Sunday, June 9, 2024

உதவிப்பேராசிரியர் பணி நியமனம், என்ன செய்யலாம்?

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு விண்ணப்பங்களைப் பெற்றிருக்கிற நிலையில் நீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீடு: பல வருடங்களாக அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு அந்தப் பணியை நிரந்தரம் செய்து தர வேண்டும். 

தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி கௌரவ விரிவுரையாளர்கள் சொல்லும் காரணங்கள் பின்வருமாறு,

1. பல வருடங்களாக குறைவான ஊதியத்தில் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் எங்களுக்கே அப்பணியை நிரந்தரம் செய்து தர வேண்டும்.

தற்காலிக விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் வழக்கம் 1980-களின் இறுதியிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு 1996 இல் தொடங்கிய போட்டித் தேர்வு முறை 1998, 2000, மற்றும் 2007-ம் வருடம் வரை பின்பற்றப்பட்டது. பிறகு பட்டப் படிப்பிற்கும், தேசிய அல்லது மாநில தகுதித் தேர்வு தேர்ச்சிக்கும், கற்பித்தல் அனுபவத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு 2008, 2009, 2011, 2015 ஆம் ஆண்டுகளின்போது நேர்காணல் வழி உதவிப்பேராசிரியர் பணி நியமனம் நடைபெற்றது.[1] ஆக 1980-களிலேயே வழக்கொழிந்து போன ஒரு நடைமுறையை திரும்பவும் கொண்டு வர வேண்டும் எனக் கேட்பது சரியல்ல. சொல்லப்போனால் முன்பு நடந்த போட்டித் தேர்வு, நேர்காணல்கள் முறைகளை ஒப்பிடுகையில் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர உதவிப்பேராசிரியர்களாக மாற்றுவதென்பது பிற தேர்வர்களுக்குச் செய்யும் அநீதி.

சரி, கௌரவப் விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எழுந்ததற்கான முன்னுதாரணம் உண்டா? உண்டு. கர்நாடகத்தில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்ததற்கான செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் கர்நாடக அரசு கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு ஊதிய உயர்வு (அதிகபட்சமாக 37000 வரை), மருத்துவக் காப்பீடு, பத்து வருடங்களுக்கும்மேல் பணியாற்றி இருப்பின் பணி ஓய்வுப் பலனாக ஐந்து லட்சம் ரூபாய், போட்டித்தேர்வில் 5% மதிப்பெண் உள்ளிட்டவை வழங்கப்படும் என்கிறது.[2] ஆனால், தேர்வுமுறை என்கிற ஒற்றைவழிதான் நிரந்தரப்பணிக்கு. ஆக, இந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு வழக்கத்தைத் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று கௌரவ விரிவுரையாளர்கள் கேட்பது சரியல்ல.

2. ஏற்கனவே மாநில அல்லது தேசிய தகுதித் தேர்வில் வென்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதுவது சுமையைக்  கூட்டுகிறது. பிறகு இந்தத் தகுதித் தேர்வுகளுக்கோ, முனைவர் பட்டத்திற்கோ பொருள் என்ன?

போட்டித் தேர்வு முறையை இந்திய ஒன்றியத்தில் கடைசியாக அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்தகைய கேள்வி எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கேயும் தேசிய/மாநிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தகுதித் தேர்வுடன் முனைவர் பட்டமும் பெற்றவர்கள் போட்டித் தேர்வு எழுதியே உதவிப்பேராசிரியர் பணியில் சேர்கிறார்கள். இதனால் அந்த மாநிலங்களில் கல்லூரிகளில் நடக்கும் கற்பித்தல், வழிகாட்டல், ஆய்வின் தரம், ஒப்பீட்டு ரீதியில் அதிகம். 

பிற மாநிலங்கள் உதவிப்பேராசிரியர் பணிக்கெனப் போட்டித்தேர்வை நடத்தி, வென்றவர்களை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைத்து, தேசிய அல்லது மாநில தகுதி தேர்வுகள், முனைவர் பட்டம், வெளியிட்ட ஆய்விதழ்கள் போன்றவற்றிற்கு மதிப்பெண்கள் வழங்கி, தர வரிசை வெளியிட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியமர்த்துகிறார்கள்.

கௌரவ விரிவுரையாளர்கள் கேட்பது போல் தற்போது பணியில் இருப்பவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது இட ஒதுக்கீட்டிற்க்கே எதிரானதாக அமையும். இதைக் கணித முறைப்படி பகுத்தறிய தற்போது பணியில் இருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள் குறித்த தரவுகளை கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்போ அல்லது அரசோ பொதுவெளியில் வைக்க வேண்டும். 

3. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமனம் நேர்காணல் வழியிலேயே நடத்தப்படுகிறது, எனவே அங்கு பல லட்சம் ரூபாய்கள் பணம் வாங்கிக் கொண்டே பணியர்மத்தப்படுகிறார்கள். இப்படி இருக்கையில் அரசுக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் கௌரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவதில் என்ன தவறு?[3] 

இது ஊழலுக்கு எதிராக இன்னொரு அநீதியைப் பொருத்தும் முயற்சி. இதற்கு மாறாக அரசால் ஊதியம் வழங்கப்படும் அனைத்து ஆசிரியர்களையும் அரசே நியமிக்க வேண்டும்; அனைவரும் போட்டித் தேர்வு வழியாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமாகத் தோன்றுகிறது இல்லையா?

எனவே, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனம் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வு முடிவுகளைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை இத்தேர்வின்கீழ் கொண்டு வருகையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்; முக்கியமாக இது அனைத்து தேர்வர்களுக்கும் சாதகமாகவே அமையும். அதாவது வெற்றி வாய்ப்பைக் கூட்டும்.

வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் இக்காலத்தில் லஞ்சம் கொடுத்துப் பணியில் சேர்ப்பவர்களை இனியும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமல்ல. ஒரு உதவிப்பேராசிரியர் பணிக்கான சந்தை விலை ஐம்பது லட்சத்திற்கும் மேல், கேரளாவில் எழுபத்தைத் தாண்டிவிட்டது. இந்நடைமுறை உள்ளங்கை நெல்லிக்கனி போல் சமூகத்தில் அனைவருக்கும் தெரியும் என்பதை விட, தற்போது இந்த ஊழலுக்கான ஒப்புதல் கல்வித்துறைக்கு உள்ளிருந்தே வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பணி நியமனங்களும் போட்டித்தேர்வின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். 

4. அப்படி என்றால் அரசு நடத்தும் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கெனச் சலுகைகளே இல்லையா?

சலுகைகள் உண்டு. மேலும் அத்தக சலுகைகள் வழங்கப்படுவது தவறு. இதற்கு வேறெந்த மாநிலத்திலும் முன்னுதாரணம் இல்லை. அப்படி என்ன சலுகை வழங்கப்படுகிறது?

கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் அவர்களின் அனுபவத்தைப் பொறுத்து சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்கிறது தற்போதைய போட்டித் தேர்வு அறிவிக்கை. மாணவர்களை ஆய்வு நோக்கிற்குத் திருப்பத்தான் இந்த தேர்வு எனச் சொல்லும் அரசாணை, ஒருவரின் ஆய்வு அனுபவத்திற்கோ அல்லது ஒரு தனியார் கல்வி நிறுவனப் பேராசிரியரின் கற்பித்தல் அனுபவத்திற்கோ மதிப்பெண்கள் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு மட்டும் அனுபவத்திற்குச் சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவது போட்டித் தேர்வையே கேலிக்கூத்தாகிவிடும். 

அரை மதிப்பெண்களே ஒருவரின் பணி வாய்ப்பைப் பறிக்கும் எனும்போது அனுபவத்தைப் பொறுத்து வருடத்திற்கு இரண்டு என  அதிகபட்சமாக 15, வாய்மொழித்தேர்வுவழி மீண்டுமொரு 15 என கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் இவர்கள் வழங்கும் 30 மதிப்பெண்கள் தகுதி உடையோர் பலரைப் பின்னுக்கு தள்ளும்.[4] எனவே, போட்டித் தேர்வு மதிப்பெண்கள், தேசிய/மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி, முனைவர் பட்டம், ஆய்வு அனுபவம், அரசு/அரசு உதவி பெறும்/தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் அனுபவம் உள்ளிட்டவற்றிற்குத் தனி மதிப்பெண்கள் கொடுத்து உதவிப்பேராசிரியர்களைத் தேர்வு செய்வதே நியாயமானதாக அமையும்.

4. இனி அரசு என்ன செய்யலாம்?

கௌரவ விரிவுரையாளர்கள் எனும் பணியே இல்லாமலாக வேண்டும் எனும் கனவு மெச்சத்தக்கதுதான். அரசின் நிதிநிலை, பணியில் இருக்கும் ஆசிரியர் இடமாறுதல் பெற்றுச் செல்லல் அல்லது திடீர் உயிரிழப்பு ஏற்படல் உள்ளிட்ட காரணங்களால் நிலுவையில் இருக்கும்/உருவாகும் காலியிடங்களை நிரப்ப கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கலாம். அத்தகைய நியமனங்கள் ஒருபோதும் நிரந்தரப் பணி வாய்ப்பை வழங்காதென்கிற தகவல் அவர்களின் பணி நியமன உத்தரவிலேயே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். பல்கலைக்கழக/கல்லூரி அளவில் கௌரவ விரிவுரையாளர்களை நியமிப்பதற்கும் போட்டித் தேர்வுகள் நடத்தலாம். மேற்சொன்ன வெளிப்படையான மதிப்பெண் முறைகளைப் பின்பற்றப்படலாம். மிக முக்கியமாக ஊதியம், பணிநேரம் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டல்கள் அவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும்.

ஆசிரியர் தகுதித் தேர்வால் வெளியிடப்படும் முடிவுகளில் உள்ள தேர்வர்களின் தரவரிசை குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்குச் செல்லுபடியாகக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உருவாகும் இத்தகைய திடீர் காலிப்பணியிடங்களை அத்தகைய தரப் பட்டியலில் உள்ளவர்களைக் கொண்டே நிரப்பலாம். இது மேற்கொண்டு கௌரவ விரிவுரையாளர்களை நியமிப்பதை குறைக்கும்; கூடவே அரசும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை காலி இடங்களைப் பொறுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தலாம். இந்தியாவில் இது புதிதும் அல்ல, கேரளம் இதைத்தான் செய்கிறது.

கேரளம் இன்னொன்றையும் செய்திருக்கிறது: தனியார் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டம், Kerala Self Financing College Teaching and Non-teaching Employees (Appointment and Conditions of Service Ordinance, 2021 (38 of 2021). இது தனியார் கல்வி நிறுவனப்பணியாள்களுக்கான கண்ணியமான சம்பளம், பணிப்பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த சட்டத்தை மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், தனியார் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கென ஒரு கண்ணியமான பணிச்சூழல் உருவாகாதவரை நமது மனிதவளம் சிறக்காது.


சான்றுகள்

1. கல்லூரிக் காலிப் பணியிடம், குழப்பங்களுக்கு முடிவு வருமா? - ..அருண்கண்ணன், இந்து தமிழ் திசை, 29.05.2024. 

2.   Government announces salary hike for guest lecturers, health insurance and retirement benefit

3. திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் - பேரா.இரா.முரளி, புதிய ஆசிரியன், ஜூன் 2024.

4.   Assistant professor recruitment notification 

5. நவீனக் கொத்தடிமைகளா தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள்? - வெ. நீலகண்டன், அனந்த விகடன், 05.06.2024.

------------------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொல், 09/06/2024 ல் வெளியானது. 

 உதவிப் பேராசிரியர் பணி நியமனம், என்ன செய்யலாம்?


No comments:

Post a Comment