Tuesday, May 25, 2021

ஊர் கூடித் தேர் இழுப்போம்

 தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்த நேரத்தில் கடைவீதிகளில் முட்டிமோதிய கூட்டம், கோவிட் தொற்று குறித்த சரியான விழிப்புணர்வும், கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கைகள் குறித்தும் மக்களுக்கு இன்னும் தெளிவில்லை என்பதையே காட்டுகின்றது. ஆனால், அதை வெளிக்காட்டும் இதுபோன்ற நிகழ்வுகள் முதல் அலையின்போதும், தற்போதும் அதே அளவில் தொடர்வது வருத்தமளிக்கிறது.  

 மருத்துவமனைகளில் இடமில்லாத, கோவிட் தொற்றை எதிர்கொள்ளவேண்டிய வைத்தியமுறைகள் கைப்பேசியில் வந்து நிறையும் இந்த நேரத்தில் கடைவீதிகளில் முட்டிமோதும் ஒவ்வொருவரும் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? நோய் குறித்த அச்சத்தை விட நோய்ப்பட்டால் தனித்து விடப்படும் நடைமுறை அவலத்தைத்தான்; ஒரு சமூகம் அவர்களுக்குப் பின் இல்லை என்கிற அச்சத்தைத்தான். 

இந்த குறிப்பை எழுதுவதற்காக தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் உள்ள சொற்ப நண்பர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டேன்: கோவிட் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ, கட்சி நிர்வாகிகளோ, மாணவர்களோ அல்லது ரசிக அமைப்புகளோ அமைப்பாய்த் திரண்டு உள்ளூரிலேயே உதவி மேசை துவங்கியிருக்கிறார்களா? வீட்டை விட்டு வெளியே வர இயலாத சூழ்நிலையில் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவது யார்? பெரும்பாலோரின் பதில் அப்படி எந்த அமைப்பும் இல்லை என்பதுதான்.

உணவில்லாதவர்கள், பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் அமைப்புகள் குறித்த செய்திகள் நிறைய உண்டெனினும் கோவிட் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ, அரசு அமைப்புகளைத்தவிர சமூகத்தின் பங்களிப்பு குறைவாகவே உள்ளதாகவே தோன்றுகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள், முன்களப்பணியிலுள்ள மருத்துவம், காவல், சுகாதாரம், போக்குவரத்து, உணவு உற்பத்தி உள்ளிட்டோரின் பங்களிப்புக்கு அப்பால் ஒரு சமூகமாக நமக்கும் சில கடமைகள் இருக்கின்றன.

இடம்பெயர்வினால் தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கோவிட் தோற்று உறுதி செய்யப்பட்டவுடன் குடும்பங்கள் தனித்து விடப்படுகின்றன. சில இடங்களில் பக்கத்து வீடுகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கூடச் செல்வதில்லை. 

அண்டை மாநிலமான கேரளத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அச்சமூகம் தத்தெடுத்துக்கொள்கிறது. பெரும்பாலான இடங்களில் அரசியல் அல்லது ரசிக அமைப்பைச் சேர்ந்தவர்கள் களத்தில் இருக்கிறார்கள். சமூக இடைவெளியுடன் நால்வர், உதவிக்கு அழையுங்கள் என்று கைப்பேசி எண்கள் தாங்கிய சுவரொட்டிகள், ஒரு மேசை, இரு நாற்காலிகள், வாகனங்கள் என்கிற எளிய அமைப்பு. அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படத்தேவைகளை உணர்ந்தும் கேட்டும் இச்சேவையை இலவசமாகவோ அல்லது சிறுதொகைபெற்றோ செய்துவருகிறார்கள்.



பெருந்தொற்றுக்காலம் போர்க்காலம்; எதிரி நம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிரேயன்றி நோய்த்தொற்றாளர்கள் அல்ல. தனித்திருப்பவர்களுக்காக விருப்புவெறுப்பு அச்சம் கடந்து எல்லோரும் களத்தில் ஒன்றிணையவேண்டிய நேரமிது.

No comments:

Post a Comment