Saturday, May 28, 2022

அமைச்சர் பொன்முடி பேசியவையும் நாம் பேசவேண்டியவையும்

 உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின்இந்தி படித்தவர்கள் கோயம்பத்தூரில் பானிபூரி விற்கிறார்கள்” என்னும் கருத்தை தொழில்/வர்க்க ஏற்றத்தாழ்வு குறித்த கருத்தாக மட்டும் கண்டு வட இந்திய ஊடகங்களும், தமிழகத்தில் சிலரும் கண்டித்ததை வெறுமனே கடந்துவிட இயலாது. ஒன்றிய அரசின் மொழிக்கொள்கைகளால் மொழிச் சிறுபான்மையினருக்கு நிகழும் அவமானங்களையும் வாய்ப்பிழப்புகளையும் உணர்ந்த ஒரு மனம் அதைக் கோபத்துடனோ எள்ளலுடனோ முன்வைக்கும்போது சரியான தர்க்க அறிவுடன் வெளிப்படுத்தவேண்டிய அவசியமும் இருக்கிறது.

எப்போதெல்லாம் மொழிக்கொள்கை தொடர்பான எதிர்ப்புகள்/விவாதங்கள் தமிழகத்திலிருந்து எழுகிறதோ, அப்போதெல்லாம் அது தமிழ்-இந்தி இருமுனைப் போட்டியாக மட்டும் சுருக்கி, மொழிப்பெருமை-மொழிப்பெரும்பான்மை, அரசுப்பள்ளி-தனியார்பள்ளி, மாணவர் உரிமை-அரசின் இடையீடு, பிற மாநிலங்கள்-தமிழ்நாடு என விவாதங்களை எடுத்து நீர்க்கச் செய்யும் கள்ளத்தனம் கண்டிக்கப்படவேண்டும். அதற்கான வழி இந்தியினால் தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தி பேசும் மாநிலங்களிலேயே அசமத்துவதுடன் நடத்தப்படும் குடிமக்களைப்பற்றிப் பேசவேண்டும்; ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தில் ஒரு மொழியினால் எல்லா மாநிலத்தவரும் என்னென்னவெல்லாம் இழக்கிறார்கள் என்பதுவும் பேசப்பட வேண்டும்.

கல்வி வேலைக்கான இடம்பெயர்வுகள் தவிர்க்க இயலாதவை எனும்போது வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மற்றமைக்கு நிகழும் இடம்பெயர்வுகள் சமமாகப் பார்க்கப்படுவதும் தவிர்க்க இயலாதது. அதே நேரத்தில் இடம்பெயர்வுகள் எதன்பொருட்டு நிகழ்கின்றன என்பதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதும் அவசியம். பெரும்பாலான இடம்பெயர்வுகளுக்கு வேலைவாய்ப்பின்மைதான் காரணமெனினும் மக்கள் தொகை, அரசின் திட்டங்கள், கல்வி - தொழில் வளர்ச்சி, மனிதவளக் குறியீட்டில் மாநிலங்களின் இடம் என பலவற்றைத் தொட்டுச் செல்லவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது சமூக பொருளாதார அடிப்படையில் யார்யாரெல்லாம் இடம்பெயர்கிறார்கள் என்பதும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியமிக்கிறது.

தெற்கிலிருக்கும் பானிபூரி விற்பவர்கள், ஆடைத் தொழிற்சாலை, கட்டிட வேலை, துப்புரவுப்பணியாளர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட/கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வருபவர்கள். தென்னகம் நோக்கி வரும் மற்றொரு பிரிவினர் எல்லாமும் வாய்க்கப்பெற்ற சாதிய/வர்க்க நிலையில் மேற்படியில் இருப்பவர்கள். சென்னை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலுள்ள தனியார் மென்பொருள்/சேவைத்துறைகளில் உயர்பதவி வகிப்பவர்களும் கூட. அவர்கள் எந்த மொழியினால் இந்த வாய்ப்பைப்பெற்றார்கள் என்கிற கேள்வியைக் கேட்போம். உடன் அங்கு நடக்கும் மொழி, இன, சாதிய அரசியல் குறித்தும் பேசுவோம். கர்நாடக மண்ணில் கன்னடிகர்களிடம்இந்தி பேசக் கற்றுக்கொள்” என்னும் தடித்தனம் குறித்துப் பேசுவோம்.   பானிபூரி விற்பவர்களுக்கு நிகராக இவர்களையும் வைத்துப்பேசுவது அவசியம். 

எனவே நாம் விவாதிக்க வேண்டியது இந்தியினால் நாம் பெற்றது என்ன/பெறப்போவது என்ன என்பதை மட்டுமல்ல, இந்தியினால் நாம் என்னென்னவெல்லாம் இழந்தோம்/இழந்துகொண்டிருக்கிறோம் என்பதையும்தான். மத்திய அரசுப்பணி (இரயில்வே, எஸ்எஸ்சி, இராணுவம்) மற்றும் கல்வி/ஆய்வு உதவித்தொகைக்கு நடத்தப்படும் எழுத்து/நேர்முகத்தேர்வுகள் (NET), இந்தி பேசுபவர்களுக்கு அனுகூலமாக இருப்பதுவும் இத்தகைய விவாதங்களில் சுட்டிக்காட்டப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் எவ்வாறு வட இந்தியர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது என்பதையும் தேர்வில் அவர்கள் தேர்ச்சி சதவிதம் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த பெற்றோரும் சுற்றமும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களும் அமையப்பெற்ற நான், அரசுப்பள்ளியில் சேர்ந்த பின்னரே, ஆங்கிலத்திற்கும் முன், தமிழில் எழுதப்பட்டிருந்த இந்திச் சொற்றொடரை வாசித்தேன்: சர்வ சிக்ஷ்ய அபியான் திட்டம். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு/விண்கலன்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் வைக்கும் பழக்கம் எனக்கும் முன்பே பிறந்து என்னுடனேயே வளர்ந்து இன்னமும் துன்பங்களைக் கொடுத்தவண்ணமே இருக்கிறது. இன்றும் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளில் கேள்வித்தாள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு ஒருமுறையும் பதில் சரியாக எழுதியதில்லை. தேர்வுக்கான வாசிப்பில்லை எனலாம்; ஆனால், இந்தியறிந்த ஒருவருக்கு அந்தப்பெயராலேயே திட்டத்தின் நோக்கம் விளங்கி வாசிப்பில்லையெனினும் பதிலளிக்க இயலும்.

ரூபாய் நோட்டுக்கள், பாஸ்போர்ட், தொடர்வண்டிப்பயணச் சீட்டுகள், விமானத்தினுள் செய்யும் அறிவிப்புகள், ஒன்றிய அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் மக்கள் தொடர்பில் நிகழும் மொழி சார்ந்த அசமத்துவச் செயல்பாடுகள், ஒன்றிய அரசு ஒவ்வொரு மொழிக்கும் செலவிடும் ரூபாய்கள், சிறப்பு தினங்கள், இந்திப் பிராந்தியங்களில் மொழிச்சிறுபான்மையினர் பயிலும் ஆரம்பக் கல்விச் சாலைகளில் தாய்மொழியில் நூல்கள் இல்லாத அவலம், ஆங்கிலத்தை அணுக இந்தி அவர்களுக்கு எங்கனம் தடையாக இருக்கிறது போன்றவற்றை விளக்க ஆரம்பித்தாலே எத்தகைய அசமத்துவம் இம்மண்ணில் மொழிவழி நிகழ்கிறது என்பதைக் கண்டுகொள்ள இயலும். நாம் தொட வேண்டியது ஒட்டுமொத்த இந்திய மனங்களை, அது வெறுப்பின்-எள்ளலின் மொழியில் சாத்தியமில்லை. குறிப்பாக ஊடக வியாபார யுகத்தில்.

எனவே மொழி தொடர்பான விவாதத்தில் இனி இந்தி எப்படியெல்லாம் எங்களைத் துன்பப்படுத்துகிறது, என்னென்ன வாய்ப்புகளை இழக்கிறோம் என்பதைப் பேசுவோம். கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்கையில் விமான அறிவிப்புகள் தமிழில் இல்லை என. பாஸ்போர்ட்டில், பயணச்சீட்டில் எங்கள் தாய் மொழி இல்லை, ஒரு தொலைபேசி அழைப்பில் ஆங்கிலக் குரலுக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது என. வருடம் ஒருமுறை எதாவது ஒரு தேர்வை தமிழிலும் நடத்தவேண்டும் என நாங்கள் சாலைக்கு வரவேண்டும் என. தமிழகத்திற்கு வந்து பாருங்கள் என்போம்: திருப்பூரிலும் சென்னையிலும் இந்தி பேசுபவர்கள் அதிகமுள்ள இடங்களில் பேருந்தில் இந்தி மொழிப் பலகைகள் இருப்பதை, பேருந்துக்கு எல்லா இடங்களிலும் எண்கள் வழக்கப்பட்டியிருப்பதை, கன்னியாகுமரியில் வட இந்திய மொழிகள் தமிழர் நாவில் உறவாடுவதை.

சொல்லுவோம் "இந்தி கற்றுக்கொள்ளுங்கள், நல்லது" என்பதை யாரும் எடுத்துரைக்க வேண்டியதில்லை என. தாய்மொழியும் ஆங்கிலமுமே வாசிக்க இயலாத கற்றல்குறைபாடுகள் இருக்கும் தலைமுறையிடம் தங்கத்தட்டில் இன்னொரு மொழியை வைத்து நீட்டுவதில் உபயோகமில்லை என்று. இம்மக்களின் பிரதிநிதிகள் இங்கு ஆளவும் முரண்படவும் இருக்கிறார்கள் என. எங்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது, சுயசிந்தனை இருக்கிறது, எது நல்லது என சிந்தித்து முடிவெடுக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டுவிடுங்கள் என்பதைச் சொல்லுவோம். கூடவே உங்கள் அறிவுரைகள் எங்களுக்கு ஆபாசமாக இருக்கிறது: சைவ உணவுக்கு மாறுங்கள், வெங்காயம் பிடிக்கவில்லை எனில் சாப்பிடாதீர்கள் என்னும் குரல்கள் எத்தகைய அருவருப்பை உண்டாக்குகிறதோ அத்தகைய அருவருப்பு என்பதையும்.

எனவே நாம் இந்தி-தமிழ் என நிறுத்தும் கருத்தியல்களைக் களைந்து இந்தி-இந்திய மொழிகள் என நகர வேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் செய்ய பல ஆண்டுகள் ஆகும்; ஏனென்றால், இந்தி தேசிய மொழி இல்லை என்கிற பொய்யை உடைக்கவே நம் ஆரம்பக் கல்வியிலிருந்து வேலையைத் துவங்க வேண்டியிருக்கிறது. இந்தி தேசிய மொழி அல்ல என்கிற சொற்றொடரை நாம் வாய்ப்பிருக்குமிடங்களில்லாம் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்; நம் விவாதங்களை அப்படித்தான் துவங்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்படுவதும், இந்திய மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கும், நோபெல் பரிசுகளைப் பெற்றுத்தந்த ஆங்கில மொழிக்கு எதிரான ஒரு வெறுப்பும் சமீபகாலங்களில் அதிகளவில் பரப்பட்டுக் கொண்டிருக்கிறது; நாம் அதற்காகவும், அது ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளுக்காகவும் இந்தி ஏற்படுத்தும் மொழிச்சவத்துவமின்மை குறித்து உரையாடியாகவேண்டியிருக்கிறது. மொழிப்பன்மைத்துவம் என்பது இந்திய ஒன்றியத்தின் சிக்கல் மட்டுமல்ல, ஆப்ரிக்க நாடுகள், சுவிட்சர்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு மொழிக்குடும்பங்களைக் கொண்ட நாட்டிலும் உள்ள பொது அம்சம். அதை அவர்கள் எங்கனம் எதிர்கொண்டார்கள், பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என மொழி ரீதியிலான ஏற்றத்தாழ்வில்லாத ஒரு சமூகமாக அவர்கள் எவ்வாறு நிற்கிறார்கள் என்பது குறித்தும் நாம் உரையாடலைத் துவங்கவேண்டியிருக்கும். அது ஒட்டுமொத்த இந்திய மனங்களைத் தொடுவதாக நிச்சயம் அமையும்.

Wednesday, February 16, 2022

விவாத களம் - எதிர்வினை

13-02-2022 ஆம் தேதி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்த குறிப்பு : விவாத களம்: நீட் சமூகநீதிக்கு ஆதரவானது! - நாராயணன் திருப்பதி 

குறிப்பை நான் அடுத்த தினம் வாசித்தேன், அதற்கான எதிர்வினையை அன்றிரவே அனுப்பி வைத்தேன். அது கீழே.

"நீட் சமூகநீதிக்கு ஆதரவானது" என்கிற தலைப்பில் பாஜக செய்தித் தொடர்பாளர் திரு. நாராயணன் திருப்பதியின் கருத்துக்களைப் படித்தேன். அது தொடர்பாக சிலவற்றைத் தெளிவுபடுத்தலாமென நினைக்கிறேன்.  

 ‘நீட் கட்டாயம் தேவை' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது உண்மை. அதே நேரத்தில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த மருத்துவக் கல்லூரி தகுதித் தேர்வான நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. நீட் பயிற்சி மையங்களில், பெரும் தொகை வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த பல திட்டங்களை தற்போதைய அரசு திரும்பப் பெற்ற நிலையில், ஏன் நீட் தேர்வை மட்டும் திரும்பப் பெறக்கூடாது எனவும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.[1] 

நீட் வருகைக்கு முன்பு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் கோழிப்பண்ணைப் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தியது எவ்வளவு உண்மையோ, நீட் வருகைக்குப் பின்பு முன்பைவிட அதிக அளவில் அத்தகைய தனியார் பள்ளிகளுடன் நீட் தனிப்பயிற்சி மையங்களும் இணைந்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் பெரும் சமூக அநீதியை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. எப்படியென்றால் தனியார் பள்ளிகள் நீட் பயிற்சி மையங்களுடன் இணைத்து ஒப்பந்தம் செய்து கொள்வதால் பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்கள் முழு நேரமும் நீட் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுதத் தேவையான வருகைப்பதிவைப் பள்ளிகள் வழங்குகின்றன. மாணவர்கள் பயிற்சி நேரம், கட்டணத்தைப் பொறுத்து அவர்களை சில்வர், கோல்டு, எமரால்ட், ரூபி எனப் பிரித்துள்ளனர். இது திருவனந்தபுரத்தில் நீட் பயிற்சி மையத்தில் பணியாற்றும் என் நண்பர் கொடுத்த தகவல். 

மேலும் "2021-ல் தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்கள் 25,593 பேரில், 10,511(40%) பேர் மட்டுமே பயிற்சி எடுத்ததாகக் குறிப்பிட்டவர்கள், 15,082 மாணவர்கள் பயிற்சி எடுத்ததாகக் குறிப்பிடவில்லை." என்கிற செய்தியை அண்மையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் ட்வீட்டரில் குறிப்பிட்டிருந்தார்.[2] மேற்கோள் காட்டப்படுவது தி இந்து ஆங்கிலப்பதிப்பின் செய்தி. அந்த ஆய்வு தரும் மேலும் சில சதவிகிதக் கணக்குகளைப் பார்க்கலாம். [3] [4]




1. 59% பெயர் எந்தவித தனிப் பயிற்சிக்கும் செல்லவில்லை. அவர்கள் அரசு இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த தனியார் பள்ளி மாணவர்கள் எனத் தெரிகிறது. அதே தேர்வுக்கு 7.5% இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 1806 பேர். 

2. தனிப்பயிற்சி எடுத்தவர்களில் தேர்வானவர்கள் - 98.28% (10331/10511) பேர். தனிப்பயிற்சி எடுக்காமல் தேர்வானவர்கள் - 96.92% (14618/15082) பேர். தனிப்பயிற்சி எடுத்தவர்களுக்குத்தான் தேர்வு சாதகமாக இருக்கிறது. ஆனால் இதிலும் தனிப்பயிற்சி எடுக்காதவர்கள் தனியார் பள்ளிகளில் பயிற்சி எடுக்கவில்லையா என்கிற  கேள்விக்கு விடை தெரியவில்லை.

3. ரிப்பீட்டர்களின் - ஒருமுறைக்கும்மேல் தேர்வு எழுதுபவர்கள் - தரவுக்கு வருவோம். முதலில் இந்த ரிப்பீட்டர்கள் வீட்டிலிருந்து படிப்பவர்களா அல்லது தனிப்பயிற்சி எடுப்பவர்களா என்பது குறித்த தகவல்கள் இல்லை. என்றாலும், ஒரு வருடம் நீட் தேர்விற்காகச் செலவிடும் பொருளாதார வலிமை உள்ளவர்கள் என்பது தெளிவு. தேர்வில் வென்ற 2021 ஆம் கல்வியாண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் - 96.68% (9976/10318). தேர்வில் வென்ற ரிப்பீட்டர்களின் தேர்ச்சி சதவீதம் - 98.02% (14973/15275). தேர்வு பொருளாதாரத்தில் வலுவுள்ள ரிப்பீட்டர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

4. அது மட்டுமில்லது 2021 ஆம் கல்வியாண்டு மாணவர்களுடன் (10318) தேர்வு எழுதிய ரிப்பீட்டர்கள் அவர்களைக் காட்டிலும் 1.4 (15275) மடங்கு அதிகம். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 2021 ஆம் கல்வியாண்டு (9976) மாணவர்களைக் காட்டிலும் 1.5 மடங்கு (14973) அதிகம்.

5. தேர்வு எழுதுகிறவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களைக் காட்டிலும் (2147) ஆங்கில வழியில் படித்தவர்கள் 10.9 (23411) மடங்கு அதிகம். தேர்ச்சி பெறுபவர்களிலும் அதே சதவீதம் (2094/22853) தொடர்கிறது. எனவே நீட் ரிப்பீட்டர்களுக்கும் ஆங்கில வழியில் பயில்பவர்களுக்கும் சாதகமாக இருக்கிறது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு இன்றைய பாஜக தலைவரும், அன்றைய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அதே சமயத்தில், அது குடியரசுத்தலைவர் ஒப்புப் பெற தமிழக சட்டமன்றமும் கட்சிகளும் எடுத்த முயற்சிகளையும்  பிற மாநிலங்களில் அத்தகைய சட்ட வழிகள் எதுவும் இல்லை என்பதையும் நினைவுகூர வேண்டும். நீட்டுக்குப் பிறகுதான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. எனவே நீட்டுக்கு முன்பான அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை, நீட்டிற்குப் பிறகான அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நீட்டால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் இடம் கிடைக்கிறது என வாதிடுவது சரியல்ல. [5]

மேலும் முதுகலை மருத்துவப்படிப்பிற்கான ஓபிசி, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான இடஒதுக்கீடு பல வருடங்களாக மறுக்கப்பட்டதையும், நடப்பாண்டில் அதை பெற நிகழ்ந்த சட்டப் போராட்டங்களையும் நாம் நினைவுகூரவேண்டும். நீட்டால் 2017-2020 காலகட்டத்தில் இடம் மறுக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டும் 11027 பேர் என்கிறார் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் தலைவர் திரு. கருணாநிதி. இந்த விஷயத்தில் சமூகநீதி  மறுக்கப்பட்டது மறுக்கப்பட்டதுதான், கடந்தகாலத் தவறுக்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. [6] 

நீட் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை ஒழிக்கவில்லை. தேர்வர்களால் மட்டுமல்லாது தேர்வாளர்களாலும் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்திலும், பலர் சிறையிலும் இருப்பதையும் அண்மையில் முதல்வர் தன் சட்டமன்றப் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். எனவே நீட் களங்கமற்ற தேர்வுமுறையும் அல்ல.

மேலும் நீட் தரம் வாய்ந்த மருத்துவர்களை உருவாக்குகிறது என்கிற கருத்தை நான் மறுக்கிறேன். பனிரெண்டாம் வகுப்புத் தேர்வினடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களே உள்நுழைந்தனர். ஆனால், 2017ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய ஆய்வில் நீட் தேர்வில் 720க்கு 150க்கும் கீழான மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள் 1990 பேர். அவர்களில் 530 பேர் ஒற்றை இலக்க/பூஜ்ஜிய/புஜ்ஜியத்திற்கும் குறைவான எதிர்க்குறி மதிப்பெண்களை இயற்பியல்/வேதியியல் அல்லது இரு பாடங்களிலும் பெற்றிருந்தனர். [7] 

நீட் சமூகநீதிக்கு ஆதரவானது எனச் செல்லும்முன் அரசுப்பள்ளி-தனியார்பள்ளி, தமிழ்வழி-ஆங்கிலவழி, ஒருமுறை எழுதுபவர்கள்-பலமுறை எழுதுபவர்கள், ஏழைகள்-பணம்படைத்தோர், தனிப்பயிற்சி பெற்றோர்-தனிப்பயிற்சி பெறாதோர் என்ற இருமைகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வைக் கூட்டுவதையும், மதிப்பெண் வழங்கும் முறையையும், கடந்தகால முறைகேடுகள் தொடர்பான விடையற்ற கேள்விகளையும், சமூகநீதிக்கு எதிராக இருந்ததையும் இருப்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

சான்றுகள்:




4. இதுபற்றி ட்வீட்டரில் முன்பே எழுதியிருக்கிறேன். https://twitter.com/vjsays_/status/1490735151038406656





 

Wednesday, January 12, 2022

சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்

வேளச்சேரி பாலத்தின் அடியில் குடும்பத்துடன் வசிப்பவர்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். கொசு, எலி, பாலியல் தொல்லை, நுரையீரலைப் பாதிக்கும் நுண்துகள்கள், ஓயாத இரைச்சல் தரும் உறக்கமின்மை, அஃதீனும் மன அழுத்தம் இவற்றுடன் அவர்களின் வசிப்பிடத்தில் தெரு நாய்களும் தஞ்சம் புகுந்துள்ளன. அரசால் நடத்தப்படும் உறைவிடங்கள் ஆண்கள், பெண்கள் எனத் தனித்திருப்பவர்களுக்காக இயங்குகையில், அங்கு குடும்பமாகச் செல்ல இயலாதவர்கள் இப்படி பொதுச் சமூகம் எளிதில் அணுகும் இடத்தில் வசிப்பதுதான் அவர்களுக்கான அன்றாட வேலையைப் பெற்றுத்தருகிறது. பெரும்பாலும் கட்டிட வேலைக்கு செல்லும் இவர்களில் ஒருவராகத்தான் அப்பெண்மணியைக் கண்டேன். வேலை விவரணைகளுக்குப் பின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு நாணமெழ, உதடுகள் மடக்கி இளங்கலை ஆங்கிலமும் கல்வியியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருப்பதாகச் சொல்லி முடித்தார். ஆசிரியப் பணிக்கு செல்லலாமே என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்: ஆசிரியராகச் செல்கையில் ஒரு நாள் சம்பளம் 160, கட்டிடப்பணிக்கு 700. இத்தகு வாழ்வில் ஈட்டுவது தன் மகனுக்காக எனச் சொன்னார். பதினாறு வருடப் படிப்பிற்குப்பின் கூலிவேலைக்குச் செல்லும் ஓர் அன்னையின் மனம் தன் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பும்போது என்னவாக இருக்கும்? கல்வி ஒன்றுதான் நம்மை உயர்த்தும் என் நம்பும் ஒரு சமூகத்தில் அதற்கான பாதைகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா? ஒரு மகிழ்ச்சியான வகுப்பறையும், கற்றல்-கற்பித்தல் செயல்பாடும் ஆசிரியருக்கான கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதிலிருந்து துவங்குகிறன. 

சில மாதங்களுக்கு முன், லயோலா கல்லூரி தொழிற்கல்வி மைய இயக்குனர் பி அருண் கண்ணன் மற்றும் எம்ஐடி முனைவர் பட்ட ஆய்வாளர் கிஷோர்குமார் சூர்யபிரகாஷ் இணைந்து நடத்திய ஆய்வில் பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இதுபோன்ற உழைப்புச் சுரண்டல் தனியார் கல்வி நிறுவனங்களில் பரவி இருப்பதை உறுதி செய்தது. சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களிடம் நடத்திய ஆய்வில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்ததைக் காட்டிலும் குறைவான ஊதியமே பெற்று வருவதை அறிய முடிந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 72 சதவீதம் பேரின் மாத ஊதியம் 25 ஆயிரம் ரூபாய்க்கு கீழ். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, சம்பள உயர்வு, முறையான விடுப்பு, தொழிலாளர் நலத் திட்ட உதவிகள் என எந்த அடிப்படை உரிமையும் இல்லை. பெருந்தொற்றால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டபோது வேலை இழப்பிற்கும் ஊதியக்குறைவிற்கும் ஆளான இவர்கள், உடல் உழைப்பைக் கோரும் கட்டிட, உணவு விநியோகிக்கும் வேலைகள் உட்பட்ட கூலி வேலைகளுக்குச் சென்றனர். இவர்களில் பனை ஏறும் தொழிலுக்குச் சென்றவறொருவர் உயிரிழந்தார். கட்டுரையாளர்களின் கோரிக்கை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (முறைப்படுத்தும்) சட்டம் - 1976 திருத்தி அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென இருந்தது.

குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் இல்லாத ஒரு நாட்டில் இத்தகைய இடையீட்டிற்கு ஒரு அரசிற்குத் தயக்கங்கள் இருக்கலாம். நடைமுறையில் ஏனைய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் இருக்கும் நிலையில் அத்தகைய அமைப்பு ஏதும் இல்லாத தனியார் கல்வி நிறுவனப் பணியாளர்களுக்கு அரசின் இத்தகைய இடையீடு அவசியமானதும் கூட. அதைத்தான் கேரள அரசு செய்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் கேரள சட்டப்பேரவை கொண்டு வந்த, தனியார் கல்லூரிப் பணியாளர் சட்டத் திருத்தத்தின் (Kerala Self Financing College Teaching and Non-teaching Employees (Appointment and Conditions of Service) Ordinance, 2021 (38 of 2021).) மூன்றே பக்கங்கள் அவர்களுக்கு நிம்மதியான பணிச்சூழலை உறுதி செய்கின்றன. அவற்றில் சில:

1.      காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு நேர்காணலுக்குப் பின் தரவரிசை வெளியிடப்பட வேண்டும். தெரிவு செய்தவர்களைப் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவித்த பின் பணியமர்த்தப்படல் வேண்டும்

2.      பணியமர்த்தல் மற்றும் பணி ஓய்விற்கான வயது வரம்பினை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்

3.      பணியாளர்கள் சேர்ப்பு, வருகைப்பதிவு, அவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கான பதிவேடுகள் வைக்கப்படவேண்டும். அவை குறித்த தகவல்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்

4.      பணி, பணி மூப்பு, பணி உயர்வு, பணிக் காலம், ஊதியம், ஊதிய உயர்வு, கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் குறித்த தகவல்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதனுடன் தொழிலாளர் நலுனுக்கென வேறேதும் அம்சங்கள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்.  

5.      வேலை நேரம் மற்றும் நாட்கள், சம்பளத்துடன்கூடிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை அரசுக் கல்லூரி ஊழியர்களுக்கு உள்ளதைப் போலவே தொடரவேண்டும்

6.      ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் பயனாளராகச் சேர்க்கப்படல் வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்பட வேண்டும்

7.      பணியாளர்கள் மீதான ஒழுங்கு மீறல் நடவடிக்கைகளை அந்தந்த கல்வி நிறுவனங்களே எடுக்கலாம். பணியாளர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தால் பல்கலைக்கழகத்தில் மேல்முறையீடு செய்யலாம்

8.      பணியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வரையறுக்கப்பட வேண்டும். நல்நோக்கத்துடன் வரையறுக்கப்படும் இவ்விதிகளுக்கு எதிராக பல்கலைக்கழகத் துணைவேந்தர்மீதோ, அலுவலர்கள்மீதோ எவ்விதச் சட்ட முன்னகர்வும் ஊக்குவிக்கப்படக் கூடாது

9.      கல்வி நிறுவனங்கள் கீழ்க்கண்ட அமைப்புகளை நிறுவ வேண்டும்

·        கல்லூரி நிலைக்குழு

·        அக தர நிர்ணயக் குழு

·        பெற்றோர் ஆசிரியர் கழகம்

·        மாணவர் குறைதீர்ப்பு மையம்

·        பாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் விசாரணை  மையம் 

இவற்றுடன் வேறு சிலவற்றைச் சேர்ப்பதைக் குறித்தும் சிந்திக்கலாம்: பணிச்சேர்க்கையின்போது ஒப்படைக்கப்படவேண்டிய ஆவணங்கள், வேற்றிட நேர்முகத்தேர்வுகளுக்குச் செல்லும்போது தடையில்லாச் சான்று தேவையாயிருப்பின் அதைப்பெறுவதற்கான வழிமுறைகள், இடைக்காலத்தில் பணி விடுவிப்பு வேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகள் என. இவற்றை மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், தனியார் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆரோக்கியமான கல்விச்சூழல்தான் கற்றல்- கற்பித்தல் அனுபவத்தை இனிமையாக்கும்

சான்றுகள்

1.      பாலத்தினடியில் வசிப்பவர்களைப் பற்றிய ஆவணப்படம் Asiaville Tamil - https://www.youtube.com/watch?v=vlEggVTc9yI 

2.      அருண் கண்ணன், கிஷோர்குமார் சூர்யபிரகாஷ் கட்டுரை - https://www.thehindu.com/opinion/op-ed/weighing-down-the-private-unaided-college-teacher/article35571298.ece

தமிழ் வடிவம் - https://sannaloram.blogspot.com/2021/08/blog-post.html 

3.      கேரள சட்ட வரைவு - https://prsindia.org/files/bills_acts/bills_states/kerala/2021/Ordinance%2038%20of%202021%20Kerala.pdf


(உயிர் எழுத்து ஜனவரி 2022)