எங்கள் வீட்டில்
புதிதாய்க் குடி வந்தவள்
எனக்கும் மூத்தவள்
இல்லந் துறந்தவள்
தலைவன் வரும்வரை
ஒவ்வொரு நொடியையும்
விரட்டி அடிப்பவள்
கலங்கரை விளக்கத்தின்
வெளிச்சப்புள்ளி போல்
எதிர்ப்படுகையில் மட்டும்
'எப்பண்ணா வந்தீங்க'
என்பாள் முகம் மலர்ந்து
பிறகொரு
சொல்லிறின்றி முகமின்றி
மறைந்தே போவாள்
திடீர் மழையில் மூழ்கிய
குளத்தாம்பல் போல்
கேள்விகளின் உலகில்
அன்புடை நெஞ்சம் கலப்பதில்
ஆயிரம் சிக்கல்கள்
ஆயிரம் பயங்கள்
மலர்தலின் உலகில்
ஒரு பெண் மௌனமாவதைப்போல்
ஒரு பெண் வீடடங்குவதைப்போல்
வேறொரு துக்கம் உண்டா?
No comments:
Post a Comment