Wednesday, December 31, 2025

ஜப்பான் : சுயகல்வியை நோக்கி...

இயல்பிலேயே அழகானதும் நான்கு பருவங்களைக் கொண்டதுமான ஜப்பான், தூய்மையாகப் பராமரிக்கப்படும் நாடு. பொதுவெளிகளில் எழுதப்படாத விதிகளும் அதனால் அமையும் ஒழுங்கும் உண்டு. தொழில்நுட்பத்திலும் உலகின் வேறெந்த நாட்டைக் காட்டிலும்  தனித்துவமான முன்னேற்றம் கண்ட நாடு.  இதற்கும் ஜப்பானியக் கல்வி முறைக்கும் தொடர்பு இருக்கலாம். உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள, பன்மைத்துவம் மிக்க ஒரு நாட்டை,  பிறப்பு விகிதம் குறைகிற, ஒற்றைக்கலாச்சாரம் கொண்ட நாட்டுடன் ஒப்பிடுவது அபத்தமாகத் தோன்றினாலும் கல்விச் சூழலை மையப்படுத்தி சிலவற்றை பார்க்கலாம்; மாற்றங்களைச் சிந்திக்கலாம். 

குழந்தை வளர்ப்பு ஒரு சமூகப் பொறுப்பு

ஜப்பான் 1899 இல் இருந்து குழந்தை பிறப்பு விகிதத்தை கணக்கெடுத்து வருவதால், கடந்த 2024-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்பது தெரியவந்திருக்கிறது. இத்தகு சூழலில் ஒவ்வொரு குழந்தையும் செல்வங்கள். குழந்தைப் பிறப்பு விகித்தை அதிகரிக்க பல்வேறு சிறப்புத்  திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. உதாரணமாக குடும்பங்களுக்கு குழந்தை வளர்ப்பு உதவித்தொகை மற்றும் கல்விக் கட்டணச் சலுகைகள் உண்டு. 

பிறப்பு - இறப்பு பதிவேடு, குடியேற்றப் பதிவேடு, வெளிநாட்டு நபர் வருகைப் பதிவேடு, சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டல், முதியோர் நலவாழ்வு என அனைத்தும் இங்கே உள்ளாட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பதினைந்து வயது வரையான ஆரம்பக் கல்வி இங்கே கட்டாயம் என்பதால் ஆறு வயதை எத்தும் பிள்ளைகளுக்கான சேர்க்கை அறிவிப்புகள் வீட்டிற்கு அனுப்பப்படும் (சமீபத்தில் தமிழ்நாடு அரசு இத்தகைய ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது). 15 வயது வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதது கடும் தண்டனைக்குரிய குற்றம். 

அங்கன்வாடிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவது குடும்ப உறுப்பினர் பொறுப்பென்றால் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவதைச் சுழற்சி முறையில் பெற்றோர்களே பிரித்துக் கொள்கின்றனர். நண்பர்கள் இருக்கும் குழந்தைகள் தாங்களாகவே பள்ளிக்குச் செல்கின்றனர். ஆபத்துகளிலிருந்து தப்பிக்க ஒரு இழுப்பில் அபாய ஒலி எழுப்பும் கருவிகள், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பு பையிலும் கைப்பேசியிலும் உண்டு. 

மதிப்பெண்கள் அல்ல, குடிமைப் பண்பே பிரதானம்

சகுரா மலர்கள் (செர்ரி) பூத்துக் குலுங்கும் ஏப்ரல் மாதம் ஜப்பானியப் பள்ளிகள் திறக்கின்றன; பெரும்பாலானவை அரசுப் பள்ளிகள். பள்ளிக் கல்வி 6 (ஆரம்பக் கல்வி) + 3 (இடைநிலைக் கல்வி) + 3 (மேல்நிலைக் கல்வி) என்னும் வருடக்கணக்கைக் கொண்டதாகும். மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு அல்லது மூன்று பருவங்களாகப்  பாடங்களைக் கற்கிறார்கள்; எனவே, பாடச்சுமை குறைவு. மதிப்பெண்ணும் மாணவர் ஆளுமையின்  மூன்று பாகங்களைக் கருத்தில்கொண்டு வழங்கப்படுகிறது. அவை முறையே, கட்டாயப் பாடம், அறக்கல்வி மற்றும் பாடத்திட்டத்திற்கு வெளியேயான திறன் வளர்ப்புச் செயல்பாடுகள். 

கட்டாயப் பாடத்தில் மொழிக்கல்வி, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் இருக்கிறதென்றால் அறக்கல்வியில், குடிமைப்பண்பைப் பேணுவது, தன்னுடைய வேலைகளைத் தானே செய்வது, மற்றும் சக மனிதர்களை மரியாதையுடன் நடத்துவது உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. பாட்டு, நடனம், விளையாட்டு, சமூக சேவை போன்ற குழுச்செயல்பாடுகளெல்லாம் பாடத்திற்கு வெளியேயான தனித்திறன்கள். ஒரு மாணவருக்கான மதிப்பெண் விடைத்தாள்களிலிருந்து மட்டுமல்லாது இந்த மூன்றின் கலவையாகவே இருக்கின்றன. இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியவற்றிற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்கின்றனர்.

தூய்மையான நாடு என்று பெயரெடுக்க இங்கு பள்ளிக்கல்வியே  முக்கியக் காரணம். நான் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் மூன்று நாட்கள் சில அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதில் மூன்றாவது நாள் தூய்மைப் பணி. சர்வதேச இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் பேராசிரியர், "இந்தியாவில் தூய்மைப்பணி உயர்வானதாகப் பார்க்கப்படுவதில்லை. அதற்குச் சில வரலாற்று காரணங்கள் உண்டு. ஆனால், இங்கு, வேலை செய்யும் இடத்தில் தூய்மையே பிரதானம்; ஒருவர் பதவியில் மேலே செல்லச்செல்ல தூய்மைப் பணியை மேற்கொள்வது அவரை இன்னும் பணிவுள்ளவராக்குகிறது'  என்று சொல்லி மெல்லிழைத்தாள்களை நீரில் நனைத்து, மண்டியிட்டு, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி தரையைத் துடைப்பது எப்படி எனச் சொல்ல ஆரம்பித்தார்; இப்போதும் அவ்வப்போது துடைக்கிறார். ஆய்வக வளாகத்தைத் தூய்மை செய்யப் பணியாளர்கள் உளர். அவர்களின் வேலை பொதுநடைபாதையைச் சுத்தம் செய்வது மட்டுமே. வகுப்பறைகள் கல்லூரி மாணவர்களாலேயே தூய்மையாக்கப்படுகின்றன. பள்ளிக்கல்வியும் இப்படியே; வகுப்பின் தூய்மை ஆசிரியர்-மாணவர் பொறுப்பு. ஒவ்வொருவரும் தன் வீட்டுக் கழிவறையைச் சுத்தம் செய்வது ஏன் அவசியம் என்பது குறித்த பகுதி அறக்கல்வியில் உண்டு; சில நாட்களில் அதுவே வீட்டுப் பாடம். 

அடிப்படைக் கல்வி: தேர்வுகளும் இல்லை, தோல்விகளும் இல்லை

நாற்பத்தி ஆறு ஜப்பானிய அடிப்படை எழுத்துருக்கள், கிட்டத்தட்ட ஆயிரம் சீன எழுத்துருக்களைக் கற்பதே ஆரம்பப் பள்ளியில் மொழிக்கல்வி. எனினும் ஆறு வருட ஆரம்பக் கல்வியின் முதல் நான்கு வருடங்களுக்குத் தேர்வுகள் இல்லை; கற்றலுக்கென வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளைத் திறம்பட செய்யும் செய்முறைக் கல்வி.  எனவே, மாணவர்களுக்குள் தரவரிசை இல்லை; பிறரின் கல்வி முன்னேற்றம் மற்ற மாணவர்களுக்குத் தெரிவதும் இல்லை. எனவே, பள்ளி செல்வதே ஒரு இனிய நிகழ்வாகிறது. 

ஜப்பானிய மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு பள்ளி தொடங்கும் சில மாதங்களுக்கு முன்னரே வாரம் இருமுறை அல்லது மும்முறை மொழிப்பயிற்சி வகுப்புகள் உண்டு. குழந்தைகள் தாய் மொழியில் இருந்து கற்றல் மொழிக்கு மாறுவதற்கான கால அவசரத்தைப் பள்ளி நிர்வாகம் வழங்குகிறது. எனவே முதல் நான்கு வருடங்களில் மொழி கற்றல் சார்ந்த அழுத்தங்கள் இல்லை. பாலினம் மற்றும் உடல் மாற்றங்களை புரிந்து கொள்வது, தனிப்பட்ட பாதுகாப்பு, உள்ளிட்டவையும் ஆரம்பக் கல்வியிலேயே மெதுவாக அறிமுகப்படுத்தப்படுகிறது. 

சுய கற்றலைத் தூண்டும் ஆரம்பக் கல்வி 

ஜப்பானிய அருங்காட்சியப் பணியாளரான ஃபுஜி, நிலவில் விண்கற்கள் மோதும் அரிய நிகழ்வைப் படம் பிடித்தது சென்ற மாதம் உலகெங்கும் பேசுபொருளானது. இதற்கும் ஜப்பானியப் பள்ளிக்கல்விக்கும் தொடர்பு உண்டு.  பள்ளிக்காலத்திலேயே ஒவ்வொருவரும் தனக்கான பொழுதுபோக்கைக் கண்டறிய வலியுறுத்தப்படுகிறார்கள். பொழுதுபோக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் வாழ்நாளுக்குமான சுய கற்றலுக்கு வழிவகுக்கிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பவை பள்ளிகளுக்கு உள்ளேயே இருக்கும் நூலகங்கள். மாணவர்களுக்கெனவே வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான கோட்டுச் சித்திரப் புத்தகங்கள், தகவல் திரட்டுக்கள், அறிவியல் புனைவுகளை பயணம் செய்யும் மாணவர் கைகளில் காணலாம். ஒரு பள்ளியில் ஓராயிரம் நூல்கள் நிறைந்த நூலகம் இருக்கும்போது ஒரு மாணவர் தனக்கான ஒரு நூலைக்  கண்டறிய இயலும். பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நூல்கள் உள்ள நூலகங்கள் இங்கு கட்டாயம்.

ஆசிரியர்களையும் உள்ளடக்கும் மதிய உணவுத் திட்டம்

மாணவர்களில் "இலவச மதிய உணவு / சத்துணவு சாப்பிடுபவர்கள்" என்று தனி வகை இங்கில்லை. மிதமான கட்டணத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் பள்ளியில்தான் மதிய உணவு; உடன் திரவ உணவாகப் பாலும் வழங்கப்படுகிறது. உணவுப்பட்டியல் அன்றாடம் மாறிக்கொண்டே இருப்பது; வளாகத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ள ஊட்டச்சத்து நிபுணர்களால் வடிவமைக்கப்படுவது. மாணவர் ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, அவரின் உணவு விருப்பங்கள், ஒவ்வாமைகள் அறியப்பட்டு அதற்கேற்ற ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. வருடம் இருமுறை மருத்துவப் பரிசோதனையும் உண்டு. 

மதிய உணவுச் செயல்பாடும் குடிமைப் பண்பிற்கான பயிற்சிதான். ஐம்பது நிமிட உணவு இடைவேளையில் மாணவர்கள் சுழற்சி முறையில் குழுக்களாக பிரிந்து, மதிய உணவை எடுத்து வருதல், பரிமாறுதல், உணவு உண்ட இடத்தைச் சுத்தம் செய்தல், மேசைகளை ஒழுங்காக்குதல் உள்ளிட்டவற்றைச் செய்கிறார்கள். மதிய உணவின்போது என்ன இசை ஒலிக்கவேண்டும் எனத் தேர்வு செய்ய மாணவர் குழுவும் உண்டு. வகுப்பறையில் இருந்து கழிவறை வரை இந்த குழுவின் சுத்தச் செயல்பாடு நீள்கிறது. கழிவறைத் தூய்மைப்பணியில் ஆசிரியர்களுக்கும் தனிப்பொறுப்பு உண்டு. மதிய உணவிற்கு பின் பல் துலக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்திலேயே தொற்றிக் கொண்டு வாழ்நாள்வரை நீள்கிறது. 

ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும் உள்ளடக்கிய மதிய உணவுத்திட்டம் அதன் தரத்தை நிச்சயம் உயர்த்துகிறது; ஆசிரியர்களுக்கும் மதிய உணவைச்  சுமந்து வருவதிலிருந்து விடுதலைளிக்கிறது. இதையே நாம் கொஞ்சம் விரித்து, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரே கழிப்பறைகள் எனச் சிந்தித்துப்பார்த்தல் அவற்றின் சுகாதாரமும் சற்று மேம்படும். 

தேசியக் கல்வியல்ல, மாநிலக் கல்வியுமல்ல, பிராந்தியக் கல்வி

பள்ளிக் குழந்தைகளைச் சேர்ப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழுள்ளதைப் போலவே, பள்ளிக் கல்விக்கான நிதியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்படுகிறது. அவர்கள் பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து, பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு, மாணவர்களை வெளியே (ஊற்புற நூலகங்கள், அருங்காட்சியங்கள்) அழைத்துச் செல்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக நான் இருக்கும் வட்டாரத்தில் பதிமூன்று சிறு அருங்காட்சியகங்கள் உள்ளன; ஒரே நேரத்தில் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் நூலகங்கள் உண்டு. இவற்றுடன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள பாரம்பரியக் களங்களுக்குச் செல்வதும், அந்த அனுபவத்தை எழுத்தாக்கிச் சமர்ப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   

அந்தந்தப் பகுதிகளிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், ஆளுமைகளின் வாழ்விடங்கள் தொடர்பான தகவல்கள்  உள்ளூர் அருங்காட்சியகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிற்கு முழுவதும் ஒரே பாடம் எனும் போது வ. உ. சிதம்பரனார் எவ்வாறு வெளியேற்றப்படுகிறாரோ அதைப்போலவே தமிழ்நாட்டிற்கு முழுதும் ஒரே பாடம் எனும் பொழுது சில பிராந்திய ஆளுமைகள் மற்றும் இட வரலாறுகள் வெளியேற்றப்படுகின்றன. கல்வியில் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிரப்படும்போது இவை அனைத்தும் பாடப் புத்தகத்திற்குள் நுழைகின்றன. குழந்தைகளும் தன் சுற்றம் குறித்த தெளிவுடன் இருக்கிறார்கள்; அவற்றைக் காப்பதன் அவசியம் குறித்தும் உணர்கிறார்கள். பிராந்தியக் கல்வியில், ஊர்ப்புற நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டம் என மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

வேலைக்கா கல்வி, தொழிலும் தொடங்குவோம் 

பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள் நடக்கின்றன; கலை இலக்கிய போட்டிகள் நடக்கின்றன. இதில் பெரும்பாலும் பொதுமக்களின் பங்கேற்பு இல்லை. ஆனால், பொதுமக்களுக்காகவும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சில நாட்கள் திறக்கின்றன. சிற்றுண்டி கடைகள், கைவினைப்பொருள்கள்,  விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருள், ஆடைகள் என பல்வேறு கடைகளை திறக்கிறார்கள் மாணவர்கள்; ஆசிரியர்களும் பொதுமக்களுமே வாடிக்கையாளர்கள். குழுக்களாகப் பிரிந்து, திட்டமிட்டு, உற்பத்தியிலும் ஈடுபட்டு ஓரிருநாட்கள் கடையை நடத்துகிறார்கள், மனிதர்களைப் பார்க்கிறார்கள், நிதியை நிர்வகிக்கிறார்கள். இவையெல்லாம் ஆளுமைத்திறனுக்கான பயிற்சியாகிறது. கல்வி நிறுவனங்களும் மக்களுக்கு அந்நியமானதில்லை என்றாகிறது.  

இறுதியாக… 

அந்நியர் ஒருவர் புதிய கலாச்சாரத்தை எதிர்கொள்ளும் போது வியத்தலும் இகழ்தலும் இயல்பே. இது எவ்வகையிலும் ஒரு மாற்றுக்கலாச்சாரத்தின் விதந்தோதுதல் அல்ல. ஒரு வசதிக்காக ஜப்பானைப் பகுத்துப் பார்த்தால் இங்கு ஒரே பொருளின் இரு வேறு எல்லைகளைக் காணலாம். கோடையும் குளிரும் உச்சம் தொடும். நூறு வயதை தொட்ட முதியவர்கள் அதிகம் வாழும் இங்குதான் குழந்தைகள் குறைவாக இருக்கிறார்கள். தவறவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் இங்குதான் பொழுதுபோக்குக்காகக் களவு செய்வபவர்களும் இருக்கிறார்கள். ஜப்பானியப் பள்ளிக்கல்விக்கும் இப்படி ஓர் எல்லை உண்டு; கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 547. என்றாலும், சிலவற்றை பள்ளிச்சூழலுடன் மட்டும் இணைத்துப் பார்ப்பது முறையல்ல. இந்தியா போன்ற வளரும் நாட்டிலோ அல்லது பிரிட்டனைப்போன்ற வளர்ந்த நாடுகளிலோ இன்றும்  குழந்தைகளைத் தனியே பள்ளிக்கு அனுப்ப இயலாது; இதற்குத் தெருநாய்கள், குழந்தைக்கடத்தல் என சமூகக் காரணங்களும் உண்டு. ஜப்பானியத் தற்கொலைகளுக்கும் சமூகக் காரணங்கள் உண்டு. இந்தக் கட்டுரை ஜப்பானியக் கல்வி முறையைக் கண்டு, பல்வேறு மொழி, மத, சாதிப் பிரிவினைகள் உள்ள நாட்டிற்கு குழந்தைப் பாதுகாப்பிலும், கல்வி வளர்ச்சியிலும் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது எனும் நம்பிக்கையில் தமிழ் சூழலுக்குப் பொருந்தும் சிலவற்றை பேசிப் பார்த்திருக்கிறது; அதன்மேல் விவாதங்களைக் கோருகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

காலச்சுவடு - ஜனவரி 2026 கல்விச்சிறப்பிதழில் வெளியானது. 

ஜப்பான்: சுயகல்வியை நோக்கி...