Thursday, August 31, 2023

தாதிகளின் கைகள்

மருத்துவமனையில் கிடக்கிற  

என் தோழியை நினைத்துக் கொண்டிருந்தேன்

முன்போர்நாள் நள்ளிரவில்

அங்குதான் நானும் கிடந்தேன்


முகம் மறைத்த தாதி ஒருத்தி 

பெயர் நினைவிலில்லை

கேட்டது எதுவும் தங்கவில்லை

தொட்ட இடத்தில் ரேகைகள் ஒட்டியிருக்கிறது 

பட்டாம்பூச்சியின் சிறகை 

நரம்பில் ஏற்றியதும்

வலிக்கிறதா எனக் கேட்டதும் 

கூடவே தங்கிவிட்டது 


பின்போர்நாள் பல் மருத்துவமனையில்... 

அது வேறொரு உலகம் 

அங்கு எதுவும் கேட்பதில்லை 

இருவர் மூச்சுவிடும் சப்தத்தைத் தவிர 

அங்கு எதுவுமே நடப்பதில்லை 

ஒருவர் இன்னொருவரின் கைக்குள் தன்னை 

முழுமையாக ஒப்படைப்பதைத் தவிர 

அங்கொருத்தி என் முகத்தைப் 

பாந்தமாகக் கைகளில் ஏந்தினாள் 

என் கறைகளைப் புனித நீரால் கழுவினாள் 


நோய்மையின் மீட்சி 

மருந்துகளில் அல்ல 

தாதிகளின் கரங்களில்  

இனி 

உடல் என்னைக் கைவிடுகையில் 

மருத்துவமனைக் கட்டிலில் கிடப்பேன்

காதலிகள் என்னைக் கைவிடுகையில் 

பல் மருத்துவமனைக் கட்டிலில் கிடப்பேன்

தாதிகளின் கைகளுள் கட்டுண்டு கிடப்பேன்.


No comments:

Post a Comment