Showing posts with label குறிப்பு. Show all posts
Showing posts with label குறிப்பு. Show all posts

Friday, November 18, 2022

சாரு

புனைவுகளை விட கவிதைகளையும் அபுனைவுகளையும் அதிகம் வாசிக்கும் பழக்கமுடையவன் என்று கூறி சாருவின் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் என்றாலும் நடக்கும் விவாதங்களில் அதற்கு மதிப்பிருக்குமா எனத் தெரியவில்லை; என் தகுதி அப்படி. ஆனால், ஒரு வாசகனுக்கு சாரு என்னவாக இருக்கிறார்?! சில நேரங்களில் அவர் படைப்பை வாசித்துவிட்டு இதை அவருக்கு எழுதினால் வசை கிடைக்குமோ என்கிற பயம் கடிதம் எழுதத் தடுத்திருக்கிறது. விஷ்ணுபுரம் விருதை முன்னிட்டு நினைவில் வருபவற்றை எழுதலாம் எனத் தோன்றுகிறது. 

 
நேர்வழியெனினும் கட்டுரைகளுக்குள்ளும் சில வகைகளுண்டு. அந்த ஆட்டத்தில் நடனமொரு பாகமென்றால் அங்கங்கே தெறிக்கும் பொறிகளும் வாசகனுக்கு முக்கியம்.  அவை ஒரு ரசனைக்குறிப்பாகவோ, புத்தக/இட/திரைப்பட/ஆளுமை பெயராகவோ இருக்கலாம். ஆடுபவர் இதையெல்லாம் வழங்கிவிட்டு நேர்வழியில் செல்லலாம், எந்த வாசகன் எந்த இடத்தில் இறங்கிப்போவான் என்று யாருக்குத் தெரியும்?! என் குறுகிய வாசிப்பனுபவத்தில் இப்படி என்னைப் பாதி வழியில் இறக்கி விட்டுச் செல்பவர்கள் மூவர்: சாரு நிவேதிதா, சுகுமாரன், நாஞ்சில் நாடன். சாரு இவ்விருதை ஏற்றுக்கொண்டமை மகிழ்வளிக்கிறது.

மிக முக்கியமாக அவரின் சமூக விமர்சனங்களில் காணப்படும் பகடி மற்ற இடங்களில் காணக்கிடைக்காதது. கட்டுரை நூல்கள் மிக அரிதாகவே சிரிப்பை வரவழைக்கும் என்கையில் இவர் எழுத்தில் வெடிச்சிரிப்பு உறுதி, வயிற்றுவலி போனஸ்.  ஆனால், அவை அதைச் செய்ய எழுதப்படும் நுகர்பொருளா? தமிழக/இந்திய  சமூகத்தை உலகத்துடன் வைத்துப்பார்த்து விமர்சிக்கும் அந்தப் பார்வை நேரமும் உழைப்பும் இன்றி வந்துவிடாது; அவ்விளைபொருளின் அடிப்படை அக்கறை. அரசியல்/கலாச்சார ரீதியாக குடிமக்களாக நாம் இழப்பவை, குறைபடுபவை என்னவென்ன என்பதை எங்கெங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சொல்லியிருக்கிறார். ஒரு மேடையில் விருது பெற்றுக்கொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் உள்ள வேற்றுமையை சொல்லித்தந்தது அவரே. சாரு எழுதும் சினிமா விமர்சனம், விமர்சனம் மட்டுமல்ல; பூனை உணவுப் பிரச்சினை, உணவுப் பிரச்சினை மட்டுமல்ல. 

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வாழ்த்துக்கள்.  


Monday, June 24, 2019

தேசிய கல்விக் கொள்கை 2019 : சில குறிப்புகள்



முழு வரைவையும் படிக்க : https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf


(தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019, பக்கம் 33 மற்றும் 55)

"1 முதல் 5 ஆம் வகுப்புவரையுள்ள குழந்தைகளுக்கு பாடநூலுடன் மொழி மற்றும் கணிதப் பயிற்சி நூல்கள் வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் தன் சொந்த வேகத்தில் பயிலும் வகையில், வயதிற்கும் வகுப்பிற்கு ஏற்ற படைப்பூக்கம் மிக்க, ஈடுபடுத்தும் திறன்கள் மிக்க ஆக்கப்பூர்வமான வாய்ப்புகள் பயிற்சிப்புத்தகத்தில் உறுதி செய்யப்படல் வேண்டும்.

குழந்தைகளின் மொழிகற்கும் திறமையை உயர்த்த, மழலையர் வகுப்பு அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் மூன்று அல்லது அதற்கு அதிகமான மொழிகளை அறிமுகப்படுத்த வேண்டும்."

மழலையர் வகுப்பிலிருந்தே மூன்று மொழிகள் என்னும் கொள்கை குழந்தைகளுக்கு கற்றலின் மீது வெறுப்பையே உண்டாக்கிவிடும் ஆபத்து மிக்கவை. ஆரம்பக் கல்வியில் இத்தனை மொழிகள் கற்பிக்கப்படுவது குறித்த முன்னுதாரணங்கள் உலகில் இல்லை. எனவே, இவை குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும் கற்றலுக்கு எவ்வகையில் துணைபுரியும் என்பதற்கான நடைமுறை முன்னுதாரணங்களும் இல்லை. இத்தனை மொழிகளைக் கற்றபின், அதன் நடைமுறைப் பயன் என்ன என்பது குறித்த கேள்வியும் எழாமல் இல்லை.

பணி நிமித்தம் இடம்பெயர்வுகள் தவிர்க்கப்பட இயலாத காலத்தில் இவை அவசியம் என்று கருதப்படலாம். ஆனால், பணி நிமித்தம் இடம்பெயரும் குழந்தைகள் தாய் மொழியில் கற்பதற்கான வழிவகைகள் இல்லாத சூழலில், இக்கொள்கை அக்குழந்தைகளுக்கே ஆபத்தாக அமையும். இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கும், மொழிச்சிறுபான்மையினருக்கும் வீட்டில் பேசும் மொழி ஒன்றாகவும் பயிற்றுமொழி ஒன்றாகவும் அதனுடன் கூடுதல் இரு மொழிகள் என மொத்தம் நன்கு மொழிகள் என அவர்கள் அல்லற்பட வேண்டியிருக்கும்.

மூன்று மொழிகளுக்கான பயிற்சிப்புத்தங்கள் குழந்தைகளின் பணிச்சுமையை மட்டுமல்லாது முதுகுச்சுமையையும் அதிகரிக்கும். பெரும்பான்மை வீட்டுப்பாடங்கள் என்பதால், தாய்மொழி தவிர்த்து வேறுமொழி அறியாத பெற்றோர்கள், பணிக்குச் செல்வோர் போன்றோரின் குழந்தைகளுக்கு இது கூடுதல் சுமை. பெற்றோர்கள் இவற்றின்பொருட்டு தனிப்பயிற்சி நிலையங்களைத் தஞ்சமடைய நேரிடும், இது பெற்றோரின் நிதிச்சுமையையும் அதிகரிக்கும்.

பேச்சிலிருந்து எழுத்திற்கும் மாறும் ஆரம்பக் கல்விக் காலத்தில், அழகிய கையெழுத்து, வீட்டுப்பாடங்கள் அவைகளுக்கான விதவிதமான தண்டனைகள் என ஏற்கனவே நம் பிள்ளைகளின் கண்ணீர்த்துளிகள் நோட்டுப்புத்தகங்களை நனைக்கையில் இக்கொள்கைகள் தேவையா, அதற்கான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் நம்மிடம் உள்ளனரா என்பது குறித்த ஆய்வுகள் அவசியம்.

இப்போதைய பெற்றோரின் ஆர்வம் பள்ளிகளோ மொழிப்பயிற்சியோ அல்ல, லட்சங்களைக் குடிக்கும் நீட் பயிற்சி மையங்களே என்பது எவ்வளவு கேவலமான நிலை என்பதை வரைவுக்குழு உணரட்டும். குழந்தைகள் முதலில் தன் தாய்மொழியைத் திறம்படக் கற்கட்டும், எழுத்து வடிவம் இல்லாத மொழிச்சிறுபான்மையினர் கற்றல் மொழிக்கு மாறக் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்ளட்டும், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புவரையாவது தாய்மொழியில் கற்பிக்கும் சுழலும் தாய்மொழிப்பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கட்டும், அவற்றில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்களுக்கு நம்பிக்கை வளரட்டும், இந்திய ஒன்றியத்தில் ஒருவர் தாய்மொழியைக்கொண்டே எல்லா வசதிகளும் பெரும் வாய்ப்புகள் உருவாக்கப்படட்டும் அதன்பின் நாம் மூன்றாம் நான்காம் மொழிகளைப்பற்றிச் சிந்திக்கலாம்.

============================================================

(தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019, பக்கம் 56)

"தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பிற வளர்ந்த நாடுகள் கற்றல் மொழியாக அந்தந்த நட்டு மொழியையே பயன்படுத்தும்போது இந்தியாவில் மட்டும் பெரும்பான்மையோனோர் கற்றல் மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்வது ஏன்? காரணம் வேறொன்றுமல்ல, செல்வச்செழிப்புள்ள இந்தியர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டதுதான். 15 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள், ஆனால் 54 விழுக்காடு இந்தி பேசும் மக்களோடு ஒப்பிடும்போது அவர்கள் சந்தர்ப்பவசமாக பொருளாதாரத்தில் முன்னாளில் இருக்கிறார்கள்."

இந்திய மொழிகளைக் கற்பிக்க வேண்டுமெனத் துவங்கி, பிறகு அங்கிருந்து மும்மொழிக்கொள்கைக்குத் தாவி பிறகு மெதுவாக இந்திக்கான சொருகல் வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். இந்தியைத் தூக்கிப்பிடிக்க நிபுணர் குழு உருட்டும் புதிய உருட்டு இதுதான். இந்த விகிதாச்சாரக் கணக்குகள், அவர்களின் பொருளாதார நிலைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது தெரியவில்லை. ஒரு வாதத்திற்காவது 85 விழுக்காடு ஆங்கிலம் பேசாத மக்கள் என்று ஒப்பிடப்படாதது ஒன்று போதாதா அவர்களின் குறுகிய, பெரும்பான்மைவாதப் பார்வையை நிரூபிக்க?!
ஆனால், இதன்பொருட்டு நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.

1. புதிய கல்விக்கொள்கை வரைவு ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்புகள் பிராந்திய மொழிகளில் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் (இந்திய அளவில் மொழிச்சமவுரிமைக்கான பரப்பியக்கம், தமிழக அளவில் தன்னாட்சித்தமிழகம், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட கல்வியாளர்கள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் ) "பிராந்தியமொழிகளில் வெளியிடப்பட வேண்டும்" என்று எழுந்த கோரிக்கைகளுக்கும் எந்தப்பதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆய்வுக்குழு அதற்கான நடவடிக்கைகளில் இறங்காதது ஏன்?

2. வரைவு பிராந்திய மொழிகளில் / எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் இல்லை என்றாலும், அதற்கான மக்களின் கருத்துக்கள் இந்திய மொழிகளில் தெரிவிக்கப்பட்டால் அவை எங்கனம் பரிசீலிக்கப்படும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் எங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளனவா?

3.வரைவிற்கான பதில்களை ஆங்கிலத்தில் / இந்தியில் மட்டுமே அனுப்ப இயலும் என்பதாகக் கொண்டால் அது அறிக்கை கூறுகிற 15 விழுக்காடு இந்தியர்களுக்கு மட்டுமான அறிக்கையா அல்லது இந்தியுடன் சேர்த்து 69 விழுக்காடு இந்தியர்களுக்கு மட்டுமான அறிக்கையா?

4. "தொழில் கிடைக்க, அதுவும் அத்தொழில்களுக்கும் ஆங்கிலப் புலமைக்கும் தொடர்பில்லாமல் இருந்தாலும் ஆங்கில அறிவைத்தேர்வுக்கான அடிப்படைக் காரணியாகக் கருதுகின்றனர், இதனால் சமூகத்தின் பெரும்பகுதியினர் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்" என்றெல்லாம் கூறும் வரைவு, அதே நேரத்தில் ஒன்றிய அரசுப்பணிகளில் இந்தி அறியாததால் பணி வாய்ப்பு மறுக்கப்படுவதை ஏன் பேச மறுக்கிறது?

5.கொள்கை, மொழிச்சமவுரிமையைப் பிரதானமாகக் கொள்கிறது எனக் கொண்டால், ஒன்றிய அரசால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிற பல்வேறு நுழைவுத்தேர்வுகள் இனிப் பட்டியல் மொழிகளிலும் நடத்தப்படுமா? அவை குறித்த வழிகாட்டுதல்கள் வரைவில் உள்ளனவா?

கல்விக்கொள்கை வரைவை முன்னிறுத்தி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசமைப்பு என்று எல்லைகளை நீட்டித்து மொழிச்சமவுரிமையையும் பேசவேண்டிய நேரமிது.


Saturday, September 22, 2018

இந்தி நம் தேசிய மொழி அல்ல

இந்தி நம் தேசிய மொழி அல்ல; அலுவலக மொழிகளில் ஒன்று. துரதிர்ஷ்டவசமாக அல்ல, திட்டமிட்டே 'இந்தியாவின் தேசிய மொழி இந்தி' என்ற பொய் நெடுங்காலமாக இந்த மண்ணில் பரப்பப்பட்டு வருகின்றது. இது பெருவாரியான இந்தி அல்லாத மொழி பேசும் மக்களை மொழியினடிப்படையில் இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் முயற்சி.


சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைப் பார்க்கலாம்.


1.      கொல்கத்தாவிலுள்ள மத்திய அரசு நிறுவனமான இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் (IISER), ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான ( பதிவாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை) அடிப்படைத்தகுதிகளில்,இந்தி மொழியறிவு அவசியம்’ என்பது முதலாவதாக இருந்தது. எதிர்ப்புகள்  வரத்துவங்கியதும் ஹிந்தியர்கள் பின்வாங்கினர்.


2.      நாடெங்கிலுமுள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில், ஆசிரியர் பணியிடத்திற்கான தகுதித்தேர்வில்(CTET), இரண்டாம் தாளை ஆங்கிலம், இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுத முடியும் என்கிற அறிவிக்கை நாடெங்கும் எதிர்ப்புகளைக் கிளப்பியதால் ஒன்றிய அமைச்சரே முன்வந்து, "தேர்வு முந்தைய வருடங்களைப்போலவே 22 மொழிகளிலும் நடத்தப்படும்" என்று அறிவிக்கிறார்.


வங்கமொழி பேசுவோர்  அதிகமுள்ள ஒரு மாநிலத்திலுள்ள கல்வி நிலையத்தில்  பணியமர்வதற்கு ஒருவருக்கு இந்தி கட்டாயம் என்பதற்கான அவசியம் என்ன? நாடாளுமன்றத்திலேயே 22 மொழிகளில் பேசுவதற்கான சட்ட வழிவகை இருக்கையில் ஆசிரியர் பணிக்கு  இந்தி அல்லது சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கட்டாயம், எதிர்ப்புகள் கிளம்பியவுடன் ஓடி ஒளிந்ததேன்? எனில் சட்டப்படி அதற்கான அனுமதி இல்லை என்பதுதான் அர்த்தமா? சுதந்திரத்திற்குப் பின்னும் நாம் - இந்திய ஒன்றியத்தின் இந்தி பேசாத பெருவாரியான மக்கள் - நம் உரிமைகளை இப்படிப் போராடித்தான் பெறவேண்டுமா? சுதந்திரம் என்பதன் அர்த்தம் அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு என்பதில்லையா?


இந்த இரண்டு அறிவிக்கைகளையும் கேட்டவுடன் ஒருவர் இரு வகையில் எதிர்வினையாற்றலாம்: எதிர்த்தல் மற்றும் மௌனித்திருத்தல்.எதிர்ப்புகளே இவ்விரு விஷயங்களிலும் நமக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஆனால் இந்த மௌனம், இந்தி தவிர்த்த வேறுமொழி பேசும் பெரும்பாலோரின் இந்த மௌனம், எதனால் வருகிறது? தேசிய மொழி இந்தி என்பதால் அதைக் கட்டாயமாக்குவதில் சட்டரீதியாகத் தவறில்லை என்கிற நம்பிக்கையிலிருந்து வருகிறது. இதை எதிர்த்து நமக்கான உரிமைகளைப் பெறுவதற்கு சட்டப்பூர்வமாக வழிவகையில்லை என நம்புவதால் வருகிறது. இது அத்தனையும் இந்தி நம் தேசிய மொழி என்று நம்பவைக்கப்பட்டுள்ளதால் வருகிறது.


ஒன்றிய அரசு எவர் கையில் இருப்பினும் இதற்கான முயற்சிகள் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. அவர்களுக்குத் தெரியும்- மொழி என்பது தொடர்புக்கருவி மாத்திரமல்ல; அதிகாரம். அதை டெல்லியிலேயே தக்கவைப்பதற்காக நிகழ்ந்த எல்லா முயற்சிகளும் வரலாற்றில்  உள்ளன. ஆனால், நமக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது; எதிர்த்த வரலாறு. 1965-ல் இந்தி பேசாத மக்களனைவருக்காகவும் அவர்களுக்கான உரிமைகளைப் போராடிப் பெற்றுத்தந்த வரலாறு. அந்த வரலாற்றைத்தான், 'இந்தி நம் தேசிய மொழி அல்ல' என்கிற சத்தியத்தைத்தான் சி.சரவணகார்த்திகேயன் தனக்கே உரிய  சான்று தழுவிய தர்க்க ஒழுங்குடன் துல்லியமாகச் சித்தரிக்கிறார்.


நாம் அனைவரும் படிக்கவேண்டிய வரலாறு இது. சமகாலத்தில் இந்தியர்களைவிட, ஹிந்தியர்களுக்கே இதை வாசிக்கக் கொடுப்பதற்கான தேவையும் அதிகமிருப்பதால் இக்கட்டுரையை இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழிகளில் ஒன்றான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். தமிழில் எழுதப்பட்டுள்ள மூலக்கட்டுரையும் இணைப்பில்.


இம்மொழிபெயர்ப்புக்கு அனுமதி வழங்கியும், எழுந்த சந்தேகங்களைத் தீர்த்தும், ஆங்கில வடிவை சரிபார்த்தும் கொடுத்த சி. சரவணகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி.   


மொழிச் சம உரிமையே நம் குறிக்கோள். பன்முகத்தன்மையை இந்திய ஒன்றியத்தின் அடையாளம்.

கட்டுரைக்கான இணைப்புகள்: