Showing posts with label ப.நடராஜன் பாரதிதாஸ். Show all posts
Showing posts with label ப.நடராஜன் பாரதிதாஸ். Show all posts

Tuesday, July 12, 2022

சகலகலா சவரக்காரன்

ஒரு கவிதைத்தொகுப்பு முழுவதும் ஒரே வகைமையிலான/பாடுபொருளைக்கொண்டதான கவிதைகளால் நிரம்பிவருவது தமிழுக்குப் புதிதல்ல. ஆனால், எனக்குத்தெரிந்து ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து அச்சமூகம் சார்ந்த பாடுபொருளைக்கொண்ட கவிதைத்தொகுப்புகளில் இது இரண்டாவது - ப.நடராஜன் பாரதிதாஸ் அவர்களின் "ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்". இவருக்குமுன் கலைவாணன் இஎம்எஸ்-ன் "ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்". 

பாடுபொருள் ஒன்றேயென்றாலும் தொகுப்பு முழுவதும் சுயசாதியை நோக்கிய கேள்விகள்/விமர்சனங்கள், பகடி, ஆதங்கம், சுயகழிவிரக்கம் எனக் கலவையான உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது. தொழில்நுட்பரீதியில் பார்த்தால் சில கவிதைகள் அபாரமான சொல்லாட்சியினால் ஒளிர்கின்றன. 

இன்றைக்கும் 'மாப்பிள்ளை சேவிங் செய்ய மறுத்தவர் கொலை' என்னும் செய்தி வரத்தான் செய்கிறது. என் அம்மா அவர்களை சாதிப்பெயர் சொல்லித்தான் விளிக்கிறாள். நம் சோ கால்டு பழமொழிகளிலும், நகைச்சுவைகளிலும் அவர்களை இழிவுசெயும் மனிதர்கள்தான் நாம். ஒவ்வொருமுறை முடிவெட்டும்போதும் தடவும் கீறல் விழுந்த மென்மையான கரங்கள்தான் அவை. ஆனால், கீறலில் தெறிக்கும் குருதியில் எழுதப்படும் கவிதைகளுக்கு அறச்சீற்றம் உண்டு. அவற்றை எதிர்கொள்ளத்தான் நாணமாக இருக்கிறது.

நாட்டாமை எட்ன தூரத்தில் வரும்போதே

திண்ணையிலிருந்து எந்திரிச்சு நிக்கணும்

எதிர்ல வந்தா

வளஞ்சி நின்னு வழிவிடணும்

வீட்டுக்கு அழைச்சி

மேல்முடி செரைச்சுக்கிட்டு

அடிமுடியையும் வழிக்கணும்

இல்லன்னா அடிப்பாரு

வாங்கிக்கணும்


மழை தப்பிட்டா அளப்பு தப்பிடும்

செரைப்பு மட்டும் தப்பாது

வருசமெல்லாம் வழிக்கும்போது

எங்கவேணா தொட்டுக்கலாம் தொடச்சிக்கலாம்

மற்றபடி

வாசற்படி தாண்டினாலே வாயிலவரும் நல்லா


ஆனா பாருங்க

அரசாங்க கெஜட்டு  

அவரும் நானும் எம்.பி.சி.ன்னு சொல்லுது


அவருகிட்ட எப்படி சொல்றது

நீயும் நானும் ஒன்னுதாயான்னு

அரசிடம் யார் சொல்வது

நானும் அவரும்

ஒன்னுயில்லையின்னு.


..



வாழ்நாளில்

வாசற்படிதாண்டி வராண்டாவிற்குக்கூட

அழைக்காதவன் அனுமதிக்காதவன்  


பளிச்பளிச்சென்று அழகுபடுத்திக்கொண்டு

புளிச்புளிச்சென

சாதித் தொழிலைச்சொல்லி காரி உமிழ்ந்தவன்

என்குலம் சொல்லி கோத்திரம் சொல்லி

சாதிபோதை ஏற்றி

அவனுக்கெல்லாம் திருத்தலாமா

மீறினால்

தானே இடிந்துவிழும்

தானே தீப்பற்றும்


பொறம்போக்குத்தனே உன்குடிசை

மனதில்கொள்

ஊரோடு ஒட்டிவாழ்-இல்லை

ஊரே உனை வெட்டி வாழும்

உயிர் பயம் காட்டுகிறான்

ஊர் பஞ்சாயத்தில்


ஓர்குடி நாம்

என் செய்குவோம் தந்தையே 

நீ கத்தியைக் கொண்டுவா

நான் கத்திரி கொண்டு வருகிறேன்

இவனுக்கெல்லாம்

மயிர்வெட்டி   வாழ்தலைவிட

உயிர்வெட்டிச் சாகலாம்.