Tuesday, March 27, 2018

Sexy Durga / S Durga / இரு துர்க்கைகள்

கபீருக்கும் துர்க்கைக்கும் இடையில் காதலும் மதமும். துர்க்கை எதுவாக ஆனாலும் அவள் லவ் ஜிகாதின் இலக்கெனப்படுவாளென்பதால் கபீர் கண்ணனாக முயல்கிறான். அதுவும் நம்மவர்களுக்குப் போதவில்லை. காதலே வெல்வதால், கபீரும் துர்க்கையும் பயணப்படுகிறார்கள். எங்கு போவது? தெரியாது. குறைந்தபட்சம் ரயில் நிலையத்திற்காவது போகலாமில்லையா?! தங்கச்சிப் பாப்பாக்களின்றி மாளிகைக்கடைக்குக் கூடப் போகமுடியாத துர்க்கைகள், நள்ளிரவில் ஆண் துணையிருந்தாலும் ரயில் நிலையத்திற்குப் போவது அவ்வளவு எளிதா என்ன?!


அதே ஊரில் இன்னொரு துர்க்கை வசிக்கிறாள். வெகுகாலத்திற்கு முன்பே சிலையானவள். அதனால் வழிபாட்டிற்கும் கொண்டாட்டங்களுக்கும் குறைச்சலில்லை.

இந்த முரணையும் இவர்கள் இருவரையும் படம் பின்தொடர்கிறது.

http://ddnews.gov.in/entertainment/kerala-hc-says-screen-s-durga-iffi-ministry-considers-challenging-order

சனல் குமார் சசிதரனின் மூன்றாம் படமிது. இரண்டாம் படம், ஓழிவு திவசத்தே களி - விடுமுறை நாள் ஆட்டம். தன் கதை சொல்லல் முறைக்காக பெரிதும் கொண்டாடப்பட்ட இந்தப்படத்தின் கதையாசிரியர் உண்ணி.ஆர். படமாக வெளிவருவதற்கு முன்பே, சுகுமாரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, உயிர்மை பதிப்பகம் வாயிலாக காளி நாடகம் எனுந்தலைப்பில் புத்தகமாகவும் வெளிவந்தது.


இந்தப்படத்திலும் கதாப்பாத்திரங்களைப் பின் தொடரும் கேமிரா, முன் தீர்மானிக்கப்படாத வசனங்கள், தொடர் ஒளிப்பதிவு போன்ற சிக்னேச்சர் யுக்திகள்.
புறப்பட்ட இருவரும் உதவி கேட்டு ஒரு காருக்குள் எற, காரும் கதையும் நகர்கின்றன. பெரும்பாலான காட்சிகள் காரினுள். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்வையாளர், இதை வாசிப்பவர் என எவரும் யூகிக்க இயலும். எனினும், அதை எங்கனம் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள் என்பதே படத்தை சுவாரஸ்யப் படைப்பாக்குகிறது.

இரவுக்கு வேறு முகம்; இருளில் நமக்கும். இருளில் நடக்கும் அத்துமீறல்கள் அனைத்தையும் படம் காட்சிப்படுத்துகிறது. நள்ளிரவில் ஆயுதக்கடத்தல் செய்வபர்கள், காவல்துறை, முன்பின் அறியாதவர்களிடம் பஞ்சாயத்தை துவங்கும் வெள்ளை வேட்டிகள் என. காரில் ஏறிய நொடி துவங்கிய மீறல் மெல்ல மெல்ல நகர்ந்து நமது கழுத்தையும் நெரிக்கிறது.

ஒளிப்பதிவாளருக்குத் தனியே கை தட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியும் குறைந்தபட்சம் மூன்று நிமிடங்களிலிருந்து இருபது நிமிடங்கள் வரை நீள்கின்றன. புகுந்து விளையாடியிருக்கிறார். புகுந்து விளையாடியிருக்கிறார் என்றால் நிஜமாகவே. இரண்டு மூன்று 360 டிகிரி காட்சிகள். அதுவும் ஒரு காருக்குள்; காருக்குள்ளிருந்து கேமரா மேலெழும்பி காரின் முதுகிலேறி தலையைச் சுற்றிவிட்டு மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்க்கிறது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது காவல் துறையினர் வருகிற சிங்கிள் ஷாட்டும் அவர்களின் நடிப்பும்.

காரின் டிக்கியில் இருந்தவாறு பதிவு செய்யத் துவங்கும் கேமரா, படம் நகர நகர, காட்சிகளுக்கேற்ப பின்னிருக்கை, டேஷ் போர்டு, டிரைவருக்கு முன் என நகர்ந்து நகர்ந்து இறுதிக்காட்சியை காருக்கு முன் சாலையில் அமர்ந்து பதிவு செய்கிறது.

இறுதியை நெருங்கும்போது மெல்ல  வந்து சேர்ந்து கொள்ளும் பின்னணி இசையும் பதைபதைப்பைக் கூட்டும் பணியைச் செவ்வனே செய்கிறது. ஒரு செல்ல நாய்க்குட்டிபோல் அறிமுகமாகும் கார் கொடுமிருகமாகி நம்மை அதிரச்செய்யும் மாயாஜாலம் பின்னணி இசையாலும் ஒளி அமைப்பாலுமே நிகழ்கின்றன.

முழுப் படத்தையும் யாருடைய புத்திசாலித்தனமும் தொந்தரவு செய்வதில்லை. வசனங்களுக்கிடையில் வலிந்த நகைச்சுவைகளில்லை, பொன்மொழிகளேதும் திணிக்கப்படவில்லை. நடப்பதை மட்டும் பதிவுசெய்து துர்க்கையின் உடல் நடுக்கத்தைப் பார்வையாளருக்கும் கடத்துகிறது.

படத்தின் இந்த ஒரு காட்சியை மட்டும் எழுதாமல் தவிர்க்க இயலவில்லை. களேபரச் சத்தம் கேட்டு வீடொன்றின் கதவுகள் திறக்கப்படுகின்றன. யாராவது வரமாட்டார்களா எனப் பதைத்த நாமும் கொஞ்சம் தளர்ந்து அமர்கிறோம். கனவான், மனைவியுடன் வெளிப்படுகிறார். சப்த மூலத்தை ஆராய்கிறார். எந்தச் சலனமும் இன்றி வீட்டின் நான்கு கதவுகளையும் அடைத்துவிட்டு உறங்கச் செல்கிறார். நான்கு கதவுகள் வைத்துக் கட்டுவதே நன்றாக உறங்கவேண்டும் என்பதற்குத்தானே?!

படம் துவங்கும் முன் ஒரு சம்பவம். இதை எப்படியும் விலக்கிப் பார்க்க இயலவில்லை. இருக்கை எண் 12 & 13-ல் நண்பரும் நானும். ஒரு குடும்பம் எங்கள் வரிசைக்கு வருகிறது; மகள் 10-ல் அமர  உடன் வந்தவர் 9-ல். எங்களை எட்டிப் பார்த்த பிறகு அவர் என்ன நினைத்தாரோ, காலியாயிருந்த 11-க்கு மாறி அமர்ந்தார்.

சிறுமிக்கு எத்தனை வயதெனத் தெரியவில்லை. எந்த வயதென்றாலும் நாம் இதுவரை அறிந்தது, சிலையானாலே ஒழிய துர்க்கைகளுக்குப் பாதுகாப்பில்லை என்கிற உண்மையைத்தானே?


No comments:

Post a Comment