Sunday, August 22, 2021

கோவிட் பெருந்தொற்றும் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர் நிலையும்

தி இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். 

மூலக்கட்டுரை: Weighing down the private unaided college teacher


ஏ பி அருண் கண்ணன் & கிஷோர்குமார் சூர்யபிரகாஷ்


கோவிட் பெருந்தொற்று உலக அளவில் அனைத்துத் துறையினரையும் பெரும் பொருளாதாரச் சீரழிவிற்கு ஆளாக்கியிருக்கிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி வகுப்புகளுக்கு மாற்றமடைந்துள்ளன. இதைக் காரணம்காட்டி பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களிடம் முழுக்கட்டணத்தையும் வசூலித்துள்ளன. பிற துறைகளுடன் ஒப்பிட்டால் தனியார் கல்வித்துறை தன் நிதிநிலையைப் பாதுகாத்து வருகிறது எனலாம்.

தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருத்த அளவில் இல்லையெனக் கொண்டாலும் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கட்டண வசூல் அவற்றைச் சார்ந்திருக்கும் ஆசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறதா, அவர்தம் வாழ்வில் அது எதிரொலிக்கிறதா என்றால் இல்லை. பெருந்தொற்றால் ஏற்பட்ட தற்காலிகப் பணி நீக்கமும், ஊதியக்குறைப்பும் அவர்களை வேறு வேலை தேடும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. ஊதியக்குறைப்பால் பனை ஏறும் தொழிலுக்குச் சென்ற தனியார் கல்வி நிறுவன ஆசிரியரின் எதிர்பாராத இறப்பு எங்களை அப்பணியிலுள்ளோரைக் கவனிக்க வைத்தது. சென்னைப்பல்கலைக்கழக தனியார் உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் 194 உதவிப்பேராசிரியர்களிடம் ஜூன் 13 முதல் 26 வரை நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்களை அறியத்தருகிறோம்.

ஆய்வு முடிவுகள்

முதலில் வெளிப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே அவர்களின் கல்வித்தகுதிக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிடக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதும், பெரும்பாலானவர்கள் எந்தவித ஊழியர் நலத்திட்டத்திலும் பயனாளிகள் இல்லை என்பதுமாகும்.  ஆய்விற்குட்படுத்தப்பட்ட 194 பேரில் 137 பேர் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த தகுதிகளைப் பெற்றிருந்தும் (முனைவர் பட்டம் அல்லது மாநில/தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி) அவர்களில் 72% பேர் மாதம் 25,000க்கும் குறைவான உதியத்தையே பெற்றுவருகின்றனர். இங்கு நினைவுகூறப்படவேண்டியது ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைக்கும் உதவிப்பேராசிரியருக்கான ஆரம்பச் சம்பளம் - ரூபாய் 76,804. மேலும், அவர்களில் 38% பேருக்கு மட்டுமே தொழிலாளர் காப்பிட்டுக் கணக்கும், 42% பேருக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பும் உள்ளது.

புதிய தாராளவயக் கொள்கை உயர்கல்வி வழக்கும் பொறுப்பை அரசுகளிடமிருந்து பறித்து தனியார் பங்களிப்பை வரவேற்றது இந்நிறுவனங்களின் அசாதாரண வளர்ச்சிக்கு வழிகோலியது. சென்ற வருடம் நடத்தப்பட்ட உயர்கல்வித்துறை குறித்த ஆய்வில் நாட்டிலுள்ளவற்றில் 65% தனியார் கல்லூரிகள் என்பதும் அதிலும் தமிழ்நாட்டிலுள்ள 77% தனியார் கல்லூரிகள், 1980களின் முற்பகுதியிலிருந்தே கல்வித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்ததன் விளைவையும், கல்வித்துறையில் இலாபம் ஈட்டும் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

இணையவழிக்கல்வி என்னும் சுமை

இந்தப்பின்புலத்தில்தான் பெருந்தொற்றுக்காலம் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர்களின் வாழ்வில் ஏற்படுத்துகிற பாதிப்பையும் நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது. உதவிப் பேராசிரியர்கள் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து இணையவழிக் கற்பித்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். நடத்தப்பட்ட ஆய்வில் 88% பேர் இணையவசதி, அறை/இட வசதி, தரமான உபகரணங்கள் உள்ளிட்ட ஏதாவதொன்றில் போதாமையைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளனர். 194 பேரில் 137 பேர் கைப்பேசி, கணினி, ஒலிபெருக்கி/ஒலிவாங்கி என ஏதேனுமொன்றை வாங்கவேண்டியிருந்தது. மிக முக்கியமாக இணையவசதிக்கான செலவையும் ஆசிரியர்களே ஏற்க வேண்டியிருக்கிறது. நிதிநெருக்கடிக் காலத்தில் இவற்றால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர்களில் 107 பேர் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இணையவழிக்கல்வி தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களைக் கடுமையான உடல், மன, நிதி ரீதியிலான சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இருந்தும் அவர்களுக்கான முறையான அங்கீகாரம் குறைந்தபட்சம் ஊதிய அளவிலேனும் வழங்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் பல்வேறு வகையான ஊதியக்குறைப்பு நடவடிக்கைகளால் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். 2020-2021 ஆம் ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவானவர்களே நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைப் பெற்றிருக்கிறார்கள். 10% பேர் 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை எந்தவித ஊதியத்தையும் பெறவில்லை.

இணையக்கல்விக்கு மாறிய பின்னர் கல்லூரிகளின் நிர்வாகச் செலவினங்கள் குறைந்திருந்தாலும் மாணாக்கர்களிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை. எனவே, அவர்களின் சம்பளக்குறைப்பு நடவடிக்கையில் எந்தவித நியாயமும் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்கள், இப்பேரிடர் காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பல்வேறு கடின சூழ்நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை சுரண்டவே செய்கின்றன.

செல்ல வேண்டிய பாதை

சம்பளக்குறைப்பு நடவடிக்கைகள் பெரும்பாலான ஆசிரியர்களை வேறு வேலைகள் நோக்கித் திருப்பியிருக்கிறது அல்லது கடனாளியாக்கியிருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் கடின உடல் உழைப்பைக்கோரும் கட்டிட, விவசாய, பழுதுபார்க்கும், உணவு விநியோகிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

பேரிடர்க்காலம் அவர்களின் வழிவியலை பறிப்பதாக இருந்தாலும் அதற்கு முந்தய காலத்திலும் நிலைமை மெச்சக்கூடியதாக இருந்ததில்லை. அதற்கு காரணம், இத்தகைய அமைப்புகளுக்கென விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படாததே ஆகும். தமிழக அரசு ஆசிரியர் நலன்கருதி பின்வரும் சில வழிகாட்டல்களைக் குறித்துச் சிந்திக்கலாம்: ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட/வழங்கப்படாத முழு ஊதியமும் வழங்கப்பட வேண்டும். காரணமின்றிப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் திரும்பவும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இணையவழிக் கல்விக்கென அவர்கள் செலவழித்த தொகை திருப்பி வழங்கப்பட வேண்டும்.

கேரள அரசு 2018ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய வரம்பை நிர்ணயித்தது. அதன்படி பல்கலைக்கழ மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதியைப் பெற்றவர்களுக்கு நாளொன்றுக்கு 1750ம், மாதம் 43750ம், பல்கலைக்கழ மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதியைப் பெறாதவர்களுக்கு நாளொன்றுக்கு 1600ம், மாதம் 40000ம் வழங்கப்பட்டுவருகிறது. தமிழக அரசும் இதுபோன்ற நெறிமுறைகளை வகுக்கலாம். கூடவே, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (முறைப்படுத்தும்) சட்டம் 1976 மறு ஆய்வு செய்யப்படல் வேண்டும். இந்நிறுவனங்களில் பணியிலிருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் உரிமைகளுக்காகவேனும் கல்லுரிக் கல்வி இயக்குனரகம் மற்றும் வட்டார கல்லுரிக் கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தனியார் கல்லூரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

 

பி அருண் கண்ணன்

சென்னை லயோலா கல்லூரி தொழிற்கல்வி மைய இயக்குநர்

 

கிஷோர்குமார் சூர்யபிரகாஷ்

அமெரிக்காவிலுள்ள எம்ஐடியில் முனைவர்பட்ட ஆய்வாளர் (பொருளாதாரம்)