Friday, April 14, 2017

இரண்டாம் காதலியைச் சந்தித்த கதை

நண்பர்களே.... இதை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்றே தெரியவில்லை என்று ஆரம்பிப்பது பழைய வழக்கம் என்றாலும் அதுதான் உண்மை. நீங்கள் ஒரு விஷயத்தை உண்மையில் எப்படி ஆரம்பிக்க வேண்டுமென்றே தெரியாத நிலையில் ஏன்றாவது ஒர் நாள் இருந்திருந்தீர்கள் என்றால் உங்களால் இதை எளிதில் விளங்கிக்கொள்ளமுடியுமென்று நம்புகிறேன். அதைப்போலவே, உங்கள் காதலியை பல வருடங்கழித்து எதேச்சையாக சந்தித்திருந்தீர்களென்றால் சொல்லவே வேண்டாம். இல்லையென்றாலும் பரவாயில்லை.

வெயிலின் உக்கிரம் துவங்கும் நேரம். கோயமுத்தூரின் முக்கிய கிளைச்சாலையொன்றில் நடந்துகொண்டிருந்தேன். மனம் புறவிஷயங்களில் கவனம் செலுத்தாததால் கண்டவை எவையும் விழித்திரையைக் கடந்து உள்ளே செல்லவில்லை. பார்த்துவிட்டேன், அவளேதான். பச்சை நிற உடையில் கைப்பையுடன் அதே அதிர்வில்லாத நடை. என் வயிற்றில் ஒரு மாற்றம்.

"மோகனப்பிரியா..."

எங்கோ பார்த்துக்கொண்டு நடந்தவள் சட்டெனத் திரும்பி ஒரு கணம் அதிர்ந்து நின்றாள்.

" மோகனப்பிரியா... என்ன ஞாபகமிருக்கா?... நல்லாருக்கியா?..."

பதில்களில் மனம் ஒன்றவில்லை.

"அப்பறம் இங்க எங்க?" கொஞ்சம் சமநிலைக்கு வந்திருந்து நான் கேட்டேன்.

"இங்கதான் வேல!"

"இங்கயா?!"

"ஆமா"

பக்கத்திலிருந்த கட்டிடத்தின் பெயரைச் சொல்லி, "நாலாவது மாடீல." என்றாள்.

"இங்கயா?!" அதிர்ச்சியில் நான்.

பேச்சைச் தொடர, "நீ... பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரிதான முடிச்ச?!" என்றேன்.

"இல்ல, பயோகெமிஸ்ட்ரி. நீ?"

"நா எம்மெஸ்ஸி. இங்கதான், ஒரு வருஷமாச்சு. இப்பதான் திருவனந்தபுரத்துல வேல கெடச்சிருக்கு. அதான் அட்டஸ்ட்டேசன் வாங்கலாம்னு வந்தேன்."

தலையை ஆட்டிக் கேட்டுவிட்டு இயல்புக்கு வந்தாள். நினைப்பு வந்தவனாய், "அக்காக்கு மேரேஜ் ஆய்டுச்சா?" என்றேன்.

ஆகியிருந்தது. "பூர்ணிமாக்கு கல்யாணமாமா!, கூப்டுருந்தா..." அவளுக்கும் தெரிந்திருக்குமென்ற நம்பிக்கையில் சொன்னேன்.
அவள் அறிந்திருக்கவில்லை. இருவருக்கும் ஏமாற்றம்.

"நானும் போகமுடியாது, நாந்தான் அப்ப அங்கிருப்பனே..." கேரளத்திசையில் கையை உயர்த்திச் சிரித்தேன்.

அலுவலகத்திற்கு நேரமாயிருக்கவேண்டும் அல்லது பேச ஒன்றுமில்லாமல் இருந்திருக்கவேண்டும். ஏதும் பேசாமல் முகம் மாறாமல் நின்றிருந்தாள்.

"ஓக்கே, அப்ப வேல இங்கதான், ஏதாச்சும் பணம் வேணும்னா வந்து வாங்கிக்கலாம்."

சிரித்துக்கொண்டே ஆமோதித்தாள்.

ஆச்சரியமடைந்து அவளைப் பார்க்க முயன்றேன். என் முக மாற்றத்தை கவனிப்பது நன்றாகத் தெரிந்தது.
கொஞ்சம் பதட்டமடைந்திருந்தேன். உள்ளுக்குள் கைபேசி எண் கேட்கலாமாவென்ற சிந்தையோடியது.

அனைத்தையும் நிறுத்திவிட்டு எதுவும் பேசாமல் இடமும் வலமும் பார்த்துவிட்டு மறுபடியும் ஆரம்பித்தேன். நா வறண்டிருந்தது,

"ஓக்கே... நல்லாப் பன்னு... பாப்போம்..."

தலையாட்டினாள். நடைபாதைக்கற்கள் புரண்டிருந்த பாதையில் எதிரெதிர்த் திசைகளில் திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.
+++++++++++++++++++++++++++++++

கைபேசியெண் வாங்கப்போன கதை
+++++++++++++++++++++++++++++++

கைப்பேசி எண் வாங்காதது ரெம்ப நேரம் உறுத்திக்கொண்டிருந்தது. இரண்டு நாள் கழித்து அதே இடத்திற்குச் சென்றேன். மணி 9.45. பார்த்து வாங்கிவிட வேண்டியதுதான். நிச்சயம் வருவாள், எதிர்வரும் பாதையில் சென்று வாங்கவேண்டுமென்பது திட்டம்.

எதிர்ப்படவில்லை.

திருப்பூர் செல்லும் பேருந்தேறி அமர்ந்து கைப்பேசியை நோண்ட ஆரம்பித்தேன். திடீரென ஞாபகம் வந்தவனாய் சாலையின் மறுபுறம் பார்த்தேன். திருப்பூரிலிருந்த வந்த பேருந்திலிருந்து ஆட்கள் இறங்கி நடந்துகொண்டிருந்தனர். இருக்கையிலிருந்து எழுந்து பேருந்தின் பின்புறக்கண்ணாடி வழியாகப் பார்த்தேன். அவளேதான்.

வெள்ளையும் கத்தரி நீலமும் கலந்த உடையில் நகர்ந்து கொண்டிருந்தாள். கூந்தலில் வெள்ளை நிறப்பூக்கள் நான்கைந்து. இப்போதெல்லாம் முடியை வெட்டிக்கொள்வதில்லைபோலும். இருக்கையிலமர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த அவளது முகத்தை நினைவுக்குக் கொண்டுவர முயன்றேன், தெளிவாக நினைவிலில்லை.

மனதிலிருக்கும் அவளின் அழியாத சித்திரத்தை மீட்டெடுத்தேன். பள்ளிக்கல்வி முடிவுக்குவந்த மார்ச் மாதத்தின் இறுதி அல்லது ஏப்ரல். ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் நண்பனைப் பார்க்கச் சென்றிருந்த மிதிவண்டிப்பயணமது. நகரத்திற்குச் செல்லும் பேருந்து, தாங்கிகள் நெகிழும் ஓசையுடன் தன் மொத்த எடையைக் கால்களால் தாங்கவியலா முதிர்ந்த எருமையைப் போல் மூச்சு வாங்கியபடி நிறுத்தத்தில் வளைந்து நின்றது. குறுக்கே சென்ற செந்நிறப் பசுவொன்று எதிரில் செல்லும் என்னையும் நிறுத்தியது. வலப்பக்கம் திரும்பி பேருந்தின் ஒவ்வொரு சாளரத்தையும் பார்வையால் கடந்து கொண்டிருந்தேன். ஒன்றில் மாறாத புன்னகை. வருடத்திய சினேகத்தை தாங்கி ஊடுருவி நிற்கும் பால் போன்ற தூய கண்கள். சில நொடிகள்தான், காலம் உறைந்து நின்ற அற்புதக் கணம். எதுவும் பேசவில்லை. பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு இடப்புறம் திரும்பி வண்டியை நகர்த்தி நிகழ்காலத்திற்கு வந்தேன். அந்தக் கண்களின் ஒளி குன்றாதிருக்கட்டும் என நினைத்துக்கொண்டேன்.

14.05.2016
05:27 pm

No comments:

Post a Comment