Saturday, October 13, 2018

சேராத காதலின் துயர்

நிறைய விமர்சனங்களைக் கண்டதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன. இடைவேளைக்குப் பின்னான காட்சிகள் அதைக் கொஞ்சம் பூர்த்தி செய்தன எனலாம்.

காதலின் பிரத்யேக குணங்களான அணுகுதல்-விலகுதல், தயக்கம், அருகிருத்தல், இயலாமை, சமூக நிர்பந்தத்திற்கும் ஆழ்மன விழைவிற்கும் இடையேயான மனக்குழப்பம், காத்திருப்பு எனப் பல நுண்ணிய தளங்களைத் தொட்டுச்சென்ற படங்களின் வரிசையை இவ்வாறு அமைப்பேன்.

1. இன் த மூட் ஃபார் லவ்
2. மயக்கம் என்ன
3. 96
4. என்னு நிண்டெ மொய்தீன் (மலையாளம்)
5. சார்லி (மலையாளம்) - முதியவரின் காதல் காட்சிகள்.

மௌனத்தை இட்டு நிரப்பும் இடங்கள், காட்சி அமைப்பு, பின்னணி இசை, எனப் பல அம்சங்கள் மேற்கண்ட படங்களுடன் இதை ஒப்பிடத் தோன்றுகிறது. குறிப்பாக, ஜானுவிடம் தட்டை வாங்கி உணவருந்தும் காட்சியின் பின்னணி இசையும், ஹோட்டல் காரிடோரில் நடக்கும் காட்சியும் 'இன் த மூட் ஃபார் லவ்' படத்தை நினைவிலிருந்து எழுப்பின.


https://www.imdb.com/title/tt7019842/


சேராத காதல் கொணரும் துயரம் அசாதாரணமானது. அது உண்டாக்கும் வெற்றிடத்தை எதைக்கொண்டும் நிரப்ப இயலாது என்பதை ராமச்சந்திரன்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் அதற்குத் தன் வாழ்வையே விலையாய்த் தருகிறார்கள்.

ராமச்சந்திரன்கள் அழியா நினைவுகளைக் கொடுப்பதாலேயே காதலில் வெல்கிறார்கள்; ராமச்சந்திரன்கள் குற்ற உணர்வைக் கொடுத்துக் காதலில் வெல்கிறார்கள். ராமின் காதலுக்கு நிவர்த்தியாவது ஜானுவின் உடலோ, சேர்த்து வாழ்தலோ அல்ல; அவளின் கண்ணீரே. ஆம், நம் ஆழ்மனம் வேண்டுவது அதைத்தான். பிரியத்திற்குள்ளோரின் சிநேகத்தைவிட கண்ணீரின் அடர்த்தி அதிகமானதில்லயா?!

சேராத காதலுக்குப்பின், ஒரு காதலின் தோல்விக்குப் பின், தன் வாழ்வையே பணயமாய் வைத்து எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் விடுவித்துக்கொள்வதும், மறைத்துக்கொள்வதும், மறைந்தே போவதும் அந்த ஒரு துளி கண்ணீருக்குத்தனா? அதன் தித்திப்பிற்குத்தானா?!

காதலின் மதுரமும், உவர்ப்பும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

No comments:

Post a Comment