Wednesday, January 12, 2022

சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்

வேளச்சேரி பாலத்தின் அடியில் குடும்பத்துடன் வசிப்பவர்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். கொசு, எலி, பாலியல் தொல்லை, நுரையீரலைப் பாதிக்கும் நுண்துகள்கள், ஓயாத இரைச்சல் தரும் உறக்கமின்மை, அஃதீனும் மன அழுத்தம் இவற்றுடன் அவர்களின் வசிப்பிடத்தில் தெரு நாய்களும் தஞ்சம் புகுந்துள்ளன. அரசால் நடத்தப்படும் உறைவிடங்கள் ஆண்கள், பெண்கள் எனத் தனித்திருப்பவர்களுக்காக இயங்குகையில், அங்கு குடும்பமாகச் செல்ல இயலாதவர்கள் இப்படி பொதுச் சமூகம் எளிதில் அணுகும் இடத்தில் வசிப்பதுதான் அவர்களுக்கான அன்றாட வேலையைப் பெற்றுத்தருகிறது. பெரும்பாலும் கட்டிட வேலைக்கு செல்லும் இவர்களில் ஒருவராகத்தான் அப்பெண்மணியைக் கண்டேன். வேலை விவரணைகளுக்குப் பின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு நாணமெழ, உதடுகள் மடக்கி இளங்கலை ஆங்கிலமும் கல்வியியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருப்பதாகச் சொல்லி முடித்தார். ஆசிரியப் பணிக்கு செல்லலாமே என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்: ஆசிரியராகச் செல்கையில் ஒரு நாள் சம்பளம் 160, கட்டிடப்பணிக்கு 700. இத்தகு வாழ்வில் ஈட்டுவது தன் மகனுக்காக எனச் சொன்னார். பதினாறு வருடப் படிப்பிற்குப்பின் கூலிவேலைக்குச் செல்லும் ஓர் அன்னையின் மனம் தன் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பும்போது என்னவாக இருக்கும்? கல்வி ஒன்றுதான் நம்மை உயர்த்தும் என் நம்பும் ஒரு சமூகத்தில் அதற்கான பாதைகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா? ஒரு மகிழ்ச்சியான வகுப்பறையும், கற்றல்-கற்பித்தல் செயல்பாடும் ஆசிரியருக்கான கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதிலிருந்து துவங்குகிறன. 

சில மாதங்களுக்கு முன், லயோலா கல்லூரி தொழிற்கல்வி மைய இயக்குனர் பி அருண் கண்ணன் மற்றும் எம்ஐடி முனைவர் பட்ட ஆய்வாளர் கிஷோர்குமார் சூர்யபிரகாஷ் இணைந்து நடத்திய ஆய்வில் பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இதுபோன்ற உழைப்புச் சுரண்டல் தனியார் கல்வி நிறுவனங்களில் பரவி இருப்பதை உறுதி செய்தது. சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களிடம் நடத்திய ஆய்வில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்ததைக் காட்டிலும் குறைவான ஊதியமே பெற்று வருவதை அறிய முடிந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 72 சதவீதம் பேரின் மாத ஊதியம் 25 ஆயிரம் ரூபாய்க்கு கீழ். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, சம்பள உயர்வு, முறையான விடுப்பு, தொழிலாளர் நலத் திட்ட உதவிகள் என எந்த அடிப்படை உரிமையும் இல்லை. பெருந்தொற்றால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டபோது வேலை இழப்பிற்கும் ஊதியக்குறைவிற்கும் ஆளான இவர்கள், உடல் உழைப்பைக் கோரும் கட்டிட, உணவு விநியோகிக்கும் வேலைகள் உட்பட்ட கூலி வேலைகளுக்குச் சென்றனர். இவர்களில் பனை ஏறும் தொழிலுக்குச் சென்றவறொருவர் உயிரிழந்தார். கட்டுரையாளர்களின் கோரிக்கை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (முறைப்படுத்தும்) சட்டம் - 1976 திருத்தி அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென இருந்தது.

குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் இல்லாத ஒரு நாட்டில் இத்தகைய இடையீட்டிற்கு ஒரு அரசிற்குத் தயக்கங்கள் இருக்கலாம். நடைமுறையில் ஏனைய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் இருக்கும் நிலையில் அத்தகைய அமைப்பு ஏதும் இல்லாத தனியார் கல்வி நிறுவனப் பணியாளர்களுக்கு அரசின் இத்தகைய இடையீடு அவசியமானதும் கூட. அதைத்தான் கேரள அரசு செய்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் கேரள சட்டப்பேரவை கொண்டு வந்த, தனியார் கல்லூரிப் பணியாளர் சட்டத் திருத்தத்தின் (Kerala Self Financing College Teaching and Non-teaching Employees (Appointment and Conditions of Service) Ordinance, 2021 (38 of 2021).) மூன்றே பக்கங்கள் அவர்களுக்கு நிம்மதியான பணிச்சூழலை உறுதி செய்கின்றன. அவற்றில் சில:

1.      காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு நேர்காணலுக்குப் பின் தரவரிசை வெளியிடப்பட வேண்டும். தெரிவு செய்தவர்களைப் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவித்த பின் பணியமர்த்தப்படல் வேண்டும்

2.      பணியமர்த்தல் மற்றும் பணி ஓய்விற்கான வயது வரம்பினை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்

3.      பணியாளர்கள் சேர்ப்பு, வருகைப்பதிவு, அவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கான பதிவேடுகள் வைக்கப்படவேண்டும். அவை குறித்த தகவல்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்

4.      பணி, பணி மூப்பு, பணி உயர்வு, பணிக் காலம், ஊதியம், ஊதிய உயர்வு, கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் குறித்த தகவல்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதனுடன் தொழிலாளர் நலுனுக்கென வேறேதும் அம்சங்கள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்.  

5.      வேலை நேரம் மற்றும் நாட்கள், சம்பளத்துடன்கூடிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை அரசுக் கல்லூரி ஊழியர்களுக்கு உள்ளதைப் போலவே தொடரவேண்டும்

6.      ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் பயனாளராகச் சேர்க்கப்படல் வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்பட வேண்டும்

7.      பணியாளர்கள் மீதான ஒழுங்கு மீறல் நடவடிக்கைகளை அந்தந்த கல்வி நிறுவனங்களே எடுக்கலாம். பணியாளர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தால் பல்கலைக்கழகத்தில் மேல்முறையீடு செய்யலாம்

8.      பணியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வரையறுக்கப்பட வேண்டும். நல்நோக்கத்துடன் வரையறுக்கப்படும் இவ்விதிகளுக்கு எதிராக பல்கலைக்கழகத் துணைவேந்தர்மீதோ, அலுவலர்கள்மீதோ எவ்விதச் சட்ட முன்னகர்வும் ஊக்குவிக்கப்படக் கூடாது

9.      கல்வி நிறுவனங்கள் கீழ்க்கண்ட அமைப்புகளை நிறுவ வேண்டும்

·        கல்லூரி நிலைக்குழு

·        அக தர நிர்ணயக் குழு

·        பெற்றோர் ஆசிரியர் கழகம்

·        மாணவர் குறைதீர்ப்பு மையம்

·        பாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் விசாரணை  மையம் 

இவற்றுடன் வேறு சிலவற்றைச் சேர்ப்பதைக் குறித்தும் சிந்திக்கலாம்: பணிச்சேர்க்கையின்போது ஒப்படைக்கப்படவேண்டிய ஆவணங்கள், வேற்றிட நேர்முகத்தேர்வுகளுக்குச் செல்லும்போது தடையில்லாச் சான்று தேவையாயிருப்பின் அதைப்பெறுவதற்கான வழிமுறைகள், இடைக்காலத்தில் பணி விடுவிப்பு வேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகள் என. இவற்றை மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், தனியார் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆரோக்கியமான கல்விச்சூழல்தான் கற்றல்- கற்பித்தல் அனுபவத்தை இனிமையாக்கும்

சான்றுகள்

1.      பாலத்தினடியில் வசிப்பவர்களைப் பற்றிய ஆவணப்படம் Asiaville Tamil - https://www.youtube.com/watch?v=vlEggVTc9yI 

2.      அருண் கண்ணன், கிஷோர்குமார் சூர்யபிரகாஷ் கட்டுரை - https://www.thehindu.com/opinion/op-ed/weighing-down-the-private-unaided-college-teacher/article35571298.ece

தமிழ் வடிவம் - https://sannaloram.blogspot.com/2021/08/blog-post.html 

3.      கேரள சட்ட வரைவு - https://prsindia.org/files/bills_acts/bills_states/kerala/2021/Ordinance%2038%20of%202021%20Kerala.pdf


(உயிர் எழுத்து ஜனவரி 2022)


Wednesday, January 5, 2022

மும்மொழிக்கொள்கை - விவாதம்

 மும்மொழி கற்றல்  - எழுத்தாளர் ஜெயமோகன் 

மும்மொழி- கடிதம் - எழுத்தாளர் ஜெயமோகன் 

மேற்கண்ட கடிதத்திற்கு என் எதிர்வினை 

அன்புள்ள ஜெ,

வணக்கம். மும்மொழிக்கொள்கை குறித்த சாய் மகேஷ் அவர்களின் கடிதம் தொடர்பாக சிலவற்றை தெளிவுபடுத்தலாமென எண்ணுகிறேன்.

1. 484 பக்க தேசிய கல்விக்கொள்கை வரைவானது, கல்வியியல் தொடர்பான பல முக்கிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரும்பணியை பலரை ஒருங்கிணைத்து செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவர்களனைவருக்கும் இக்கடிதம்வழி முதல் நன்றி.

https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf

2. புதிய கல்விக்கொள்கை வரைவு வெளிவருவதற்கு முன்பே இந்தித்திணிப்பிற்கான சமிக்கைகள் வெளிவரத் துவங்கின. ஜனவரியில் புதிய கல்விக்கொள்கை இந்தியைக் கட்டாயமாக்க எந்தப் பிரிவையும் கொண்டிருக்கவில்லை என அப்போதைய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்வந்து மறுப்புத் தெரிவித்தார். http://www.newindianexpress.com/nation/2019/jan/10/no-plans-to-make-hindi-compulsory-javadekar-1923243.html 

உண்மை என்னவென்றால், ஜனவரியில் மறுப்புத்தெரிவிக்கும் முன்பே இந்தியைக் கட்டாயமாக்கும் அறிக்கை அவர்முன் டிசம்பர் 15இலேயே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரமாக, சமர்ப்பித்த குழுவின் கையொப்பமிட்ட பக்கம் அறிக்கையிலேயே உள்ளது.  https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Draft_NEP_2019_EN_Revised.pdf

3. "P2.3. Workbooks on language and mathematics: Every child in Grades 1-5 will have a workbook for languages and mathematics in addition to the school textbook. This will ensure that grade-appropriate, creative, and engaging practice opportunities are available for each child to work at his/her own pace. This would supplement the textbook, build on lessons with a variety of exercises/examples, save teachers’ time, help teachers identify what each child can do and, therefore, help individualise instruction." அவர் எடுத்துக்காட்டிய பகுதிக்கு மாறாக இந்தப் பிரிவு, ஒன்றாம் வகுப்பிலிருந்தே எழுதப்பயில பயிற்சிப் புத்தகங்கள், கணக்குப் பயிற்சிப்புத்தகங்கள் வழங்கப்படும் என்கிறது. அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்க எல்லாப் பெற்றோராலும் இயலுமா? அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே?!

4. எதற்கு மூன்று மொழிகள்? வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா?

5. தெரிந்தோ தெரியாமலோ 'இந்தி நம் தேசிய மொழி' என்கிற பொய்யை பெரும்பான்மையினர் நம்பத்துவங்கிவிட்டோம். இந்தி தெரிந்தால் அனுகூலம் என்பதும் உண்மையே. இன்றும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கல்வி, இராணுவத் தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை உள்ளதை நாம் அறிவோம். ஐஐடி தேர்வுகளில் குஜராத்தியை மூன்றாம் மொழியாகப் புகுத்தியதன் பின்னுள்ள அரசியல் நமக்குத் தெரியாமலில்லை. இதெல்லாம் நீதி அல்ல. அதனால், பெரும்பான்மையினர் மூன்றாம் மொழியாக இந்தியைத்தான் தேர்ந்தெடுப்பர். அடிப்படையில், எந்த மொழியை கற்கவேண்டுமென்பதை அரசு முடிவெடுக்கக் கூடாது. அதன்முலம் நம் அரசியல் அதிகாரம் பறிக்கப்படும். இந்திய ஒன்றியத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ன உரிமைகளை அனுபவிக்கிறாரோ, அதே உரிமையை இந்தி பேசாத ஒருவரும் தன் தாய்மொழியைக்  கொண்டு  அனுபவித்தால்தான் அது சமத்துவம். https://ta.quora.com/inti-moliyaik-kattayamakkinal-tamil-moli-aliyuma/answers/147886132?__nsrc__=4&__snid3__=5320432183

6. போகிற போக்கில் சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றெல்லாம் அடித்துவிடுகிறார்கள். "P4.5.14 Considering the special importance of Sanskrit to the growth and development of Indian languages, and its unique contribution to knowledge development in as well as the cultural unity of the country, facilities for the study of Sanskrit, its scientific nature, and including samplings of diverse ancient and medieval writings in Sanskrit from a diverse set of authors (e.g. the plays of Kalidasa and Bhasa), will be made widely available in schools and higher educational institutions." 

7. இடைநிற்றல் அதிகரித்திருப்பதால் பிரஜ், போஜ்புரி,அவதி, பன்டேல்கந்தி மொழிகளில் அவர்கள் புத்தகங்களை அச்சிடுகிறார்கள். சில நாட்களுக்குமுன்பு உத்திரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் பலர் இந்தியிலேயே தோற்றார்கள் என்பதை வாசித்திருப்பீர்கள். அதுவும் ஒரு காரணம். https://www.thehindu.com/education/schools/hindi-school-books-in-uttar-pradesh-now-available-in-braj-bhojpuri-bundelkhandi-and-awadhi/article29397833.ece

 8. தமிழகம் போராடியதால்தான் அறிக்கை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை சுருக்கப்பட்ட அறிக்கை என்கிறார்கள். அதாவது 484 பக்கங்களை 80க்கும் குறைவான பக்கங்களில் சுருக்கியிருக்கிறார்கள். சில மொழிகளில் அது 44 பக்கம்தான் இருக்கிறது. https://mhrd.gov.in/relevant-documents

தமிழகத்தில்தான் கல்வி குறித்த விவாதத்திலும் போராட்டத்திலும் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்தின் தலைநகரில் ஒரு கூட்டம் நடந்ததாகவே எனக்குத் தெரியும். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. தமிழகம் பெருமை கொள்ள வேண்டும்.

9. தற்போது, உதவிப்பேராசிரியர் பணிக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு நிறுத்தி வைத்திருக்கிறது. அவர்கள் பின்பற்றப்போகும் தேர்வுமுறை இந்திய ஒன்றியத்தில் எங்கும் இல்லாதது. வேறெந்த மாநிலத்திலாவது இப்படிப்பட்ட அறிக்கை வெளிவந்திருந்தால் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அதற்கான கவலை நம் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இல்லை. தமிழகம் வெட்கப்பட வேண்டும்.

10. மும்மொழி குறித்த உங்களின் கட்டுரையும், அதே தினத்தில் வெளிவந்த செல்வேந்திரனின் மொக்கை கட்டுரையும் ஒட்டுமொத்த சமூகத்தையே 'இவ்வளவு கீழிருக்கிறாய் நீ' எனக்கூறி முகத்தில் உமிழ்வபை. உங்கள் இருவருக்கும் முத்தங்கள் நூறு.

11. வரைவு குறித்த என்னுடைய சில குறிப்புகள்:

https://sannaloram.blogspot.com/2019/06/blog-post_24.html

https://sannaloram.blogspot.com/2019/06/what-national-education-policy-draft.html

நன்றி.

Sep 28, 2019, 7:34 PM


சாய் மகேஷின் எதிர்வினை 

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு

இதற்கான என் பதில் 

அன்புள்ள ஜெ,

புதிய கல்விக் கொள்கை மீதான விவாதங்களின் சூடு ஆறிய இந்த நேரத்தில் சாய் மகேஷ் அவர்களின் எதிர்வினை https://www.jeyamohan.in/127827#.XdzE_ugzZPY குறித்து சிலவற்றைச் சொல்லலாமென நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதால் எனக்கும் கற்க எதாவது கிடைக்கிறது.

புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிகழப்போவதாக அறிந்தேன். நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற அரசின் முடிவுகள் குறித்த விவாதங்கள் இந்த நேரத்தில் மீண்டும் இத்தளத்தில் முன்னுக்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  கடந்த ஆறு மாதங்களில் காலச்சுவட்டில் வந்த கல்வி தொடர்பான கட்டுரைகளை யாரும் வாசிப்பார்களெனில் கூடுதல் மகிழ்ச்சி.

இனி உணர்ச்சிகர ஊசலாட்டம்.

1. மறுப்புக்கு மறுப்புக் கடிதம் படித்தபின் 'தமிழில் தேசிய கல்விக் கொள்கை' என கூகுளில் தேடினேன். நான்  மேற்கோள்காட்டிய மொழிபெயர்ப்பின் சுட்டி ஏழாவதாக வந்தது. இம்மொழிபெயர்ப்புக்கு வெளியீட்டுக் கூட்டமே நடத்தினார்கள். யூடியூபில் புதிய கல்விக் கொள்கை எனத் தேடினால் மாநாடுகள், போராட்டங்கள், கல்வியாளர்கள் வசந்திதேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் கருணானந்தன் ஆகியோரின் காணொளிகள் கிடைக்கின்றன. இங்கு எதுதான் அதிகம் படிக்கப்படுகிறது? அதிகம் பகிரவோ, படிக்கவோ இல்லையென்றாலும் புள்ளிவிவரங்களுக்கும், அறிக்கையை படித்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் நான் முடிச்சிட மாட்டேன்.

2. நண்பர் எதைப் 'பரவலாக்கம்' எனச் சொல்லிக் கடக்கிறாரோ, அதைத்தான் நான் திணிப்பு முயற்சி என்கிறேன். அது அவ்வளவு எளிதில் கடந்து போகக்கூடியதல்ல எனவும் எண்ணுகிறேன். திரும்பிப் பார்க்கையில், புதிய கல்விக்கொள்கையில் இந்தியைக் கட்டாயமாக்கும் விதிகளே இல்லை என அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் சொன்னது பொய் அல்லவா? ஒரு அரசுப் பிரதிநிதியின் வாக்கின் சத்தியம் இவ்வளவுதானா? (பார்க்க : முதல் மறுப்புக் கடிதம் , 2 ஆம் குறிப்பு) 

மற்றபடி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் செய்த தவறுகளை பட்டியலிட்டு சமஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் http://writersamas.blogspot.com/2017/04/blog-post_60.html#more . அதை என்னுடைய கட்டுரையொன்றில் மேற்கோள் காட்டியுமிருக்கிறேன் https://sannaloram.blogspot.com/2019/04/blog-post.html . இதைப் 'பொதுவான மத்திய அரசின் போக்கு' எனக் கடந்து செல்லும் பெருந்தன்மை எமக்கு இல்லை.

ஒரு கொள்கையைப் பொதுவில் வைத்துக் கருத்துக்கேட்கையில் அதனைப் பாராட்டுவதும் குறைகளைப் பட்டியலிடுவதும் தனிநபர் அல்லது அக்குழுவின் பார்வையைப் பொறுத்தது. எதுவாயினும் அதற்கு முகங்கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், பாராட்டுகளின் பயன் என்ன?  இந்து ஆங்கிலப் பதிப்பில் பாராட்டுக்கட்டுரைகளே அதிகம் வந்தன. இந்து தமிழ் இருபக்கமிருந்தும் நடுப்பக்கக் கட்டுரைகளைக் கொண்டுவந்தது. 

கருத்துக்கேட்பிற்கு அளித்த கால அவகாசம் என்ன? முதலில் முப்பது நாட்கள் மட்டும் கொடுத்தார்கள்; கோயம்புத்தூரில் மூடிய கதவிற்குள் சொற்ப நபர்களை வைத்துக் கூட்டம் நடத்தினார்கள். காலம் நீட்டிக்க வேண்டுமெனவும் பிராந்திய மொழிகளில் வெளிவிட வேண்டுமெனவும் தமிழகத்தில் போராட்டங்கள் நிகழ்ந்தன. அவை நியாயமானவை இல்லையா? ஒரு கொள்கை வெளியிடுவோர் கால அளவு, மொழிப்பிரச்சினைகளையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா? 

இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கருத்துக்கேட்டால் விமர்ச்சிக்கத்தான் செய்வார்கள். நண்பரையே பாருங்கள், முதலில் முடியாதென மறுத்தாலும் மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டிருக்க வேண்டுமென்கிறார். ஒரு கூட்டாட்சி அமைப்பில் அதைத்தானே செய்ய வேண்டும்?! அதுதானே சமத்துவப் பார்வை?

//மத்திய அரசு வெளியிடும் ஒவ்வொரு அறிக்கை, கோப்புகளையும் 22 மொழிகளில் வெளியிட்டு மொழிபெயர்ப்புக்கும் பொறுப்பேற்பது நடக்காத வேலை. மொழிபெயர்ப்பு பொறுப்பை மாநில அரசுகளிடம் கொடுத்து உரிய கால அவகாசம் கொடுத்து அவை தயாரானவுடன் ஒன்றாக வெளியிடலாம்.//

3. வரைவு அறிக்கையும் நண்பரும் 'மொழிகள்' எனப் பன்மையில் குறிப்பிடும்போது, முதல் வகுப்பிலிருந்தே பயிற்சிப்புத்தகங்கள் மும்மொழிகளுக்கும்தான் என எண்ணத் தோன்றுகிறது. நண்பர் விளக்கும்போது புரிந்துகொள்கிறேன். இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். அதைத் கவனிக்கத் தவறியிருக்கிறேன்.

//மேலும், அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்க எல்லாப் பெற்றோராலும் இயலுமா? அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே?!  என்கிறார்.

இது என்ன மாதிரியான வாதம் எனப் புரியவில்லை. எனில், படிக்காத அல்லது ஆங்கிலம் தெரியாத பெற்றோர் எனில், இருமொழிக் கொள்கை உள்ள பள்ளிகளில் கூட படிக்க வைக்க முடியாதே!//

களநிலவரத்தைப் பார்த்துவிட்டு இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன். நண்பரே சொல்கிறார், தமிழ் தெரியாமல் எட்டாம் வகுப்பைக் கடக்கிறார்கள் என்று. தமிழகத்தில் நிலவும் இருமொழிக்கொள்கையே தோல்வி என்கிறார் பள்ளி ஆசிரியரும், கவியுமாகிய சுகிர்தராணி. பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு தமிழும் ஆங்கிலமும் சரளமாக வரவில்லை. ஒரு குழந்தையின் கற்றலுக்கு பள்ளிச்சுழல் மட்டும் போதாது. அன்றாட வாழ்வில் ஆங்கிலம் அளவுக்கு சம்பந்தமில்லாத பிறமொழி ஒன்றை ஏன் பிள்ளைகளிடம் திணிக்க வேண்டும்? கற்றலில் வீடும், சுற்றமும் பெரும்பங்கு வகிக்கின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்வோர் உள்ள வீடுகளைப் பாருங்கள். அவர்கள் தனிப்பயிற்சி நிலையங்களை நாடவேண்டுமெனெத் தோன்றவில்லையா? அது குடும்பத்தின் மீது சுமத்தவிருக்கும் நிதிச்சுமை என்ன?

4. //எதற்கு மூன்று மொழிகள்? வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா?//

உடன் பயிலும் நண்பர் நைஜீரியர். 520 மொழிகளைக் கொண்ட நாடு என்கிறார்; அவற்றுள் பெரும்பான்மையினர் பேசும் மொழிகள் மூன்று. பள்ளிகளில் மாநில மொழியும் பிற பாடங்கள் ஆங்கிலத்திலும் பயிற்றுவிக்கப்படுவதாகக் கூறுகிறார். நிறைய மொழிகள் கற்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நமக்கு ஆய்வுகள் வேண்டும். ஆய்வுகளிருந்தாலும் அவை தனிமனிதத் தெரிவுகளுக்கு விடப்படவேண்டும். பள்ளிக்கூடங்கள் சோதனைச்சாலைகள் அல்ல.

பல மொழிகள் கற்பதால் கிடைக்கும் பயன்கள் யாருக்கும் தெரியாமலில்லை. கேரளத்தில் மும்மொழிக் கொள்கை உண்டு; இந்தி படிக்கத் தெரிந்தவர்கள். ஆனாலும் கல்வி நிலைய நூலகத்தில் இந்தி புத்தகங்கள் காற்று வாங்குகின்றன. நடைமுறையில் அவையெல்லாம் தனிமனிதரின் ஆர்வம் பொறுத்தது. நான் மூன்றாண்டுகளாகத் திருவனந்தபுரத்தில் வசிக்கிறேன். இலக்கியம் வழியாகவும் அனுபவம் வழியாகவும் சுகுமாரன் அளவிற்கோ, சாம்ராஜ், சமஸ் அளவிற்கோ இம்மண்ணை உள்வாங்கியிருக்கிறேனா என்றால் இல்லை. இங்கேயே இடம்பெயர்ந்தபின்பும் மலையாளம் எழுதப் படிக்கக் கற்காதவர்கள் உண்டு. அவர்களுக்கு மலையாளம் தேவையாகத் தோன்றவில்லை. அவர்கள் பால் சாகரியாவையும் உண்ணி ஆரையும் வாசிக்கவில்லை என்று சொல்லி நாம் வருந்திக்கொண்டிருக்க இயலுமா? எல்லா மொழியிலும் வளங்கள் உள்ளன. இயற்றப்பட்ட மொழியிலேயே படிப்பதில் இன்பம் இருக்கலாம். தேவையென்றால் அதைத் தேடி வருவார்கள், ஜி யு போப் போல, டேவிட் ஷுல்மன் போல.

5. குஜராத் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஐஐடி நுழைவுத்தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தோடு குஜராத்தியிலும்  நடத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்கள் கேட்டால் செய்வார்கள். ஆனால், யாரையும் கேட்காமலேயே தபால் துறைத்தேர்வில் மற்ற மொழிகளை நீக்குவார்கள். இதன் பெயர் சம வாய்ப்பு; குடிமக்களை சமமாக நடத்துதல்.

6. சமஸ்கிருதம் பற்றிய குறிப்பை தமிழ்ப் பார்வையில் இருந்துதான் எழுதினேன். இப்போதும் அது தமிழின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எவ்வகையில் உதவுமெனத் தெரியவில்லை. நண்பர் மேற்கோள் காட்டியவற்றை வாசிக்கிறேன்.

சமஸ்க்ருதத்திற்காக செலவிட்டவை எத்தனை? https://www.vikatan.com/government-and-politics/politics/120688-essays-tamilian-as-political-identity-suguna மற்ற மொழிகளுக்குச் செய்தவை என்ன? அரசின் மொழிக்கணக்கெடுப்பில் எங்கே பிழைகள் நிகழ்கின்றன? https://www.thehindu.com/opinion/lead/getting-the-language-count-right/article24454570.ece

7. இடைநிற்றலுக்கும் பயிற்றுமொழிகளுக்கும் உத்திரப்பிரதேசத் தோல்விகளுக்கும் பிரஜ், போஜ்புரி,அவதி, பன்டேல்கந்தி மொழிகளில் புத்தகங்களை அச்சிடுவதற்கும் பந்தம் உண்டு; அதை இங்கே சான்றுடன் குறிப்பிட்டிருக்கிறேன். https://sannaloram.blogspot.com/2019/04/blog-post.html

8. பாரதி புத்தகாலய முன்னெடுப்பில் நிகழ்ந்த தமிழ் மொழிபெயர்ப்பிலுள்ள பிழைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கான பதில் அம்மொழிபெயர்ப்பின் நான்காம் பக்கத்தில் உள்ளது. https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf

9. உதவிப் பேராசிரியர் பணி நியமன முறை குறித்த தனிக்கட்டுரை. https://www.jeyamohan.in/126672#.Xd05mugzZPY

10. தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில், தனியார் நிறுவனங்கள் பன்மொழிகளில் செயல்படுகையில் மொழிப்பன்மைத்துவம் பேணுவதில் பெரிய சிரமங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சிரமங்கள் இருந்தாலும் சமூக நீதிக்கான விலையை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

அதற்காக தொடர்வண்டி நிலையப் பெயர்ப் பலகைகளில் 22 மொழிகள் இருக்கவேண்டுமென்பதில்லை. இங்கு எத்தனை மாநிலங்களில் தொடர்வண்டி பயணச்சீட்டை பிராந்திய மொழிகளில் அச்சிடுகிறார்கள்? தமிழிலும் மலையாளத்திலும் இருப்பதைத் தமிழகத்திலும் கேரளத்திலும் கண்டிருக்கிறேன். எல்லா மாநிலங்களிலும் அவ்வாறு உண்டா? பதில் எதுவெனினும் அதன் பின் ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும்.

மற்றபடி நண்பரின் -லாம் விகுதியுள்ள வார்த்தைகளுக்கும், காலம் கனிந்து வர வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கும் என்னிடம் பதில் இல்லை.  

இன்று (26-11-2019) இந்திய ஒன்றியத்தின் அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம். அதன் முகப்பு சமத்துவம் என்னும் வார்த்தையைத் தாங்கி நிற்கிறது. ஆனால், மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை சமத்துவம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தொனிப்பதாக நம்முடைய ஒன்றிய அரசாங்கங்களின் (முந்தைய மற்றும் தற்போதைய) செயல்பாடுகள் இருந்தனவா/இருக்கின்றனவா என்றால் நிச்சயம் இல்லை. பெரும்பான்மைவாதம் திரும்பத்திரும்ப தன் சுட்டுவிரலை அதிகாரத்துடன் நீட்டுகிறது. அதனால்தான் ஆங்கிலத்தில் பேசும் ஒரு நடிகரைப் பார்த்து நீங்கள் இந்தி நடிகர்தானே இந்தியில் பேசுங்கள் என அதிகாரம் விரல் நீட்டுகிறது. அதுவே அடுத்தமுறை பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளும் மொழியில் பேசுங்கள் என்று வாதிடுகிறது. ஒரு பத்திரிக்கையாளருக்கு இந்தப்பார்வையைக் கொடுத்தது யார்? அதில் அரசின் பங்கு இல்லையா? இந்தப்பின்புலத்திலதான் நாம் அரசின் மொழிக்கொள்கையைப் பார்க்கவேண்டுமென நினைக்கிறேன்.

Nov 26, 2019, 8:25 PM

(இன்றய தினத்தில் நன் எழுதிய முதல் மறுப்புக் கடிதத்தின் இணைப்பு ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் சரியாக இயங்கவில்லை, அதனால் இங்கு பதிந்து வைக்கிறேன்.)