அரசு
கலை அறிவியல் கல்லூரிகளிலுள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேர்முகத்தேர்விற்கான அறிவிக்கையினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு, தற்போது சில தொழில்துட்ப
காரணங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் அனுபவம் மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்கப்படும். கொடுக்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒரு இடத்திற்கு மூவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்கிறது அறிவிக்கை.
ஒரு
வருட அனுபவத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சம் பதினைந்து. தேசிய அல்லது மாநில தகுதித்தேர்வில் (நெட் அல்லது செட்) தேர்ச்சி பெற்றிருப்பின் ஐந்து அல்லது முனைவர் பட்டத்திற்கு ஒன்பது என ஒருவர் விண்ணப்பிக்கையில்
கொடுக்கும் சான்றுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக இருபத்து நான்கு மதிப்பெண்களைப்
பெற இயலும். ஆனால், இந்த இருபத்து நான்கு மதிப்பெண்கள் ஒரு ஆசிரியருக்கான அடிப்படைத் தகுதியை நிர்ணயிக்கப் போதாது அதை மட்டும் வைத்து ஒருவரின்
விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது சரியல்ல.
இவ்வாறு
ஒருவரின் அனுபவத்தை மட்டும் கொண்டு மதிப்பிட்டு, நேர்காணலுக்கான வாய்ப்பையே மறுக்கும் இந்த
முறைக்கு என் தேடலுக்கு எட்டியவரை இந்திய அளவில் முன்னுதாரணங்கள் எதுவும் இல்லை. இதைத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றப்போகிறதெனில் அது தமிழகம் ஏந்திக்கொள்ளவிருக்கும் இழிவு.
பல்கலைக்கழக
மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி உதவிப் பேராசிரியருக்கான அடிப்படைத்தகுதி தேசிய (அ) மாநில தகுதித்தேர்வில்
தேர்ச்சி அல்லது முனைவர் பட்டம். முனைவர் பட்டம் அடிப்படைத்தகுதிதான் என்னும்போது அதற்கு ஒரே அடியாக ஒன்பது மதிப்பெண்ணை வழங்கும் வாரியம், இருவகையான சிறப்புத்தகுதி உள்ளவர்களை மறந்துவிட்டது. முதல்வகையினர், முனைவர் பட்டத்துடன் நெட் அல்லது செட் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுக்கும் முனைவர் பட்டம் மட்டும் பெற்றவர்களுக்கும் ஒன்பது மதிப்பெண்கள்தான் என்பது சரியல்ல.
இரண்டாம்
வகையினர், முழு நேரம் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள். பகுதி நேரமாக ஆய்வு
செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு, ஆய்வுக்காலத்தில் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றி
இருப்பின் அதுவும் அனுபவக்கணக்கில் சேர்க்கப்படும்
என்கிறது அறிக்கை. அறிவிக்கையில் உள்ள முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படுமானால் முழுநேரம்
ஆய்வு மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றவருக்கு ஒன்பது மதிப்பெண்களும், பகுதிநேரம்
ஆய்வு மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றவருக்கு பத்தொன்பது அல்லது அதற்கும் மேற்பட்ட
மதிப்பெண்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவும் சரியல்ல.
கற்பித்தல் அனுபவம்
மட்டுமல்ல அளவுகோல்
முழு
நேரம் ஆய்வில் ஈடுபடுபவருக்கும் கற்பித்தல் பணி உண்டு. பெரும்பாலான பல்கலைக்கழகங்களும், இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி),
ஏசிஎஸ்ஐஆர் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும்
வகுப்பெடுப்பதை கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாக முனைவர் பட்டத்திற்கான பாடத்திட்டத்தில் சேர்த்தும் உள்ளன. துறைக்குள் நுழையும் இளையோர்கள், கருத்தரங்குகள்,
கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என அவரும் கற்பித்தலில் ஈடுபடுகிறார். ஆனால்,
அது பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர் அளவுக்கு திட்டமிடப்பட்டது அல்ல.
பகுதி
நேர முனைவர் பட்டம் மற்றும் முழு நேர முனைவர் பட்டம் இரண்டிற்கும் அவற்றிற்கே உரிய
நிறை குறைகள் உண்டு. பல்கலைக்கழக மானியக்குழு இரண்டையும் சமமாக மதிக்கவேண்டும் என்று
ஆணை பிறப்பித்திருக்கிறது. நடைமுறை என்னவென்றால் பகுதி நேர முனைவர் பட்டம்,
வேலை தேடுகையில் ஒருபடி குறைவாகவே மதிக்கப்படுகிறது. அவர்கள் பட்டம் குறைந்தபட்சம்
அரசாங்கத்தாலாவது சமமாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் நோக்கம்
தவறல்ல. ஆனால், தேர்வு வாரியம் பின்பற்றும் முறை கேள்விக்குரியது. ஒரே நேரத்தில் இருவகையினரின்
உரிமையும் காக்கப்பட வேண்டும்.
உயர்கல்வியைப்
பொறுத்தவரை ஒருவரின் கற்பித்தல் அனுபவம் எவ்வளவு
முக்கியமோ, ஆராய்ச்சி அனுபவமும் ஆசிரியர் பணிக்கு இன்றியமையாதது ஆகும். இவ்விரண்டும்
சமமாக மதிக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த அனுபவமே உயர்கல்வியின் நோக்கத்தை நிறைவேற்றும்.
மாறாக, இவ்வறிவிக்கையிலுள்ள தேர்வு முறை ஆய்வு அனுபவத்தைப் புறந்தள்ளிவிடும்.
2016 இல் பல்கலைக்கழக மானியக்குழு, ஆசிரியப்பணிக்குத் தேர்வு செய்யும்போது முனைவர் பட்ட ஆய்வு செய்த வருடங்களையும் அனுபவமாக சேர்த்துக்கொள்ளவேண்டுமென்றது.
ஆனால், அது இன்னும் அரசாணையாகவில்லை. ஆனால், ஆய்வாளர்களுக்கு நியாயம் செய்ய வேறு வழிகள் உள்ளன.
உயர்
கல்வியின் நோக்கம் நம் பிள்ளைகளை ஆராய்ச்சித்துறைக்குச் செல்ல வழிகாட்டுவதுதான் என்றால், அவர்களுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் இன்னும் சில முறைகளையும் புகுத்த வேண்டும். அது
ஆய்வு அனுபவம், கற்பித்தல் அனுபவம் இரண்டையும் கருத்தில் கொள்ளும் முறையாக இருக்க வேண்டும். அவ்வாறு நடக்குமெனில், அனுபவம் மற்றும் தகுதிற்கு கொடுக்கும் மதிப்பெண் முறையில் ஒரே மதிப்பெண்ணைப் பலர் பெறும் நிகழ்வும் அதனால் ஏற்படும் தேர்வுக் குழப்பங்களும் சரிசெய்யப்படும். எல்லாவற்றிக்கும் மேலாக, கல்லூரிகளின் ஆராய்ச்சிக் கட்டமைப்பு வசதிகள் உயரும். இந்திய ஒன்றியத்திற்கு இது புதிதும் அல்ல. இதற்கு கேரளமும் மேற்கு வங்கமும் எத்தகைய முறையைப் பின்பற்றுகின்றன என்பதை ஆய்ந்தால் நாம் போகவேண்டிய பாதை புலப்படும்.
கேரளமும் மேற்கு
வங்கமும்
கேரளத்தைப்
பொறுத்தவரை, தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஒருவர், உதவிப்பேராசிரியர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வினை (செட் தேர்வுமுறை
கேரளத்தில் இல்லை) எழுத
இயலாது. அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு மூன்று பிரிவுகளில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
1. இளநிலை,
முதுநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், முனைவர் பட்டப்படிப்பின் ஆய்வினடிப்படையில் பதிப்பித்த சர்வதேச ஆய்விதழ்கள் மற்றும் புத்தகங்கள், கற்பித்தல் அனுபவம்
2. நேர்முகத்தேர்வில்
பெற்ற மதிப்பெண்கள்
3. எம்ஃபில்
பட்டம் மட்டுமெனில் இரண்டு, முனைவர் பட்டம் மட்டுமெனில் நான்கு, இரண்டுமெனில் ஐந்து.
இம்மூன்றுடன்
தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, தர வரிசை வெளியிடப்பட்டு,
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.
மேற்கு
வங்கமோ முனைவர் பட்டதிற்கென சில தகுதிகளை நிர்ணயிக்கிறது. முக்கியமாக, முதல் இரண்டையும், முனைவர் பட்டம்பெற கட்டாயம் பின்பற்றப்படவேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு 2009-இல் அறிவித்துள்ளது என்பதால் மேற்கு வங்கம் அதற்கு அழுத்தம் கொடுக்கிறது.
1. ஆய்வு
முடிவுகளை குறைந்தபட்சம் இரு இதழ்களாக வெளியிட்டிருக்க வேண்டும், அதிலும் ஒன்று சர்வதேச அளவிலான ஆய்வாளர்களால் மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
2. ஆய்வு
முடிவுகளை குறைந்தபட்சம் இரு கருத்தரங்குகளில் வெளியிட்டு விவாதித்திருக்க வேண்டும்.
3. பத்தாம்
வகுப்பிலிருந்து ஐம்பது சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்களை வைத்திருப்பது கட்டாயமில்லையெனினும் முன்னுரிமைக்குரியது.
இவற்றைப்
பரிசீலித்து, தேவையைப்பொறுத்து தேர்வோ, நேர்காணலோ அல்லது இரண்டுமோ நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டினடிப்படையில் பணியாணை வழங்கப்படுகிறது.
எஞ்சி நிற்கும் கேள்விகள்
வாரியம்
வரையறுத்துள்ள மதிப்பீட்டு முறைப்படி நூற்றுக்கணக்கானோர் ஒரே மதிப்பெண்ணைப்பெறுவர்.
இவ்வெண்ணிக்கை ஆயிரத்தைக்கூடத் தொடலாம். ஒரே தரத்தில் இருக்கும் பலருக்கு, தேர்வுக்குழு
எதை வைத்து முன்னுரிமை வழங்கும் என்பது குறித்த குறிப்புகள் எதுவும் அறிவிக்கையில்
இல்லை. ஒருவேளை அது வயதா? பள்ளி, கல்லூரி மதிப்பெண்களா? பல்கலைக்கழக அளவில் ஒருவர்
பெற்ற இடமா? ஆய்விதளின் சமூகத் தாக்கமா?
தமிழகத்திலுள்ள
அரசு உதவி பெரும் கல்லூரிகளில் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே நியமிக்கின்றன. இக்குழு பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டலின்படி கேரளமும் மேற்கு வங்கமும் பின்பற்றுகின்ற அதே முறையைப் பின்பற்றி ஆசிரியர்களைத் தேர்வு செய்கின்றன. அதாவது ஒருவரின் முனைவர் பட்டத்திற்கு மட்டும் மதிப்பெண்கள் அல்லாது ஆய்விதழ்கள், புத்தகங்கள், கருத்தரங்கப் பங்கேற்புகள், அனுபவம், நேர்காணல் என அனைத்திற்கும் மதிப்பெண்கள்
வழங்கப்பட்டே தரவரிசை இடப்படுகிறது. அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு செயல்படுத்தப்படும் இம்முறை, தமிழகம் முழுதுமுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? கல்வித் தகுதிக்கு மட்டும் பல்கலைக்கழகம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதுமா? தெரிவு முறைக்கு வேண்டாமா?
அரசுக்கல்லூரிகளில்
தற்போதுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் தொகுப்பூதியம் மாதம் பதினைந்தாயிரம் ரூபாய். கேரளத்தில் இருபத்தைந்தாயிரம். மேற்கு வங்கத்தில் தமிழகத்தைப்போல இருமடங்கு. ஒரு அரசாங்கமே ஆசிரியப்பணிக்கு இத்தகைய மரியாதையைத்தான் வழங்குமென்றால் தனியார் கல்லூரிகளில் ஒருவர் எங்கனம் தன்னிறைவான ஊதியத்தை எதிர்பார்க்க இயலும்? வருடா வருடம் செட் தேர்வு நடத்தி எண்ணற்றவர்கள் தேர்ச்சிபெறும்போது பயிற்றுனர்களுக்கான தகுதியும் சம்பளமும் இங்கு முறைப்படுத்தப்பட்டுள்ளனவா?
சில தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் சம்பளத்தைக்கொண்டு ஒருவருக்குத் தேவையான சரிவிகித உணவைச் சாப்பிடுவதே கடினம் என்னும்போது ஒருவர் அனுபவம் பெற குடும்பத்துடன் எதையெல்லாம்
பொறுத்துக்கொள்ள வேண்டும்?
கேரளம்,
மேற்கு வங்கத்திற்கு இல்லாத ஒரு சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. ஆசிரியர் தேர்வு வாரியம்
என்னும் அமைப்புதான் அது. அது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புதான் என்று நம்பி வந்திருக்கிறேன்.
ஆனால், நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அதன் நேர்மைத்தன்மையிலும், தேர்வுமுறையிலும்
எவருக்கும் சந்தேகம் எழுவது இயல்பே. பணி வேண்டுவோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மீது
நம்பிக்கையை இழந்து பல வருடங்களாகிறது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர்
தேர்வு வாரியமே வெளியிட்ட ஆண்டுத்திட்டங்களில் இப்பணித்தேர்வு குறித்த அறிவிக்கை இருந்ததும்
அதை அவர்களாலேயே நிறைவேற்ற இயலாமல் போனதும், 2017-ல் பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வுகளில்
நிகழ்ந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததும், அத்தேர்வே ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு
2018 ஆகஸ்ட்டில் நடத்தப்படும் என்று அறிவித்து ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதும் எனப்
பல்வேறு காரணங்களைக் கூறலாம். அது தன்மீதுள்ள கறைகளைக் களைய என்ன செய்யப்போகிறது?
செல்ல வேண்டிய
தூரம்
இரண்டு
வருடங்களுக்கு முன், செட் சான்றிதழ் சரிபார்ப்பின்போது தமிழின் மிக முக்கியமான புனைகதையாளரைச்* சந்தித்தேன். சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள் என வெளியிட்ட புத்தகங்கள்
கைவிரல் எண்ணிக்கையைத் தாண்டும். தன் முன்னோடிகளைப்பற்றி எவ்வித முன்தயாரிப்புகளுமின்றி பலமணிநேரங்கள் பேசக்கூடியவர். மதுரையின் பழம்பெரும் கல்லூரியில் பணியாற்றிய அனுபவமும் உண்டு. அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் நேர்காணலில் தோல்வியடைந்தார். அவ்வருடமே, அப்பல்கலைத் துணைவேந்தர் பெற்ற லஞ்சப்பணத்தை வீட்டிலேயே வைத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தத் துண்டு வாக்கியங்களின் பின்னுள்ள உண்மைகளை சமூக
எதார்த்தம் தெரிந்த எவரும் ஊகிக்க இயலும்.
ஆசிரியப்பணி
அறப்பணி என்கிறோம். அதற்கான
தேர்வுகளில் அறப்பிறழ்வுகளை ஒரு சமூகம் அனுமதிக்கலாகாது. நாம் வருங்காலத்திற்குச்
செய்யும் முதலீடு நல்லாசிரியர்களை உண்டாக்குவதாகத்தான் இருக்க முடியும். அதற்கு வகுப்பறையில் மட்டுமல்ல, அரசு, சமூகம், தேர்வுமுறை
என ஒரு சமூகத்தின் கூட்டுமனசாட்சி விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். நம்
கல்வித்துறையிலுள்ள குறைகளையெல்லாம் எங்கனம் களைய இயலும் என ஒன்றன்பின் ஒன்றாக
விவாதிக்க வேண்டும். நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னுமிருக்கிறது.
*
*கட்டுரையின்
கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர் சு. வேணுகோபால். களவு போகும் புரவிகள், வெண்ணிலை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
(காலச்சுவடு அக்டோபர் 2019)