Sunday, April 7, 2024

எதிர்வினை - பணமில்லாமல் பணியில்லை

காலச்சுவடு மார்ச் 2024 இதழ் தலையங்கத்திற்கு எழுதிய எதிர்வினை 


காலச்சுவடு மார்ச் இதழின் தலையங்கம் 'பணமில்லாமல் பணியில்லை' வாசித்தேன். சமகால உயர்கல்வித்துறையின் அவல நிலையை மிகச்சிறப்பாகத் தீட்டியிருக்கிறார் ஆசிரியர். அவற்றைக் குற்றம் சுமத்துவதாக அல்லாமல், பயனாளர்களாகிய மாணவர்களின் இடத்திலிருந்து நோக்கி, இச்சீரழிவு தொடர்ந்தால் அது சமூக நீதிக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மிகக்கூரிய சொற்களால் சுட்டிக்காட்டியிருக்கிறார். “குறுக்கு வழியில் பணிக்குவரும் ஒருவர், அறம் சார்ந்த வழிகளை மாணவர்களுக்குப் பரிந்துரைக்க இயலாது. எல்லாம் பணம் தான் என்று சொல்லி கல்வியைத் துச்சமாக நினைக்கும் எண்ணத்தை விதைப்பவர்களாக இருக்கிறார்கள்” என்கிறது தலையங்கம். இது மிகச்சரியான அவதானிப்பு. இந்திய அரசின்கீழ் வரும் அரசுப்பணிகள், கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கைத் தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதே இதற்குச் சான்று. 

குறுக்கு வழியில் பணிக்கு வரும் இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கே ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்; திறமையின்மையினால் மட்டுமல்ல, மோசமான குணநலங்களாலும். சாதியால், மதத்தால், தன் அதிகாரத்திற்கு அடிபணியவில்லை என்பதால், கேள்வி கேட்பதால் அத்தகு மாணவர்களின் கல்வியைப் பாழ் செய்வதற்கான அனைத்து உளவியல் வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது, சமவாய்ப்புக் கொடுக்க மறுப்பது, மதிப்பெண்களைக் குறைப்பது, ஆய்வுப் பணிகளுக்கு இடையூறு செய்வது, எதிர்காலத்தில் உனக்குப் பரிந்துரைக் கடிதம் தரமாட்டேன் என்று ஆய்வு மாணவர்களை அடிமை போல் நடத்துவது, எங்கெல்லாம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி மாணவரை மனம் நோகச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வது, இவற்றிற்கும் மேலாக தற்கொலைக்குத் தூண்டுவது. இவற்றுக்கெல்லாம் புற ரீதியான சான்றுகள் கொடுக்க இயலாது என்பதால் குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் இத்தகு ஆசிரியர்களே சந்தேகத்தின் பலனை அனுபவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கொஞ்சம் எண்ணிப்பாருங்கள், உயர்கல்வி நிறுவனத் தற்கொலைகள், பாலியல் அத்துமீறல்களுக்கு இங்கு தண்டனை பெற்றவர் எவர்? எனவே, ஆசிரியர் தேர்வில் ஊழல் என்பது மனிதவளத்திற்கே ஆபத்தான போக்காகும், இக்கயமைத்தனம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். 

"கடந்த இருபது வருடங்களில் கிட்டத்தட்ட ஒரு பணியிடம்கூடப் பணமில்லாமல் நிரப்பப்படவில்லை என்பதே நிதர்சனம்” என்னும் வரிகள் வெறும் அவதூறு அல்ல. இருபது வருடங்களுக்கு முன் துவங்கிய இந்தச் சீரழிவு இன்னும் நாற்பது வருடங்களுக்கு நம் கல்விச்சூழலை அழிக்கும்; அதிலிருந்து மீள இன்னும் இருபது வருடங்கள் எடுக்கும். தவறுகள் களையப்படவேண்டுமென்றால் அவற்றை ஏற்பதிலிருந்து துவங்க வேண்டும். அந்த வகையில், சமகால உயர்கல்வித்துறை குறித்த, அக்கறை மிகுந்த, மிகத் தைரியமான விமர்சன எழுத்து இந்த இரண்டு பக்கத் தலையங்கம். காலச்சுவடு ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

கூடவே, நேர்மையாளர் குழு அமைத்து இந்நிலை மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது தலையங்கம். இது குறித்து எனக்குத் தெரிந்த சில பரிந்துரைகளை முன்வைக்கலாம் என நினைக்கிறேன். 


1. கல்வித்துறை குறித்த விமர்சனங்கள் முதலில் உள்ளிருந்து எழ வேண்டும்

சமகாலத்தில் இதைத் தொடர்ந்து செய்பவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். அதுவும் பணி ஓய்விற்குப் பிறகு கொஞ்சம் சுதந்திரமாகச் செய்ய இயன்றிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால், பணிக்காலத்தில் அவருடைய அதிகாரத்திற்குட்பட்டு சிலர் ஒத்துழைப்புடன் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார். அருஞ்சொல் இணைய இதழில் தன் அனுபவங்களை எழுதிவரும் அவரின் சமீபத்திய கட்டுரை “ஆசிரியர்களும் கையூட்டும்.” அரசுக்கல்லூரி ஆசிரியர்களின் கள்ளத்தனங்களில் சிலவற்றை அவர் விரிவாகவே பேசி இருக்கிறார்.

கடந்த இருபது வருடங்களாக, எதற்கும் லஞ்சம் ஊழல் என்றிருக்கும் கல்வித்துறை குறித்து உள்ளிருந்து அதிகம் விமர்சனங்கள் எழுந்ததில்லை. பணம் வாங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டதாகவோ, பணம் வாங்குகையில் கையும் களவுமாகப் பிடிபட்டுத் தண்டனை பெற்றதாகவோ, ஒருவரும் இல்லாமல் இருப்பதே இத்துறையில் விசிலூதிகள் இல்லை என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. சூழலின் நிலை குறித்த அனாமதேயக் கட்டுரை எழுதக்கூட இங்கு ஆட்கள் இல்லையா அல்லது அவற்றை பதிப்பிக்க, வெளிக்கொணர ஊடகங்கள் இல்லையா எனத் தெரியவில்லை. எல்லோர் கையிலும் ஒளிப்பதிவுக்கருவி, இன்னபிற ஒற்றுக்கருவிகள் எளிதில் கிடைக்கும் காலத்திலும் இதைக் குறித்துக் கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதும் சூழலின் நிலைக்குச் சான்று.

எனவே, மாணவர்கள், பணி நாடுவோர், கௌரவ விரிவுரையாளர்கள், தனியார் கல்லூரியில் சுரண்டப்படும் ஆசிரியர்கள் அனாமதேயமாகவேனும் தங்கள் அனுபவங்களைப் பொதுவெளியில் வைக்க வேண்டும். தனிநபர் ஊடகமாகும் காலத்தில் இது கடினமும் அல்ல. இவற்றால் பலனடையப் போவது கையூட்டுக் கொடுப்பவர்கள் வாங்குபவர்கள், அல்லாதவர்கள் உள்ளிட்ட எல்லோரின் குழந்தைகளும்தான்.


2. கௌரவ விரிவுரையாளர்களுக்குப் பணி நிரந்தரம் (அ) தனிச் சலுகை சரியல்ல.

உயர்கல்வித்துறையில் நுழைய ஒரு வழிதான் இருக்க வேண்டும். தமிழகத்திலும் கர்நாடகத்திலும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதை அடிக்கடி பார்க்கிறேன். கௌரவ விரிவுரையாளர்கள் என்போர் ஒரு குறிப்பிட்ட கல்லூரியிலோ/பல்கலைக்கழகத்திலோ ஆய்வு செய்து அதே இடத்திலேயோ / பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலோ பணிக்குச் சேர்ந்திருப்பவர்கள் எனலாம். கௌரவ விரிவுரையாளர்களாவதற்கும் துறையில் உள்ள ஆசிரியர்களுடன் முன்பரிச்சயம், பரிந்துரைகள் போன்ற தகுதிகள் தேவை. ஒரு ஒரே கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இப்படி அமைப்பிற்குள் பல்கிப் பெருகுவதை ‘கல்வித்துறை உட்பெருக்கம்’ (academic inbreeding) என்கிறோம், இது கல்வித் துறையின் தரத்தைக் குறைக்கும்.  சென்ற வருடம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் இருந்ததாக அறிகிறேன், அது நல்ல துவக்கமும்கூட. இப்படி உயர்கல்வித் துறையில் நுழையும் ஒருவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாமல் பணி நிரந்தரம் கோருவது ஏற்புடையது அல்ல. வேலையின்மை, பணி/ஊதியப்பாதுகாப்பு இல்லாத சூழலில், கௌரவ விரிவுரையாளர்கள் இத்தகைய கோரிக்கைகளை அமைப்பாகவோ, அரசியலர் வழியாகவோ எழுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 

தற்போது வெளியாகியிருக்கும் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வுமுறையின் திட்ட வரைவு, மாணவர்களை ஆய்விற்குத் திருப்பும் திறனுடையோரைக் கண்டறியும் நோக்கில்தான் தேர்வுமுறையே நடைமுறைக்கு வருகிறது என்று சொல்கிறது. தேர்வு மதிப்பெண் தவிர்த்து கௌரவ விரிவுரையாளர்களின் அனுபவத்தைப் பொறுத்து சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்கிறது. என்றால், முனைவர் பட்டம் பெற்றவருக்கோ, முனைவர் பட்டத்திற்குப்பின் ஆராய்ச்சித் துறையில் இருக்கும் ஒருவரின் ஆய்வு அனுபவத்திற்கு இத்தேர்வுமுறை வழங்கப்போகும் மதிப்பெண்கள் என்ன? கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் எதற்கு சிறப்பு மதிப்பெண்கள்? இதர தனியார்/அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் அனுபவம் இவர்களைக் காட்டிலும் எந்த வகையிலும் குறைந்தது அல்ல எனும்போது, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் ஏன் தனிச் சலுகை? கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இதுபோன்ற  சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனும்போது தமிழ்நாட்டில் மட்டும் எதற்கு வழங்கப்பட வேண்டும்? இத்தகைய சிறப்புச் சலுகைகள் பிற தேர்வர்களுக்குச் செய்யும் அநீதி. 


3. ஆசிரியர் தேர்வு முறை

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய அளவிலேயே அரசுப் பணிக்கு நேர்முகத் தேர்வு என்ற செய்தி வந்தால் எழும் முதல் கேள்வி: எவர் தேர்வு செய்யப்படுவார் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டதா? இரண்டாம் கேள்வி: எவ்வளவு கேட்கிறார்கள்? இத்தகைய பொதுத் தன்மையே இம்முறை சமகால நடைமுறையாக மாறிவிட்டதற்குச் சான்று.

தமிழ்நாடு அரசு நேர்முகத் தேர்வில் இருந்து போட்டித் தேர்விற்கு வந்திருப்பது பாராட்டத்தக்க செய்தி. கொள்குறி வினாக்களுடன் விரிவான பதில் எழுதுதலும் போட்டித் தேர்வில் இருக்கும் என்கிறது அறிவிக்கை. கூடவே, நேர்காணலுக்கு முப்பது மதிப்பெண்கள் என்கிறது. 

நேர்காணலில் முதல் கேள்வி “எவ்வளவு கொடுப்ப?” என்கிற நகைச்சுவை ஆசிரியர் தேர்வுக்கு தயாராபவர்கள் மத்தியில் பிரபலம். ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசமே பணி கிடைக்கும் வாய்ப்பைப் பறிக்கும் எனும்போது நேர்காணலுக்கு முப்பது மதிப்பெண்கள் என்பது பெரும் பின்னடைவு. கூடவே, கடந்த இருபது வருடங்களாகப் பணம் கொடுத்துப் பணியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பது நாமறிந்த செய்தி. இவர்கள் அந்த நேர்காணல் மேடையில் இருந்தால் என்னாகும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.  

அப்படி என்றால் ஒரு கல்லூரி ஆசிரியரை எப்படித் தேர்வு செய்வது?

நமக்கு பதில் சொல்கிறது தேசிய, பிற மாநில தகுதித் தேர்வுகள். தேர்வுகள் கணிப்பொறி முறையில் அல்லது கார்பன் நகல் இணைக்கப்பட்ட ஓஎம்ஆர் முறையில் நடத்தப்பட வேண்டும். தற்போது கணிப்பொறி வழியே நடக்கும் தேசிய தகுதித் தேர்விற்குப் (NET) பின் விடைத்தாளைத் தரவிறக்கிக் கொள்ளும் வசதி உண்டு. ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் என்றால் அதன் நகல் கிடைக்கும். இதன் மூலம் தேர்வின் வெளிப்படைத்தன்மையும் அதன்மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். சில வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி, ஓஎம்ஆர் நகல்களை வழங்கியதால்தான் அத்தேர்வில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மறுதேர்வு நடந்தது. இந்த நிலையில் கொள்குறி வினாக்களும், விடைத்தாள் நகலுமே தேர்வரைக் காக்கும். உடன், தவறான பதில்களுக்கு எதிர்க்குறி மதிப்பெண்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

நேர்காணல் என்ற ஒன்று அவசியம்தானா? 

தேர்வரை மதிப்பிட அவரது கல்வித் தகுதியே போதும்; வேறொருவர் மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என்கிறது கேரள நடைமுறை. அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு கீழ்க்காணும் பிரிவுகளில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

i. இளநிலை, முதுநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், முனைவர் பட்டப்படிப்பின் ஆய்வினடிப்படையில் பதிப்பித்த சர்வதேச ஆய்விதழ்கள் மற்றும் புத்தகங்கள், கற்பித்தல் அனுபவம்

ii. எம்ஃபில் பட்டம் மட்டுமெனில் இரண்டு, முனைவர் பட்டம் மட்டுமெனில் நான்கு, இரண்டுமெனில் ஐந்து.

இவற்றுடன் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, தர வரிசை தயாரித்து பணியமர்த்துகிறார்கள். 

ஒருவரின் ஆய்வு அனுபவத்தையும் கற்பித்தல் அனுபவத்திற்கு இணையாகக் கருத வேண்டும் என்கிறது பல்கலைக்கழக மானிய குழு. ஆசிரியர் தேர்வு வாரியம் இவற்றைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்.


4. அரசு உதவி பெறும் கல்லூரிகள் 

இந்திய ஒன்றியம் எங்கும் உயர் கல்வித்துறையின் சீரழிவைத் துவங்கி வைத்தது இவர்களே. அரசால் ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல்கள் நடத்துகிறேன் என்கிற பெயரில் பணவேட்டை நடத்துவது, தகுதியற்ற உறவினர்களை, வாரிசுகளைப் பணியில் அமர்த்துவது, நேர்காணலுக்கு வந்திருப்பவர்களை நிராகரிப்பதற்கான காரணம் இதுவென்று புதுப்புது வழிகளில் அவமானப்படுத்துவது, என சிலவற்றை சொல்லலாம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் பணியின் சந்தை மதிப்பு அறுபது லட்சங்களுக்கும் மேல். சொந்த மதம்/சாதி/உறவினர் எனில் தள்ளுபடி உண்டு. ரொக்கமாகக் கொடுக்க இயலாதவர்களுக்கு வாங்கிக் கடன் ஏற்பாடு செய்யப்படுகிறது, அல்லது சம்பளத்தேதியில் நேரடியாகப் பிடித்தம் செய்துகொள்ளப்படுவதும் உண்டு. 

அரசால் நிதி வழங்கப்பட்டு அரசால் ஊதியம் வழங்கப்படும் ஆசிரியர்களை அரசே பணியமர்த்துவதுதானே நியாயம். இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்வதில் யாருக்கும் வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அப்படி இருக்கையில் தலையங்கம் சொல்வதைப் போல அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகளால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்; எதிர்வரும் தேர்வு முதலே இம்முறை நடைமுறைக்கு வர வேண்டும். 

இப்போதும் அரசு உதவி பெரும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் பதவி உயர்வு, பிற பணப்பலன்கள் கிடைக்கத் தாமதமாவதாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இம்முறை நடைமுறைக்கு வந்தால், அரசு உதவி பெரும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் என்னும் வகைமையே இல்லாமல் போவதால் அனைத்து ஆசிரியர்களும் சமமாக நடத்தப்படும் வாய்ப்பே அதிகம். 


5. தனியார் கல்வி நிலையங்கள் சட்டத்தால் முறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலைக்கு சேரும் ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு என்பதோ, கௌரவமான ஊதியம் என்பதோ இல்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி / முனைவர் பட்டத்தை விரும்பிப் பெற்றவர்கள் குடும்பச்சூழலால் ஆசிரியர் பணியைக் கைவிடுகிறார்கள். இதன் உப விழைவு தகுதியற்றோர் அவ்விடங்களை நிறைக்கிறார்கள். மாதம் பதினைந்தாயிரம் கேட்கும் ஒருவரைவிட, பத்தாயிரத்திற்கு பணி செய்ய தயாரென இருக்கும் ஒருவரே பெரும்பாலான தனியார் கல்வி நிறுவங்களின் தேர்வு. ஆனால் கடுமையாகச் சுரண்டப்படுபவர்களும் அவர்களே. தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகும் சூழலில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்காதவரை திறனுள்ள ஆசிரியர்களின் வரத்து நிகழப்போவதில்லை. 

கோவிட் காலத்தில் ஊதியமும் குறைக்கப்பட்டு, கணினி-இணைய-மின்சாரச் செலவுகளைத் தாங்களே ஏற்று வகுப்பும் எடுத்துக் கொடுத்த ஆசிரியர்களுக்கு கடனே மிஞ்சியது. கோவிட் காலத்தில் ஊதியம் இன்றி பனைமரம் ஏறி உயிரிழந்த ஆசிரியரையும் நாம் கண்டோம். இது மட்டுமில்லாமல் விடுப்பு, வேலையில் இருந்து விடுப்பு என்கிற அடிப்படை தொழிலாளர் உரிமைகூடப் பெரும்பாலான தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இல்லை. தன் உரிமைக்கே போராடும் நிலையிலிருப்பவர்கள் அல்லது அடிமையாய் இருப்பவர்களால் சுதந்திர சிந்தனையுள்ள கல்விச்சூழலை உருவாக்க இயலாது.

இந்நிலை களைய தனியார் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்திய ஒன்றியத்தில் இது புதிதும் அல்ல அண்டை மாநிலமான கேரளம் 2021 ஆம் ஆண்டு அத்தகைய ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. Kerala Self Financing College Teaching and Non-teaching Employees (Appointment and Conditions of Service Ordinance, 2021 (38 of 2021). அதன் வழிகாட்டல்கள் பின்வருமாறு: 

i.      காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு நேர்காணலுக்குப் பின் தரவரிசை வெளியிடப்பட வேண்டும். தெரிவு செய்தவர்களைப் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவித்த பின் பணியமர்த்தப்படல் வேண்டும். 

ii.      பணியமர்த்தல் மற்றும் பணி ஓய்விற்கான வயது வரம்பினை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே நிர்ணயிக்கலாம். 

iii.      பணியாளர்கள் சேர்ப்பு, வருகைப்பதிவு, அவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கான பதிவேடுகள் வைக்கப்படவேண்டும். அவை குறித்த தகவல்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். 

iv.      பணி, பணி மூப்பு, பணி உயர்வு, பணிக் காலம், ஊதியம், ஊதிய உயர்வு, கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் குறித்த தகவல்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதனுடன் தொழிலாளர் நலுனுக்கென வேறேதும் அம்சங்கள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்.  

v.      வேலை நேரம் மற்றும் நாட்கள், சம்பளத்துடன்கூடிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை அரசுக் கல்லூரி ஊழியர்களுக்கு உள்ளதைப் போலவே தொடரவேண்டும். 

vi.      ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் பயனாளராகச் சேர்க்கப்படல் வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்பட வேண்டும். 

vii.      பணியாளர்கள் மீதான ஒழுங்கு மீறல் நடவடிக்கைகளை அந்தந்த கல்வி நிறுவனங்களே எடுக்கலாம். பணியாளர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தால் பல்கலைக்கழகத்தில் மேல்முறையீடு செய்யலாம். 

viii.      பணியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வரையறுக்கப்பட வேண்டும். நல்நோக்கத்துடன் வரையறுக்கப்படும் இவ்விதிகளுக்கு எதிராக பல்கலைக்கழகத் துணைவேந்தர்மீதோ, அலுவலர்கள்மீதோ எவ்விதச் சட்ட முன்னகர்வும் ஊக்குவிக்கப்படக் கூடாது. 

ix.      கல்வி நிறுவனங்கள் கீழ்க்கண்ட அமைப்புகளை நிறுவ வேண்டும். 

·        கல்லூரி நிலைக்குழு

·        அக தர நிர்ணயக் குழு

·        பெற்றோர் ஆசிரியர் கழகம்

·        மாணவர் குறைதீர்ப்பு மையம்

·        பாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் விசாரணை  மையம் 

இவற்றுடன் வேறு சிலவற்றைச் சேர்ப்பதைக் குறித்தும் சிந்திக்கலாம்: பணிச்சேர்க்கையின்போது ஒப்படைக்கப்படவேண்டிய ஆவணங்கள், வேற்றிட நேர்முகத்தேர்வுகளுக்குச் செல்லும்போது தடையில்லாச் சான்று தேவையாயிருப்பின் அதைப்பெறுவதற்கான வழிமுறைகள், இடைக்காலத்தில் பணி விடுவிப்பு வேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகள் என. இவற்றை மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், தனியார் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

-------------------------------------

(காலச்சுவடு ஏப்ரல் 2024 இதழில் வெளியானது உள்ளிருந்து எழும் குரல்


No comments:

Post a Comment