Sunday, March 17, 2024

கல்விச்சூறையாடல் - கடிதம்

கல்விச்சூறையாடல்  வாசித்தபின்  எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதியது


அன்புள்ள ஜெ,

வணக்கம். கல்விச்சூறையாடல் படித்தேன். கடந்த பல வருடங்களாக உயர்கல்வித்துறையில், தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் சீரழிவைச் சுட்டியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறித்து மிகவும் வருத்தமடைந்தேன்; அரசின் இந்த நடவடிக்கைக்கு என்னுடைய கடும் கண்டனங்கள். அரசுக்கு எதிராக விமர்சனம் வைப்பவர்கள் தண்டிக்கப்படுவதை, சிறையிலடைக்கப்படுவதை கடந்த சில ஆண்டுகளாகவே நாம் பார்த்து வருகையில், ஒரு ஆசிரியருக்கு, கல்வித்துறை குறித்து உள்ளிருந்து வரும் ஆக்கப்பூர்வமான குரலுக்கு எதிரான இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

கல்வித்துறை ஊழல்கள் குறித்துப் பொதுவெளியில் வைக்கும் விசிலூதிகள் இங்கு இல்லை. இப்படியிருக்கையில் கல்வித்துறை குறித்து உள்ளிருந்து எழும் விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டும். ஒரு ஆசிரியர் அல்லாது நடப்புக்கல்விமுறை குறித்து விமர்சிக்கத் தகுதியுள்ளவர் இங்கு எவர்? இந்நடவடிக்கை ஆசிரியர்களை மௌனமாக்கி கல்வித்துறை மேலும் சீரழியவே வழிகோலும்.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் உயர்கல்வித்துறை ஊழல் குறித்த தங்களது குறிப்புகள் முற்றிலும் உண்மை. ஆய்வு மாணவன் என்பதாலும், தமிழகத்தில் சில அரசு உதவி பெறும்/தனியார் கல்வி நிறுவனங்களில் வேலைக்கு முயன்றிருப்பவன் என்பதாலும் இதைக் குறித்து நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.

கேரளத்தில் கல்லூரி ஆசிரியர் தேர்வுக்கென குறைந்தபட்சம் நுழைவுத் தேர்வாவது உள்ளது. தமிழகத்தில் இறுதியாக நடந்த கல்லூரி ஆசிரியர் தேர்வு நேர்காணல்வழி. நேர்காணல் என்றால் பட்டம், பணி அனுபவம், புத்தகங்கள், ஆய்விதழ்கள் எனத்  தனித்தனி மதிப்பெண்கள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி லஞ்சப் பணம். முழு நேர ஆய்வு மாணவர்களை அடிமையாக்கி, பணம் படைத்தவர்களுக்கு ஆய்வேடுகள் எழுதி தர  நிர்பந்திக்கப்படும் நிலை வெகுசாதாரணம். முழு நேர ஆய்வாளர் அதைச் செய்யவில்லை என்றால் அவரது வாழ்வே நாசமாகிவிடும். பணம் படைத்த, அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் பகுதிநேர ஆய்வாளராகச் சேர்ந்து, மாணவர்களைச் சுரண்டி, ஆய்வேடுகள் அச்சிடப்படும் வரை அவர்களது உழைப்பை உறிஞ்சி முனைவர் பட்டம் பெறுகிறார்கள்.

அரசு உதவி பெற்ற கல்வி கல்வி நிறுவனங்களில் நிலைமை இன்னும் மோசம். தாங்களே நேர்காணல் நடத்தி ஆசிரியரை தேர்வு செய்யலாம் என்பதால் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஒருபோதும் தகுதியான ஆசிரியர்கள் நேர்மையான வழியில் தேர்வு செய்யப்பட்டதில்லை. இன்றைக்கும் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கான அறிவிக்கை வெளியாகும் என்றால் கேட்கப்படும் முதல் கேள்வி முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதா? அல்லது எவ்வளவு பணம் கேட்கிறார்கள்?. அந்த அளவுக்கு அழுகிப் போயிருக்கின்றன நமது கல்வி நிறுவனங்கள்.

ஒரு அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் பள்ளி ஆசிரியருக்கு 50 லட்சம் வரை விலை. கல்லூரி ஆசிரியர் எனில் 60 முதல் 80 லட்சங்கள் வரை. தமிழகத்தில் மட்டுமல்ல கேரளத்திலும் இதே நிலைதான். கேரளத்தில் இவ்வாறு பதவி பெற்றவர்களை தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். கொடுமை என்னவென்றால் அவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களே. கையூட்டுக் கொடுத்துப் பணிபெற்றதை வெளிப்படையாகச் சொல்லச் சிறிதளவும் நாணமில்லை. இப்படிக் கல்வித்துறையே திருட்டுப் பயல்களின் கூடாரமாகியிருக்கிறது. இவர்கள் மாணவர்களுக்கு ஒருபோதும் அறவழியைப் போதிக்க  மாட்டார்கள். போட்ட பணத்தைத் திருப்பி எடுக்கும் வழியாக லஞ்சம் பெறுவது, வரதட்சணை கேட்பது போன்றவற்றால் சமூகத்தைப் பின்னிழுக்கிறார்கள். சூழல் இரு தலைமுறைகளை அழித்தாயிற்று. சரிசெய்யத்துவங்கவில்லையெனில் அடுத்த தலைமுறையும் அழியும்.

தனியார் கல்வி நிறுவனங்கள் இன்னும் கீழானவை. ஏற்கனவே குறைந்த சம்பளத்தால் உழைப்புச் சுரண்டல். கோவிட காலத்தில் மாணவர்களிடம் வசூலித்தவர்கள் ஆசிரியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை. இணையக் கட்டணம், கணிப்பொறி உள்ளிட்ட உபகரணங்கள் போன்றவை எதுவும் வழங்காது ஆசிரியர்களைச் சுரண்டியது, திடீர் பணிநீக்கம் என இவர்கள் செய்த கொடுமைகள் தனிக்கட்டுரைக்கானவை.

எனவே, ஆசிரியர் உமா மகேஸ்வரி சொல்வதுபோல் எழுத்தாள-ஆசிரியர்களுக்கு இதைப்பற்றிப் பேசவும் எழுதவும் கூடுதல் பொறுப்பிருக்கிறது. அதைச் செய்யவேண்டும். இல்லையெனில் திருட்டு வழியில் உள்நுழையும் கயவர்கள் பேராசிரியர் இருக்கைகளில் அமர்வார்கள். நல்லாசிரியர்களைப் பணி செய்ய அனுமதிக்கமாட்டார்கள்; நம் பிள்ளைகளின் வாழ்வையே அழிப்பார்கள்.

நன்றி,

விஜயகுமார்.