Saturday, May 28, 2022

அமைச்சர் பொன்முடி பேசியவையும் நாம் பேசவேண்டியவையும்

 உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின்இந்தி படித்தவர்கள் கோயம்பத்தூரில் பானிபூரி விற்கிறார்கள்” என்னும் கருத்தை தொழில்/வர்க்க ஏற்றத்தாழ்வு குறித்த கருத்தாக மட்டும் கண்டு வட இந்திய ஊடகங்களும், தமிழகத்தில் சிலரும் கண்டித்ததை வெறுமனே கடந்துவிட இயலாது. ஒன்றிய அரசின் மொழிக்கொள்கைகளால் மொழிச் சிறுபான்மையினருக்கு நிகழும் அவமானங்களையும் வாய்ப்பிழப்புகளையும் உணர்ந்த ஒரு மனம் அதைக் கோபத்துடனோ எள்ளலுடனோ முன்வைக்கும்போது சரியான தர்க்க அறிவுடன் வெளிப்படுத்தவேண்டிய அவசியமும் இருக்கிறது.

எப்போதெல்லாம் மொழிக்கொள்கை தொடர்பான எதிர்ப்புகள்/விவாதங்கள் தமிழகத்திலிருந்து எழுகிறதோ, அப்போதெல்லாம் அது தமிழ்-இந்தி இருமுனைப் போட்டியாக மட்டும் சுருக்கி, மொழிப்பெருமை-மொழிப்பெரும்பான்மை, அரசுப்பள்ளி-தனியார்பள்ளி, மாணவர் உரிமை-அரசின் இடையீடு, பிற மாநிலங்கள்-தமிழ்நாடு என விவாதங்களை எடுத்து நீர்க்கச் செய்யும் கள்ளத்தனம் கண்டிக்கப்படவேண்டும். அதற்கான வழி இந்தியினால் தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தி பேசும் மாநிலங்களிலேயே அசமத்துவதுடன் நடத்தப்படும் குடிமக்களைப்பற்றிப் பேசவேண்டும்; ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தில் ஒரு மொழியினால் எல்லா மாநிலத்தவரும் என்னென்னவெல்லாம் இழக்கிறார்கள் என்பதுவும் பேசப்பட வேண்டும்.

கல்வி வேலைக்கான இடம்பெயர்வுகள் தவிர்க்க இயலாதவை எனும்போது வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மற்றமைக்கு நிகழும் இடம்பெயர்வுகள் சமமாகப் பார்க்கப்படுவதும் தவிர்க்க இயலாதது. அதே நேரத்தில் இடம்பெயர்வுகள் எதன்பொருட்டு நிகழ்கின்றன என்பதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதும் அவசியம். பெரும்பாலான இடம்பெயர்வுகளுக்கு வேலைவாய்ப்பின்மைதான் காரணமெனினும் மக்கள் தொகை, அரசின் திட்டங்கள், கல்வி - தொழில் வளர்ச்சி, மனிதவளக் குறியீட்டில் மாநிலங்களின் இடம் என பலவற்றைத் தொட்டுச் செல்லவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது சமூக பொருளாதார அடிப்படையில் யார்யாரெல்லாம் இடம்பெயர்கிறார்கள் என்பதும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியமிக்கிறது.

தெற்கிலிருக்கும் பானிபூரி விற்பவர்கள், ஆடைத் தொழிற்சாலை, கட்டிட வேலை, துப்புரவுப்பணியாளர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட/கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வருபவர்கள். தென்னகம் நோக்கி வரும் மற்றொரு பிரிவினர் எல்லாமும் வாய்க்கப்பெற்ற சாதிய/வர்க்க நிலையில் மேற்படியில் இருப்பவர்கள். சென்னை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலுள்ள தனியார் மென்பொருள்/சேவைத்துறைகளில் உயர்பதவி வகிப்பவர்களும் கூட. அவர்கள் எந்த மொழியினால் இந்த வாய்ப்பைப்பெற்றார்கள் என்கிற கேள்வியைக் கேட்போம். உடன் அங்கு நடக்கும் மொழி, இன, சாதிய அரசியல் குறித்தும் பேசுவோம். கர்நாடக மண்ணில் கன்னடிகர்களிடம்இந்தி பேசக் கற்றுக்கொள்” என்னும் தடித்தனம் குறித்துப் பேசுவோம்.   பானிபூரி விற்பவர்களுக்கு நிகராக இவர்களையும் வைத்துப்பேசுவது அவசியம். 

எனவே நாம் விவாதிக்க வேண்டியது இந்தியினால் நாம் பெற்றது என்ன/பெறப்போவது என்ன என்பதை மட்டுமல்ல, இந்தியினால் நாம் என்னென்னவெல்லாம் இழந்தோம்/இழந்துகொண்டிருக்கிறோம் என்பதையும்தான். மத்திய அரசுப்பணி (இரயில்வே, எஸ்எஸ்சி, இராணுவம்) மற்றும் கல்வி/ஆய்வு உதவித்தொகைக்கு நடத்தப்படும் எழுத்து/நேர்முகத்தேர்வுகள் (NET), இந்தி பேசுபவர்களுக்கு அனுகூலமாக இருப்பதுவும் இத்தகைய விவாதங்களில் சுட்டிக்காட்டப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் எவ்வாறு வட இந்தியர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது என்பதையும் தேர்வில் அவர்கள் தேர்ச்சி சதவிதம் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த பெற்றோரும் சுற்றமும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களும் அமையப்பெற்ற நான், அரசுப்பள்ளியில் சேர்ந்த பின்னரே, ஆங்கிலத்திற்கும் முன், தமிழில் எழுதப்பட்டிருந்த இந்திச் சொற்றொடரை வாசித்தேன்: சர்வ சிக்ஷ்ய அபியான் திட்டம். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு/விண்கலன்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் வைக்கும் பழக்கம் எனக்கும் முன்பே பிறந்து என்னுடனேயே வளர்ந்து இன்னமும் துன்பங்களைக் கொடுத்தவண்ணமே இருக்கிறது. இன்றும் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளில் கேள்வித்தாள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு ஒருமுறையும் பதில் சரியாக எழுதியதில்லை. தேர்வுக்கான வாசிப்பில்லை எனலாம்; ஆனால், இந்தியறிந்த ஒருவருக்கு அந்தப்பெயராலேயே திட்டத்தின் நோக்கம் விளங்கி வாசிப்பில்லையெனினும் பதிலளிக்க இயலும்.

ரூபாய் நோட்டுக்கள், பாஸ்போர்ட், தொடர்வண்டிப்பயணச் சீட்டுகள், விமானத்தினுள் செய்யும் அறிவிப்புகள், ஒன்றிய அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் மக்கள் தொடர்பில் நிகழும் மொழி சார்ந்த அசமத்துவச் செயல்பாடுகள், ஒன்றிய அரசு ஒவ்வொரு மொழிக்கும் செலவிடும் ரூபாய்கள், சிறப்பு தினங்கள், இந்திப் பிராந்தியங்களில் மொழிச்சிறுபான்மையினர் பயிலும் ஆரம்பக் கல்விச் சாலைகளில் தாய்மொழியில் நூல்கள் இல்லாத அவலம், ஆங்கிலத்தை அணுக இந்தி அவர்களுக்கு எங்கனம் தடையாக இருக்கிறது போன்றவற்றை விளக்க ஆரம்பித்தாலே எத்தகைய அசமத்துவம் இம்மண்ணில் மொழிவழி நிகழ்கிறது என்பதைக் கண்டுகொள்ள இயலும். நாம் தொட வேண்டியது ஒட்டுமொத்த இந்திய மனங்களை, அது வெறுப்பின்-எள்ளலின் மொழியில் சாத்தியமில்லை. குறிப்பாக ஊடக வியாபார யுகத்தில்.

எனவே மொழி தொடர்பான விவாதத்தில் இனி இந்தி எப்படியெல்லாம் எங்களைத் துன்பப்படுத்துகிறது, என்னென்ன வாய்ப்புகளை இழக்கிறோம் என்பதைப் பேசுவோம். கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்கையில் விமான அறிவிப்புகள் தமிழில் இல்லை என. பாஸ்போர்ட்டில், பயணச்சீட்டில் எங்கள் தாய் மொழி இல்லை, ஒரு தொலைபேசி அழைப்பில் ஆங்கிலக் குரலுக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது என. வருடம் ஒருமுறை எதாவது ஒரு தேர்வை தமிழிலும் நடத்தவேண்டும் என நாங்கள் சாலைக்கு வரவேண்டும் என. தமிழகத்திற்கு வந்து பாருங்கள் என்போம்: திருப்பூரிலும் சென்னையிலும் இந்தி பேசுபவர்கள் அதிகமுள்ள இடங்களில் பேருந்தில் இந்தி மொழிப் பலகைகள் இருப்பதை, பேருந்துக்கு எல்லா இடங்களிலும் எண்கள் வழக்கப்பட்டியிருப்பதை, கன்னியாகுமரியில் வட இந்திய மொழிகள் தமிழர் நாவில் உறவாடுவதை.

சொல்லுவோம் "இந்தி கற்றுக்கொள்ளுங்கள், நல்லது" என்பதை யாரும் எடுத்துரைக்க வேண்டியதில்லை என. தாய்மொழியும் ஆங்கிலமுமே வாசிக்க இயலாத கற்றல்குறைபாடுகள் இருக்கும் தலைமுறையிடம் தங்கத்தட்டில் இன்னொரு மொழியை வைத்து நீட்டுவதில் உபயோகமில்லை என்று. இம்மக்களின் பிரதிநிதிகள் இங்கு ஆளவும் முரண்படவும் இருக்கிறார்கள் என. எங்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது, சுயசிந்தனை இருக்கிறது, எது நல்லது என சிந்தித்து முடிவெடுக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டுவிடுங்கள் என்பதைச் சொல்லுவோம். கூடவே உங்கள் அறிவுரைகள் எங்களுக்கு ஆபாசமாக இருக்கிறது: சைவ உணவுக்கு மாறுங்கள், வெங்காயம் பிடிக்கவில்லை எனில் சாப்பிடாதீர்கள் என்னும் குரல்கள் எத்தகைய அருவருப்பை உண்டாக்குகிறதோ அத்தகைய அருவருப்பு என்பதையும்.

எனவே நாம் இந்தி-தமிழ் என நிறுத்தும் கருத்தியல்களைக் களைந்து இந்தி-இந்திய மொழிகள் என நகர வேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் செய்ய பல ஆண்டுகள் ஆகும்; ஏனென்றால், இந்தி தேசிய மொழி இல்லை என்கிற பொய்யை உடைக்கவே நம் ஆரம்பக் கல்வியிலிருந்து வேலையைத் துவங்க வேண்டியிருக்கிறது. இந்தி தேசிய மொழி அல்ல என்கிற சொற்றொடரை நாம் வாய்ப்பிருக்குமிடங்களில்லாம் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்; நம் விவாதங்களை அப்படித்தான் துவங்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்படுவதும், இந்திய மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கும், நோபெல் பரிசுகளைப் பெற்றுத்தந்த ஆங்கில மொழிக்கு எதிரான ஒரு வெறுப்பும் சமீபகாலங்களில் அதிகளவில் பரப்பட்டுக் கொண்டிருக்கிறது; நாம் அதற்காகவும், அது ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளுக்காகவும் இந்தி ஏற்படுத்தும் மொழிச்சவத்துவமின்மை குறித்து உரையாடியாகவேண்டியிருக்கிறது. மொழிப்பன்மைத்துவம் என்பது இந்திய ஒன்றியத்தின் சிக்கல் மட்டுமல்ல, ஆப்ரிக்க நாடுகள், சுவிட்சர்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு மொழிக்குடும்பங்களைக் கொண்ட நாட்டிலும் உள்ள பொது அம்சம். அதை அவர்கள் எங்கனம் எதிர்கொண்டார்கள், பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என மொழி ரீதியிலான ஏற்றத்தாழ்வில்லாத ஒரு சமூகமாக அவர்கள் எவ்வாறு நிற்கிறார்கள் என்பது குறித்தும் நாம் உரையாடலைத் துவங்கவேண்டியிருக்கும். அது ஒட்டுமொத்த இந்திய மனங்களைத் தொடுவதாக நிச்சயம் அமையும்.

No comments:

Post a Comment