Tuesday, June 2, 2020

கீறல் விழும் காலம் - கார்ல் மார்க்ஸ்

அன்புள்ள கார்ல் மார்க்ஸ்,

வணக்கம். கனலி வலையில் உங்கள் நேர்காணலை (அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியே இருப்பதாகத் தோன்றவில்லை.) வாசித்தேன். 

"இலக்கியப் பரிச்சயம் உபவிளைவாக மனதிற்குள் ஒரு பிளவை உண்டு பண்ணிவிட்டது. அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதில், சமரசங்களைப் பேணுவதில் நிறைய சச்சரவுகளை உருவாக்கியது. எதிர்கொள்ளத் தடுமாறினேன். இப்போது கையாளக் கடினமாக இருக்கிறது. நேர்மை குறித்த காத்திரமான சித்திரத்தை இலக்கியமே அளித்தது." இவ்வாறு சொல்லியிருக்கிறீர்கள்.

மாணவப் பருவத்திலிருந்து பணிச்சுழலுக்குள் போகும் ஒருவருக்கு நீங்கள் சொன்னவை நன்கு பொருந்தும். கற்றுக்கொண்ட அறமதிப்பீடுகள் உண்டாக்கிய அளவுகோல் பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணும். எதிர்காலத்தையே விலையாய்க் கேட்கும் சமரசங்களின்முன் என்ன செய்வது?

நியூட்டன் படத்தில் ஒரு காட்சி வரும்.

"என் நேர்மைதான் பிரச்சினையா?"

"இல்லை, அப்படி இருப்பது குறித்து உனக்கு வரும் திமிர்"

பெரும்பாலான பிரச்சினைகளுக்குப் பிறகு இது மனதிற்குள் வந்துபோகும். ஒருவேளை இவை வெறும் திமிர்தானா என்றும் தோன்றும். மனதிற்கு அதை வேறு எப்படித்தான் எதிர்கொள்ளவேண்டும் என்பதும் தெரிவதில்லை. இது குறித்து எங்களுக்கு உதவ, உங்களுக்கு மேலே சொல்ல ஏதும் இருக்கிறதா?

நேரமிருப்பின் எழுதுங்கள்,

நன்றி.





வணக்கம் விஜயகுமார்,

நீங்கள் மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். வாசிக்கத் துவங்கும் அதன் ஆரம்ப காலகட்டங்களில் வாழ்க்கை குறித்த ஒற்றைச் சித்திரம் மாத்திரமே நமக்கு அறிமுகமாகிறது. அறம் குறித்த ஓயாத கேள்வி ஒன்று மனதில் ஒலித்தபடியே இருக்கிறது. சமரசங்கள் மீது, போலித்தனங்கள் மீது ஒவ்வாமையையும் ஆத்திரத்தையும் அது உருவாக்குகிறது. ஆனால் யதார்த்தத்தில், நமது மொத்த வாழ்க்கையே சமரசங்களின் தொகுப்பாக இருப்பதை நாம் புரிந்துகொள்கிறோம். வாழ்க்கை அதையே நமக்கு உணர்த்துகிறது.

இந்த இடத்தில்தான் இலக்கியத்துக்கும் நீதி போதனைக்குமான நுட்பமான் வேறுபாடு புரிகிறது. நான் இலக்கியம் படித்தவன், நேர்மையாளன், அறம் பிறழாதவன் போன்ற திமிரான நமது நிலைப்பாடுகளில் கீறல் விழுகிறது. அதையும் இலக்கியம்தான செய்கிறது. ஏனென்றால், மனித மனம் கொள்ளும் தத்தளிப்புகளை அது செயல்படும் கீழான தருணங்களை இலக்கியம் மட்டுமே கண்டுபிடித்து மேலே கொண்டு வருகிறது. இலக்கியத்தின் வேலை நல்லது கெட்டது என்று தரம் பிரித்து அவற்றை நமக்கு இனம் காட்டுவதல்ல. மாறாக இது மேலானது இது கீழ்மையானது என்று புரிந்துகொள்கிற மன அமைப்பை நமக்கு அறிமுகம் செய்வதுதான். அந்த உணர்வுதான், மேலானதின் அடியில் உள்ள கீழ்மையையும், கீழான ஒன்றில் உறைந்திருக்கும் மேலான தன்மையையும் கண்டடையச் செய்கிறது. அதனால்தான் அது தீர்ப்பிடும் செயலுக்கு எதிராக இருக்கிறது. தண்டனை தரும் பண்புக்கு எதிராக இருக்கிறது.

நமக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. நாம்தான் இதை மாற்ற வேண்டும் என்பது போன்ற கற்பிதங்களை இல்லாமல் செய்வதுதான் இலக்கியத்தின் முதன்மையான பணியாக இருக்கிறது. புறப்பார்வைக்கு இது பொறுப்பற்ற தன்மை போல தோன்றும். ஆனால் அப்படி அல்ல. வாழ்க்கையைப் புரிந்துகொள்வது வேறு, நாம் கற்பனை செய்து வைத்திருக்கிற வாழ்க்கையுடன் யதார்த்தத்தை ஒப்பிட்டுக் குமைவது வேறு. Ideal state என்கிற உச்ச நிலைக்கும் யதார்த்தத்துக்கும் இருக்கும் வேறுபாடு நமக்குப் பிடிபடுகிறபோது நமது அதிருப்திகள் குறைகின்றன. அப்படிப் புரிகிறபோது, இலக்கியப் பரிச்சயம் இல்லாதவன் அதைத் தனது தோல்வியாக உருவகித்து கசப்படைகிறான்.  இலக்கியப் பரிச்சயம் உள்ளவனுக்கு அதில் சற்று அதிகமாக பயணம் செய்தவனுக்கு  அப்படிக் கசப்பு வராது. ஒருவிதத்தில் இந்த Ideal state கற்பனைதான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறது. ஆனால் இலக்கியம் சர்வாதிகாரம் உருவாகும் அந்த மன அமைப்பை நொறுக்குகிறது.  அப்படித்தான் அது வன்முறையை எதிர்கொள்கிறது.

இந்தப் புரிதல் மட்டுமே வாழ்க்கையை அதன் எல்லாக் கசடுகளையும் கடந்து வாழத் தூண்டுகிறது.


No comments:

Post a Comment