வேளச்சேரி
பாலத்தின் அடியில் குடும்பத்துடன் வசிப்பவர்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன்.
கொசு, எலி, பாலியல் தொல்லை,
நுரையீரலைப் பாதிக்கும் நுண்துகள்கள், ஓயாத இரைச்சல் தரும்
உறக்கமின்மை, அஃதீனும் மன அழுத்தம் இவற்றுடன்
அவர்களின் வசிப்பிடத்தில் தெரு நாய்களும் தஞ்சம்
புகுந்துள்ளன. அரசால் நடத்தப்படும் உறைவிடங்கள் ஆண்கள், பெண்கள் எனத் தனித்திருப்பவர்களுக்காக
இயங்குகையில், அங்கு குடும்பமாகச் செல்ல இயலாதவர்கள் இப்படி பொதுச் சமூகம் எளிதில் அணுகும் இடத்தில் வசிப்பதுதான் அவர்களுக்கான அன்றாட வேலையைப் பெற்றுத்தருகிறது. பெரும்பாலும் கட்டிட வேலைக்கு செல்லும் இவர்களில் ஒருவராகத்தான் அப்பெண்மணியைக் கண்டேன். வேலை விவரணைகளுக்குப் பின்
கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு நாணமெழ, உதடுகள் மடக்கி இளங்கலை ஆங்கிலமும் கல்வியியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருப்பதாகச் சொல்லி முடித்தார். ஆசிரியப் பணிக்கு செல்லலாமே என்ற கேள்விக்கு அவர்
சொன்ன பதில்: ஆசிரியராகச் செல்கையில் ஒரு நாள் சம்பளம் 160, கட்டிடப்பணிக்கு
700. இத்தகு வாழ்வில் ஈட்டுவது
தன் மகனுக்காக எனச் சொன்னார். பதினாறு
வருடப் படிப்பிற்குப்பின் கூலிவேலைக்குச் செல்லும் ஓர் அன்னையின் மனம்
தன் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பும்போது என்னவாக இருக்கும்? கல்வி ஒன்றுதான் நம்மை உயர்த்தும் என் நம்பும் ஒரு
சமூகத்தில் அதற்கான பாதைகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா?
ஒரு மகிழ்ச்சியான வகுப்பறையும், கற்றல்-கற்பித்தல் செயல்பாடும் ஆசிரியருக்கான கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதிலிருந்து துவங்குகிறன.
சில
மாதங்களுக்கு முன், லயோலா கல்லூரி தொழிற்கல்வி மைய இயக்குனர் ஏ
பி அருண் கண்ணன் மற்றும் எம்ஐடி முனைவர் பட்ட ஆய்வாளர் கிஷோர்குமார்
சூர்யபிரகாஷ் இணைந்து நடத்திய ஆய்வில் பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இதுபோன்ற உழைப்புச் சுரண்டல் தனியார் கல்வி நிறுவனங்களில் பரவி இருப்பதை உறுதி
செய்தது. சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களிடம் நடத்திய ஆய்வில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்ததைக் காட்டிலும்
குறைவான ஊதியமே பெற்று வருவதை அறிய முடிந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில்
72 சதவீதம் பேரின் மாத ஊதியம் 25 ஆயிரம்
ரூபாய்க்கு கீழ். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, சம்பள உயர்வு, முறையான விடுப்பு, தொழிலாளர் நலத் திட்ட உதவிகள்
என எந்த அடிப்படை உரிமையும்
இல்லை. பெருந்தொற்றால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டபோது வேலை இழப்பிற்கும் ஊதியக்குறைவிற்கும்
ஆளான இவர்கள், உடல் உழைப்பைக் கோரும்
கட்டிட, உணவு விநியோகிக்கும் வேலைகள்
உட்பட்ட கூலி வேலைகளுக்குச் சென்றனர். இவர்களில் பனை
ஏறும் தொழிலுக்குச் சென்றவறொருவர் உயிரிழந்தார். கட்டுரையாளர்களின் கோரிக்கை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (முறைப்படுத்தும்) சட்டம் - 1976 திருத்தி அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென இருந்தது.
குறைந்தபட்ச
ஊதியம் நிர்ணயம் இல்லாத ஒரு நாட்டில் இத்தகைய
இடையீட்டிற்கு ஒரு அரசிற்குத் தயக்கங்கள்
இருக்கலாம். நடைமுறையில் ஏனைய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் இருக்கும்
நிலையில் அத்தகைய அமைப்பு ஏதும் இல்லாத தனியார் கல்வி நிறுவனப் பணியாளர்களுக்கு அரசின் இத்தகைய இடையீடு அவசியமானதும் கூட. அதைத்தான் கேரள
அரசு செய்திருக்கிறது.
சில
தினங்களுக்கு முன் கேரள சட்டப்பேரவை
கொண்டு வந்த, தனியார் கல்லூரிப் பணியாளர் சட்டத் திருத்தத்தின் (Kerala Self
Financing College Teaching and Non-teaching Employees (Appointment and
Conditions of Service) Ordinance, 2021 (38 of 2021).) மூன்றே பக்கங்கள்
அவர்களுக்கு நிம்மதியான பணிச்சூழலை
உறுதி செய்கின்றன. அவற்றில் சில:
1. காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு நேர்காணலுக்குப் பின் தரவரிசை வெளியிடப்பட வேண்டும். தெரிவு செய்தவர்களைப் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவித்த பின் பணியமர்த்தப்படல் வேண்டும்.
2. பணியமர்த்தல் மற்றும் பணி ஓய்விற்கான வயது வரம்பினை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்.
3. பணியாளர்கள் சேர்ப்பு, வருகைப்பதிவு, அவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கான பதிவேடுகள் வைக்கப்படவேண்டும். அவை குறித்த தகவல்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
4. பணி, பணி மூப்பு,
பணி உயர்வு, பணிக் காலம், ஊதியம், ஊதிய உயர்வு, கூடுதல்
பணி நேரத்திற்கான ஊதியம் குறித்த தகவல்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட
வேண்டும். இதனுடன் தொழிலாளர் நலுனுக்கென வேறேதும் அம்சங்கள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
5. வேலை நேரம் மற்றும் நாட்கள், சம்பளத்துடன்கூடிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை அரசுக் கல்லூரி ஊழியர்களுக்கு உள்ளதைப் போலவே தொடரவேண்டும்.
6. ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் பயனாளராகச் சேர்க்கப்படல் வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்பட வேண்டும்.
7. பணியாளர்கள் மீதான ஒழுங்கு மீறல் நடவடிக்கைகளை அந்தந்த கல்வி நிறுவனங்களே எடுக்கலாம். பணியாளர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தால் பல்கலைக்கழகத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
8. பணியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வரையறுக்கப்பட வேண்டும். நல்நோக்கத்துடன் வரையறுக்கப்படும் இவ்விதிகளுக்கு எதிராக பல்கலைக்கழகத் துணைவேந்தர்மீதோ, அலுவலர்கள்மீதோ எவ்விதச் சட்ட முன்னகர்வும் ஊக்குவிக்கப்படக் கூடாது.
9. கல்வி நிறுவனங்கள் கீழ்க்கண்ட அமைப்புகளை நிறுவ வேண்டும்.
·
கல்லூரி
நிலைக்குழு
·
அக
தர நிர்ணயக் குழு
·
பெற்றோர்
ஆசிரியர் கழகம்
·
மாணவர்
குறைதீர்ப்பு மையம்
· பாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் விசாரணை மையம்
இவற்றுடன் வேறு சிலவற்றைச் சேர்ப்பதைக் குறித்தும் சிந்திக்கலாம்: பணிச்சேர்க்கையின்போது ஒப்படைக்கப்படவேண்டிய ஆவணங்கள், வேற்றிட நேர்முகத்தேர்வுகளுக்குச் செல்லும்போது தடையில்லாச் சான்று தேவையாயிருப்பின் அதைப்பெறுவதற்கான வழிமுறைகள், இடைக்காலத்தில் பணி விடுவிப்பு வேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகள் என. இவற்றை மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், தனியார் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆரோக்கியமான கல்விச்சூழல்தான் கற்றல்- கற்பித்தல் அனுபவத்தை இனிமையாக்கும்.
சான்றுகள்
1. பாலத்தினடியில் வசிப்பவர்களைப் பற்றிய ஆவணப்படம் Asiaville Tamil - https://www.youtube.com/watch?v=vlEggVTc9yI
2. அருண் கண்ணன், கிஷோர்குமார் சூர்யபிரகாஷ் கட்டுரை - https://www.thehindu.com/opinion/op-ed/weighing-down-the-private-unaided-college-teacher/article35571298.ece
தமிழ் வடிவம் - https://sannaloram.blogspot.com/2021/08/blog-post.html
3. கேரள சட்ட வரைவு
- https://prsindia.org/files/bills_acts/bills_states/kerala/2021/Ordinance%2038%20of%202021%20Kerala.pdf
(உயிர் எழுத்து ஜனவரி 2022)
No comments:
Post a Comment