Saturday, February 17, 2018

முதல்முறையாக இரண்டாம்முறை

நண்பர்களே... நேற்று வாழ்க்கையில் முதல்முறையாக இரண்டாம்முறை
திருவனந்தபுரத்துக்குச் சென்றிருந்தேன். பதினோரு மணிவாக்கிலேயே சென்ற வேலை முடிந்தது. ஊருக்குத் திரும்பலாமென்றால் தொடர்வண்டி மதியம் 2.50க்குத்தான்.


இன்னொரு வண்டி பக்கத்து ஊரிலிருந்து 12.50க்குப் புறப்படுமென்பதால் அதைப் பிடிக்க பேருந்து நிலையம் சென்றிருந்தேன். ஒருமணி நேரமாகியும் பேருந்து வரவில்லை. பிறகு, அந்த ஊரின் பக்கத்து ஊருக்குச் செல்ல இன்னொரு பேருந்து. சம்பவ இடத்தை நெருங்குகையில் மணி 1. ரயிலில் சென்றவர்கள் புன்னகையோடு டாட்டா காட்டினார்கள். (டாட்டா காட்டினார்களா இல்லையா என்பது பல மைல்களுக்கப்பால் உள்ளவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது என்பதாலேயே இதை எழுதுகிறேன்.)

பிறகு "வண்டியை நேரா பீச்சுக்கு விடுப்பா..." என்று ஓட்டுநரைப் பணிக்கையில் பக்கத்திலிருந்த பாட்டி "இங்க எறங்கிக்க" என்றார். நல்லவேளையாக வண்டி பீச்சில்தான் நின்றிருந்தது. பெயர் சங்குமுகம், இறங்கி நடந்தேன்.

சென்னைக் கடற்கரையைப்போல் கடை வைத்திருப்பவர்களும் கடலைப் பார்த்துக்கொண்டே கடலை போடுபவர்களும் அதிகமில்லை. இரண்டு மணிக்கு பீச்சில் எவன் உக்காந்து கடலை போடுவான் என நீங்கள் கேட்கலாம். சென்னைக்குச் சென்று பாருங்கள், உச்சிவெயிலென்ன... கத்திரி வெயிலென்ன... உலகம் வெப்பமயமானால் எனக்கென்ன என்று கடலை வறுத்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்கிக் கொண்டிருப்பார்கள்.

அதிகமில்லையென்றால் சிலராவது இருந்தார்கள் என்று அர்த்தமல்லவா? எவ்வளவு நேரம் கடலையே பார்ப்பதென்று கழுத்தைத் திருப்பினேன். நம்மவர்களைப் போலில்லை இவர்கள், கைகால்களை வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறார்கள். ஒருவன் மட்டும் தன் தாய்மடியின் சுகமுண்டா என்பதை ஆராய்ந்துகொண்டிருந்தான்.

தற்போதைய நவீன அங்காடிகளில் மக்காச்சோளத்தை வெள்ளை ரவைப் பதத்தில் பொடிசெய்து விற்கிறார்கள். அதைப் பார்த்தால் மங்கலான பொன்னிறத்தில் இருக்கும். அதை வைத்துச் சில இல்லத்தரசிகள் உப்புமா என்னும் அபாயகரமான வஸ்துவை உண்டாக்குகிறார்கள். இதை ஏன் சொல்கிறேனென்றால் கேரளக் கடற்கரை மணலைப் பார்க்க விரும்புபவர்கள் அருகிலுள்ள கடையில் அதைக்கேட்டு வாங்கிப் பார்த்துக் கொள்ளலாமென்றுதான். அப்படி இருக்கிறது மணல். கடற்கரையை அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். சென்னையில் அப்படியில்லை, வெறுங்காலில் நடந்தீர்களென்றால் அருளாளன் (வாசகர்கள் தங்கள் நண்பர்களின் பெயரையும் போட்டுக்கொள்ளலாம், இதைத்தான் எழுத்தில் யூனிவர்சலிட்டி என்கிறார்கள்) போன்ற சமூக விரோதிகள் குடித்துப்போட்ட பியர் பாட்டில்கள் உங்கள் காலைப் பதம் பார்த்துவிடும்.

பசி தாங்கமுடியவில்லையென்பதால் சோறு கிடைக்குமா என அலைந்தேன்.
கடைக்காரர் "கிழங்கும் மீனும் உண்டு" என்றார் கேள்விக்குறியை முகத்தில் வைத்துக்கொண்டு. நான் தயங்கியபடியே விலை கேட்டேன். "எழுவதுக்குமுண்டு நூறுக்குமுண்டு" எனச்சொல்லிவிட்டு நான் தயங்குவது கண்டு அவர் "ப்ரெஷ்ஷாயிரிக்கும் மீனு, பொரிச்சுத்தாரேன். கிழங்குங்கூட சூடாயிருக்கு" எனச்சொல்லிகொண்டே அடுப்பிலிருந்த ஈயப்பாத்திரத்தின் தீயை உயர்த்தினார் (க்ளிஷே). "மீனைக்காட்டுங்க" என்றதற்கு இட்லிச்சட்டியின் மூடியைத்தூக்கி ஏற்கனவே பொரித்திருந்த ஒன்றை தூக்கிக்காட்டினார். மீனைப் பார்த்ததும் முடிவு செய்தே விட்டேன், பழைய பொரித்த மீன். நான் வேறு கொஞ்சம் நிறைய கஞ்சனாயிற்றா.... "வேணாங்ணா" என்று சொல்லிவிட்டு இளைய தளபதியை நெஞ்சில் நிறுத்தி நடையைக்கட்டினேன். மலையாளத்தில் "சோறு தின்னு தின்னு கெழங்கு திங்க முடியமாட்டீங்குது" என்பதற்குப் பிறகு ஏதேதோ சொன்னார். பாராட்டினாறா கெட்டவார்த்தையில் திட்டினாரா என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாக வீட்டிலிருந்தபடியே இத்தகைய வசைகளைச் சந்தித்து பயிற்சியெடுத்திருந்ததால் மகிழ்ச்சியுடன் அடுத்த கடைக்குச் சென்றேன்.

மாம்பழச்சாறும் உருளைக்கிழங்குச் சீவலும் வாங்கிக் கொண்டேன். கிளம்புகையில்தான் அந்த அதிர்ச்சிக்குரிய காட்சியைப் பார்த்தேன். (இதுவும் எவனுகுத் தெரியப்போகிறது என்ற மெத்தனம்தான்.) பேரிளம்பெண்ணொருத்தி திறந்த முலைகளுடன் வானத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஓரிரு இளைஞர்களும் பெரியவர்களும் தூரத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் நிமிர்ந்து பார்த்துவிட்டு வெட்கத்துடன் அங்கிருந்து நகர்ந்தார்கள். தமிழகத்தில் சென்னையில் மட்டுமல்ல, எந்தக் கடற்கரையிலும் இத்தகைய நிகழ்வெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. ஒருவேளை இருந்தாலும் நமது கலாச்சாரக் காவலர்கள் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள்.

நண்பர்களே.... இதையெல்லாம் சொன்னால் நான் புருடா விடுகிறேன் என்பீர்கள். வேலை இல்லாததனால் இதையெல்லாம் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பீர்கள். ஏன்.... என்னைக் கேனப்புண்ணாக்கு என்றுகூடத் திட்டுவீர்கள். ஆனால் அதனைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. இருந்தாலும், நீங்கள் ஏங்கிப்போவீர்கள் என்பதால் நானும் அதைத் தூரத்தில் நின்று புகைப்படம் எடுத்து வந்திருக்கிறேன். பாருங்கள் அந்த சிமெண்ட்டு வண்ண அழகியை!




மார்ச் 2016.