Thursday, January 21, 2021

அதிகாரிகள் என்பதும் அதிகாரம் என்பதும்

புலம்பெயர் வாழ்வில் வீட்டிற்கும் நமக்கும் அதீதத் தேவையாயிருப்பது பண்டிகைக் காலங்கள். பதிமூன்று மாதங்களுக்குப் பிறகான பயணம். உடல் வெப்பம், கைப்பை என எச்சோதனைகளுமின்றி திருவனந்தபுரத்தில் இருந்து திருப்பூருக்குத் தொடர்வண்டி ஏறினேன்; பயணம் கிட்டத்தட்டப் பதினோரு மணிநேரம். எல்லா நேரமும் அமர்ந்திருக்க இயலாது. நிறைய இடங்களைத் தொட வேண்டும். இரண்டு முறை உண்ண வேண்டும்; குறைந்தபட்சம் நான்கு முறையேனும் கழிக்க வேண்டும். 

கை சுத்தத்திற்கு ஆல்கஹால் உள்ள சானிடைஸர்கள் போதா. அவற்றை உபயோகித்தாலும் கை கழுவாமல் உண்ண இயலாது. கழிப்பறைகளிலோ, கை கழுவும் இடங்களிலோ சோப்பு எந்த வடிவிலும் இல்லை. 

ட்விட்டர் கணக்கும் ஆங்கிலமும் இருந்ததால் @RailwaySeva-க்கு எழுதினேன். 
பிஎன்ஆர், வண்டி, கைப்பேசி எண்கள் கேட்கப்பட்டதால் கொடுத்தேன். இருபது நிமிடத்திற்குள் ஒரு அழைப்பு. ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அம்மொழியிலேயே பதில்களைச் சொன்னேன். பின்னர் குறைகள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்யும் எண்களைக் தாங்கிய சில குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில்.

ஐந்து நிமிடத்தில் சீருடைப் பணியாளர்கள் சிலர் இந்திக் கேள்விகளுடன் முன்நின்றனர்‌. இந்தியும் இல்லை சோப்பும் இல்லை என்று காற்றில் கைகழுவி விளக்கினேன். பத்து நிமிடத்தில் காலியான குடிநீர் பாட்டிலில் சோப்பு நீர் வந்தது; நன்றியுடன் பெற்று உபயோகிக்கையில் நுரை வரவில்லை. இதற்கு ட்விட்டரில் எதுவும் சொல்ல வேண்டாமென விட்டுவிட்டேன்.

எர்ணாகுளத்தில் மலையாளம் எழுப்பி சோப்பு கிட்டியோ என்றது. கழிவறைக்குள் பாருங்கள் என்றேன் தமிழாளத்தில். பார்த்தபின் நிலைமை புரிந்து நான்கு ரூபாய் மதிப்புள்ள பதினைந்து கிராம் சோப்புக்கட்டியைக் கொடுத்துச் சென்றார்.

நடந்தவை அனைத்தையும் உடனிக்கும் பயணிகள் கவனித்து வந்தனர்; ஏதோ தனிச்சலுகை கோரிப் பெறுபவனைப்போல வெட்கமாக இருந்தது.

இங்கு பேசப்பட வேண்டியவை இரண்டு.

1. தொற்றுநோய்க் காலம் மட்டுமின்றி எல்லாக் காலத்திலும் ஒரு சேவையைப் பெற நமக்குத் தடையாய் உள்ள மொழி, இணைய, பொருளாதாரக் காரணங்கள்.

2. ஒரு பொதுப்பிரச்சினையை தனிமனிதப் பிரச்சினையாக மட்டும் அணுகும் மனப்பாங்கு. 

ட்விட்டரில் @RailwaySeva-க்கு மறுபடியும் எழுதினேன்: எனக்குக் கிடைத்தது மற்றவருக்குக் கிடைக்கவில்லை. மற்ற பெட்டிகளின் நிலையோ, வண்டிகளின் நிலையோ எனக்குத் தெரியவில்லை. அனைத்துப் பெட்டிகளிலும் சோப்புகள் வைக்கப்பட வேண்டும்; இது கேட்டுப் பெறவேண்டிய சேவையாக இருக்கக்கூடாது. அனைத்துப் பயணிகளும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

எதிர்பார்த்தபடியே எவ்விதப் பதிலும் இல்லை. 
அதிகாரம் என்பதும் அதிகாரிகள் என்பதும் பாவனைகளோ என்று தோன்றுகிறது.