பலராய் இருப்பவர்களுடன்
ஒரு நாள்
ஒருவனாய் இருப்பவனைச்
சந்திக்கிறீர்கள்...
முதல் சந்திப்புதான்
என்றாலும்
எல்லோருக்கும்
அவன்
ஒரே ஒருவனாய்த்தான்
அறிமுகமாகிறான்…
உங்களையுட்பட
யாரையுமே கண்டுகொள்ளாமல்
அவன் திரியும்
கோலங்கண்டு
திகைத்துப் போகிறீர்கள்…
உங்களைக் கண்டுகொள்ளாதவனின்
உலகினைக் காணவே
ஆசைப்படுகிறீர்கள்.
அவனுடைய உலகில்
அவன் மட்டுமே வசிப்பதைக்கண்டு
ஆச்சரியப்படுகிறீர்கள்.
அவன் சந்தித்த
துரோகங்கள்
மிகமிகக் குறைவாகவே
இருக்கின்றன,
யாரோ ஒருவரின்
மீதான
நெடுநாளைய வன்மமொன்றும்
அவன் நெஞ்சில்
ஊறிக்கொண்டிருக்கவில்லை.
இவைகளைக் கண்டே
பெருமூச்செறிந்து
வெளியே வருகிறீர்கள்.
நல்லவேளை,
உங்களில் ஒருவரின்
பரிதாபப் பார்வையினையும்
வேறொருவரின் அருவருப்பினையும்
அவன் உணர்ந்திருக்கவில்லை…
இப்போது,
அவன் எதுவாக இருக்கிறானோ
அதன்மீதான வருத்தங்களை
விடவும்,
அவன் அவனாக இருப்பதின் பொறாமைகளோடு
அவனைக் கடந்து
செல்கிறிர்கள்…
உங்களோடு கடப்பவர்கள்
‘பாவம்’ எனச் சொல்லிவிட்டு
இன்னொருமுறை திரும்பிப்பார்த்துக்கொள்கிறார்கள்.