Saturday, June 30, 2018

அமைதியை நிலைநாட்டல்

99 நாட்கள்
அமைதியாய் நின்றவர்கள்
நூறாம்நாள்
நடக்கத் துவங்கினார்கள்

அமைதியை விரும்பும் அரசாங்கம்
காலடியோசையை
நிறுத்தச் சொன்னது

கண்ணீர்க் குண்டுகள் எறியப்பட்டன
மக்கள்
கண்ணீர் வழிய நின்றார்கள்

கற்கள் எறியப்பட்டன
மக்கள்
குருதி வழிய நின்றார்கள்

தடியடிக்குச் சத்தமிட்டவனை
சில பூட்ஸ் கால்கள்
அமைதிப்படுத்தின

அடுத்து வந்தன
துப்பாக்கிக் குண்டுகள்:

தோழர்களை அமைதிப்படுத்த
நெஞ்சுக் குழிக்குள்
இறங்கின.

நியாயம் கேட்ட
சிறுமியொருத்தியின்
தொண்டையை அடைத்து
அமைதிப்படுத்தின.

நீளும் அமைதியில்
அரசாங்கத்தின் குரல்
கேட்கிறது
"ஒருத்தனாவது சாகனும்"

நீளும் அமைதியில்
அதிகாரத்தின் குரல்
கேட்கிறது
"இதெல்லாம் தேவையா...
நடிக்காதடா... எந்திர்ரா"

அரசாங்கம் இங்ஙனம்தான்
அமைதியை நிலைநாட்டுமா?

மானுடர் பட்சிகள்
ஒழிந்த நிலத்தில்
இனி
ஆலைச் சங்கொலிகள்
மாத்திரம்தான் கேட்குமா?


2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் வாசிக்க : https://en.wikipedia.org/wiki/Thoothukudi_massacre







No comments:

Post a Comment