் தாய்மொழியில் வாய்ப்பும்
இன்னொருவருக்கு இரண்டாம்/மூன்றாம் மொழியில் வாய்ப்பும் கொடுப்பது நீதி அல்ல. தேசிய
தகுதித்தேர்வுகளான எய்ம்ஸ், ஐஐடி-ஜேஈஈ, நெட் போன்றவற்றை இந்தி, ஆங்கிலம் தவிர்த்து
ஒருவர் தாய்மொழியில் எழுதவியலாது.2
ஒருவர் கேட்கலாம், சொற்ப நபர்களுக்காக பணம் செலவழித்து
மொழிபெயர்க்க இயலுமா என. நீதிக்கான விலையை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். சிவில்
சர்விஸ் தேர்வுகள் குறைந்தபட்சம் 25 நபர்கள் இருந்தாலே அவர்களுக்கான தாய்மொழியில் எழுத
வாய்ப்பளிக்கும்போது இத்தேர்வுகளும் அளிக்கவேண்டும் அல்லது ஒரே மொழியில் தேர்வு நடத்தப்படல்
வேண்டும். அந்த வகையில் இந்த தேசத்தின் குடிமக்களாகிய
நாம், நிறைகுறைகளைப் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும்.
பிற கண்கள் வழி
ஒருமுறை ராஜஸ்தானிலிருந்து வந்தவருடன் பணியாற்ற நேர்ந்தது.
அவர் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இந்தி அலுவலர் என்னும் பதவியை குறித்து ஆச்சரியப்பட்டார். நான் சொன்னேன்: அது அலுவலகக் காரணங்களுக்காக; அலுவலகப்பணிகளில்
இந்திப் பயன்பாட்டிற்கு உதவுவதற்காக. இது பரவாயில்லை, ரயில் நிலையங்களில் தினம் ஒரு
இந்தி வார்த்தை எழுதிப்போடுவார்கள்; விமான நிலையங்களில் இந்தியில் பேசினால் மகிழ்ச்சி
தரும் என்றெல்லாம் எழுதி வைத்திருப்பார்கள்! 14 நாங்கள் இந்தியர்களாக மாற்றப்பட
வேண்டியவர்கள்! எந்த மொழி கற்கவேண்டுமென்றுகூடச் சுயமாக முடிவெடுக்கத் தெரியாத, எந்த
மொழியில் பேசினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதெல்லாம் அறியாத முட்டாள்களல்லவா நாம்?!
ஜப்பானிலிருந்து வந்தவருடன் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டார்,
இந்தியர்கள் எப்படி வேற்று நாட்டவரை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்கிறீர்கள்? அவர் நான்கைந்து
நாடுகளுக்குப் பயணப்பட்டவர். அந்த அனுபவத்திலிருந்து இந்தக் கேள்வி. பேராசிரியர் கணேஷ்
டேவி இங்கு கை கொடுக்கிறார்.28 பன்முகத்தன்மையை ஆதரிப்பவர்களுக்கு பொறுமை
அதிகமிருக்கும்; இந்தியை தேசியமொழியாக்கவேண்டும் என்பவர்களைப் பாருங்கள் என்கிறார்.9,
29 இங்கு ‘பொறுமை’ என்பதை ‘சகிப்புத்தன்மை’ எனக் கொண்டால், பன்முகத்தன்மையின்
உபபலன்கள் தெளிவாகும்.
சுற்றுலாத்துறை அலுவலகத்தில் ஒருவரைச் சந்தித்தேன். இத்தாலியைத்
தாய்நாடாகக் கொண்டவர்; திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். கேரளப் பல்கலைக்கழகத்தில் பிற
மொழித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். திருவனந்தபுரத்து மக்களின் குணாதிசியங்கள்
இவை இவை எனக் குறிப்பிட்டுச்சொல்லுமளவுக்கு வாழ்வனுபவங்களைப் பெற்றிருந்தார். இந்தியாவின்
பல இடங்களுக்கும் பயணப்பட்டவர். “இந்தியாவின் சொத்தே, மொழி, உணவு, கலாச்சாரம் மற்றும்
வேறுபட்ட காலநிலை என்னும் அதன் பன்முகத்தன்மைதான். அது உணரப்படவேண்டுமென்றால் பயணப்படவேண்டும்!” ஆம்,
பயணப்பட வேண்டும். காந்தி அதைத்தான் செய்தார். பலநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்துகொண்டு
வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் வைத்துக்கொண்டு மதிப்பிடக்கூடாது.
இந்தி இல்லாமல் முன்னேற்றம் இல்லையா?
இந்தி இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை என்பது போன்ற
குரல்களும் கேட்கின்றன. இந்தி தெரிந்தவர் இந்த தேசத்தின் முதல்தரக் குடிமகனாக நிறைய
சலுகைகளை அனுபவிக்கலாம் என்பது உண்மைதான். இவை அனைத்தும் இந்தித்திணிப்பிற்காகச் செய்யப்பட்ட
ஏற்பாடுகளே அன்றி, நீதி அல்ல. ஒரு மொழி மக்களின் வாழ்க்கைக்குள் அதன் லௌகீகப் பயன்பாட்டின்
காரணமாக தாமாகவே வந்தமர வேண்டும்; ஆங்கிலத்தைப்போல. பின்னர் மக்கள் அதைத் தாமாகவே தேடித்
கற்கத்துவங்குவார்கள்.
மக்கள் தொகை, நிலப்பரப்பின் அடிப்படையில் பார்த்தால் வட
இந்தியாவிற்குத்தான் முதலிடம். ஆனால், தென்னிந்தியாவிலிருந்து
மாநிலங்கள் ஈட்டித்தரும் வருமானம் வட இந்திய மாநிலங்களைக்காட்டிலும் அதிகம். நலத்திட்டங்களுக்கு
திரும்பப்பெறும் தொகையோ மிகவும் குறைவு. உதாரணமாக தமிழகம் ஒரு ரூபாயை மத்திய அரசுக்கு
ஈட்டித்தந்து 40 பைசாவை திரும்பப் பெறுகிறது; கேரளம் ஒரு ரூபாயை மத்திய அரசுக்கு ஈட்டித்தந்து
25 பைசாவை திரும்பப் பெறுகிறது. உத்திரப்பிரதேசம் ஒரு ரூபாயை மத்திய அரசுக்கு ஈட்டித்தந்து
1.79 பைசாவை திரும்பப் பெறுகிறது.30
இவை அல்லாமல், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர்
நலன், வறுமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, போன்றவற்றில் இந்தி பேசாத மாநிலங்களே முன்னணியில்
இருக்கின்றன.31
இந்தி முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்றால், இந்தி பேசும்
மாநிலக்களிலிருந்து இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஏன் அதிகளவு இடம்பெயர்வும் நிகழ்கிறது?
32 இந்தி வாழ்க்கைக்கு உதவும் என்கிற தர்க்கத்தின்படி பார்த்தால் வட இந்தியர்கள்தான்
தென்னிந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு மொழியைத் திணிப்பதால் மட்டும் முன்னேற்றம் வந்துவிடுவதில்லை.
மாறாக அடிப்படைக் கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கித்தரல் வேண்டும்.
ஆங்கிலமும் இந்தியும்
அந்நியமொழியான ஆங்கிலத்தை பொதுமொழியாகப் பயன்படுத்துவது
நமக்கு அவமானமில்லையா என்று நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். நவீன யுகத்தில் நமக்குக்
கெடுதல் செய்யாதவர் எவரும் அந்நியர் அல்லர். இவர்களிடம் மொழி விஷயத்தில் மட்டும் வெளிப்படும்
தேசப்பற்று, கையொப்பம், கல்வி, உடை, தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒடி ஒளிந்துகொள்வதேன்?
உலகின் எந்த நாட்டுக்குடிமக்களுக்கும் தேசப்பற்றை மொழிவழி வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம்
இருப்பதாகத் தெரியவில்லை.
ஆங்கிலம் பன்மைத்துவத்தை ஆதரிக்கும் பக்கம் நிற்பதால்தான்
இந்தியைத் திணிப்பவர்கள், ‘ஆங்கிலம் அந்நியமொழி’ எனச்சொல்லி எதிர்க்கிறார்கள். இந்தியாவிற்கு
இந்தியமொழிதான் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்கிற குரலை நாம் நிச்சயம் ஆதரிக்கவேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பெரும்பான்மையினருக்கு இந்தி தெரியாது. நமக்கு சேவை செய்யவும்,
நம் தேவைகளைக் கேட்டுப்பெறவும்தான் அரசாங்கத்தை உருவாக்குகிறோம்; அரசாங்கமென்பது மக்கள்
பிரதிநிதிகளின் கூட்டமைப்பு. பிரதிநிதிகள் மக்கள் வேண்டுகிற, மக்களுக்குப் புரிகிற
மொழியில்தான் பேசவேண்டும். இது கன்னியாகுமரிக் கடற்கரையில் கடலை விற்பவருக்குத் தெரியும்;
ஆனால், திருவனந்தபுரத்தில் இருக்கிற ஒன்றிய அலுவலக முகவர்களுக்குத் தெரியாது. தேசியவாதத்தின் பெயரால் மக்களுக்குப் புரியாத மொழியில்
பேசுவது மடத்தனம். தீர்வாக மக்களுக்கு புரிகிற, அந்தந்த மாநில மொழிகளை அலுவலக மொழிகளாக்கினால்
இப்பிரச்சனை தீரும். அவையும் இந்திய மொழிகள் தானே?!
ஒன்றிய அரசால் நாடெங்கிலும் (தமிழகம் தவிர்த்து) நடத்தப்படும்
598 நவோதயா பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படும்போது அது ஒன்றும் தீண்டத்தகாத மொழி
அல்ல என்று அரசாங்கமே கருதுகிறதெனக் கொள்ளலாம். அதுதான் இந்திய ஒன்றியம்
முழுதும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் பயிற்றுமொழி. அதைப் பொதுத்தொடர்பு மொழியாகக்
கொள்வதில் என்ன தவறு? இந்தி
விஷயத்தில் இவ்வளவு வெறியோடிருப்பவர்கள், தமிழர்களை மொழிவெறி பிடித்தவர்கள் என்பது
எவ்வளவு பெரிய நகைச்சுவை!
ஆங்கிலம் பிரிட்டிஷார் விட்டுச்சென்ற நோய் அல்ல. அதன்மூலம்தான்
நமக்கு நோபல் பரிசொன்று (தாகூர்) கிடைத்தது.33 அதன்முலம்தான் இருவர் (மாதவிக்குட்டியும்34
சச்சிதானந்தனும்35) நோபலுக்குப் பரிந்துரைக்கப்படும் வாய்ப்பைப் பெற்றார்கள்.
ஆங்கிலத்தின் உதவியால்தான் இளநிலை வரை தமிழில் பயின்ற ஒருவர் உலகின் முன்னணி ஆராய்ச்சியாளராக
இருக்கிறார்.36 ஆங்கிலத்தின் உதவியால்தான் ராமேஸ்வரத்தில் மீனவக்குடும்பத்தில்
பிறந்த ஒருவர் இந்த நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். இவர்களைப்போன்றோரே
இந்த தேசத்தின் இந்தி அறியாத மக்களுக்கு காலம் முழுதும் முன்னுதாரணமாக
இருப்பார்கள்!
அதுமட்டுமில்லாமல் ஒவ்வோர் மாநிலத்திலும் ஒவ்வொரு மொழிக்கும்
(இந்தி உட்பட) 37 வெவ்வேறு வட்டார வழக்குகள் இருக்கையில் ‘ஒரு தேசம் - ஒரு
மொழி’ என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.
வடக்கிலிருந்து எழும் குரல்கள்
எனக்குத் தெரிந்து வரலாற்றாசிரியர் எவரும் ‘ஒரு தேசம்
- ஒரு மொழி’ கொள்கையை ஆதரிப்பவர் இல்லை.
அறுபதுகளில் இந்தி ஒரு வளர்பிள்ளை. அதற்கும்முன் கிழக்கிந்தியக்
கம்பெனி வெளியிட்ட நோட்டுகளில் அச்சிடப்படுமளவுக்குக் கூட அது மக்களிடம் புழக்கத்தில்
இல்லை. 1963 மே-இல் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அண்ணா, ஆங்கிலத்தையும் அலுவலக
மொழியாகத் தொடர வேண்டும், சட்டப்பிரிவு 343 இல் உள்ள ‘may’ என்கிற வார்தைக்குப் பதில்
‘shall’ என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.1
உரையை முடிக்கச் சொல்லி மணி அடித்துவிட்டது. அவையில் குரல்கள் எழுகின்றன, மேசைகள் தட்டப்படுகின்றன;
அவருக்கு நேரம் கொடுக்கப்பட்ட வேண்டும் என்கிற குரல்கள் அரங்கெங்கும் ஒலிக்கின்றது.
அங்கு ஒலிக்கும் சப்தம்தான் இந்திய ஒன்றியத்திலுள்ள மாநிலங்களின் சப்தம். அது 2018இல்
திரும்பவும் ஒலித்தது. இரண்டு நிமிடத்திற்கும்
குறைவான Shashi Tharoor's Brilliant Reply to Hindi Imposition! என்கிற காணொளியை
(youtube) கட்டாயம் பார்த்துவிடுங்கள். ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியை தொடர்புமொழியாக
அறிவிக்கும் முயற்சிக்கு (அவ்வாறு ஆக்கப்பட்டால் அதற்கு இந்திய ஒன்றியம் செலவிடவேண்டிய
தொகை ஆண்டுக்கு 267 கோடி ரூபாய்) எதிராக வரலாற்றாசிரியர் சசி தரூர் எழுப்பிய கேள்விகள்
அவை. பதிவின் இறுதியில் ஒலிக்கும் குரல்களும் கை தட்டல்களும் இந்தி பேசாத மக்களுடையவை.
இது தொடர்பாக கட்டுரைகளும், 38, 39, 40 திரைப்படமும்,
பிற மாநில அரசுகளின் நடவடிக்கைகளும் அவ்வப்போது செய்தியாகின்றன. அவற்றைப் பொருத்தமான
இடங்களில் காணலாம்.
மொழி விஷயத்தில் மாநிலங்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றன?
மொழியைக் கையாளும் விஷயத்தில் ஒன்றிய அரசு மாநில அரசுகளிடம்
பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவையனைத்தும்
கடந்த 2018இல் நிகழ்ந்தவை.
யூனெஸ்கோவின் 2019க்கான உலகக் கல்வி அறிக்கை இவ்வாண்டு
நவம்பரில் வெளியாகியது. அது இந்தியாவில் இடம்பெயர்வால்
குழந்தைகளின் கல்வி எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அதற்காக மாநில அரசுகள்
என்ன செய்தன என்பதையும் பட்டியலிட்டிருக்கிறது. அவ்வறிக்கை இந்திய ஒன்றித்தில் பிற
மாநிலக் குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே படப்புத்தகங்கள் அச்சிடும் ஒரே மாநிலம்
தமிழகம் என்கிறது.41
நவம்பர் 24, 2018 இல் தி இந்து ஆங்கிலப்பதிப்பின் (திருவனந்தபுரம்)
முதல் பக்கத்தில் ஒரு செய்தி. ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் 21 பழங்குடி மொழிகளுக்கான
அகராதியை வெளியிட்டார் என்பதே அது.42
பத்தாம் வகுப்புவரை மாநில மொழிகளை கேரளமும் வங்கமும் கட்டாயமாக்கியிருக்கின்றன.43,
44
வங்க அரசு வருடத்திற்கு 120 வாங்க மொழி திரைக்காட்சிகளை
கட்டாயம் இயக்கவேண்டுமென ஆணை பிறப்பித்திருக்கிறது.45
கேரளா அரசு மாநிலத்திற்கான வாழ்த்துப்பாடலை தேர்ந்தெடுப்பதற்கான
வேலைகளைத் துவங்கியிருக்கிறது.46
பெங்களுருவில் மெட்ரோ இரயில் சேவை நிறுவனம் எதிர்ப்புகள்
தொடங்கவே இந்தி அறிவிப்புப்பலகைகளை நீக்கியது.47
பல்வேறு கட்ட வற்புறுத்தலுக்குப் பிறகு 2018இன் துவக்கத்தில்
தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள 9500 இரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் உள்ளூர் மொழிகளில்
அச்சிடப்படுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.48
கேரள அரசு பிற மாநிலத்தவருக்காக மலையாளம் கற்பிக்கும் முயற்சிகளையும்
உலகெங்கும் மலையாளத்தை அறிமுகப்படுத்தும் பணியையும் துவங்கியிருக்கிறது.49,
50
செவிக்குறைபாடுள்ளவர்களுக்காக சைகை மொழியையும் அலுவலக மொழியாக்கவும்
கோரிக்கைகள் துவங்கியிருக்கின்றன.51 தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைத்து பார்வைக்குறைபாடுள்ளவர்களுக்காக
பிரெய்லியில் அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவந்துள்ளனர்.52 (ஆங்கிலத்தில்
எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு இந்தியைத் தவிர எந்த மொழியிலும் அதிகாரப்பூர்வ
மொழிபெயர்ப்பு இல்லை)
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இந்தியை அலுவல் மொழியாக
உபயோகிக்கும் வழக்கத்தை பஞ்சாப் பல்கலைக்கழகம் கைவிட்டது.53
உரிமைக்குரல்கள் எழத்தொடங்கியதால் ரயில் நிலையங்களைப்போல்
விமான நிலையங்களிலும் அறிவிப்புகள் இனி பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.54
மற்ற நாடுகள் எவ்வாறு நடந்துகொள்கின்றன?
இணையத்தில் தேடினால் மொழிச் சமவுரிமையை ஆதரிக்கும் செயல்பாடுகள்
பல நாடுகளில் இருப்பதைக் காணலாம்.55 சுவிட்சர்லாந்து ஐந்து மொழிகளில் கடவுச்சீட்டை
அச்சிடுகிறது. 74.9% சிங்களர்களைக் கொண்ட இலங்கை மூன்று மொழிகளில் அச்சிடுகிறது. என்றால்,
இந்திய ஒன்றியக் கடவுச்சீட்டை 22 மொழிகளில் அச்சிடவேண்டுமா என்று ஒருவர் கேட்கலாம்.
இல்லை, ஒரு மராட்டியருக்கு மராத்தியிலும், பஞ்சாபிக்கு பஞ்சாபியிலும் அச்சிடுவதில்
என்ன தவறு?
நைஜீரியா போன்ற பல்வேறு மொழிபேசும் மக்களுள்ள நாட்டில்
அலுவலகப் பயன்பாடுகளுக்காக ஆங்கிலம்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் நமக்குப் பிறகு
சுதந்திரம் வாங்கியவர்கள். அவர்களை அடிமைப்படுத்தியவர்களும் ஆங்கிலேயர்களே. அவர்களுக்கு
தெரிந்திருக்கிறது, உலகத்தோடு தொடர்புகொள்ள ஆங்கிலம் அவசியம் என. பல மொழிகள் உள்ள நாட்டில்
பொதுமொழி ஒன்று உபயோகிக்கப்படல் வேண்டும் என. குடிமக்கள் நிறை குறைகளைப் பங்குபோட்டுக்கொள்ளத்தான்
வேண்டும் என. அவர்களுக்கு அந்நியமொழியான ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதால் அவர்களை எந்நாட்டவரைக்காட்டிலும்
குறைந்த தேசப்பற்று உள்ளவர்கள் எனக் கூறுவது அறிவுடைமை ஆகுமா?
சமத்துவத்தின் பாதை
இந்திய ஒன்றியத்தில் மொழிச்சமவுரிமைக்கான குரல்கள் கேட்டுக்கொண்டே
இருக்கின்றன. அழுத்தம் அதிகரிக்கையில் அவை நிறைவேற்றப்படுவதையும் காண்கிறோம். நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் இதற்கான அமைப்புகள் குரல்கொடுத்தவண்ணம் உள்ளன. Bangla
Pokkho, 56 PLE Karnataka, 57 CLEAR, 10 தன்னாட்சித்
தமிழகம்58 என்பன அவற்றுள் சில. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள்
தொடர்பான போராட்டங்களில் இவர்களின் பங்கு மிக அதிகம்.
இவற்றுள் Campaign for Language Equality and
Rights (CLEAR) அமைப்பு கிட்டத்தட்ட 40 இந்திய மொழிகளின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.
தாய்மொழிக்கல்வி, மொழிச்சமவுரிமை, அழியும் நிலையிலுள்ள மொழிகளைக் காத்தல் ஆகியவை இவர்களின்
பிரதான குறிக்கோள்.
நமது பிரச்சினைகள் பெரிது, எனவே கட்டுரையும். இங்கு விவாதிக்கப்பட்டிருப்பவை
அனைத்தும் கடந்த வருடம் நிகழ்ந்தவை. ஒவ்வொன்றும் ஒரு தனிக் கட்டுரையாகுமளவுக்குப் பெரும்
விளைவுகளை உண்டாக்க வல்லவை. ஒவ்வொரு காலையும் இந்தக்கட்டுரையில் சேர்ப்பதற்கான செய்திகள்
வந்துகொண்டே இருக்கின்றன. இவை எழுதியோ, ஓர் அமர்வில் விவாதித்து முடிவெத்துமளவோ சிறிய
பிரச்சினைகள் அல்ல. ஆனால் நாம் எழுதுவதையும் விவாதிப்பதையும் போராடுவதையும் நிறுத்தவே
கூடாது.
குடிமக்கள் தனக்கான அடிப்படை உரிமைகளையும் வாய்ப்புகளையும்
கூடப் போராடித்தான் பெறவேண்டும் என்பது ஒரு தேசத்திற்கு அவமானகரமான விஷயம்.
இவ்வுலகம் இயங்கும் வரை சமத்துவமின்மை இருந்துகொண்டுதான்
இருக்கும். வரலாறு என்பது சமத்துவத்தை நோக்கி நடந்த பாதைகளைத் தவிர
வேறென்ன?!
aகோர்கோ சாட்டர்ஜி
மூளையியல் விஞ்ஞானி. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி. மாசாசுசே பல்கலைக்கழகத்தில் (MIT) மேல்முனைவர்
பட்ட ஆய்வு. கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி.
மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கத்தின் (CLEAR) நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். அரசியல்,
கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதி வருகிறார்.
இவருடைய முதல் புத்தகம் தமிழில் வெளிவந்திருக்கிறது - உனது பேரரசும் எனது மக்களும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு வங்காளி.
bபேராசிரியர்
கணேஷ் என் டேவி
ஆங்கில மொழிப் பிரிவிற்கான முதல் சாகித்ய அகாதமி விருதை,
தன்னுடைய இந்திய ஆங்கில இலக்கிய விமர்சன நூலிற்காக 1993 ஆம் ஆண்டு பெற்றார். அக்டோபர்
2015இல் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதைக் கண்டித்து அதைத் திருப்பி அளித்தார்.
இந்தியாவில் முதல் முறையாக மக்கள் மொழிக்கணக்கெடுப்பை நிகழ்த்தி, 780 இந்திய மொழிகளை
அட்டவணைப்படுத்தினார். மொழிப்பன்மைத்துவத்தைக் காத்தமைக்காக 2011 உலக தாய்மொழி தினத்தில்
லிங்குவாபாக்ஸ் பரிசினை வென்றார். மஹாராஷ்டிராவில் பிறந்த இவர், 2015இல் சுட்டுக்கொல்லப்பட்ட
பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி வழக்கைக் கவனித்துக்கொள்வதற்காக கர்நாடகத்தில் வசிக்கிறார்.
குறிப்புதவிகள்
1. Resisting
the Hindi Menace http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/rajya_resisting_hindi.htm
2. What
It Is Like to Use Neither Hindi Nor English In India https://caravanmagazine.in/vantage/hindi-imposition-india-discrimination
3. Remembering
1965, forgetting 1965, celebrating 1965
4. Peranbu
-Official First Look | Mammootty, Anjali, Sadhana | Ram | Yuvan Shankar Raja
|HD Promo Video
5. CTET
2018 exam will be held in 20 languages: Prakash Javadekar http://timesofindia.indiatimes.com/articleshow/64635681.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
6. ‘Your
job is not to promote Hindi’: Kanyakumari Railway Users’ Association slams
IRCTC https://www.thenewsminute.com/article/your-job-not-promote-hindi-kanyakumari-railway-users-association-slams-irctc-84190
7. Hindi
removed from English version of IRCTC online ticket booking portal
8. Hindi,
not a national language: Court https://www.thehindu.com/news/national/Hindi-not-a-national-language-Court/article16839525.ece
9. Case
filed against Raj Thackeray for insulting Hindi language
11. T.N.
has highest number of Hindi students https://www.thehindu.com/news/cities/chennai/tn-has-highest-number-of-hindi-students/article24787677.ece
15. Silent
and suffering https://www.thehindu.com/opinion/op-ed/silent-and-suffering/article25194296.ece
16. Kakkoos
Documentary Film Official Release | Direction – Divya https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU
17. Kalachuvadu,
Vol 30, Issue 3, March 2018
18. Two
Advertisements and One Message http://sannaloram.blogspot.com/2018/10/two-advertisements-and-one-message.html
20. Getting
the language count right https://www.thehindu.com/opinion/lead/getting-the-language-count-right/article24454570.ece
22. Don’t
add Hindi dialects in Eighth Schedule, say academics https://www.thehindu.com/news/national/Don%E2%80%99t-add-Hindi-dialects-in-Eighth-Schedule-say-academics/article17064058.ece
24. RAJYA
SABHA, UNSTARRED QUESTION NO.2974 http://rajeev.in/?questionasked=mohapatra-committee-on-languages/
25. Impact
of Mother Tongue on Children's Learning Abilities in Early Childhood Classroom,
A. V. Awopetu, Procedia - Social and
Behavioral Sciences, 233, 2016,
58-63.
26. ஆங்கிலத்துக்காகத்
தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா? http://writersamas.blogspot.com/2017/04/blog-post_60.html#more
27. Publishing
with impact https://www.thehindu.com/opinion/op-ed/publishing-with-impact/article25656258.ece
28. மொழிகளின்
மனிதர், அந்திமழை, அக்டோபர் 2018.
30. United
States of South India: Can a southern collective get us a better deal from
Delhi? https://www.thenewsminute.com/article/united-states-south-india-can-southern-collective-get-us-better-deal-delhi-46501?amp
31. Himachal,
Kerala and T.N. top development index https://www.thehindu.com/news/national/himachal-kerala-and-tn-top-development-index/article25801922.ece
32. Hindi’s
migrating footprint: How India’s linguistic landscape is changing https://www.hindustantimes.com/india-news/hindi-s-migrating-footprint-how-india-s-linguistic-landscape-is-changing/story-ssstgK9b2xR9x4srulu6OJ.html
35. Sukumaran
speech | சுகுமாரன் | Poet Atmanam Awards 2017
37. Hindi Nationalism – Alok Rai, Orient Longman Limited
38. How
a Bihari lost his mother tongue to Hindi https://www.livemint.com/Leisure/Nl73WC1JA8d6KVybBycNlM/How-a-Bihari-lost-his-mother-tongue-to-Hindi.html
39. நாங்கள்
இந்தி அல்ல - சூரஜ் பி சிங், உயிர்மை இதழ் 174, பிப்ரவரி 2018.
40. https://twitter.com/mkatju/status/1077874742353248256
41. Literacy
levels in rural India suffer due to migration, finds UNESCO study https://www.thehindu.com/news/national/literacy-levels-in-rural-india-suffer-due-to-migration-finds-unesco-study/article25541258.ece
42. Odisha
now has a lexicon for rare tribal languages https://www.thehindu.com/news/national/odisha-now-has-a-lexicon-for-rare-tribal-languages/article25588109.ece
43. Kerala
Government Makes Malayalam Compulsory In all Schools https://www.outlookindia.com/website/story/kerala-government-makes-malayalam-compulsory-in-all-schools/298507
44. West
Bengal makes Bengali mandatory in schools https://www.thehindu.com/news/national/other-states/bengal-government-makes-bengali-compulsory-in-all-schools-of-state/article18464100.ece
45. Now,
120 Bengali prime-time shows must in a year http://timesofindia.indiatimes.com/articleshow/65825953.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
46. Official
song for State in the making https://www.thehindu.com/news/national/kerala/official-song-for-state-in-the-making/article24232548.ece
47. Hindi
to go off Namma Metro signage https://www.thehindu.com/news/cities/bangalore/hindi-to-go-off-namma-metro-signage/article19432733.ece
48. Train
tickets soon in Malayalam, Tamil https://www.thehindu.com/news/national/kerala/train-tickets-soon-in-malayalam-tamil/article23662116.ece
49. Making
migrants Malayalam literate https://www.thehindu.com/news/national/kerala/making-migrants-malayalam-literate/article19603844.ece
50. Campaign
to promote Malayalam https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/campaign-to-promote-malayalam/article25186219.ece
51. Make
sign language official: Minister http://timesofindia.indiatimes.com/articleshow/65927254.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
52. Statute
in Braille to mark Constitution Day https://www.thehindu.com/news/national/statute-in-braille-to-mark-constitution-day/article25580602.ece
53. Panjab
University senate rejects MHRD directive on use of 'Rajbhasha' in offices https://timesofindia.indiatimes.com/city/chandigarh/panjab-university-senate-rejects-mhrd-directive-on-use-of-rajbhasha-in-offices/articleshow/66495529.cms
54. Civil
Aviation Ministry asks airports to make public announcements in local language
too https://www.thehindu.com/news/national/civil-aviation-ministry-asks-airports-to-make-public-announcements-in-local-language-too/article25834422.ece
55. https://en.wikipedia.org/wiki/Bilingual_sign
59. தமிழர் என்ற அரசியல் அடையாளம் - சுகுணா
திவாகர், விகடன் தடம், ஜீலை 2016.
No comments:
Post a Comment