Sunday, June 4, 2023

பள்ளிக்கல்வி - ஒரு விவாதம்

கேரளப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வில் மாணவர் - ஆசிரியர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். உடன் கர்நாடக, ஒரிசா, கேரள மாநில மாணவர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப மாநில/ஒன்றிய/தனியார் பள்ளிகளில் பயின்றிருந்தனர். அமர்வின் நோக்கம் எங்களுடைய பள்ளிக்கால அனுபவங்கள், எவற்றையெல்லாம் ஆசிரியர்கள் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறோம் என்பதைக் குறித்துப் பேசுவதாக இருந்தது.

கற்பித்தல் என்பதைத் தாண்டி தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுடன் இணைத்து சிலவற்றைப் பேசலாம் என எண்ணினேன். தாய்மொழிக் கல்வி, நுழைவுத் தேர்வுகள், தேசியக் கல்விக் கொள்கை, போட்டித் தேர்வுகள், இட ஒதுக்கீடு இவற்றைக் குறித்த தமிழ்நாட்டின் பார்வை பிற மாநிலங்களைக் காட்டிலும் தனித்துவமானதென்பதாலும், அண்மையில் கல்லூரிச் சுற்றுலா உள்ளிட்ட சில புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாலும் அவற்றைக் குறித்து ஆசிரியர்களின் சிந்தையைத் திருப்பலாம் என நினைத்தேன். அவ்வரங்கில் நிகழ்த்தவற்றைக் குறித்து இங்கே பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

முதலாவதாக அரங்கு அமைக்கப்பட்டிருந்த விதம்: முகாமில் ஆசிரியர்களே மாணவர்கள், எனவே அவர்கள் மேடைக்குக் கீழ். "ஆசிரியர்கள் மாணவர்களாகவும், மாணவர்கள் ஆசிரியர்களாகவும் இருக்கப் போகும் இந்த நிகழ்வு எனக்கு வித்தியாசமாக இருக்கிறது, எப்படித் துவங்குவதெனத் தெரியவில்லை - மரியாதைக்குரிய மாணவர்களே... நான் தமிழகத்தை சேர்ந்தவன், பள்ளி, கல்லுரிப் படிப்புகளை அரசுக் கல்வி நிறுவனங்களில் முடித்தவன், தமிழகத்தின் பார்வையிலிருந்து சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்." எனத் துவங்கினேன்.

புகைப்படம்: சமதா மேத்யூ 

மாணவர் இருக்கையும் ஆசிரியர் இருக்கையும் நம் குணத்தையே மாற்றிவிடும் போலும். சலிப்பைக் காட்டும் உடல்மொழி, திறன்பேசியை நோக்குதல், அடுத்திருப்பவருடன் உரையாடல் போன்ற மாணவர்களுக்குரிய குணாம்சங்கள் ஆசிரியர்களிடமும், இவற்றைக் கண்டும் பொறுமையிழக்கும் ஆசிரியரின் குணம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டதையும் உணர முடிந்தது. ஆனால், இங்கே இரு தரப்பினரும் மற்றவர்மேல் விமர்சனம் வைக்கும் இடம். இதே ஜனநாயகத்தன்மை எல்லா வகுப்பறைகளிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் வராமலில்லை.

முதல் சுற்றின் விவாதப் பொருள் பயிற்றுமொழி. கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பத்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி உண்டு. கர்நாடக நண்பர் தாய்மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவது கடினமாக இருந்தது எனவும், அறிவியலை சொல்லித் தருவதை விட செயல்முறைக் கல்வி இருந்திருந்தால் கற்பது எளிதாக இருந்திருக்கும். எப்படியென்றால், முப்பட்டகம் வெள்ளொளியை ஏழாகப் பிரிக்கிறதென்பதை வகுப்பறையில் நிகழ்த்திக் காண்பிப்பது கற்றலை இன்னமும் உற்சாகமானதாக்கியிருந்திருக்கும் என்றார். ஆசிரியர்கள் அவர் எடுத்துக்காட்டிற்குச் சொன்னதைப் பதினொன்றாம் வகுப்பு செய்முறைப்பாடம் எனப் பதிலளித்துக் கடந்தனர்.

பள்ளிகளின் மொழிக் கொள்கை தொடர்பான விமர்சனத்தைக் கல்லூரி மாணவர் ஒருவர் வைத்தார். தனியார் பள்ளியில் படித்தவர், அங்கேயும் பள்ளி வளாகங்களில் ஆங்கிலத்தில் பேசுவது கட்டாயம், மீறுபவர்களுக்கு அபராதம் இருந்தது என்றார். மொழி கற்றலில் இவ்வளவு இறுக்கம் வேண்டமெனவும் கேந்திரிய வித்யாலயங்களில் தாய்மொழிக் கல்விக்கே வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார்.

மொழி தொடர்பான விவாதத்தில், தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கல்வியில் முன்னிலையில் இருக்கும் வடக்கு ஐரோப்பிய நாடுகள் தாய் மொழியிலேயே பயிற்றுவிக்கின்றன, மொழிச்சிறுபான்மையினருக்கு அவர்களின் தாய்மொழியைக் கற்கவும் தாய்மொழியிலிருந்து உள்ளூர் மொழிக்கு மாறவும் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன. மேல்நிலைக் கல்வியை மலையாளத்தில் கற்பிக்கவும் பாடப்புத்தகங்கள் வெளியிடவும் கேரள அரசை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும் என்றேன். சில வருடங்களுக்கு முன் கேரள அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் அங்கு சென்று வந்ததையும் அந்நாட்டின் பிரதிநிதிகள் சில வாரங்களுக்கு முன்பு கேரளத்திற்கு வந்ததையும் அவர்களுக்கு நினைவுறுத்தினேன். கூடவே தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிக் கல்வியையும் தமிழில் கற்க இயலும் எனக் கூறினேன். கலை, அறிவியல் பாடங்கள் அரசுக் கல்லூரிகளில் தமிழ் வழியில் கற்பிக்கப்படுவதையும் அத்தகைய வகுப்பில் இருந்துதான் வந்திருக்கிறேன் என்பதையும் ஆங்கிலத்தில் சொன்னேன். தமிழ் வழிக்கல்வி என்னுடைய ஆங்கிலத்தை பாதிக்கவில்லை, மாறாக உதவியிருக்கிறதென்றேன். கூடவே தற்போது மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான புத்தகங்களை இந்தியில் வெளியிட்டு இருப்பதையும் சுட்டி என் வாதங்களுக்கு வலுவைக் கூட்டினேன். தாய்மொழிக் கல்வியை நீங்கள் பிற்போக்குத்தனமாகப் பார்ப்பீர்கள், ஆனால் தாய்மொழியில் கற்க விரும்புவர்களுக்கான வாய்ப்பை நாம் உருவாக்கித்தர வேண்டுமில்லையா? எனக் கேட்டேன்.

கேரளக் கல்லூரி மாணவர், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் பொறியலில் ஆர்வம் இல்லை என்கிறபோது, மதிப்பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் விளையாட்டு, இன்ன பிறவற்றிற்கும் வழங்கப்பட வேண்டும், விளையாட்டுப் பிரிவேளையைக்கூட அபகரிப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டார். அதை ஆமோதித்து, எழுத்தாளர் பெருமாள்முருகன் கட்டுரையில் இருந்த கருத்தொன்றைச் சுட்டினேன்: வகுப்பறைகளில் விளையாடும் கைக்கிரிக்கெட், புத்தகக் கிரிக்கெட் விளையாட்டுகளைப்பற்றிச் சொல்லி, நீங்கள் விளையாட்டு பாடவேளையை அபகரித்து அவர்களை வகுப்பறையில் அடைக்கையில் அவர்கள் புதிய விளையாட்டுகளை உருவாக்கி இருந்த இடத்திலேயே விளையாடத் துவங்குவார்கள். இது அவர்களின் கற்பனையை விரித்தெடுக்கலாம், ஆனால் உடல் நலத்திற்கு நன்மை பயப்பதல்ல என்றேன்.

கல்லூரி மாணவி ஒருவர் தான் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் தரவரிசையில் இரண்டு லட்சத்திற்குப் பிறகான இடமெனவும் சொன்னார். கூடவே ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க வேண்டுமெனக் கேட்டார். ஆசிரியர்களின் பிரதிநிதி, மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி படம் நடத்துவதுதான் தங்கள் முதன்மைப் பணியெனவும், மற்ற அலுவல் பணிகளும் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை எனவும் மறுத்தார்.

"நீங்களெல்லாம் அரசு பள்ளி ஆசிரியர்கள், பெரும்பாலும் முதல் தலைமுறை மாணவர்கள் படிக்க வரும் இடம். தனியார் கல்லூரி மாணவர்களை விட அவர்களுக்கு வசதியும் வாய்ப்பும் குறைவு. கற்பித்தலை தாண்டி அரசின் கொள்கை வகுத்தலில் நம் மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் நீங்கள் பங்களிக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கைப்பேசி வாங்க இயலாத அரசு பள்ளி மாணவர்களைத் தமிழகத்திலும் கேரளத்திலும் கண்டோம். கைப்பேசி இருந்தும் சிக்னல் கிடைக்காததால் வீட்டுக் கூரைகளில் அமர்ந்து பாடம் கற்றோர், சிக்னலுக்காக பல கிலோமீட்டர் நடந்த மலைவாழ் மக்கள் உள்ளிட்டோரைப் பார்த்தோம். வாய்ப்புகளில் சமநிலைத் தன்மை இல்லாத கல்விச் சூழலில், இவர்கள் எல்லோருக்கும் ஒரே தேர்வு என்பது எங்ஙனம் சரியாகும்?" எனக் கேட்டேன்.

ஓரிரு இடங்களில் அது போன்ற நிலை இருக்கலாம் ஆனால் கேரளத்தைப் பொருத்தவரை பெரும்பாலான மாணவர்களிடம் பேசியும் இணைய வசதியும் இருந்தது/இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது என்றார் ஆசிரியர்களின் பிரதிநிதி. நான் இப்போது வேறு விதமாகக் கேள்வியைத் தொடுத்தேன்: இங்கு இருப்பவர்களின் வகுப்பறையில் இருந்து எத்தனை மாணவர்கள் நீட் தேர்வைக் கடந்து மருத்துவப் படிப்பிற்குச் சென்றார்கள் எனக் கேட்டேன். "எத்தனையோ பேர் உண்டு!" என்ன சத்தமான பதில் வந்தது, பலரும் தலையாட்டி ஆமோதித்தார்கள். நான் அடுத்த கேள்வியைக் கேட்டேன்: அவர்களில் தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் தேர்ந்தவர்கள் எத்தனைஅமைதி. சரி, கோச்சிங் சென்டர்கள் வசூலிக்கும் குறைந்த கட்டணம் என்று எதைச் சொல்வீர்கள்? மேடையில் இருந்த மாணவி ஒரு லட்சம் என்றார். நீங்கள், பிள்ளைகளே என அழைக்கும் அனைவரிடமும் லட்சங்கள் இருக்குமா? நீண்ட அமைதி. அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் லட்சங்கள் செலவு செய்ய இயலாது, அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்லும் வழிமுறைகள் இங்கே உண்டு. அவை உண்டு உறைவிடப் பயிற்சிப் பள்ளிகளாகி நெடுங்காலம் ஆயிற்று; பள்ளிகள் அவர்களுக்கு தேவையான வருகைப் பதிவை வழங்கும், அவர்கள் பள்ளிக்கு வராமல் இரண்டு வருடங்களுக்கு முழு நேரமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுக்கலாம். இப்படி இருக்கையில் இதை எல்லோர்க்கும் சம வாய்ப்பு எனச் சொல்ல இயலுமா? உடன் தேர்வைப் பலமுறை எழுதி வெற்றிபெறும் மாணாக்கர்கள் அதிகம். அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பச்சூழல் பல்லாண்டுப் பயிற்சிக்கும் காத்திருப்புக்கும் ஏற்றதா? பதில் இல்லை.

எனவே இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை நீங்கள் அரசிற்குக் கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் நுழைவுத் தேர்வுகளை இதற்காகத்தான் எதிர்க்கிறது, இயலாத பட்சத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்திலும் பொறியியலிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையால் அடுத்தடுத்து நுழைவுத் தேர்வுகள் வரும், ஆசிரியர்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியைச் சந்திக்க நேரும். கடந்த பிப்ரவரி 16 அரசு/தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு அனுப்பிய சுற்றறிக்கையின்படி 2023-24 கல்வியாண்டில் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வில் (CUET - Common University Entrance Test) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எனவே இணையவழிக் கற்றல் பெருகும் காலத்தில் கற்பித்தல் மட்டுமல்ல, எதிர்வரும் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார் ஆக்குவதும், இத்தகைய அசமத்துவம் உள்ள ஒரு நாட்டில் போட்டித் தேர்வுகள் அவசியமானவயா எனக் கேள்விக்குள்ளாக்குவதும்தான் ஆசிரியர்களின் பணியாக இருக்க முடியும் எனச் சொன்னேன். ஒருவேளை நுழைவுத் தேர்வுகளால் பாதிப்பு இல்லை எனக் கருதினால் தமிழகத்தை போல, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை இவை எங்ஙனம் பாதிக்கிறது என்பதைக் குறித்த ஒரு ஆய்வை மேற்கொள்ள அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினேன். மௌனமே பதில்.

பிறகு, கற்பித்தல் குறித்த மாணவர்களின் வழக்கமான குற்றச்சாட்டுகள். ஆசிரியர்கள் நெளியத்துவங்கினர், ஒருவர் எழுந்து "உங்களின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் உங்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் அல்லவா? அவர்களைப் பற்றி பேசுங்கள், அவர்களின் பெயரைச் சொல்லுங்கள், அவர்கள் என்ன செய்தார்கள்?" என்றார். எங்களுடைய பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சிலர் எங்களுக்கு எங்ஙனம் வழிகாட்டியாக இருந்தார்கள் எனச் சொன்னேன். மொழித்திறனை வளர்க்க ஆங்கில நாளிதழ்களைப் படிக்க ஊக்குவித்தார்கள், நடுப்பக்கக் கட்டுரைகளைக் குறித்துப் பேசி அடுத்தநாள் படித்தோமா என்பதையும் உறுதி செய்து கொண்டார்கள். அவர்கள்வழி அறிந்த ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மென்திறன் பயிற்சி வகுப்புகள் எங்களுக்குத் திறனை வளர்த்துக்கொள்ள எவ்வாறு உதவின எனப் பேசினேன். அடிப்படை சேமிப்பு, சமூக நலத்திட்டங்கள், உடல் நலம் குறித்த தகவல்களை எங்களுடன் எப்படிப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதையும் சொன்னேன். அவர்களில் சிலர் நாங்கள் உயர்கல்வி செல்கிறோமா இல்லையா என்பதைக் கண்காணித்தார்கள், தற்போதைய அரசு அதைக் கட்டாயமாக்கியிருக்கிறது எனவும் சொன்னேன். ஆசிரியர் பிரதிநிதி, இங்கே அதை அரசுத் துறையே செய்கிறது, எங்களின் பங்களிப்பு அவசியமில்லை என்றார்.

மொழி, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் என்னுடைய கருத்துக்களின் மீது ஒரு ஒவ்வாமை இருந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால், எங்களின் அனைவரின் கருத்துக்கும் உடனடி மறுப்பினை ஆசிரியர்களிடம் எதிர்வினையாகக் காண முடிந்தது. அவ்வப்போது விவாதம் திசைமாறுகிறது என்கிற கருத்தும் பிரதிநிதியிடமிருந்து வந்தது. குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பிரதிநிதியால் மறுக்கப்பட்டு உடனடிப் பதில்கள் வழங்கப்பட்டு மேலும் சிந்திப்பதற்கான, விரித்தெடுப்பதற்கான கதவுகள் அடைக்கப்பட்டன. பிறகு, ஆசிரியரும் மாணவரும் விவாதிக்க நேரும்போது எப்போதும் ஆசிரியர்தானே சரியாக இருக்க முடியும்? அரங்கு எங்களுடையதென்றாலும் இப்படி ஒரு மறைமுக அதிகாரம் ஆசிரியர்களிடமிருந்து வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

இறுதியாக ஆசிரியர்களில் ஒருவர் நன்றியுரை வழங்கினார். அவர் தன் மகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறுப் படிப்பில் சேர்ந்து, பிற்காலத்தில் முனைவர் பட்டம் வாங்க விரும்பியதை நினைத்துக் கவலை கொண்டதையும், முனைவர் பட்டம் வாங்குகையில் அவர் எட்டியிருக்கும் வயதை நினைவுறுத்தி நல்வழிப்படுத்தி சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்த்திருப்பதையும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் நான் எவர் முன்னே அமர்ந்திருக்கிறேன் எனப் பொறி தட்டியது. அப்பல்கலைக்கழகத்தில் நுழைய இவர் பிள்ளை நிச்சயம் நுழைவுத் தேர்வு எழுதி இருப்பார், அதற்கெனத் தனிப்பயிற்சிக்கூட எடுத்திருப்பார். என் முன்னே அமர்ந்திருப்பவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் படிப்பார்கள், நுழைவுத் தேர்வுகளுக்குப் பல லட்சங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இருந்து அரசுக்கு நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான ஒரு கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புக் குறைவு. எல்லோரிடமும் போட்டிபோடுவதற்குப் பதில் பொருளாதார வலுவுள்ள உயர்குடிகள் தமக்குள் போட்டிபோட்டுக்கொள்வது ஆரோக்கியமானதுதான் இல்லையா?!

 

No comments:

Post a Comment