Saturday, July 14, 2018

Poetry- Isai


Noise

There are many more
Unwanted noises
in this world.

Among them
Crueler is
Laughter.

Which always falls
On the head of
somebody who couldn’t.

-------------------------------------

And now

I told you…
Told you several times…
That not to go close,
 too close to truth…

Now, you see…
You are about to die
Of explosion.

-------------------------------------

Tiny quake

World
Came back to normal
After a small shake,
A tiny quake.

Not a big disaster,
But one glass tumbler is broken.

Only one glass tumbler…
The one 
Which can only
Reduce your thirst.

-------------------------------------

Bring your kiss to lips

Train arrived.
Which doesn’t know anything
That arrives,
and departs.

-------------------------------------

Author:

"Isai' in tamil means 'Music'. One of the modern poets in Tamil. Real name A.Sathiyamoorthy, born in 1977. Starting from 2002 he published six collections of his poems. 

Blog: isaikarukkal.blogspot.in 


(Published in NIIST Magazine 2018)



Saturday, June 30, 2018

அமைதியை நிலைநாட்டல்

99 நாட்கள்
அமைதியாய் நின்றவர்கள்
நூறாம்நாள்
நடக்கத் துவங்கினார்கள்

அமைதியை விரும்பும் அரசாங்கம்
காலடியோசையை
நிறுத்தச் சொன்னது

கண்ணீர்க் குண்டுகள் எறியப்பட்டன
மக்கள்
கண்ணீர் வழிய நின்றார்கள்

கற்கள் எறியப்பட்டன
மக்கள்
குருதி வழிய நின்றார்கள்

தடியடிக்குச் சத்தமிட்டவனை
சில பூட்ஸ் கால்கள்
அமைதிப்படுத்தின

அடுத்து வந்தன
துப்பாக்கிக் குண்டுகள்:

தோழர்களை அமைதிப்படுத்த
நெஞ்சுக் குழிக்குள்
இறங்கின.

நியாயம் கேட்ட
சிறுமியொருத்தியின்
தொண்டையை அடைத்து
அமைதிப்படுத்தின.

நீளும் அமைதியில்
அரசாங்கத்தின் குரல்
கேட்கிறது
"ஒருத்தனாவது சாகனும்"

நீளும் அமைதியில்
அதிகாரத்தின் குரல்
கேட்கிறது
"இதெல்லாம் தேவையா...
நடிக்காதடா... எந்திர்ரா"

அரசாங்கம் இங்ஙனம்தான்
அமைதியை நிலைநாட்டுமா?

மானுடர் பட்சிகள்
ஒழிந்த நிலத்தில்
இனி
ஆலைச் சங்கொலிகள்
மாத்திரம்தான் கேட்குமா?


2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் வாசிக்க : https://en.wikipedia.org/wiki/Thoothukudi_massacre







Thursday, April 19, 2018

மூன்று கவிதைகள் - மு. சுயம்புலிங்கம்

அரிதான படிமங்கள், வட்டாரச் சொற்களில் நேரடியான சொல்லல்  இவையே சுயம்புலிங்கம்  கவிதைகள். கடைசி வரியில் வெடிகுண்டைத் தேடும் வாசகர் அரிதாகவே அதைக் கண்டடைவார்.

கவிதைகளில் உலவுபவர்கள் குப்பை பொறுக்குபவர்கள், சொத்தைக் காய்கறிகளைப் பொறுக்கி இரவுணவு சமைப்பவர்கள், நடைபாதையில் வசிப்பவர்கள், தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு உறங்கச் செல்பவர்கள், மாட்டை நீரால் நிரப்பி விற்பவர்கள். பதிவு செய்யப்படுவது இவர்கள் வாழ்வும் குரலும்.

கவிதைகள் நாம் காணாத/காண விரும்பாத வாழ்வைக் காட்டித் தருகின்றன; அதன் பொருட்டு தகவல்களால் நிரம்பியிருக்கின்றன. அதனாலேயே சில இடங்களில் கவிதையாகாமலேயே நின்றுவிடுகின்றன. சேர்க்கப்பட்டுள்ள பூமகள் கவிதை அது கொண்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மிக முக்கியமானதாகப்படுகிறது.

கவிதைகளின் குரல் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாத, குட்டக் குட்டக் குனிபவனின் அரசியற் குரல்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

காயம்

குளுகுளுன்னு
அழுகுன மாம்பழம் அது.

அது அந்த நடைபாதைல கெடந்துச்சி.

ஒரு சின்னப் பையன்
அந்தப் பழத்த
ஆசையோட
கடிச்சித் திங்கறான்.

புளிப்பு தாங்க முடியல
அவனுக்கு
பல்லெல்லாம் கூசுது
முகத்த சுளிக்கிறான்.

அவன்
கைலயும்
வாய்லயும்
பிசுக்கு.
கடவாய் வழியா
சாறு ஒழுவுது.
விடம்மாண்டங்கான்.
சப்புதான்.

தோல் எல்லாத்தையும்
கடிச்சித் தின்னுட்டான்.
கொட்ட
நார் நாரா
தும்பு தும்பா
வெள்ளையா ஆய்ட்டுது.

கொட்டைய
இப்படியும்
அப்படியுமா
பெரட்டிப் பாக்குறான்.
இனி ஒண்ணும் அதுல இல்ல.

அவனுக்கு கோவம் வருது.
ஆங்காரம் எடுக்கு.

கொட்டைய
ஓங்கி எறிகிறான்.
அது பறத்து போயி
பூமியை
குத்திக் கிழிக்கிறது.

========================================================================

சகுனம்

சாக்கடை நீரால்
எப்போதும் நிரம்பியிருக்கிறது
இந்தக் கம்மாய்.

கம்மாக்கரை ஓரம்
குடும்பத்தோடு
குடியிருக்கிறார்கள்
பீ பெறக்கி
காய வைத்து
விற்று
வயிறு வளர்க்கிற மக்கள்.

அவர்களுக்குத் துணையாக
பன்றிகளும்
குட்டிகளோடு
வாசம் பண்ணுகிறது.

கொசுக்களும் பொஞ்சாதி புள்ளைகளோடு
குடியிருந்து வாழ்கிறது

அலைஅலையாக் கொளம்புது
நாத்தம்.

எல்லா நேரங்களிலும்
ஜனங்கள்
படைபடையாக வருகிறார்கள்
இங்கே.

அவர்கள்
வேட்டியை ஒசத்திக்கிட்டு
பிருஷ்டத்த
தொங்க விட்டுக்கிட்டு
கம்மா நெடுகிலும்
உக்காந்திருக்கிறார்கள்

ஒரு பன்னி
தன் குட்டிகளோடு
ஒரு மனித பிருஷ்டத்துக்கு நேரே
மேய்வதற்காக
மூஞ்சியை நீட்டுகிறது.

குண்டியிலிருந்து
இறங்கி வருகிற
பச்சை மலத்தை
ஒரு நீளமான அகப்பை
ஏந்திக் கொள்கிறது.
அந்தப் பெண்ணின் கூடையை
நிரப்புகிறது
அது.

நல்ல சகுனத்துக்காக
காத்திருந்த சூரியன்
மேகங்களை விலக்கிக்கொண்டு
ஆர்வமா வருது.

========================================================================

பூமகள்

அவா மட்டும்
ஒத்தீல இருக்கா
அந்த வூட்டுல.

எல்லாரும்
காட்டுக்குப்
பீருக்காவ.

சடங்காயிருக்காள்ல
சடங்கு வைக்கிற வரைக்கும்
வீட்டுலதான் இருப்பா...

அவிய வீடும் வளவும்
ஒண்ணாத்தான் இருக்கு.

பூவரசு மரத்துல
பூவும் காயும்
ஒரு சொமைக்கி இருக்கும்.
எல பறச்சி
குழல் செஞ்சி
சீங்குழல் வாசிக்கிறா.
விழுந்த பூவை ஆஞ்சி
காத்தடச்சி
சொடக்கு போடுதா.
காஞ்ச காய்ல
ஓட்ட போட்டு
சீட்டி அடிக்கிறா.

வனம்மாப் பறக்குது புட்டான்கள்
பருத்தி மாரால அடிச்சி
விழுந்த புட்டான்களைப் பெறக்குதா.

மண் சுவத்துல ஓட்டைக்குள்ளே
நூலாம் படை இருக்குது
பிச்சி அதை எடுக்கிறா
பருத்தி வெடிச்சிருக்காம் அவளுக்கு.

முட்டக் கோழிய
மார்போட அணச்சிக்கிட்டு
பிட்டிக்குள்ள
சுண்டுவெரல விட்டு
கிண்டிப் பாக்கா
அது ஒடம்பு
என்னமாச் சுடுது
எட்டத்துல இருக்குது முட்ட
உட்டுருதா கோழிய...

நிலவாசலுக்கு மேல
சீப்பு தேடுதா
தல சீவ.
பல்லி முட்ட மாட்டுது.
ரெண்டு விரல்களுக்கு இடையில
அத குறுக்கா வச்சிக்கிட்டு
நசுக்குதா
அந்தச் செத்தியங்காணு முட்ட
நசுக்கவே மாண்டங்கு.

கூர ஓட்ட வழியா
எறங்கி வந்து
வீட்டுக்குள்ள
சில்லுச் சில்லா ஒடஞ்சி கெடக்குது
சூரியன்.
அந்தச் சூரிய வழியும்
அதில் சிக்கிட்ட தூசியும்
எப்படி மினுங்குது
சத்தமில்லாத அந்த ஒளிய
ஆசையோட பிடிச்சி
கண்ணுல படும்படி
கண்ணு கூசக் கூச
வெளையாடுதா
அவா.

கஞ்சி கரைச்சி
ஆட்டுக்குட்டிக்கும்
நாய்க்கும்
குடுத்திட்டு
பசியாறுதா.

அடித்திரும்பிட்டுது.
அந்தக் கறுப்புப் பூனை
அவளுக்குச் செல்லம்
ரெண்டு காதுகளையும் பிடிச்சி
தூக்குதா...
அந்தப் பூனைக் கண்களப் பார்க்க
பாவமாருக்கு அவளுக்கு
மடியில கெடத்தித் தடவிக் குடுக்கா.

ஒல கொதிக்குது அடுப்புல
எறியிற வெறகு
புகையையும் எண்ணயயும்
கக்குது.
கண்ணக் கசக்கிக்கிட்டு
அந்த எண்ணய
நாக்குல வச்சி ருசி பாக்கா...

பரணுல
அடுப்புக்கு ஒசர
நரநரன்னு
முணுமுணுப்புக் கேக்கு.
பரண் மேல ஏறிப் பாக்கா...
வெறக ஓட்ட போடுது புழு.

புழு
முத்தத்துல கெடக்கு
ஒரு குஞ்சி கொத்துது
சுருண்டுக்கிட்டு கெடந்த புழு
நீளமா ஆய்ட்டுது
குஞ்சுகள் எல்லாம்
தள்ளி நின்னு
கூப்பாடு போடுது.
தாய்க்கோழி
ஆவேசமா
ஒரு கொத்து கொத்தி
தரையோட தேச்சி
ஒதறுது.

சோறு பொங்கிட்டா
சோத்துப் பான
அடுப்புல இருக்கு
நீர் வத்தணும்.

ஒரு பாட்டி
அவாட்ட
மீன் குடுக்காவ.
எளா
கழுவி வய்யி
அம்ம வந்துருவாள்னுட்டு
போறாவ
செவளம் ஒடச்சி
துண்டு துண்டா அறுத்து
கழுவுதா
கழுவக் கழுவ
கொழுக்குமாமில்ல மீன்
மசால் அரைச்சி
மீன் கொளம்பு
வைக்கத் தெரியாது
அவளுக்கு
வெங்காயத்த
தோல் உரிக்கா
காரம்
அவா கண்கள அறுக்குது
கண்ணீரா வருது அவளுக்கு
அவிய அம்ம வந்துட்டாவ.

========================================================================

நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள். 
உயிர்மை பதிப்பகம். 

Sunday, April 8, 2018

மூன்று கவிதைகள் - பூமா ஈஸ்வரமூர்த்தி

இரவு

இரவு
காலை பகல் என
ஓயாமல் பணி புரியும்
சின்ன இதயத்தை
மடியில்
போட்டுக்கொண்டு
சாவு
சாலப்பரிவுடன் சொன்னது
போதும் ஓய்வு எடுத்துக்கொள்

====================================

ஒருவர்மீது

ஒருவர்மீது
ஒருவர்
கோபப்பட்டுக்கொள்வது
அர்த்தமில்லைதான்

முடியுமானால்
வெளியே இருக்கும்
தடுப்புச் சுவர்கள் மீது

முடியாமல்ப்
போனால் மட்டுமே
அவரவர் அவரவர்மீது

====================================

எப்போதெல்லாம்

எப்
போதெல்லாம்
மோ
பாவாடையை
இறுகக்
கட்டினதில்

இனி
கழற்றவே
முடியாமற்
இடுப்பிலொரு
கருப்பு வளையம்.

===================================

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள் உயிர்மை பதிப்பகம்