Monday, December 18, 2017

புணர்ச்சி விதிகள்

கல்லுப்பிட்ட
இரத்தச் சிவப்பிற்கு மயங்கி
பால்யத்தில் நான்
வெற்றிலைக்குக்
கை நீட்டியபோது
மாடு முட்டுமென்றாள்
அன்று விட்டவன்தான்
பின்னர்
பத்தாம் வகுப்பில்தான்
திரும்பிப் பார்த்தேன்

முதல் முறையாய்
அக்கா மகளுடன்
வீடு வந்திருந்தவள்
திரும்பிப் போனதும்
புகாரைத் தொடர்ந்தாள்
அவ செரியில்லடா...
வெங்காயங்கூட
வெட்டத் தெரியல...
புள்ளையப் போட்டு
அடிச்சுக்கிட்டே இருக்கறா...

வேறு வழியின்றி நான்
கைபேசியின்
சமீபத்திய புகைப்படம்
ஒன்றை அழித்தேன்.

Tuesday, December 12, 2017

வரலாறு



இப்போது கடந்தோமே பாலம்
காற்று தாளத்துடன்
விட்டு விட்டுக்
காதில் அறைந்ததே
மத்திய அமைச்சர்
திறந்து வைக்கையில்
ரிப்பன் வெட்டிய
அடுத்த நொடியில்
என் தாத்தாதான்
முதல் ஆளாக...
ஒற்றை ஆளாக...
டிவிஎஸ் பிஃப்டியில்
அதைக் கடந்தார்.

தங்கைகளின் வீட்டிற்குப் போவதில்லை

பக்கத்து வீடுதான்
பால்ய சினேகிதம்தான்
அண்ணனுக்குத் தண்ணி குடு
அண்ணங்கிட்ட முறுக்க வையி
அண்ணனுக்கு டீயப் போடு
அண்ணங்கிட்டக் கேட்டுப் படி.