Tuesday, April 9, 2019

இந்தித்திணிப்பும் கல்வித்துறையும்


2019 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான சோதனை ஓட்டத்தோடு துவங்கியது. தேசியக் கல்விக் கொள்கைக்கான புதிய வரைவுத்திட்டம்  எட்டாம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் எனப் பரிந்துரைப்பதாக செய்திகள் வந்தன. பின்னர் எதிர்ப்புகளும். எதிர்ப்புகள் பெருகவே ஒன்றிய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்வந்து "புதிய கல்விக்கொள்கை எந்த மொழியையும் கட்டாயமாக்கவில்லை" எனத்தெரிவித்தார்.

கடந்தவருடமும் இதேபோல் ஓர் அறிவிக்கை: நாடெங்கிலுமுள்ள சிபிஎஸ்சி பள்ளிகளிலுள்ள ஆசிரியர் பணியிடத்திற்கான தகுதித்தேர்வின் (CTET) இரண்டாம் தாளை ஆங்கிலம், இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுத முடியும். எதிர்ப்புகள் கிளம்பியதால், "தேர்வு முந்தைய வருடங்களைப்போலவே 20 மொழிகளிலும் நடத்தப்படும்" என்று அறிவித்தவரும் பிரகாஷ் ஜவடேகர்தான்.

சுதந்திர ஒன்றியம் 72 ஆம் வயதை நெருக்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கல்வித்துறையில் இருக்கும் இந்தி தொடர்பான கொள்கைகள் நம் பிள்ளைகளை எப்படியெல்லாம் பாதிக்கின்றன எனக் காண்பது இப்போது மிகவும் அவசியமாகிறது.

ஆரம்பக் கல்வியிலிருந்து துவங்குவோம். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. நாம் அனைவரும் தாய்மொழியில்தான் சிந்திக்கிறோம். வீட்டிலும் சமூகத்திலும் பயன்படுத்தப்படுகிற மொழியில் கற்பதுதான் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு உதவும். 

2017இல் வெளிவந்தநியூட்டன்’ என்கிற இந்திப்படத்தில் ஒரு காட்சி. நாயகன் பள்ளிச்சிறுவர்களுக்கு இந்தி தெரியாதா எனக் கேட்பார். அதற்குப் பதிலாக ஆசிரியை, "அவர்களின் பாடப்புத்தகங்கள் இந்தியில் உள்ளன. அவர்களுக்கு கோண்டி மொழி மட்டுமே தெரியும்" என்பார். இந்த கோண்டி மொழிக்கான செயலி இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், அவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அவர்கள் மொழியில் இல்லை.

https://en.wikipedia.org/wiki/Newton_(film)


இவ்விதமான மொழிக்கொள்கையால் மலைவாழ் குழந்தைகள் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்துகிறார்கள் என்கிறார் டெல்லிப்பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர். ஒரிசாவில், இன்றும் 100 மலைவாழ் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தால் 75-80 பேர் எட்டாம் வகுப்புத் தாண்டுவதற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்.

இந்திக்கான புதிய வார்த்தைகளை உருவாக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொல்லியல் கழகம் (Council for Scientific and Technical Terminology - CSTT) என்னும் அமைப்பை ஒன்றிய அரசு நிறுவியிருக்கிறது. இது நீதிமன்ற வழிகாட்டுதலின்படி (பின்னாளில் இது நிதிமன்றத்திற்குள்ளேயே சொற்பிரயோகங்களில் குழப்பத்தை உண்டாக்கும் என யாரும் அறிந்திருக்கவில்லை) சமஸ்கிருதத்திலிருந்து புதிய வார்த்தைகளைத் தருவிக்கிறது. இதனால் இந்தி படிக்கும் குழந்தைகளே பாதிக்கப்படுகிறார்கள். 

நீருக்கு இந்தியில்பானி  என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை; இந்துஸ்தானியிலிருந்து வந்தது. இதற்குப் பதிலாகஜல் என்கிற வார்த்தையை பாடநூலில் பயன்படுத்துகிறார்கள். சமூகத்தில் புழங்குகிற இந்தியும் கற்கும் இந்தியும் வேறாக இருக்கையில் அது உண்டாக்கும் விளைவுகள் விரும்பத்தக்கதாக இருக்காது.

2017 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஆட்சிமொழிக்குழுவின் புதிய பரிந்துரைகளில் ஒன்று:

அறிவியல் ஆய்வு இதர ஆய்வு நிறுவனங்கள் ஏராளமான தொகையைப் புத்தகங்கள் வாங்கச் செலவிடுகின்றன. இவற்றில் 50% இந்தியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று ஆணையிட வேண்டும். நூல்கள் வாங்க நிதி ஒதுக்கப்படாத துறைகளில் அலுவலகத்தின் மொத்தச் செலவில் 1% புத்தகம் வாங்கச் செலவிடப்பட வேண்டும். அந்தத் தொகையில் சரிபாதி இந்திப் புத்தகங்களுக்குச் செலவிடப்பட வேண்டும். நூல்கள் வாங்குவதற்கான தொகையில் 50% அல்லது மொத்த அலுவலகச் செலவில் 1% என்ற இரண்டில் எது அதிகமோ அந்தத் தொகைக்கு இந்திப் புத்தகங்கள் வாங்கச் செலவிட வேண்டும்.

இப்படிச் செலவிடப்பட்டு வாங்கப்படும் புத்தகங்கள், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ளவர்களால் பயன்படுத்தப்படுவதே இல்லை (அகராதிகள் தவிர்த்து - அதுவும் அலுவலர்களின் குழந்தைகளுக்கு இந்தி பயில்விக்க உதவுகின்றன) எனப் பதிவேட்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும். (அவற்றைத் துடைத்து வைக்கவும் ஒரு நாள் ஒதுக்கி அதற்கு இந்தியில் பெயரும் வைத்திருக்கிறார்கள்) அறிவியல் ஆய்வு நிறுவனங்களில், ஆய்விற்கு உதவும் புத்தகங்கள் ஆய்விதழ்களைப் புறந்தள்ளிவிட்டு இடம்பிடிக்கும் இந்திப் புத்தகங்கள் ஆய்விற்கு எந்த வகையிலும் உதவுவது இல்லை.

தேசிய தகுதித்தேர்வுகள் எனும்போது நிலைமை இன்னும் கொடுமை. தேர்வெனப்படுகையில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சம வாய்ப்பு என்பது பாடத்திட்ட அளவில் மட்டுமல்லாமல் மொழி அளவிலும் இருத்தல் வேண்டும். ஒருவரை அவருக்கு வசதியான சூழலில் வைத்து மதிப்பிடல் வேண்டும். ஒருவருக்குத் தாய்மொழியில் வாய்ப்பும் இன்னொருவருக்கு இரண்டாம்/மூன்றாம் மொழியில் வாய்ப்பும் கொடுப்பது நீதி அல்ல. தேசிய தகுதித்தேர்வுகளான எய்ம்ஸ், ஐஐடி-ஜேஈஈ, நெட் போன்றவற்றை இந்தி, ஆங்கிலம் தவிர்த்து ஒருவர் தாய்மொழியில் எழுதவியலாது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பேராசிரியர்கள் ஆராய்ச்சி முடிவுகளை தங்கள் நாட்டு ஆய்விதழ்களிலும் வெளியிடுதல் அவசியம். அவர்கள் அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும்போதோ பதவி உயர்விற்கான பரிசீலனையின்போதோ அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் அந்நாட்டு ஆய்விதழ்களின் தரமும் உயர்கிறது. ஆனால், இங்கு அத்தகைய செயல்களுக்கு முன்னுரிமையோ எவ்வித ஊக்கத்தொகையோ  இல்லை. இதனால் இந்திய ஆராய்ச்சி இதழ்களுக்கு சர்வதேச அளவில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே மதிப்பு இல்லை.

இந்தித் திணிப்பைப் பொறுத்தவரை ஒன்றிய அரசானது பதுங்கியிருக்கும் மிருகம். அது சமிக்கைகளைக் காட்டுவதே எதிர்ப்புகள் உருவாகின்றதா எனக் காணத்தான் எனத் தோன்றுகிறது. சமிக்கைகள் உருவாகும்போதே நாம் வலிமையோடு எதிர்க்கத்துவங்க வேண்டும். இல்லையேல் அது முதலில் பிடிக்கப்போவது நம் குழந்தைகளின் குரல்வளையைத்தான்.

உதவிய கட்டுரைகள்:
1. பள்ளிப் பாடநூல்கள்: உருவாக்கமும் மொழி அரசியலும் - ம.அ. சீனிவாசன், காலச்சுவடு, மார்ச் 2018.
2. ஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா? - சமஸ், தி இந்து, ஏப்ரல், 2017.
3. உனது பேரரசும் எனது மக்களும் - கோர்கோ சாட்டர்ஜி, ஆழி பப்ளிஷர்ஸ், டிசம்பர் 2017.
4. Publishing with impact - Shubashree Desikan, The Hindu, December 4, 2018.


உயிர்மை இணைய இதழுக்காக எழுதப்பட்டது. (பிப்ரவரி 2019)


No comments:

Post a Comment