Thursday, June 8, 2017

மனுஷ்ய புத்திரனும் நானும்




மனுஷ்ய புத்திரன் கவிதைகளைப் பற்றி மட்டுமல்ல, வாசித்த எந்தப் படைப்பைப் பற்றியும் சிறு குறிப்பு கூட எழுதும் தன்னம்பிக்கை இன்று வரை இல்லை. நேர்ச்சந்திப்பிலும் ஒரு கையெழுத்து வாங்குமளவுக்குத்தான் தைரியம் இருக்கிறது.

ஒரு கவிஞராக மட்டுமின்றி களப்பணியாளராகவும், பத்திரிகையாளராகவும் பல வருடங்களாகத் தொடர்ந்து பங்களித்து வரும் ஒருவரைக் கௌரவிக்கும் இத்தருணத்தில் வாசகசாலையுடன் இணைந்துகொள்வது மிகுந்த நிறைவளிப்பதாக உள்ளது.
எளிய சொற்களின் வழி எவ்வாறு என்னை இறுக அணைத்துக் கொண்டாரோ அவ்வாறே அவரைத் திருப்பியணைக்க எளிய சொற்களைத் தவிர எதுவுமில்லாததாலும், தலைப்பிலேயே ஐம்பது சதவிகித ஒதுக்கீடு இருப்பதாலும் இக்காரியத்தைச் செய்யத் துணிகிறேன். இதை எழுதுகையில் மூன்று தொகுப்புகள் கைவசமிருப்பதால் அவற்றின் நெடி அதிகமிருக்கும், பொறுத்தருள்க.

சமூக வலைத்தளங்கள் வழி வாசிக்க வந்தேன். அதன் மூலம் சிலர் பெயரைத் தெரிந்து கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற காலத்தில் மனுஷ்ய புத்திரன் மலிவு விலையில் மெலிந்த தொகுப்புப் போடுபவராக இருந்தது என்னுடைய நல்ல காலம் என்றுதான் சொல்லவேண்டும். நாற்பது ரூபாய் என்பதைத் தாண்டி 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' தொகுப்பைத் தேர்வு செய்யக் காரணமென்னவென்று எப்படி யோசித்தாலும் நினைவிலில்லை.
ஆனால் அத்தொகுப்பிலுள்ள ஒரு கவிதை மட்டும் என்னை வசீகரித்தது என்பதைவிட எனக்குப் புரிந்தது எனலாம். வகுப்பறையில் நண்பரொருவர் தொகுப்பை வாங்கி, நிதானமாக உரக்க வாசித்து இக்கவிதையின் மூட் -ஐ உச்சரிப்பில் கொண்டுவந்தார்.

இந்தக் கண்கள்
இந்தக் கண்களை மட்டுமே பார்க்கின்றன
அதன் பலவீனங்களை.....

இப்படி நகரும். அப்போது இந்தக் கண்களைக் கொண்டு நான் எத்தனையோ கண்களைக் கண்டுகொண்டிருந்த காலம். இப்படித்தான் அவரை நான் கண்டுகொண்டேன்.


நான் ஒரு அவசரக்குடுக்கை; இப்போது வரை நீளமான கவிதைகளைப் பொறுமையாக வாசிப்பதில்லை. அவர்,

கைவிடப்பட்ட பிச்சைக்காரர்கள்
கைவிடப்பட்ட குடிகாரர்கள்

என்றெழுதும்போது விழியை ஒவ்வோர் முறையும் இடப்பக்கம் திருப்புவதைக் கைவிட்டுவிடுவேன்ஆனால் மனம் உச்சரிக்கும். ஒரே வார்த்தையை திரும்பத்திரும்ப உபயோகித்து அவர் உண்டாக்கும் அழுத்தம் நாம் அறியாததல்ல.
ஆனால் குட்டிக்கவிதைகளின் மீது எனக்குத் தனி விருப்பமுண்டு. ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்தவுடன் நான் தேடுவது குட்டிக்கவிதைகளைத்தான். இடமும் இருப்பும் தொகுப்பை இந்தக் குட்டிக்கவிதைக்காகத்தான் தேர்வு செய்தேன்.

அழுகை
வராமலில்லை
ஒரு வைராக்கியம்

உங்கள் முன்னால்
அழக்கூடாது

சில வருடங்களில் உதட்டைக் கடித்துக் கொண்டு விழத் தயாராயிருக்கும் கண்ணீருடன் நானே அந்தக் கணத்தில் நின்றேன். அப்போது இக்கவிதை நினைவில் வந்ததாலோ, எனக்கு வைராக்கியக் குறைவென்பதாலோ, அன்பின் கரங்கள் நீளுகையில் அதைத் தட்டிவிட முடியாததாலோ அழுதும் விட்டேன். அதன்பின் சில மாதங்கள் கழித்து ஒன்றுமே தெரியாததுபோல் மனுஷ்ய புத்திரனே கேட்கையில், "யோவ்... முடியாதுய்யா" என்றுதான் சொன்னேன்.

விசும்புகிற தலையைக்
கோதுகிற வேளையில்
ஒரு முறையேனும்
விசும்பாமல்
இருக்க முடிகிறதா
நம்மால்?

நீராலானது தொகுப்பின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று, "ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு". கல்லூரி இறுதித்தேர்வில் தோல்வியடைந்த நேரத்தில் மனுஷ்ய புத்திரனைத் தேடி எடுத்து மடியில் கிடந்தேன். அராத்து எழுதியதைப்போல, அப்போது அந்தக்கவிதையைப் படித்து அழுதேன் அல்லது அந்தச்சூழலில் எனக்கு அழ ஒரு கவிதை தேவையாக இருந்தது. இப்படித்தான் அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்துப் பின்னர் பல பிரச்சினைகளுக்கு என்னை ஆளாக்கினார்.

நீராலானது தொகுப்பின் முன்னுரையில், கவிதையின் அனைத்துக் கதவுகளையும் திறந்து போட்டுவிடவேண்டுமென்றெண்ணியதைக் குறிப்பிடுகிறார். கவிதைகளின் வலிமையாகிய எளிமையும் நேரடித்தன்மையும் புதிதாக வாசிக்கவருவபருக்கு எச்சிரமத்தையும் தருவதில்லை.

மற்றோர் சிறப்பம்சம் உரைநடைத்தன்மையிலேயே வந்தமரும் ஓசை ஒழுங்கு. ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதால் மட்டுமல்லாமல் சில இடங்களில் இயல்பாகவே அதைச் சாதித்திருக்கிறார். கிணறு தோண்ட ஆட்கள் வந்துவிட்டார்கள் எனத் தொடங்கும் இந்தக்கவிதையில், சின்னஞ்சிறு தாவரமே என்றிறைஞ்சும் குரலில் உள்ள துக்கம் நன்றாகக் கேட்கிறது.

ஒரு நீருற்றைப் போய்ச்சேர
இவ்வளவு பிராசையா
எனக் கேட்கும்
சின்னஞ்சிறு தாவரமே
நீ அறிவாயா
வாடி வதங்கும்
உன் இலைகளின் கருமை
இந்த அந்தியை
எவ்வளவு கருப்பாக்குகிறதென்று

கவிதை பிடிபடவில்லையென்றாலும் திரும்பத்திரும்ப உச்சரித்துப்பார்க்கும் கவிதைகளில் ஒன்றாக இதிருக்கிறது. இது மட்டுமல்ல,

/காணாமல்
போய்விட்டேன்
என்பதற்காக

இல்லாமலேயே
போய்விட்டேன்
என்றாகிவிடுமா,

சொல்?/

/நான்
உனக்காக விட்டுச்செல்லும்
மிகச் சிறந்த பரிசு
என்னைப் பற்றிய வருத்தங்கள்
.....................

என்னைப் பற்றிய வருத்தங்கள்
மட்டும் இல்லையெனில்
இவ்வளவு காதலை
இவ்வளவு கருணையை
எங்கு சென்று மறைப்பாய்?!/

/இருட்டுக்குள் இருந்து
குருடனின்
சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை
எனக்குத் தெரியும் /

/என்னை நானே
முக்கியமாக
எண்ணிக்கொண்டதைத் தவிர
வேறெந்தத் தவறையும்
செய்யவில்லை/

/அன்பின் வழிமுறைகள் ஏன் இவ்வளவு பதட்டமுடையதாக இருக்கவேண்டும்/

/மக்களை நேசிக்கிற யாவரும் இடதுசாரிகளே/

இப்படிப் பல.

மனத்தின் பல்வேறு வண்ணங்களைப் படிமங்களின் வழியாகவும் நேரடியாகவும் மிக அதிகமாகக் கவிதைகளில் காணமுடிகிறது. அதிலிருக்கும் ஒன்றுக்கும் உதவாதவன் நான்தான், தொட்டாற்சிணுங்கியும் நான்தான். அங்கு கேட்பது நம் அந்தரங்கக் குரல்தான்

இறப்புச் செய்தியை ஏன் தெரிவிக்கவில்லை என்பதற்கு அது உங்களைக் கட்டாயப்படுத்தியது போல் ஆகிவிடுமென்பதுஏப்ரல் ஒன்றில் காதலைச் சொல்பவர்களின் சித்திரம்கேட்கப்படும் எனச் சொல்லாதிருந்தசொல்லப்படும் எனக் கேட்காதிருந்த காதல்கள்பொறாமை என்பது அன்பின் கலங்கிய வடிவம்நியாயம் கேட்கும்போது அழுவதன் காரணம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இக்விதைகள் பேசுவதைப்போல நேரடியாகப் பேசினால் என்ன என்று நினைப்பது பல நேரங்களில் நிம்மதியாகவும் அடுத்தகணமே அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இவற்றுள் பெண்களின் அக உலகத்தைக் காட்சிப்படுத்திய கவிதைகளுக்கென்று ஒரு தனி வரிசையே இருக்கிறது. அவ்வளவு கூட்டத்துள்ளிருந்தும் தன் முலைகள் பார்வையாலேயே கசக்கப்படுவதை உணரும் பெண், தனியாகவே தூங்கிப்பழகியவள் கணவனுடன் உறங்குகையில் வரும் உளச்சிக்கல், முலைகளை மறைத்துக்கொள்ளாததால் சங்கடத்திற்குள்ளாகும் பெண்கள் என.

கவிதைகளில் வரும் படிமங்கள் நூறு சதவீதம் ஒன்றிப்போகின்றவை. அகப்படாது எனத் தெரிந்தும் பட்டாம்பூச்சிக்குப் பின் செல்லும் பூனை, சக்திக்கு மீறி வெல்லத்துண்டைத் தூக்கிச் செல்லும் எறும்பு, கானல் நீர், தொட்டாற்சிணுங்கிகள், மரவட்டைகள், யானைகள், எத்தனை எத்தனை கிளிகள்... இவற்றிற்கெல்லாம் உச்சமென 'கல்மரம்' (சூரியனுக்கு அருகில் ஒரு வீடு) கவிதையைச் சொல்லலாம். அதன் வரிக்குவரி ஒத்துப்போகிற மரம் ஒன்றை எனக்குத் தெரியும். அத்துயரம் காணச் சகிக்காதது.

மனுஷ்ய புத்திரன் விதைகளை அணுகுவதிலுள்ள தடைகளை எங்கனம் குறைத்தாரோ, அதே அளவுக்கு விதைகளிலுள்ள உடைகளையும் குறைத்தார் எனலாம். நிர்வாண உடலின் கதைகள் எல்லாத் தொகுப்புகளிலும் உலவுகின்றனபாத்திரங்கள் தனித்திருக்கும் வீட்டில் நிர்வாணமாக அலைகிறார்கள்உடை களைகிறார்கள்காமத்தின் பல்வேறு தளங்களைக் கவிதையில் கொணர்கிறார். இப்படியே போனால் உடலுறவின் எல்லாப் பொசிஷன்களுக்கும் கவிதை எழுதியவன் என்கிற பட்டப் பெயரையும் இவர் சுமக்கவேண்டியிருக்கும்

ஆனால் நடு ரோட்டில் தன் யோனியை அறைந்துகொண்டு அழுபவளைக் கடக்க முடியுமா எனப் பார்க்கவேண்டும். முந்தைய இரவில் கொடூரமாகக் கையாண்ட உடலைக் கண்டு பதறுபவனை நாம் ஏனென்று கேட்கவேண்டும். போகத்தில், வலிக்கிறதா எனக் கேட்கையில், கருணையுடன் மறுக்கும் மனத்தையும், விலைமாதின் முலைத்தழும்பைக் கண்டோடுபவனின் முகத்தையும் நாம் ஒருமுறையேனும் காண வேண்டும். ஆயிரமாயிரம் விசித்திரங்கள் இருக்க, இரண்டு முலைகளையும் ஒரு யோனியையும் தவிர எதையும் பார்க்க முடியவில்லையே என மண்டையில் அடித்துக்கொண்டு அழ வேண்டும்.

பாத்திரங்கள் எதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். துணியை மடித்து வைக்கிறார்கள், தலைமுடியை அள்ளி முடிகிறார்கள், மழையில் இறங்கி நடக்கிறார்கள். பாத்திரங்களின் செய்கையே கவிதையை உச்சிக்கு எடுத்துச் செல்கிறது. அம்மா முயல் சொன்னதைக் கேட்டுத் தலையை ஆட்டும் குட்டி முயலும், கடற்கரை மணலில் கொட்டும் மழையில் எவ்வளவு முயன்றும் நகர மறுக்கும் சக்கர நாற்காலியுடன் நிற்கும் முதியவளும் இதனால்தான் கண்ணீரை வரவைக்கிறார்கள்.

ஆங்காங்கே சிரிக்க வைக்கும் கவிதைகள் சிலவற்றையும் எழுதியிருக்கிறார். மகத்தான காதல் கவிதை - 2014-ஐ வாசிக்கையில் சிரிப்புத்தான் வருகிறது, முறுமுனையில் நெஞ்சு வெடிக்கும் சத்தம் சற்றுத் தாமதமாகத்தான் கேட்கிறது. "ரெண்டாம் ஆட்டம் முடிந்து உன் புருஷன் எப்போது வீட்டுக்கு வருவான்" என்று காவியத்தலைவியைக் கேட்கையில் விழுந்து புரண்டு சிரித்துவிட்டு, பின்னர் நாமும் ஒரு காலத்தில் காவியத்தலைவனாகத்தானே இருந்தோம் என்றெண்ணித் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.


அரசியல் இயக்கச் சார்புடையவர் என்பதால் வானொலியில் கவிதை தொடர்பான அவரின் உரை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அரசியல் இயக்கச் சார்புடையவராய் இருந்தாலும், அதில் ஒலிப்பது கவிஞனின் குரல். பணமதிப்பு நீக்கப்பட்ட காலத்தில் துயருற்ற சாமானியனின் குரல், மாட்டிறைச்சி வைத்திருப்பதாகச் சொல்லிக் கொல்லப்பட்டவரின் குரல், அம்மணமாக்கித் தோலுரிக்கப்பட்டவர்களின் குரல். வன்புணர்த்து கொல்லப்பட்ட சிறுமிகள், கழிப்பறை தேடி அலையும் பெண், இந்தியப் பெண்களும் கரடியும், செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன, ஒரு கரடியின் வேலைநாள், கடைப்பெண்கள், வேலைதான் நமக்கு எல்லாம் எனத் தொகுப்பெங்கும் துயரக்கதைகள். வெறும் ஸ்டேட்மென்ட்டுகளாக இல்லாமல் உரத்து ஒலிக்கும் ஆதங்கக் குரல்கள்: உப்புப் போட்டுத்தின்று நமக்கு சுரணை வந்துவிட்டதா?, நம் குரலைத் தின்றுவிட்டதா இந்தக் காலம்?, என்ன மாதிரியான கலாச்சாரம் சார் இது?

மனுஷ்ய புத்திரனின் முன்னுரைகளும் கட்டுரைகளும் தனித்துப் பேசப்படவேண்டியவை. அவர் கவிதைகளைப் போலவே முன்னுரைகளும் தாழ்ந்த குரலில், நெகிழ்வுத்தன்மையுடன் அந்தரங்கமாக உரையாடுபவை.

எது கவிதை என்பதற்குக் கீழ் மூர்க்கமாகத் துவங்கி ஓட்டுமொத்தத் தமிழிக்கவிதை வரலாற்றின் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுச்செல்லும் "எமக்குத் தொழில் கவிதை", தமிழ்க்கவிதைகளை இந்தியக் கவிதைகளுடன் ஒப்பிட்டு எழுதிய "தமிழை யார் எடுத்துச்செல்வது?" உள்ளிட்டவை தமிழ்க்கவிதைகளைப் பற்றிய அவரின் பரந்த அறிதலைச் சொல்பவை.

அவர் தன் முன்னோடிகளைப் பற்றியம் சமகாலத்தவரைப்பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். ஆனால் கொஞ்சம்தான் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. "எப்போதும் வாழும் கோடை" என்கிற நூலும் பதிப்பிலில்லை. அவர் தன் ஞானத்தகப்பனைப் பற்றி எழுதவேண்டும், அக்க மகதேவியைப் பற்றி எழுதவேண்டும், சங்க இலக்கியங்களைப் பற்றி எழுதவேண்டும், தன் வீட்டுப் புத்தக அலமாரியிலிருப்பவர்களைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும் அல்லது இதுவரை எழுதியதெல்லாம் தொகுக்கப்படவேண்டுமென்பதே இப்போதைய வேண்டுகோள்.

எல்லாவற்றிக்கும் மேலாக உங்களை இறுதியாக எச்சரிக்கிறேன்..... உங்களின் நுண்ணுணர்வை அதிகரிப்பதில் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளுக்கு முக்கியப் பங்குண்டு, கையாளத் தெரியாவிடில் நெஞ்சுவலி வந்துவிடும், ஜாக்கிரதை.

(27.05.2017 அன்று "மனுஷ்ய புத்திரன் படைப்புலகம்" எனும் தலைப்பில் வாசகசாலை ஏற்பாடு செய்த நிகழ்விற்காக எழுதப்பட்ட கட்டுரை.)




Friday, October 21, 2016

சாத்தியமில்லை எனும்பொழுது

வரலாற்றை நினைவிலிருத்தி
பிரியங்களின் உளிக்கொண்டு
நானே வியக்குமளவு
செய்து முடித்தீர்கள்
எனக்கான சிலையொன்றை

முயற்சிகளின் போதாமையால்
சிலைத்திறப்பு சாத்தியமில்லை
என்றுணர்ந்த கணத்திலிருந்து
தனியனாய் உடைக்கவேண்டியிருந்தது
பெரிதான அப்பொருளை

மொத்தமாய் அழித்தலென்பது
சுலபமே என்றெனினும்
உருவாகும் வெற்றிடத்தால்
உமைவருத்திச் செல்வதில்
உவப்பில்லை எமக்கு

பேசிக்களைத்த கணமொன்றில்
அதனைப்போல் நானாதல்
முடியாது இப்போழ்து
எனச்சொல்லி வீசியெறிந்தேன்
சிலையுடைக்கும் முதற்கல்லை

அதிர்வனைத்தும் ஓய்ந்தபின்
பின்வந்த சமயத்திலெல்லாம்
சுயத்தோடு பகடிகலந்து
அடித்து நொறுக்கினேன்
ஒவ்வோர் அங்கத்தையும்

எல்லாம் முடிந்தபின்னும்
உனக்குண்டு இடமிங்கே 
என்றுரைத்த உமக்காக
மனமுடைந்து அழுததைத்தவிர
வேறொன்றும் செய்யவில்லை.

Friday, May 9, 2014

இருப்புணர்தல்

நுகரநுகரத்
தீருவதேஇல்லை
இந்தமண்வாசம்!

இவ்வுறவின்
இருப்பையும்
வனப்பையும்

மண்ணையும்
நீரையுந்தவிர
யாருமேஅறிந்திருக்கவில்லை

இங்கு
முதல்முறை
மழைநிகழும்வரை.


Thursday, February 6, 2014

நானும் புத்தகக்கண்காட்சியும்



              ட்விட்டரிலிருந்து கொஞ்சகாலம் விலகியிருந்தாலும் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் திருப்பூர் புத்தகக் கண்காட்சி சம்பந்தமாக, நடக்கும் நாட்கள் குறித்து ஒருவர் (@manipmp என நினைக்கிறேன்.) போட்ட ட்வீட் கண்ணில் பட்டது. தேதிகள் 31 முதல் 9 வரை என்பது நினைவிலிருந்தாலும் மாதங்கள் சரியாக நினைவிலில்லை. டிசம்பர் 31 முதல் ஜனவரி 9 வரை என்றே நினைத்திருந்தேன். இம்முறை வேடிக்கை மட்டும் பார்க்காமல் சில புத்தகங்கள் வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்துக் காத்திருந்தேன்.


புத்தாண்டுக்குப் பின் வந்த சனிக்க்கிழமையொன்றின் பின்மாலைப் பொழுதில்.....(ஆஹா...!)

பக்கத்து வீட்டிலிருக்கும் 12 ஆம் வகுப்புத் தோழர்களையும், பால்ய நண்பனையும் கண்காட்சி நிகழ்விடத்திற்க்கு வரச்சொல்லிவிட்டு கோயமுத்தூரிலிருந்து பேருந்தேறினேன். திருப்பூருக்கு வந்து சேரும் முன்னரே "டேய்எங்கடா நடக்குது கண்காட்சி?! இங்க ஒன்னையும் காணோம்" எனச் சூடான வார்த்தைகள் காதில் விழுந்தபோதுதான் என் ஆழ்மன சந்தேகம் தீர்ந்தது. கண்காட்சி ஜனவரி 31ல் தான் துவங்குகிறது என உறுதியாகத் தெரிந்து கொண்டேன்.

"அது ஏற்கனவே நடந்து முடிஞ்சுருச்சாம்..", ''இந்தமாசம் 31 க்குத் தள்ளி வெச்சுட்டங்களாம்.." எனப் பல ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. உரிமையோடு கோபித்தவனின் கோபத்தை ஒரு முட்டை பஃப்ஸ் தீர்க்குமென அனுமானித்து அத்திட்டத்தைச் செயல்படுத்தி இறுதியில் வெற்றி கண்டேன்.


சென்ற வருடம் அவ்வளவாகப் புத்தக வாசிப்புப் பழக்கமில்லையென்றாலும் கையிறுப்பு 100 ரூபாயை வைத்துக்கொண்டு நண்பனுடன் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அது எனக்கு கண்காட்சியாகத்தான் இருந்தது. புத்தகம் வாங்கவேண்டுமென்ற ஆர்வத்தைவிட செலவழித்துவிடக்கூடாது என்ற உணர்வே அதிகமாயிருந்தது. நெஞ்சவர்ணக்கிளி, இட்லியாய் இருங்கள் உள்ளிட்ட சில புத்தகங்களை அந்த அரங்கிலேயே அரைகுறையாய்ப் படித்துவிட்டு, நிச்சயமாய் அடுத்தவருடம் ஏதாவது வாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் வெளியே வந்தேன்.

நேற்றுத் தேர்வு முடிந்ததும் புறப்பட்டு 6 மணிக்கெல்லாம் திருப்பூரை அடைந்தேன். பயணிக்கையில் எந்தப் பதிப்பகங்களுக்கெல்லாம் செல்லவேண்டுமென முடிவு செய்திருந்தேன். முடிந்தவரை அதிக அளவிலான மலிவுவிலைப் புத்தகங்களை, இருக்கிற பணத்தைக்கொண்டு  வாங்க வேண்டும் என்ற முடிவோடுதான்  நண்பர்களோடு அரங்கிற்குள் நுழைந்தேன்.

ட்விட்டர், ஃபேஸ்புக்-ல் பேசப்படும் பல எழுத்தாளர்களின்  புத்தகங்களையும், அங்கிருந்து அச்சிற்கு வந்தோரின் புத்தகங்களையும்  அரங்கில் காண முடிந்தது. பெரும்பாலும் கவிதைத் தொகுப்புகளே என் விருப்பமென்பதால் புத்தகங்களைத் தேர்வுசெய்கையில் லதாமகன் அவர்களின் ட்விட்டர்  #t1kavithai பதிவுகள் பெரிதும் உதவியாக இருந்தன.

ட்விட்டுகளின் வாயிலாக அறிமுகமான எழுத்தாளர்கள் பா.ராகவன், என்.சொக்கன், சி.சரவணக்கார்த்திகேயன் மற்றும் அராத்து போன்றோரின் புத்தகங்களைக் காணமட்டுமே செய்தேன். சிலவற்றை ஆர்வமில்லாததாலும், சிலவற்றில் ஆர்வமிருந்தும் விலை பற்றிய எண்ணத்தால் வாங்காமலேயே வந்துவிட்டேன்.

காலச்சுவடு அரங்கில் புத்தகங்களைத் தேர்வுசெய்துவிட்டு பணம் செலுத்தச் சென்றபோது அங்கு அமர்ந்திருந்த ஒருவர் என் கையிலிருந்த 'இசை'யின் கவிதைத் தொகுப்பைப் பார்த்துவிட்டுச் சொன்னார்,

"சிவாஜிகணேசனின் முத்தம் வாங்கிகப்பா, 'இசை'யோடது..நல்லாருக்கும்.."

என்னுடைய தேர்வினைக்காட்டி ஒருவர் பேசுகையில் அவரிடம் பேசவேண்டுமென்ற ஆர்வந்தொற்றிக்கோண்டது..

"படிச்சுருக்கீங்களா..?" என்றேன்.
(என்ன ஒரு அற்புதமான கேள்வி.!, வீடு திரும்புகையில் நினைத்துச் சிரித்துக்கொண்டேன்.)

"ம்.."

என் பணப்பையின் எடை குறைந்திருந்ததை நன்றாகவே அறிந்திருந்தேன். அவருக்காக பர்ஸை ஒருமுறை பார்த்துவிட்டு, "இப்ப எங்கிட்ட காசு இல்ல சார்.!"னேன்.

"சகுந்தலாதேவியின் முத்தமா இருந்தா வாங்கிருப்பாரு..." பில் போட்டுக்கொண்டிருந்தவர் சொல்லிச்சிரித்தார்.

"கண்டிப்பா..." இது நான்.

"அதுக்கு கொஞ்சம் செலவாகுமேப்பா...!"

"அதுக்காக எவ்வளவு செலவானாலும் பரவாயிலீங்க..."

பேசிக்கொண்டிருக்கையில் முன்னர் பேசியவரின் செல்ஃபோன் ஒலித்தது.

"எங்கிருக்கீங்க..? வந்தாச்சா?"

"செரி..வாங்க. இப்பதான் உங்க புத்தகத்த இளைஞர் ஒருத்தர் வாங்கறார்.."

அது 'இசை'தான், யூகித்தேன். ஆர்வமிகுதியால் ஃபோனுக்காக அவரிடம் கையை நீட்டிவிட்டேன். உண்மையில் அவர் பெயரைத்தவிர எனக்கு அவரைப்பற்றி எதுவுமே தெரியாது. அவரின் ஒரேயொரு கவிதையைப் படித்து மறந்திருந்தேன்.

"இப்ப வந்துருவாரு...அவர் இருகூர்தான்." ஃபோனை வைத்துவிட்டுச் சொன்னார்.

வந்தவுடன் அடையாளங் கண்டுகொள்வதற்காய் அவர் புத்தகத்தைத் தேடி பின்னட்டையைப் பார்த்துவைத்துக் கொண்டேன்.

அங்கேயே நின்று பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கையில் அவர் வந்துவிடவே உடனிருப்பவர் என்னையழைத்து அறிமுகஞ் செய்து வைத்தார்.

"வணக்கம் சார், உங்கள சந்திச்சது சந்தோஷம்..." சொல்லிக் கை குலுக்கினேன்.

பதில் வணக்கஞ் சொன்னவரிடம் என்னதான் பேசுவது?! முதல்முறை அவர் தொகுப்பை வாங்குவதாகவும், அறிமுகமானது லதாமகனின் பதிவு மூலமாகவும் என்று சொன்னேன்.
"லதாமகன்?!".
புரிந்துகொண்டார்.

"நீங்க எந்த ஊரு..?"

"இங்க அவினாசிக்கு பக்கத்துல இருக்கேங்க.."

"இவுரும் அவினாசிதாம்ப்பா.." முன்னவரை அறிமுகப்படுத்தினார்.

அப்போதும் கூட அவர் யாரென்று கேட்கத் தோன்றவில்லை... "பூண்டில இருந்து 2 கிலோமீட்டர் உள்ள போகனும் சார்" என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டேன்.

"ஒரு ஆட்டோகிராஃப் போட்டுத் தறீங்களா...?" புத்தகத்தை நீட்டினேன்.

"அதெல்லாம் எதுக்குப்பா? விடு." தோளைத்தட்டி மறுத்தார்.

"போட்டுக்குடுங்க சார்... ஃபிரெண்ட்'ஸ்ட காட்டி சீன் போட்டுக்குறேன்.." கையெழுத்து வாங்கிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் சொல்லி புத்தகத்தை நீட்டினேன்.

"போட்டுக்குடுங்க... ஆசப்படுறார்ல" அருகிலிருந்தவர் சொல்லி பேனாவும் பரிந்துரையும் கொடுத்தார்.

கையொப்பமிட்டுவிட்டு பேரைக்கேட்டார். கையொப்பத்தின் மீது எழுதிக்கொடுத்தார், "விஜிக்கு..."

சிறிது நேரம் நண்பனுக்காக அங்கேயே காத்திருந்தேன்...அரங்கிலிருந்த ஒருவர் ஒரு புத்தகத்தைக் காட்டி "இது இவர் எழுதுனதுதான்.." என்று சொல்லி 'இசை'யின் அருகிலிருந்தவரைக் காட்டினார்.
'சிவாஜிகணேசனின் முத்தம்' வாங்கச் சொன்னவர், இசையிடம் தொலைபேசியில் பேசியவர், கையொப்பத்திற்கு பேனா கொடுத்தவர், அவினாசிக்காரர்தான் அவர். புத்தகத்தைப் பார்த்தேன், பெயரிட்டிருந்தது

"கே.என்.செந்தில்"

அவரைப் பார்த்தேன்.
"நம்மளே சொல்லிக்கிட்டா நல்லாருக்காதில்லப்பா..." சிரிப்பைப் பரவவிட்டுவிட்டு கடந்தார்.
பின்பு நினைத்துப் பார்த்தேன், நம்மோடிருக்கும் நெருங்கினவர்களைப் பற்றியே தெரிந்துகொள்ளாத போது இது பெரியவிஷயமாகப் படவில்லை.

வெளியே வருகையில் முகப்புத்தகப் பதிவர், பதிவுகளைப் புத்தகமாக வெளியிட்டிருந்தவர் (அம்பாரம்) 'லெனின்' அவர்களைச் சந்தித்தேன்.
இணையத்திலும் அறிமுகமில்லாததால் அறிமுகப்படுத்திக் கொண்டேன்,பரிசல்காரன் அவர்களின் பதிவில் பார்த்ததாகச் சொல்லிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வரவே விடைபெற்றோம்.

தேவதைகளின் வரத்து குறைவாகவே இருந்தது.
 .
வீடு திரும்புகையில் புத்தகம் வாங்கச் சென்ற இடத்தில் கற்றுக்கொண்டவைகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது... உரையாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.!

"சமூக வலைத்தளங்களினால் கேடு" என்பதை வெளியிலிருந்து சொல்பவர்களைக் கடக்கையில் இவைகளைத்தான் நினைத்துக்கொள்கிறேன்...

இங்கு ஆரம்பகால நேர விரயங்கள், ஆபாசங்கள் போன்றவற்றையெல்லாம் சந்தித்திருக்கிறேன். இருந்தும் இது எனக்குத் தெரியாத நிறைய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, சொல்லிக்கொடுத்திருக்கிறது, எதேதோ எழுதவும் தூண்டியிருக்கிறது.

இவற்றையெல்லாம் என் நிலையாய் மட்டும் நான் பார்க்கவில்லை... பல முகப்புத்தகப் பதிவுகளில் புத்தகக் கண்காட்சிப் புகைப்படங்கள், அவர்கள் வாங்கிய புத்தகங்களின் தொகுப்புகளைச் சொல்லும் பதிவுகள் போன்றவற்றைக் காணுகிறேன். அத்தகையவற்றிற்கான விமர்ச்சனங்களையும் காணுகிறேன்.
பகட்டுக்காகப் பதிவிடுவதாயினும், அது இயல்பினதாயினும் எழுதுகின்றவருக்கான இன்பத்தைத் தருவதோடு  அது ஒருபோதும் நின்றுவிடுவதில்லை. அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ எதோ ஒரு தாக்கத்தை படிப்பவருக்கு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது...
வெளியில் இத்தகையோரைச் சொற்பகாலத்தில் கண்டறிவது அரிதாகவும் இருக்கிறது.  
இத்தளங்கள் நம்முள் இருக்கும் நம்மீதான அதீத நம்பிக்கைகளை சில நேரங்களில் உடைத்தும் விடுகிறது, சின்னஞ்சிறு திறமைகளுக்கு அங்கீகாரமும் அளிக்கிறது.
இவை எல்லாவற்றிற்குப் பின்னும் அழகான மனிதர்கள் இருக்கிறார்கள்.!


வாங்கியவை:
தேசாந்திரி  - எஸ்.ராமகிருஷ்ணன்
துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
இன்னொரு கேலிச் சித்திரம் - கல்யாண்ஜி
இடமும் ருப்பும் - மனுஷ்ய புத்திரன்
உறுமீங்களற்ற நதி - இசை
எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை - ச.விஜயலட்சுமி
உலோகருசி - பெருந்தேவி    


நன்றி.!